ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

தூரம்..! (சிறுகதை)

d

நேரம் நள்ளிரவை அண்மித்திருந்தது.

வீட்டுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நபரும் வந்து விட்டதால், வீட்டு விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு விட்டன.

ஸியாதின் வீட்டு விளக்கு மட்டும் இன்னும் ஸியாதை எதிர்பார்த்து விழித்துக் கொண்டிருக்கிறது. அந்த விளக்கைப் போல ஷெரோஸியாவும் அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.

யாரோ தூக்கம் வராத இளைஞன் ஏழாவது அறிவுப் பாடலொன்றை, நள்ளிரவு என்பதையும் மறந்து முழக்கி விட்டிருந்தான்.

'நான் ஒரு முடிவு பண்ணிடேன்னா, என் பேச்ச, நானே கேக்க மாட்டேன்...' பக்கத்து வீட்டில் விஜய் சவால் விட்டுக்கொண்டிருந்தார்.

தொலைக் காட்சி அலை வரிசைகளும் ஒவ்வொன்றாக தூங்கி வழியத் துவங்கி விட்டன. ரூபவாஹின் 'நமோ, நமோ மாதா...' பாட ஆரம்பித்து விட்டது.

அலை வரிசைகளை மாற்றிப் பார்த்தாள். அவளது மனசைப் போலவே வரண்டு போயிருந்தது. வெறுப்போடு, ஓப் செய்து விட்டு, ரெமோட்டை அருகில் வைத்தாள். மனது எரிச்சலோடு புகை கப்பிக்கொண்டிருந்தது.

இன்றாவது நேர காலத்துடன் வீடு வருமாறு சொல்லியிருந்தாள். இன்னும் ஆள் இல்லை. நடு சாமம் ஆகிறது. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது. பல்துலக்குவான். குளிப்பான். ரெடியாகிப் போய் விடுவான். திரும்பி வரும் போது, நள்ளிரவாகிவிடும்.

வெள்ளிக் கிழமை மட்டும்தான் அவன் கடை மூடுவது. கடை மூடப்படுமே தவிர, அவனுக்கு விடுமுறை இல்லை. சாமான் எடுக்கப்போவது, வியாபாரக் கணக்குகளைப் பார்ப்பது, பேங்குக்குப் போவது, கடையைத் துப்புறவு செய்வது... இப்படி வெள்ளிக் கிழமை விடுமுறையில் அவனுக்கென்றொரு வேலைப் பட்டியல் இருக்கும்.

இந்த லட்சணத்தில் கணவன்- மனைவி மனம் விட்டுப் பேசிக் கொள்வது, பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவது, குடும்பத்தோடு ஓய்வாக வெளியிடங்களுக்கு செல்வது, இவற்றிற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப் போகிறது?

ட்ரூ.........

தரீவீல் சத்தம். ஸியாத் வந்து விட்டான். கதவு திறக்கிறது. வியர்வை நாற்றமும், பலசரக்கு வாசமும் கலந்து வீச உள்ளே நுழைகின்றான். களைப்பினதும், சோர்வினதும் ரேகை அவனது முகத்தில் கூடு கட்டி அமர்ந்திருக்கின்றன.

'ஏன் இவ்வளவு நேரம் லேட்...?'

'இப்பதான் வேலகள் முடிஞ்சது...'

'நாளைக்கு காலைல செய்யலாம்தானே...?'

'இல்ல.. நாள காலைல வேற வேலைகள் இருக்குது'.

எதுவித உயிர்த்துடிப்பும் இல்லாத உரையாடல்.

'நுஸ்ரிக்குக் காய்ச்சல். அந்தியிலிருந்து அழுது கொண்டு இருந்து, இப்பதான் தூங்குறது...' ஷெரோஸியாதான் சொன்னாள்.

ஒரு அக்கறையோடு கூடிய பதிலையும், பரிவான சில வார்த்தைகளையும் அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால், எறிப்பது போன்ற பார்வை ஒன்று மட்டுமே, ஸியாதிடம் இருந்து பதிலாகக் கிடைத்தது. அந்தப் பார்வையின் சூட்டில் தான் சாம்பலாகிப் போவதாக உணர்ந்தாள் ஷெரோஸியா.

நான் கடைல இருந்து, கஷ்டப்பட்டு விட்டு வாறேன். இங்க வந்ததும், கொஞ்சம் நிம்மதியா இருக்க விட்றாளில்லையே என்று நினைத்தான் ஸியாத். தன்னை கொஞ்ச நேரம் தனியாக இருக்க விடமாட்டாளா என்பது ஸியாதின் கோபம்.

நேராகப் படுக்கையறைக்குச் சென்றவன் உடைகளை மாற்றக்கூட இல்லை. கட்டிலில் சாய்ந்தான். நுஸ்ரிக்கு என்ன சொகமில்ல. அதிக நேரம் கஷ்டப்பட்டிருப்பாளோ என்று கேட்கத் தோன்றியது ஸியாதுக்கு.

'சீ... சீ.. நான் ஏன் கேட்க வேணும்? இவ்வளவு நேரம் நாய் மாதிரி கஷ்டப்பட்டு உழைச்சிட்டு வாறேன். என்னப்பத்தி எந்த அக்கறையும் இவளுக்கு இல்ல. இவ மேல நான் மட்டும் ஏன் அக்கறை காட்டனும்'. உடனே மனதை மாற்றிக் கொண்டான்.

பசி வயிற்றைக் கிள்ளியது. எரிச்சலும், தூக்க மயக்கமும் கிள்ளிய பசியை தள்ளி வைக்கச் செய்தன. கண்களை மூடினான். உறக்கம் அவனை ஆறத் தழுவிக் கொண்டது.

*****

ஷெரோஸியா அறைக்கு வருகிறாள். உடுத்தியிருந்த ஆடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல், ஸியாத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். 'பாவம், பசியோடு தூங்குறாரு'. அவன் இருந்த கலைப்பான தோற்றம் அவளை உறுத்தியது.

'சீ... சீ... ஏன் நான் அவர் மேல பாவப்படனும்? பெற்ற பிள்ளக்கி சொகமில்ல என்டு சொன்னதக் கூட அலட்டிக்காத மனுஷன் மேல....' பரிவு காட்ட முனைந்த மனதுக்கு கடிவாளம் இட்டாள்.

அவர்களது இத்தனை ஆண்டு கால திருமண வாழ்க்கை இப்படிப் பிடிப்பற்றதாகத்தான் கழிந்திருக்கிறது. சாப்பிட்டார்கள். உடுத்தினார்கள். குறை சொல்ல முடியாதளவு சராசரி வசதிகள் இருக்கவே செய்தன. ஆனாலும் நெருடல்கள். ஒரு பிடிப்பில்லை.

தூங்கிக் கொண்டிருந்த ஸியாதை எழுப்பிச் சாப்பிடச் சொல்லலாமா? வேண்டாம். நாளை கடைக்குப் போகனும். என்ன ஏன் அனாவசியமா தொந்தரவு செய்ற என்று சீறி விழுந்தாலும் விழுவான். விளக்குகளை அனைத்து விட்டு அவளும் அருகில் வந்து படுத்துக் கொண்டாள்.

அவர்கள் திருமணம் முடித்து சந்தோஷமாக கழிந்த ஆரம்ப நாட்கள் அவளுக்கு ஞாபகம் வந்ததோ என்னவோ...? ஒரு உஷ்னமான பெருமூச்சு அவள் ஆழ் மனதில் இருந்து வெளிப்பட்டது.

ஸியாதின் வீட்டு விளக்கு இப்போது அணைந்து விட்டது. வாழத்தெரியாத மனிதர்கள் உலகத்தில் இத்தனை பேர் வாழ்கிறார்களே என்ற கவலையில் பீறிட்டுப் பாயும் கண்ணீரைத் தவிர்க்கப் பகீரதப் பியத்தனம் செய்வது போல், ஏழாம் பிறை நிலவு மட்டும் கண்களை சிமிட்டிக் கொண்டே விழித்திருக்கிறது.

பூமிக்கிரகத்தில் மற்றொரு நாள் நிறைவு பெறுகிறது.

(யாவும் கற்பனை).

 

ரிஸா ஜவ்பர்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 184 guests online


Kinniya.NET