வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா? எந்த வேலை சிறந்தது??

CB11--P8GOVERNMENT _421432f[1]

அரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா?' என்று என் பயிலரங்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். 'எது சிறந்தது என்பதைவிட அதை நீங்கள் ஏன் சிறந்ததாகக் கருதுகிறீர்கள் என்று யோசியுங்கள்' என்றேன். இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடந்தது.

பணி நிரந்தரம், அனுபவம் சார்ந்த பதவி உயர்வு, சமூகத்தில் மரியாதை, மக்கள் சேவை செய்ய வாய்ப்பு என்று அடுக்கினார்கள் ஒரு புறம். கிம்பளம் வாங்க அதிக வாய்ப்பு என்றும் வெளிப்படையாகக் கூறினார்கள்.

மற்றொரு புறம் திறமைக்கு மதிப்பு, செயலாக்கம் சார்ந்த பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், நிறைய பணி சார்ந்த வசதிகள் என்று தனியார் வேலைதான் சிறந்ததெனத் திட்டவட்டமாகக் கூறினார்கள்.

அரசு வேலைதான் சிறந்தது என்பவர்களைக் கேட்டேன்: 'உங்களில் எத்தனை பேர் அரசாங்க மருத்துவமனைகளை, அரசாங்கப் பள்ளிகளை, அரசாங்கப் பேருந்துகளை முதல் சாய்ஸ் ஆகத் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று கேட்டேன். சிலர்தான் கைகளைத் தூக்கினார்கள். பாதுகாப்பிற்கு அரசாங்க வேலை, வசதிக்குத் தனியார் சேவை எனும் முரண்பட்ட நிலை பற்றி விவாதித்தோம்.

அதே போல சேவைத் திறன், நவீனம் என்றெல்லாம் பேசிய தனியார் துறை ஆதரவாளர்கள் சில குறிப்பிட்ட சேவைகளில் அரசாங்கச் சேவைகளைத் தேடிப் போவதாகச் சொன்னார்கள். அரசாங்கத் துறைகள் ஏமாற்றாது; ஆனால் தனியார் துறையில் மோசடிகள் அதிகம் என்றார்கள். அதனால்தான் பாரத ஸ்டேட் வங்கியும் எல். ஐ. சியும் இன்னமும் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக லாபகரமாக இயங்கிவருகின்றன.

அரசாங்க வேலைகள் பற்றிய மயக்கம் இன்னமும் கிராமப் புறங்களில் அதிகம் உள்ளது. 'என்ன செலவானாலும் பரவாயில்லை. போஸ்டிங் வாங்கணும். யாரையாவது பிடித்து எப்படியாவது வாங்கிவிட்டால் சில வருஷத்துல போட்டதைச் சம்பாதிச்சு எடுத்திடுவான்!' போன்ற வார்த்தைகளை இன்னமும் அடிக்கடி கேட்கிறோம்.

தனியார் துறைக்கு ஒரு காந்தக் கவர்ச்சி உண்டு. திடீர் வளர்ச்சி இங்கு சாத்தியம். வயது, அனுபவம் என வரிசையில் நின்று பதவி உயர்விற்குக் காத்திருக்க வேண்டாம். திறமைசாலிக்கு என்றும் எதிர்காலம் உண்டு. அசுர வேகத்தில் நிறுவனங்கள் வளர்கின்றன என்றால் அதற்கேற்ப அசுர உழைப்பும் உள்ளது.

தனியார் வேலையில் உள்ள அதீத பணிச்சுமை, அதன் காரணமாக மன உளைச்சல், பாதுகாப்பற்ற தன்மை, ஓய்வு ஊதியம் இல்லாமை போன்றவை இன்னமும் மக்களிடம் அரசாங்க வேலைகள் பரவாயில்லை என்கிற எண்ணத்தை வலுப்பெற வைக்கின்றன.

தமிழ் நாட்டில் பொறியியல் படித்துவிட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிப் போர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அது போல அரசாங்க வேலைகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துவருகிறது.

அதே நேரத்தில் தனியார் மயமாக்கத்தால் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகள் செய்வதால், புதிய வேலை வாய்ப்புகளும் இங்குதான் அதிகம் ஏற்படும்.

அரசாங்கத்திலும் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்பட சாத்தியம் உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் தொழில் கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மாறி வருவதால் தனியார் தரும் வேலை வாய்ப்புகள்தான் பெருகும். இது தவிர பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியாரின் பங்குகள் அதிகரிப்பதால், தனியார் நிறுவன கலாச்சாரம் எங்கும் பரவிவருவதைக் காணலாம்.

அரசாங்க வேலையா, கார்ப்பரேட் வேலையா என்றால் மத்திய தட்டு மக்கள் தனியாரைத்தான் அதிகம் தேடிப் போகிறார்கள். 'நாற்பதுக்குள் நன்றாகச் சம்பாதித்துவிட்டுப் பின் ஓய்வு பெற வேண்டும்' போன்ற எண்ணங்களைப் பல இளைஞர்கள் சொல்லக் கேட்கிறேன். அதற்கு மேல் ஆரோக்கியம் இடம் கொடுக்காது என்று எனக்குச் சொல்லத் தோன்றும்.

லாப நோக்கம், போட்டி மனப்பான்மை, குறுக்கு வழிகளில் நம்பிக்கை, சுய நலம் போன்றவை தனியார் நிறுவனங்களின் விழுமியங்களாக வெளிப்படுகின்றன. காலக்கெடுவிற்குள் எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் குறி. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. மறுக்கவில்லை.

லஞ்சம், ஏமாற்று வேலை என்பதெல்லாம் இரு பக்கங்களிலும் உண்டு. தனியார் துறையில் மேல் தட்டில் அல்லது சில குறிப்பிட்ட பணிகளில்தான் இவை சாத்தியம். அரசுப் பணியில் கீழ் நிலைவரை கிட்டத்திட்ட எல்லாப் பதவிகளிலும் இவை சாத்தியம்.

ஆனால் நேர்மையான, திறமையான ஆட்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் முன்னுக்கு வருகிறார்கள். எங்கு பணி செய்தாலும்.

அரசாங்கப் பணிகளில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஆட்கள் அமர்ந்தால் நம் தேசம் உலக அரங்கில் தலை நிமிரும்.

எல்லையில் ஆயுதம் ஏந்தி நிற்கும் ராணுவ வீரர்களும், பழங்குடிகள் வாழும் மலைப் பகுதியில் பணியாற்றும் அரசாங்க மருத்துவர்களும், குக்கிராமத்தில் கட்டிட வசதிகூட இல்லாமல் மர நிழலில் போதிக்கும் ஆரம்ப நிலை ஆசிரியர்களும், பேரிடர் காலத்தில் களம் இறங்கிப் பணி புரியும் ஆட்சியாளர்களும்தான் நிஜ நாயகர்கள்!

எந்தப் பணமும் வசதியும் தராத மன நிம்மதி மக்கள் தொண்டில் கிடைக்கும். இது அரசாங்கப் பணியில் தான் இயல்பாகச் சாத்தியமாகிறது. அரசியல் தலையீடு, வசதிக்குறைவு, திறமைக்குத் தேவையான ஊக்குவிப்பு இல்லாமை போன்றவை பெரிய சவால்கள்தான். ஆனால் இவை தாண்ட முடியாத தடைகள் அல்ல.

அரசாங்கப் பணிகள் மீது வேலை தேடுவோரின் கவனம் திரும்ப வேண்டும் என்றால் அரசுத் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் நியாயமாகத் திறமையின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டும். தவிர, தனியார் துறையில் உள்ள நல்ல நிர்வாக வழிமுறைகளை அரசாங்கத் துறைகள் பின்பற்றலாம்.

வேலை என்பது நம் பிழைப்பிற்கு மட்டும்தானா? பிறர் துன்பம் துடைக்கக் கிடைத்த வாய்ப்பா?

இந்தக் கேள்விக்கான பதில்தான் உங்கள் வேலை தேடும் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கும்.

 

நன்றி: டாக்டர். ஆர் கார்த்திகேயன்.

தொடர்புக்கு: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்


---------

 

நீங்களும் எழுதலாம்..

இதுபோன்ற ஆரோக்கியம், வாழ்வியல், சமூகம் சார்ந்த ஆக்கங்களை நீங்களும் எழுதியனுப்பும் ஆர்வம் உள்ளவரா?

உங்கள் ஆக்கங்களை

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்  எனும் மின்னஞ்சல் மூலமோ அல்லது,

The Editor
Kinniya NET Media Network,
No. 111
Kurinchakerny - 03, Kinniya.

எனும் முகவரிக்கோ எழுதியனுப்பலாம்..

 

--

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 228 guests online


Kinniya.NET