திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

இலவசக் கல்வியெனக் கூறி பணம் அறவிடப்படுவதை அனுமதிப்பது முறையாகுமா?

கல்வித்துறையில் ஊழல், தவறுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

இலவசக் கல்வியெனக் கூறி பணம் அறவிடப்படுவதை அனுமதிப்பது முறையாகுமா?

Akila Viraj_LeN_10.03.2010[1]

"மாணவர்களிடம் பணம் கறக்கும் அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டப் பாடசாலைகளில் 3000 ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணித பாடம் இல்லாமல் உயர் கல்வி கற்பது தொடர்பில் மாற்றம் வரும். அதிபர் மற்றும் பல்கலை மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி நிறுத்தம்"

இவ்வாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

"புலமைப் பரிசில் மாணவர்க்கான பாடசாலை வெட்டுப்புள்ளியில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படும். ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் சாதகமான திருத்தம் ஏற்படுத்தப்படும். பாடசாலை ஆய்வுகூடத்துக்கு அரசியல்வாதிகளின் பெயர் சூட்டக் கூடாது" எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"அதிபர் ஆசிரியர் தேசிய இடமாற்றக் கொள்கை மறுசீரமைக்கப்படும். முதலாமாண்டு மாணவர்களைச் சேர்க்கும் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

சர்வதேச பாடசாலைகளைக் கண்காணிக்க புதிய கமிட்டி நியமிக்கப்படும். கணித, விஞ்ஞான. ஆங்கில பாட ஆசிரியர்களைச் சேர்ப்பதற்கு யோசனை செய்யப்படுகிறது. இனி மேல் மாணவர்களை பெரஹராவில் இணைத்துக் கொள்ள முடியாது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கல்விப்புலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடியைக் கண்டறிய சுயாதீன கல்வி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் மூடப்பட்ட கோவைகள் மீண்டும் திறக்கப்படும். அதனூடாக ஊழல் மோசடியற்ற சிறந்த கல்விக் கலாசாரத்தை நாட்டில் ஏற்படுத்துவோம். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிபர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

நாட்டில் கல்வி மிக மோசமான நிலையிலுள்ளது. கடந்த ஆட்சிக்காரர் விட்ட தவறை, பிழையை, ஊழலை நாம் புரிய மாட்டோம். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டாது. அநாவசியமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். கல்வியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் தரமானதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

மைத்திரி யுகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்விப் புலத்தில் முயுமான மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியுள்ளேன். இலவசக் கல்விக்கு பூரண அர்த்தம் கொடுக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகளாகிய நீங்கள் பூரண ஒத்துழைப்பைத் தர வேண்டும்' எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

உதவி ஆசிரியர் நியமனம் நிறுத்தப்படும். மற்றும் அதிபர் மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி நிறுத்தப்படும். அதிபர்களுக்கு வழங்கப்பட்ட கேர்ணல் தரம் நீக்கப்படும்.

நாம் மாதமொருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை இங்கு கூடி நாட்டில் கல்வி நிலைமையினை ஆராய்ந்து சிறந்த கல்வி முறைமையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக நீங்களும் வந்து ஆலோசனைகளைக் கூறி ஒத்துழைக்க வேண்டும் என்று கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை மு. ப. 11 மணிக்கு கொழும்பு இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சின் 4 ஆம் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

4 மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் கல்வியமைச்சருடன் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஏனைய மேலதிக உதவிச் செயலாளர்களும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டிலுள்ள சுமார் 70 அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் 150 பேரளவில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கில் பெருந்தொகையான ஆசிரியர்களை தன்னகத்தே கொண்டு தேசிய ரீதியில் சுமார் 25 ஆயிரம் தமிழ் ஆசிரியர்களுடன் இயங்கிவரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இச்சந்திப்பில் கலந்துகொண்டது. அதன் சார்பாக சங்கத்தின் ஆலோசகர் த. மகாசிவம், தலைவர் வீ. ரி. சகாதேவராஜா, உபதலைவர் எஸ். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் மகஜரை சங்க ஆலோசகர் த. மகாசிவம் கையளித்த போது கல்வியமைச்சர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.

கூட்டத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாக 4 மணி நேரம் கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதனை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அங்கு விளக்கிக் கூறினார்.

மாணவரிடம் பணம் கறக்கும் அதிபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் மாணவர்களை பாடசாலைக்குச் சேர்ப்பதனால் பெருந்தொகையான பணத்தை வழங்க வேண்டியிருந்தது. இது படிக்கவிரும்பும் ஏழை விவசாயியின் பிள்ளையினால் முடியுமா? கல்வியில் சமத்துவம் பேணப்பட வேண்டும்.

கொழும்பிலுள்ள இந்துப் பாடசாலையில் கடந்த வருடம் ஒரு பிள்ளையிடம் 1 லட்சம் ரூபா வீதம் 110 லட்சம் ரூபா கறக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இன்னுமொரு பாடசாலையில் பாடசாலை மைதானம் அமைக்க, பெயின் அடிக்கவெனக் கூறி கோடி ரூபா பணம் கறக்கப்பட்டிருக்கிறது. பின்பு மீண்டும் அடுத்த வருடமும் இதே கதையைக் கூறி பணம் கறப்பது நடந்துள்ளது. இது உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

இலவசக் கல்வி என்று கூறிக்கொண்டு இப்படிப் பணம் அறவிடுவதற்கு அனுமதிக்கலாமா? அப்படி அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் தேவையானால் கல்வியமைச்சில் அனுமதி பெறவேண்டும். இது தொடர்பில் அடுத்த வாரம் புதிய சுற்றுநிருபம் வெளியிடப்படும். அதையும் மீறிப் பணம் கறக்கப்பட்டால் பிரஸ்தாப அதிபர் மீது கடுமையான நடவடிக்கை நேரிம். இதற்காக ஊடகமும் உதவ வேண்டும். ஊடகத்துறை அமைச்சோடு இணைந்து இலஞ்ச பரிமாறலைக் கண்டுபிடிக்க யோசனையுமுள்ளது' என்று அமைச்சர் கூறினார்.

பெருந்தோட்டப் பாடசாலைக்கான 3000 ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும்.

அண்மையில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்ட மலையகத்திற்கான 3000 ஆசிரியர்களின் நியமனம் நடைபெறுமா என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க உப தலைவர் பாலசுப்பிரமணியம் கேட்டதற்கு "ஆம் தற்சமயம் அதற்கான மதிப்பீமட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முடிந்ததும் அவர்களில் தகுதியானவர்களுக்கு எந்தவித அரசியல் தலையீடுமின்றி வழங்கப்படும்" என்று அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அதிபர்களுக்கும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்க்கும் வழங்கப்பட்டுவந்த இராணுவப் பயிற்சி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. எதற்காக இவர்களுக்கு இராணுவப் பயிற்சி அதிபர்களுக்கு வழங்கப்பட்ட கேர்ணல் தரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் 5 புள்ளியால் குறைக்கப்பட்ட காரணத்தினால் சித்திபெற்ற மாணவரின் தொகை 50 ஆயிரமாகக் கூடியுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு அவர்களைச் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளி வழங்குவதில் தாமதமேற்பட்டது. எனினும் மிக விரைவில் அப்புள்ளி வழங்கப்படும்.

புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்பு தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே அதில் திருத்தம் கொண்டுவரப்படும்.

பாடசாலைகளுக்கோ ஆய்வு கூடங்களுக்கோ உயிரோடிக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களைச் சூட்டக்கூடாது. குறிப்பாக மஹிந்தோதய ஆய்வுகூடம் என்றால் அது ஆய்வுகூடம் என்றே அழைக்கப்படும். பெயர் வராது. வரக் கூடாது.

அரசியல்வாதிகளின் பெயர் வைக்கக் கூடாது. அதிபர், ஆசிரியர் தேசிய இடமாற்றக் கொள்கை மறுசீரமைக்கப்படும்.

இது பெரும் பிரச்சினை முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை உருவாக்கப்படவுள்ளது. இடமாற்றக் குழுவில் அரசியல் செல்வாக்கு செலுத்தப்படக் கூடாது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு ஆசிரியரை காலிக்கு வந்து சேவையாற்றுமாறு கேட்பது முறையல்ல. தம்பதியினரைப் பிரித்து வைப்பது ஆகாது.

ஆசிரியர் திருப்திப்படுமிடத்து மட்டுமே சீரான சேவையைப் பெறமுடியும். அதிபர்களையும் இடமாற்றும் திட்டமுள்ளது. அரசியல்வாதிகளுக்குப் பின்னாலும் கல்வியதிகாரிகளுக்கும் காவடி தூக்கக் கூடிய அதிபர்களையும் இடமாற்றும் திட்டமுள்ளது. அரசியல்வாதிகளுக்குப் பின்னால் கல்வியதிகாரிகள் காலடி தூக்கக் கூடாது. பிழைவிட்டவர்கள் அல்லது விடுபவர்கள்தான் அப்படி நடப்பார்கள். இனி அந்தக் காலசாரத்திற்கு இடமேயில்லை. சுதந்திரமாக இயங்க முடியும்.

அதிபர் தரமுள்ளவர்கள் மட்டுமே பாடசாலைக்கு அதிபர்களாக நியமிக்கப்படுவர். முதலாமாண்டு மாணவர்களைச் சேர்க்கும் கொள்கையில் மாற்றம் வரும்.

முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்க்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படும். அங்கு அநீதியான முறையில் பணம் அறவிடுதல் நிறுத்தப்படும்.

கணிதபாடமில்லாமல் உயர்தரம் கற்பது தொடர்பில் மாற்றம் கொண்டுவரப்படும். கணிதம் முக்கியமான பாடம்.

சர்வதேச பாடசாலைகளைக் கண்காணிக்க புதியகமிட்டி நியமிக்கப்படும். இப்பாடசாலைகள் கம்பனிச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கல்வியமைச்சின் கீழ் கொண்டுவரப்படும்.

இவ்வாறு கல்வியமைச்சர் தெரிவித்தார்.

வி. ரி. சகாதேவராஜா

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21655
மொத்த பார்வைகள்...2078579

Currently are 221 guests online


Kinniya.NET