திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் எவை??

Corrupt01[1]

மூதூர் பீஸ் ஹோம் அமைப்பானது பிரதேச சபையை மையப்படுத்தி அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு அவசியமான தகைமைகள் எவையென நூறு முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்து கேட்டது.

இதன்போது அவர்களில் 99 வீதமானோர், தாம் புரியும் பணிக்கு அல்லாஹ்விடம் மட்டும் கூலியை எதிர்பார்க்கும் உளத் தகுதியே அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு இருத்தல் வேண்டுமென தெரிவித்துள்ளனர். உலமாக்கள், கல்விமான்கள், நிறுவனங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நூறு முக்கியஸ்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அம்முக்கியஸ்தர்கள் கூறிய கருத்துக்களின் விபரம் வருமாறு,

அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு கல்வித் தகைமையாக க.பொ.த உயர் தரத்தில் சித்தி அல்லது பல்கலைக்கழகப் பட்டம் அவசியம் இருத்தல் வேண்டுமென 91 வீதமானோரும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி அவசியம் இருத்தல் வேண்டுமென 9 வீதமானோரும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி அறிவு அவசியம் இருத்தல் வேண்டுமென 76 வீதமானோரும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழி அறிவு அவசியம் இருத்தல் வேண்டுமென 24 வீதமானோரும் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி அடையத் தவறியவர்களும் இரண்டாம் மொழியில் தேர்ச்சியற்றவர்களும் இஸ்லாம் கூறும் ஒழுக்க விழுமியங்களுக்கும் பண்பியலுக்கும் எதிரானவர்களும் அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு எந்தவகையிலும் தகுதியற்றவர்களென 100 வீதமானோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமூக சேவையில் அனுபவமும் அக்கறையும் இருத்தலும் தனக்கு தெரியாத விடயத்தில் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இருத்தலும் முக்கியமான விடயங்களில் துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடி முடிவு எடுப்பவராக இருத்தலும் வேண்டுமென முக்கியஸ்தர்கள் 100 வீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பின்வரும் தகைமைகள் அரசியல் அதிகாரத்திற்கு வரும் முஸ்லிம் ஒருவருக்கு இருத்தல் வேண்டுமென முக்கியஸ்தர்கள் 100 வீதமானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அவையாவன:

தான் சார்ந்த ஊர் இனத்திற்கப்பால் முழுப் பிரதேசத்தையும் கவனத்திற் கொண்டு சேவை புரிபவராக இருத்தல்.

தான் புரியும் பணி சம்பந்தமாக பொறுப்புக் கூறுபவராக இருத்தல். இஸ்லாம் கூறும் ஒழுக்க விழுமியங்களுக்கு இசைந்து நடப்பவராகவும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவராகவும் இருத்தல்.

தொழுகை உள்ளிட்ட அடிப்படை கடமைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுபவராக இருத்தல்.

இரவு பகலென வேறுபாடில்லாது சேவை புரியத் தக்கவாறு உடல் தகுதியை பெற்றிருத்தல் அதிகமான நேரத்தை மக்கள் பணிக்கு ஒதுக்கத் தக்கவாறு வேறு வேலைப் பளு இல்லாதவராக இருத்தல்.

அரசியல் சம்பந்தமான பொது அறிவும் நாட்டு நடப்புக்களிலும் உலக விவகாரங்களிலும் போதிய அறிவும் அது சம்பந்தமான தேடலும் இருத்தல். பொது மக்களோடும் பல்வேறு பட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளோடும் சிறந்த தொடர்பாடலைப் பேணும் வகையில் தொடர்புத் திறன் உடையவராக இருத்தல்.

பேச்சாற்றல், கூட்டம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தும் ஆற்றல், குழப்பமான நிலைமைகளை சமாளிக்கும் ஆற்றல், பொது மக்களின் நன்மைக்காக துணிந்து குரல் கொடுக்கும் - செயற்படும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டிருத்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஹராம், ஹலால் வரம்புகளை மீறாதிருத்தல். பெருமையையும் ஆடம்பரத்தையும் வீண் விரயத்தையும் வெறுப்பவராக இருத்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொது நலனை முன்னுரிமைப்படுத்துபவராக இருத்தல். தான் புரியும் செயலுக் கூடாக சன்மார்க்கத்திற்கோ, முஸ்லிம் சமூகத்திற்கோ தீங்கு ஏற்படும் வகையில் செயற்படாதிருத்தல். சன்மார்க்க வழிகாட்டுதலுக்கு முரணாக செயற்படாதிருத்தல்.

சுய விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று சமூகத்தின் விருப்பு வெறுப்புக்களைக் கவனத்திற் கொண்டு செயற்படுபவராக இருத்தல்.

இதற்கு மேலதிகமாக தகவல் தொழில் நுட்ப அறிவு உள்ளவராக இருத்தலும் பிரதேச சபையின் சட்டத்திற்கு அமைவாக செயற்படக் கூடிய பக்குவம் உடையவராக இருத்தலும் பணக் கஷ்டம் அற்றவராக இருத்தலும் அரசியல் கட்சியில் அதிதீவிர போக்குடையவராக இல்லாதிருத்தலும் அவசியமென முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

-மூதூர் முறாசில்-

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 464 guests online


Kinniya.NET