திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

கிண்ணியாவின் முதல் அரச பாடசாலை கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி!

பாடசாலைகள்

 kmgc- ஏ.ஸீ.எம்.முஸ்இல் -

கிண்ணியாவின் பொதுக்கல்வி வரலாற்றை ஆராய்கின்றபோது தற்போது இருக்கின்ற தகவல்களின் படி முதல் அரச பாடசாலை 110 வருடங்களுக்கு முன்னர்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது 1902 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியாகும்.

தற்போது இருக்கின்ற இடத்திலேயே இப்பாடசாலை கலவன் பாடசாலையாக தற்காலிகக் கொட்டில் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தரம் 1, தரம் 2 ஆகிய வகுப்புகள் மாத்திரமே இங்கு இருந்தன. 1905ஆம் ஆண்டு இப்பாடசாலைக்கு நிரந்தரக்கட்டடம் ஒன்று கட்டப்பட்டது.

இப்பாடசாலை கலவன் பாடசாலையாக இருப்பது மார்க்க ரீதியாக பொருத்தமானதல்ல எனக் கருதிய அப்போதைய உலமாக்கள் 1924ஆம் ஆண்டு இதே பாடசாலை காணியை இரண்டாக பிரித்து அடைத்து ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் என இரு பாடசாலைகளாக்கினர்.

இந்த ஆண்கள் பாடசாலையே தற்போது பெரிய ஆண்கள் வித்தியாலயம் என அழைக்கப்படுகின்றது. சுமார் 47 வருடங்கள் தற்போதைய மகளிர் கல்லூரி காணிக்குள் இயங்கி வந்த பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் 1971ஆம் ஆண்டு அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னர் தனியே பெண்களுக்கான ஒரு பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி இயங்கத்தொடங்கியது. இப்பாடசாலை 1965 காலப்பகுதியிலிருந்து அரசினர் பெண்கள் மகாவித்தியாலயம் எனவும், 1969 முதல் அரசினர் முஸ்லிம் பெண்கள் மகா வித்தியாலயம் எனவும் பெயர் பெற்றது.

1970 முதல் பெரிய கிண்ணியா பெண்கள் மகா வித்தியாலயம் என அழைக்கப்பட்ட இப்பாடசாலை 1972 முதல் சல்மா மகா வித்தியாலயம் என பெயரிடப்பட்டது.

1979 ஆம் ஆண்டு முதல் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் எனப் பெயர் பெற்று 2002 ஆம் ஆண்டு முதல் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று வரை இதே பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. எனினும், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் என்ற பெயரே இன்றும் பதிவிலுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

1962ஆம் ஆண்டு வரை இங்கு 5ஆம் தரம் வரை மட்டுமே வகுப்புகள் இருந்தன. இங்குள்ள மாணவிகள் மேல் படிப்புக்காக கிண்ணியா மத்திய கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே, அங்கு ஆண்களும், பெண்களும் கலந்து படிக்க வேண்டிய நிலை இருந்தது.

இதனைக் கவனத்தில் கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் 1962 ஆம் ஆண்டு இதனை ளுளுஊ வரையுள்ள பாடசாலையாகத் தரமுயர்த்தினார். இவர் இப்பாடசாலை மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார். இதனால் இவர் பல இடங்களில் தனது இரு கண்களில் ஒன்று என இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடசாலைக்கு நெசவுக்கட்டடம், அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, வகுப்பறைக்கட்டடங்கள், சுற்றுமதில் எனப் பல்வேறு பௌதீக வளங்களை ஏற்படுத்தினார். அப்போதைய கல்வி அமைச்சர் மர்ஹூம் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் ஒத்துழைப்பு இவருக்கு கிடைத்தது. மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் இச்சேவைகளை மறக்க முடியாத இப்பகுதி மக்கள் மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியான சல்மா அவர்களின் பெயரை இப்பாடசாலைக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.

முன்னாள் எம்.பி மர்ஹூம் எம்.ஈ.எச்.முகம்மது அலி அவர்கள் இப்பாடசாலையின் பெயருடன் முஸ்லிம் என்ற பெயரைச் சேர்த்தார். அத்தோடு இதற்கு புதிய kmgc1வகுப்பறைக்கட்டடம் ஒன்றையும் வழங்கினார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் இப்பாடசாலையின் முதல் மாடிக்கட்டடத்தை 1982ஆம் ஆண்டு வழங்கியதோடு அப்போதைய கல்விச் சேவைகள் அமைச்சர் லயனல் ஜெயதிலக்கவை அழைத்து வந்து அதனைத் திறந்தும் வைத்தார். அதேபோல 1990ஆம் ஆண்டும் மற்றுமொரு மாடிக்கட்டடத்தை வழங்கினார். இந்த மாடிக்கட்டடங்களுள் ஒன்று தான் அண்மையில் உடைக்கப்பட்டது. அதேபோல எஞ்சியிருந்த சுற்று மதில் இவராலேயே பூரணப்படுத்தப்பட்டது. அத்தோடு 1979ஆம் ஆண்டு இதனை 1 சீ பாடசாலையாகவும் தரமுயர்த்தினார்.

தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் 1996ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலேயே தற்போது அதிபர் அலுவலகம் உள்ள 'ட' வடிவிலான பெரிய மாடிக்கட்டடம் அவரால் வழங்கப் பட்டது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக இரு பழைய வகுப்பறைக்கட்டடங்களும், ஒரு நெசவுக்கட்டடமும் அகற்றப்பட்டது. அதேபோல இப்பாடசாலை 1ஏபீ தரத்திற்கு தரமுயர்த்தப் பட்டதும் இவர் காலத்திலேயே ஆகும்.

பழைய நீதிமன்றக் காணியை இப்பாடசாலைக்கு பெற வேண்டும் என்ற முயற்சி 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக 2003 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு அவர்களை இப்பாடசாலைக்கு அவர் அழைத்து வந்தார். எனினும் அப்போது அது கைகூடவில்லை.

தற்போதைய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் கூட்டுறவு அமைச்சராக இருந்தபோது எடுத்த முயற்சியினால் 2010 ஆம் ஆண்டு நீதிமன்றக்காணி உத்தியோகபூர்வமாக இப்பாடசாலைக்கு கைமாற்றப் பட்டது. இக்காணியில் அப்துல் வஹாப் பவுண்டேசன் அனுசரணையுடன் புதிய மாடிக்கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களால் இப்பாடசாலைக்கு ஒரு மாடிக்கட்டடம் வழங்கப்பட்டது. அவர் உயிருடன் இருந்த காலத்தில் அதன் கீழ்த்தளம் மட்டுமே பூரணப்படுத்தப்பட்டது. அதுவே தற்போதைய விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடமாகும்.

இப்பாடசாலையின் முதல் அதிபராக திரு. சாமித்தம்பி என்பவர் பணியாற்றியுள்ளார். தற்போது 23வது அதிபராக திருமதி நாதிரா அமீன்பாரி பணியாற்றுகின்றார். அமரர் காசிநாதர், அவரது மனைவி இரத்தினபூபதி, செல்வி வடிவேலு ஆகிய தமிழ் அதிபர்களின் பணி இப்பாடசாலையின் உயர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது. காசிநாதர், இரத்தினபூபதி ஆகியோர் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து கற்பித்தல் பணியை மேற் கொண்டுள்ளனர்.

செல்வி வடிவேலு மாணவிகளின் ஒழுக்க விழுமிய விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் நமது கலாசாரத்துக்கு பங்கம் ஏற்படாது மாணவிகளை பங்குபற்ற வைத்த பெருமை இவருக்குரியது.

சித்தி டீச்சர் என எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி எஸ்.எப்.சாலிஹ் காலமும் இப்பாடசாலையின் செழிப்பான காலமாகும். இவரது காலத்திலேயே முதல் மாடிக்கட்டடம் இங்கு நிர்மாணிக்கப்பட்டது. இவரால் ஒழுங்கு படுத்தப்பட்ட புறக்கிருத்தியச் செயற்பாடுகள், பரிசளிப்பு விழா என்பனவும் மறக்கமுடியாதவை.

திருமதி சுக்கூர் டீச்சர் காலத்தில் தான் இப்பாடசாலைக்கு இரண்டாவது மாடிக்கட்டடம் கிடைக்கப்பெற்றது. எம்.ஐ.அப்துல் ஜப்பார் அவர்கள் அதிபராக இருந்த காலத்திலேயே 'ட' வடிவ மாடிக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டதோடு பாடசாலை 1ஏபீ யாகவும் தரமுயர்த்தப்பட்டது. ஏ.ஜே.எம்.ரூமி அவர்கள் அதிபராக இருந்த காலத்திலேயே நீதிமன்றக் காணி பாடசாலைக்கு பெறப்பட்டமை அதற்குள் புதிய மாடிக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை என்பன இடம்பெற்றுள்ளன.

நூற்றாண்டு கடந்த முதற் பாடசாலையான கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்னும் பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. இவைகுறித்து அனைவரும் கவனம் செலுத்துவது சிறந்தது.

உசாத்துணை:

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி நூற்றாண்டு மலர்

mussil photo

Compiled By: ACM. Mussil

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21667
மொத்த பார்வைகள்...2078591

Currently are 484 guests online


Kinniya.NET