ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

இதயத் துடிப்பு..! (சிறு கதை)

hs

ஜீ.எச்.எனச் சுருக்கமாக அல்லது செல்லமாக சொல்லப்படும் ஜெனரல் ஹொஸ்பிட்டல் அரசாங்க ஆஸ்பத்திரி என்பதை நிரூபிப்பதற்காக ஏகப்பட்ட சான்றுகள் ஆஸ்பத்திரி கட்டடச் சுவர்களிலும், ஓபிடி வாசலிலும் அம்பியூலன்ஸ் நடு வகிட்டில் உருண்டு கொண்டிருக்கும் அபாயம் சிதறடிக்கப்படும் ரத்த நிற வர்ணங்களிலும் ஆங்காங்கே அசிரத்தையோடு தெரிகின்ற சில நேர்ஸ்மார்களிலும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

டேட்டோலும் மென்தலினும் மூக்குத் துவாரங்களின் இருண்ட குகைகளினை முரட்டுத்தனமாக மோதி அமளி துமளி செய்து கொண்டிருக்கும் ஆஸ்பத்திரிகளுக்கான அதுவும் அரச ஆஸ்பத்திரிகளுக்கான விஷேட இலட்சணைகள் வயிற்றின் ஏதோ ஒரு பகுதியில் அலர்ஜி அலர்ஜி என அலறிக் கொண்டிருந்த அந்த பழங்காலக் கட்டடத்தின் ஓபிடி தாண்டி ஓடிப் போய் வலது பக்கம் திரும்பினால் இன்டென்சிவ் கெயார் யுனிட் வருகின்றது. கொஞ்சம் சற்று நடந்து போனால் எமெர்ஜென்சி கெயார் யுனிட். இரண்டுக்கும் இடையில்

உடம்பினுள் பத்திரப்படுத்தப்பட்டிருந்த முப்பத்தியாறு செல்சியஸ் பாகை வெப்பத்தின் சமநிலையினை அஷ்ட கோணல் சிருங்காரங்களினைக் கொண்டு சிதறடித்த நிலையில் கணிக்கவே முடியாத ப்ளஸ் டிகிரி வெப்பம் எந்த நிமிடத்தில் என்ன நடக்கும் என்ற ஊகங்களுக்கெல்லாம் இடம் தராமல் அழுகையினைத் ரொம்பக் கஷ்டப்பட்டு தவிர்த்துக் கொண்டும் ஒட்டு மொத்தமாய் தவித்துக் கொண்டும் வாஹிது நின்று கொண்டிருந்த இடம்.

ஒப்பரேஷன் தியேட்டருக்கு முன்னால்....

வெள்ளை யுனிபோர்மில் தேவதைகளாக அவரைக் கடந்து கொண்டிருந்த தாதிகளோ சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த அமைதியினைக் குலைத்துக் கொண்டிருக்கும் செருப்புக்களினதும், சப்பாத்துக்களினதும் அடியில் கழுத்து மிதிபட்டு கதறல் எழுப்பும் தரையின் சப்தங்களோ அவருக்குள் எவ்வித பிரக்ஞைகளையும் ஏற்படுத்தவில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் அவரது ஹார்ட் பீட் எகிறி எகிறி எங்கே ஒரு வேளை காரணமாக பணி நிறுத்தம் பண்ணி விடுமோ என்ற கணக்கில் வாஹிது துடித்துக் கொண்டிருந்தார்.

அவரது மொத்த அங்கங்களிலும் இதயம் மட்டும்தான் ரத்தத்தை பம்ப் பண்ணிக் கொண்டிருந்தது. அனைத்து அங்கங்களும் இயல்பாக செயலற்றுப் போய்க் கிடந்தன. இதயத்தின் ஆர்ட்டெரிகளில் ஈரம் தொலைந்திருப்பதினை பாலைவனமாய் உலர்ந்து போய்க் கிடந்த அவரது இரண்டு உதடுகளும்; வார்த்தைகளற்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

இரண்டு கண்களிலும் 'க்ளக்' தடுப்பு மருந்தாய் சொட்டுக் கண்ணீர்.

அது அழுகையின் வெளிப்பாடு. வெடித்துச் சிதறுகின்ற இதயத்தின் பிளவுகளிலுந்து இறக்குமதி செய்யப்படுகின்றது கண்ணீர். கவலைகள் எழுகின்றபோது அவசரகதியில் விழிகள் கண்ணீர் கோரி விண்ணப்பம் செய்து விடுகின்றன. ஆற்றாமையின் போது பலவீனம் உக்கிரமடைந்து கண்ணீராக உருமாற்றம் செ;யப்படுகின்றன என்றெல்லாம்; தொடர்ந்து கண்ணீர் எனும் தலைப்பில் உரை எழுத அவகாசமில்லை.

வாஹிது அழுது கொண்டிருந்தார். எப்பேர்பட்ட மனிதனும் சூழ்நிலையின் கைதியாகி விடுகின்றபோது காலம் அவனை தன்னிஷ்டத்துக்கு நான்காக எட்டாக பதினாறாக மடித்துப் போட்டு கதகளி ஆடுகின்றது என்பதனை இதோ இந்த இறுக்கமான சூழ்நிலையில் இருட்டிய முகத்தோடு இருப்புக் கொள்ளாமல் திக்கும் வஹிது.

' யா அல்லாஹ் எம் புள்ளயக் காப்பாத்திடு'

எதுவுமே செய்ய முடியாத நிலையில் அடிக்கொரு தடவை படைப்பாளானின் பெயர் உச்சரிக்கப்பட்டு அவனிடம் புகலிடம் கோரிக் கதறுவது என்பது பிரபஞ்ச விதிகளில் பிரதானமானது. மாற்றங்களுக்குட்படாத இந்த விதியின் எல்லைகளுக்குள் மனித சமூகத்தின் மரணம் வரையிலான ஆக்கிரமிப்பு.

' யா அல்லாஹ் எம் புள்ளயக் காப்பாத்து'

தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது விமர்சனகங்களுக்கோ வாதப்பிரதிவாதங்களுக்கோ உட்படாதது.

நொடிக்கொரு தடவை 'எபம்புள்ளையக் காப்பாத்து எம் புள்ளயக் காப்பாத்து' எனவும் தன் பிள்ளை காப்பாற்றப்பட்டால் பத்து நோன்பு பிடிப்பேன் என்றும், மாடறுத்து குர்பான் கொடுப்பேன் என்றும், ஆடறுதடது குர்பான் கொடுப்பேன் என்றும்; புகாரி பள்ளி கட்டட நிர்மானங்களுக்காக ஒரு இலட்சம் கொடுப்பேன் என்றும் மற்றும் நேர்த்திகளை தொடர்ந்து கொண்டிருந்த வாஹிதின் முகத்தில்; கவலையின் கோடுகளில் கோபமும் ஆத்திரமும் ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் பற்றிp சிறப்பு விரிவுரை செய்து கொண்டிருந்தன.

'மகனைக் கொண்டு வந்து பத்து நிமிஷமாச்சு இன்னமும் சேர்ஜன் வந்து சேரல்ல. கேட்டா இந்தா வந்திடுவார் என்று சொல்றாங்க. பத்து நிமிஷமாச்சு சேர்ஜன் எப்ப வாரது மகனுக்கு எப்ப ஒபரேசன் பண்றது ஓ...... என்ட ரப்பே சேர்ஜன் வர மாட்டாரா அல்லது லேட்டாகி வருவாரா அதுக்குள்ள மகனுக்கு ஏதாவது ஆயிட்டா.............'

அதற்;கு மேல் அவரால் யோசிக்க முடியவில்லை.

'நேர்ஸ் எப்பதான் டொக்டர் வருவாரு.......இல்ல வரவே மாட்டாரா: ஒப்பரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து வெளியே வந்த ஒரு வெள்ளை நிற நைட்டிங் கேளிடம் வெடித்துச் சிறதினார் வாஹிது.

'இல்ல சேர்.....டொக்டர் இதோ இப்ப வந்திடுவாரு. நீங்க எதற்கும் பயப்படத் தேவையில்ல. சேர்ஜன் வரும் மட்டும் ஒங்க மகனுக்கு வேற டொக்டர்ஸ் ட்ரீட்மென்ட் குடுத்திட்டுத்தான் இருக்காங்க.....'

' இதத்தான் கடந்த பத்து நிமிஷமா மாறி மாறி சொல்லிவிட்டு இருக்கீங்க. என்னதான் ஹொஸ்பிட்டல் நடத்துறீங்களோ தெரியாது..... ஒங்க டியூட்டியும் நீங்களும்..........ச்சே.....எம்புள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மாவே இருக்கமாட்டேன்....'

அவர் அவன்ட வேதனை அவனுக்கு.

நெருப்பிலிட்டு சூடாக்கப்பட்டிருந்த வார்த்தைகளில் ஆவேஷம். ஆத்திரம் ஆற்றாமை இயலாமை என அத்தனையும் கலந்து மிக்ஸராகி.

'இல்ல சேர் சேர்ஜன் இப்ப வந்திடுவாரு. இப்பதான் திரும்பவும் கோல் எடுத்தாரு....கார்ல வேகமா வந்திட்டு இருக்குறதா சொன்னாரு. ஜஸ்ட் ஒரு அஞ்சு நமிஷத்துக்குள்ள இதோ வந்திடுவாரு' என்ற நேர்ஸின் வார்hத்தைகளை காதுகளுக்குள் சமிபாடு செய்யும் திராணியை எப்போதோ தொலைத்திருந்த வாஹிது ஒரு சிவில் இஞ்சினியர். படித்தவர். ஹை கிளாஸ் சொசைட்டி என்பார்களே அதன் அங்கத்தவர்களில் அவரும் ஒருவர். மூன்று பிள்ளைகள் . மூத்தவன் அர்ஷாத். பதினெட்டு வயது. சீமா ஸ்டேஜ் திரீயில். கோப்ரேட் உலகக் கனவுகளில் அம்பானிகளையும் பில்கேட்ஸ்களையும் இன் போஸிஸ் நாராயண சுவாமிகளையும் சுஜாதாவின் 'உள்ளம் துறந்நதவனில்' வருகின்ற இன்போஸிஸ் கோப்ரேட் நிறுவன எம் டி ராகவேந்தர்களையும் ரோல் மொடல்களாக்கி பிஸினஸ் டுடே படித்துக் கொண்டிருப்பவன். பீபீஸி பிஸினஸ் வேர்ல்ட் ரொம்பப் பிடிக்கும். ஹார்வாடில் எம்பிஏ படிக்க வேண்டும். அப்புறம் ஏசியன் வீக் அட்டைப் படத்தில் தனது புகைப்படம் உள்ளே ஆர்ட் பேப்பரில் பள பளக்க வெற்றிகரமிக்க தனது கோப்ரேட் உலகின் ரகசியங்கள் எனும் தலைப்பில் 'என் இன்டர்வீவ் வித் எ யங் சக்ஸஸ்புல் கோப்ரேட் பேர்ஸனாலிட்டி; என கிறங்கடிக்க........அப்புறம் தனது கனவு ப்ரொஜக்ட்டான சோலார் எனேர்ஜி அறுநூறு ஏக்கர் நிலப்பரப்பில் இறுமாப்போடு அமர்ந்து கொண்டிருக்கும் சோலார் பவர் ப்ளான்ட் எனக் கனவு கண்டு கொண்டிருந்த அர்ஷாத்.

தனது தாயின் கருவறையில் இருக்கையில் உயிர் ஊதப்படும் போது அட்டவணைப்படுத்தப்பட்ட கர்ம விதிப்படி

சரியாக இன்று காலை பதினொரு மணிக்கு அதி வேகமாய் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது எதிரே அதே வேகத்தில் வந்து கொண்டிருந்த டிப்பர் ஒன்றோடு நேருக்கு நேர் ஆலிங்கனம் செய்ததில் அவனது தகப்பன் வாஹிதினது டொயோட்டா கொரொல்லா இரண்டாயிரத்து பன்னிரெண்டு மொடல் மைக்ரோ நொடியில் உருவ மாற்றத்திற்குள்ளாகி அஸ்ட கோணலாகி முன் பொனட் சுவத்தில் எறிந்த அலுமினியத் தட்டாய் நசுங்கி வின்ட் ஸ்கிரீன் நொறுங்கிக் கசங்க......

'கிரீச்...............'

மேஜர் எக்ஸிடென்ட்......அதனை வர்ணிக்க இன்னும் சில பக்கங்கள் தேவைப்படும் என்பதனால் தாள் விரயம் கருதியும் இன்னும் அது பற்றி எழுத விரல்களுக்கு மேலதிக வேலை நேரம் கொடுக்க வேண்டுமென்பதாலும் அத்தோடு குறித்த விபத்து பற்றி வாசகர்கள் அது எப்படி இருந்திருக்கும் என்பது தொடர்பில் தமது கிரியேட்டிவிட்டிக்கு கொஞ்சமாவது வேலை கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும்.....அதனை விட்டு விட்டு...

விபரீதம் உணரும் முன்னமே கார் டிப்பெரின் கன்னத்தில் முகம் தேய்க்க உணர்ச்சிப் பெருக்கெடுத்து டிப்பர் மூர்க்கத்தனமாக முத்திமிட்டதில் ஸ்பஷ்டமாக அது விபத்து எனக் கணிக்கு முன்னமே

ஒரு பெரிய ரத்தச் சேதத்துடன் மண்டையில் அடிபட்டு அப்புறம நொடிகளின் அசைவுகளில்; மயக்கத்துக்குப் போனவனை அம்புலன்ஸ் அள்ளிக் கொண்டு இதோ அவசர சத்திர சிகிச்சைக்காக இந்த ஒப்பரேஷன் தியேட்டரில் சேர்த்த போது அன்று ஒப்பரேஷன் தியேட்டருக்குப் பொறுப்பான ஒன் கோல் ஜெனரல் சேர்ஜன் பெரேரா வெளியில் போயிருந்தார். அவசர கேஸ்கள் ஏதாவது வந்தால் உடனடியாக செல்லில் தன்னை கன்டக்ட் பண்ணுமாறு சொல்லிவிட்டுப் போயிருந்தார் சேர்ஜன் பெரேரா.

'யா அல்லாஹ் எம் புள்ளயக் காப்பாத்தித்தா. இந்த நேரம் பார்த்து இந்த சேர்ஜன் ராஸ்கல் எங்கே போய் தொலஞ்சான். அவனவன் இஷ்டத்துக்கு ஆடுறானுங்க. எம்புள்ளக்கு மட்டும் ஏதாச்சும் ஆயிடுச்சின்னா ...........அப்புறம் அப்புறம்.......'

அப்புறம் அவரால் கற்பனை செய்ய முடியவில்லை. அப்பேர்ப்பட்ட கற்பனையே அவரது கழுத்து நரம்புகளை கடித்துக் குதறிவிடும் பூதகனங்களாக பூதாகரமெடுத்தன.

'யா அல்லாஹ் இந்த சேர்ஜனை எப்படியாவது கொண்டு வந்து சேர்த்து எம்புள்ளக்கு வாழ்வு கொடு'.

அர்ஷாத் அவரது மூத்த சீமந்த புத்திரன். தவமிருந்து பெற்ற பிள்ளை. ஏனைய இரண்டு பிள்ளைகளையும் விட இவன் மேல் இவருக்கு பாசம் கொஞ்சம் ஜாஸ்திதான். அர்ஷாத்தின் மேனரிஸம் அவனது இன்டலிஜென்ஸ் அத்தனையும் அவருக்குப் பிடிக்கும். புத்திர பாசத்தில் சென்டிமென்ட் மட்டும் அவருக்குள் சிந்தஸைசரில் ஒலித்துக் கொண்டிருக்க ஏனைய அனைத்து சென்ஸ்களும் செயலற்றுக் கிடந்தன.

எவனை விட்டது புத்திர பாசம். அல்லாஹ் தனது வேத நூலான புனித குர்ஆனில் சூரத்து கஹ்பில் சொல்வது போல 'உங்கள் குழந்தைகளும் சொத்துக்களும் வெறுமனே உலகின் அலங்காரப் பொருட்கள். எனும் வசனம் எத்துனை யதார்த்தமானது. தன் ரத்தத்தில் பயிராகி தனக்குள் அலங்காரமான தனது மூத்த புத்திரன் ரத்தத் சகதியோடு அம்பியூலன்ஸில் கோமாவில் அள்ளிக் கொண்டு வரப்பட்டு இதோ உயிருக்காக மூன்றாம் உலக யுத்தம் செய்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சி.

அவரது விழிக் கமராவில் ஆழமாக ஒளிப்பதிவாகி எவ்வித இன்டர்மிஸனுமில்லாமல் மூளையின் நியுரோன் திரையில் இப்போது வரை ஓடிக் கொண்டேயிருந்தது.

பின் மண்டையில் ரொம்ப அடிபட்டிருக்கின்றது.

முகத்தில் கண்ணடி குத்திய காயங்கள்

கால் கை எலும்புகளில் முறிவு........?

அனைத்தும் செயலற்று அம்பியூலன்சிலிருந்து இறக்கப்பட்டு ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு ஒப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைவிக்கப்படும்போது அசைவற்றுக் கிடந்தானே

பிழைப்பானா?

'என்ன முட்டாள்த்தனமான சிந்தனை. ச்சீ.... சிந்தனையை மூடு.....' மூளையின் மூலையில் கண்கள் சிமிட்டிக் கிடந்த அச்சத்தின் வேட்டைப் பற்களில் வாஹிதின் இதயத் துடிப்பு வெளிறிப் போய்க் கிடந்தது.

மீண்டும் மீண்டும் பிரார்த்தனை.

பேச்சு மூச்சில்லாமல் வாழ்வின் கடைசித் தருணங்களில் உயிருக்காக நிராயுதபாணியாக நின்று கொண்டு தனியே போராடிக் கொண்டிருக்கும் அர்ஷாத்துக்கு ஜெனரல் அனிஸதீஸியா கொடுத்திருந்தார்கள். அறுவைச் சிகிச்சைக்காக அவனது குருதி கொந்தளிக்கும் உடல் தான் ஆயத்தம் என்று மௌனப் பிரகடனம் செய்து கொண்டிருந்த வேளை.

'டொக்டர் வந்துட்டாரு'

அனைத்து புலன்களும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு குபீர் உற்சாகம் சடாரென எழ நேர்ஸின் குரல் வந்த திசையில் வாஹிது மணிக்கு ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் முகத்தை நேராக்கி திரும்பிப் பார்த்தபோது பெரேரா எனும் பெயருடைய சேர்ஜன் மிக வேகமாக கால்களின் சூக்கள் கிரீச்சென்று அபசுரத்தில் ஒலி எழுப்ப ஒப்பரேஷன் தியேட்டரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பெரேராவின் நடையில் நிதானம் கலந்த பரபரப்பு.

வாஹிது பதைபதைப்பாக நின்று கொண்டிருந்தார். பரபரப்பு ப்ளஸ் பதைபதைப்பு சமன் இறுக்கமான சூழ்நிலை எனும் எளிய சூத்திரம் இரண்டறக் கலந்து அந்த பற்றி எரியும் கனங்களை இச்சையோடு இம்சித்துக் கொண்டிருந்தது.

பெரேராவின் நடையில் அவசரம் தெரிந்தது. கடமை புரிந்து கொண்டிருந்த வைத்தியர்களின் அவசர சத்திர சிகிச்சைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டு சரியாக பதினைந்து நிமிடங்களின் பின்னர் அவரது பிரசன்னம் ஆஸ்பத்திரியில் நிகழ்ந்திருந்தது.

தனது மகனுக்கு எங்கே விபரீதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்திலும் கடமை நேரத்தில் இக்க வேண்டிய டொக்டர் அந்த நேரத்தில் இல்லாமற் போய் அவசர அழைப்பு கொடுக்கப்பட்டு தற்போதுதான் ஆதரவாக வந்து கொண்டிருப்பதையும், அதே நேரம் விபத்தில் அடிபட்டு உணர்வின்றி ஒப்பரேஷன் தியேட்டருக்குள் மரத்துப் போய்க் கிடக்கின்ற தனது மகன் இந்த பதினைந்து நிமிட அவகாசத்தில்.

நிறைய ரத்தத்தை வெளியே பாய்ச்சி மெல்ல மெல்ல ஒக்ஸிஜனுக்காக கஷ்;டப்பட்டு இருதயம் ரத்தத்துக்காக ஏஙகி அது கிடைக்காமற் போய் அந்த ஏக்கத்திலேயே விழிகள் மெல்லச் செருகி அடிபட்ட பின் மண்டையின் அதிர்வில் மூளையின் செரிபிரல் பகுதி அதிர்ச்சிக்குள்ளாகி எதுவுமே பேச சக்தியற்று இதயத்துக்கும் மூளைக்குமான தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு அப்புறம் எவ்வித தொடர்பாடலுமில்லாமல்.

வெரி சொரி

'ஓ....... யா அல்லாஹ் அப்படியெல்லாம் எதுவும் ஆகிடாமல் காப்பாத்து......'

கற்பனைக் குதிரையின் கடிவாளம் அறுக்கப்பட்டு தாமதமாக வந்து கொண்டிருக்கும் டொக்டர் பெரேரா மீது செந்நிற வர்ணத்தில் கோபமும் ஆத்திரமும் ஹோலிப்பண்டிகை நடத்தி நெற்றி நரம்புகளில் ரௌத்திரம் நக்சலைட் துப்பாக்கிகளால் சுட்டுத் தீர்த்துக் கொண்டிருக்கையில்.

ஒப்பரேஷன் தியேட்டரின் முன்னால் நின்று கொண்டிருந்த வாஹிதை நெருங்கிவிட்டார் சேர்ஜன்.

பெரேராவைக் கண்ட ஒரு ஜுனியர் டொக்டர் 'வாங்க டொக்டர் நீங்க போன்ல சொன்னது போல எல்லா போர்மாலிட்டிஸ்களையும் முடிச்சிட்டோம். பேஷன்டோட ப்ளீடிங்க நிறுத்திட்டோம். புல்ஸ் பாத்தாச்சு...தட் ஈஸ் போர் த டைம் பீயிங் ஓக்கே....ஜெனரல் அனிஸ்தீயா கொடுத்திருக்கோம். எக்கச்சக்கமான ப்ளீடிங் காரணமாக ஏ பொஸிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டுச்சு. போர்ச்சுனேட்டா. நம்ம ப்ளட் பேங்குல அது கெடச்சிருச்சி. எவர்திங் ஈஸ் பேர்nஃபக்ட். ப்ரீபெயார்ட் போர் த சேர்ஜரி பட் வன் திங் ஹீ ஈஸ் ஸ்டில் இன் கிரிட்டிகல் கன்டிஷன் டொக்டர்.....'

அந்த இளம் டொக்டர் சொல்லச் சொல்ல மெல்லத் தலையாட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்த டொக்டர் பெரேரா அந்த ஹொஸ்பிடலின் சீஃப் சேர்ஜன்......அனுபவசாலி. மாஸ்டர் ஒஃப் சேர்ஜன் எஃப் ஆர் ஸி எஸ்... எம் ஆர் ஸீ பீ.......இத்யாதி இத்யாதி. அறுத்தறுத்து பழக்கப்பட்ட அவரது கைகளில் சேர்ஜிகல் நைஃப் ஹியூமன் அனோடொமிக் ஹிஸ்டரியில் ஆயிரக் கணக்கான மனித உடல்களை இதுவரை உயிர் காக்கும் நோக்கத்தோடு உரசிப் பார்த்திருக்கின்றது.

நெற்றி வியர்வையினை துடைத்தபோது நெருங்கி வந்த டொக்டர் பெரேராவை அண்மித்த வாஹித்.

'டொக்டர் ஐ யாம் மிஸ்டர் வாஹிது. ஃபாதர் ஒப் த பேஷன்ட் ஹு ஈஸ் நவ் எட்மிட்டட் இன் த ஒப்பரேஷன் தியேட்டர் இன் த கிரிட்டிக்கல் கன்டிஷன்....... ஃபட்டிங் ஃபார் த லைஃப்'

அறிமுகம் செய்த வாஹிதிடம்

'ஓ.. ஐ... ஸீ......'

' இஃப் யூ டோன்ட் மைன்ட்....... மே ஐ டேக் ஜஸ்ட் வன் மினிட்'

'ஓ......ஷ்யர்.........'

'ஏன் டொக்டர் இவ்வளவு தாமதாக வந்திருக்கீங்க இன்னிக்கு நீங்கதான் டியூட்டில இருக்கின்ற சேர்ஜன்னு சொன்னாங்க. என் சன் எக்சிடன்ட் பட்டு ரத்தக் கோலத்துல அள்ளிக்கிட்டு வந்து இந்தா மூச்சு பேச்சில்லாம ஒப்பரேஷன் தியேட்டருக்குள்ள உசிருக்கு போராடிட்டிருக்கான். அவன அட்மிட் பண்ணி இருபது நிமிஷத்துக்கு மேலாச்சு. ஒவ்வொரு நிமிஷமும் உசிருக்காக அவான் போராடிட்டு இருக்கான். பொழப்பானா இல்ல போயிடுவானான்னு கூடத் தெரியாம நாங்கல்லாம் கதறிட்டு இருக்கம். ஹி ஈஸ் மை சன். ஹீ மஸ்ட் பீ சேவ்ட்.... யா அல்லாஹ் எம்புள்ளய காப்பாத்து.............ஏஸ் ஏ டொக்டர்....... சாவகாசமா ஒங்க இஷ்;டத்துக்கு வந்திருக்கீங்க. கடமைல இருக்க வேண்டியவரு என்னடான்னா வெளீலருந்து மெல்ல வர்ராரு. ஏன் டொக்டர் ஒங்களுக்கெல்லாம் மனசாட்சியே கெடயாதா உள்ளே போய்ப் பாருங்க. எம் மகன் உசிரோட போராடிட்டு இருக்கான். இந் நேரத்துக்கு அவன் உசிரோட இருக்கானான்னு கூட எனக்கு டவுட்டா இருக்கு. இம்மீடியட்டா செய்ய வேண்டிய ஒப்பரேஷன். என்னமா ரத்தம் ஓடிட்டு இருந்திச்சின்னு தெரியுமா டொக்டர்.

'....................?

அவனுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் நான் நான் ....... ஓ...... யா ரப்பே........ ரெஸ்பொன்சிபிள் பீப்பள்'

முச்சிறைத்தது வாஹிதுக்கு. புத்திர பாசத்தில் புத்தியில் ஆத்திரம் பூதகனங்கள் செய்ய கோபாக்கினியில் குழைத்தெடுத்த வீரியமிகு வார்த்தைகளை உதடுகளினூடே விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

ஆத்திரத்தின் உச்சியில் தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த வாஹிதின் வார்த்தைப் பிரயோகம் கண்டு வாயடைத்துப் போனார் அந்த ஜுனியர் டொக்டர். எதுவும் பாதித்;ததாக எந்த ரியாக்ஷனும் காட்டாத டொக்டர் பெரேரா அதே புன்னகை மாறாத முகத்துடன் ' ஓகே ஓகே கால்ம் டவுன் மிஸ்டர் வாஹிது. பீ கூல்....டோன்ட் வொரி. உங்க சன் தொடர்பா எனக்கு செய்தி கிடைச்சவுடனேயே நான் புறப்பட்டு வந்துட்டேன். பட் வெரி எக்ஸ்ட்ரா ட்ரபிக் கென்ஜஸன். இப்பவே உங்க சன்னுக்கு சேர்ஜரி பண்ணிரலாம். டோன்ட் ஃபியர்.....ப்ரேய் ஃபோர் த கோட்.

மீண்டும் வாஹித் வெடித்தார்.

'என்ன டொக்டர் ரொம்ப ஈசியாச் சொல்லிட்டீங்க. கான்ட் யூ அன்டர்ஸ்டன்ட் த சீரியஸ்னஸ் டொக்டர் இங்க எட்மிட் பண்ணப்பட்டிருக்கின்றது என்ட சன்;. அவன் உசிருக்கு உத்தரவாதமில்லாம அப்படியே உருக்குலஞ்சு போய்க் கிடக்குறான். என் கனவு என் லட்சியம் எல்லாம் அவன்தான் சேர்.....'

'கூல் கூல்...'

இப்போது வாஹிதின் குரலில் முரட்டுத் தனம் கலந்தது அது உச்சஸ்தாயி ஸ்டீரியோ டொல்பி சவுன்டில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.

'அது சரி ஒங்க மகன் இப்படி அடிபட்டு சாவோட போராடிட்டிருந்தா வெளங்கும் டொக்டர் அந்த வலி....' அழ ஆரம்பித்துவிட்டார் வாஹிது.

பெரேராவுக்குப் பக்கத்தில் அவர் செய்யப் போகும் சத்திர சிகிச்சையின் போது குறிப்பெடுக்கக் காத்திருக்கும் மாஸ்டர் ஒஃப் சேர்ஜரி டொக்டர் மாணவன் அப்படியே அதிர்ந்து போனான்.

எப்பேர்ப்பட்ட சேர்ஜன்.......ஒரு மருத்துவ ஜாம்பவானை நிற்க வைத்து வாஹிது அதிர்ந்து கொண்டு இருக்கின்ற அந்த நிகழ்வும் வாஹிதின் நடத்தையும் அவருக்கு வெறுப்பேற்றியிருக்க வேண்டும்.

'மிஸ்டர் ப்ளீஸ் பிஹேவ் யுவர் செல்ஃப்.........இது ஒன்றும் மார்க்கட் இல்ல சத்தம் போட்டு சண்ட பிடிக்கிறதுக்கு. திஸ் ஈஸ் ஹொஸ்பிட்டல். கீப் இட் அப் இன் யுவர் மைன்ட்' என்ற அந்த மருத்துவ மாணவனிடம்

'நோ மோர் ஆர்கியுமென்ட்....மிஸ்டர் வாஹிது ப்ளீஸ் பீ பேஷன்ட். ஐ வில் டூ மை பெஸ்ட்..............கீப் காம். கடவுள்கிட்ட பிரார்த்தனை செஞ்சுக்கோங்க....' என்ற பெரேராவின் முகத்தில் வாஹிது பேசிய எந்த வார்த்தையும் கோப ரேகையையோ எரிச்சல் அலைகளையோ ஏற்படுத்திய எந்தவிதமான குறியீடுகளும் காணப்படவில்லை.

சாந்தமாக இருந்தது அவரது முகம்.

'மிஸ்டர் ரவி இஸ் எவ்ரிதிங் ரெடி'

'யெஸ் சேர். ஒங்களுக்காகத்தான் வெயட்டிங்'

'ஓகே லெட்ஸ் மூவ் டு தி தியேட்டர். டைம் ஈஸ் அப்......பீ ஹரி' என்ற டொக்டர் பெரேராவின் மந்திர வார்த்தைகளில் தன்னிச்சையான கட்டுப்பாட்டுக்கள் வந்த ரவி எனும் அந்த மருத்துவ மாணவன் அவரோடு சேர்ந்து ஒப்பரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே இன்னும் இரண்டு டொக்டர்களும் இரண்டு தாதிமார்களும் மரியாதை கலந்த பார்வைகளோடு

'வாங்க டொக்டர்'

டொக்டர் பெரேரா கைகளில் க்ளவுசுகளை மாட்டிக் கொண்டு சேர்ஜிகல் கத்தியை தூக்கியபோது ......

இன்னும் டொக்டர் பெரேரா மீதான ஆத்திரமும் கோபமும் அடங்காத நிலையில் nவிள வறாந்தாவில் தனது மகனைக் காப்பாற்று ஆண்டவனே என்பதனை ஆயிரத்தெட்டாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குப் பக்கத்தில் ஓவெனக் கதறியவாறு வாயில் சேலை நுனியை வைத்தவாறு அழுது அரற்றிக் கொண்டிருந்தாள் அவரது மனைவி.

ஆவர்களோடு சேர்ந்து அவர்களது அடுத்த இரண்டு பள்ளைகளும் அழுது கொண்டுதானிருந்தார்கள்.

'என்னங்க நம்ம புள்ள பொழச்சிடுவானா'

'ச்சே..என்ன பேசுற நீ'

'இல்லங்க வரும் போது ரொம்பப் பேரு சொன்னாங்க....அவனுக்கு ரொம்ப ரொம்ப சீரியஸாம்....பொழக்கிறதுக்கு சான்ஸே இல்லயாம்...யா அல்லாஹ் என்ட புள்ள எனன் அனியாயம் செஞ்சான்...அவன எனக்குத் திருப்பிக் குடு....பத்து கைம் பொஞ்சாதிங்களுக்கு சீல வாங்கிக் குடுப்பேன்...அவன் பொழச்சிவ வந்துட்டான்னா மாடொன்னு அறுத்து குர்பான் குடுப்பேன்....என்ட படச்ச ரப்பே அவனக் காப்பாத்து' எனக் கதறித்துடித்துக் கொண்டிருந்தவள் முற்றிலும் மயக்க நிலைக்குள் மூர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரெஸ்ஸர்க்காரி

ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போவுது...பயம் மனதினைக் கவ்விக் கொள்ள மனைவியைப் பக்கத்திலிருந்த வாங்கில் அமர வைத்து அவளை அது இது சொல்லி ஆறுதலைப் பகிர்ந்து கொண்டிருந்தார் வாஹிது.

ஏன்னதான் ஆறுதல் சொன்னாலும் அவருக்குள் நில நடுக்கம் நூறு ரிச்சிட்டரைத் தாண்டி நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்னாகுமோ

என்ட செல்லம் பொழச்சிடுவானா

ச்சே...அவனுக்கு ஆயுசு ரொம்ப கெட்டி

நீண்ட காலத்துக்கு அவன்ட உசுரு கெடக்கும்

ஒண்ணுமே வேணாம்....அவன் திரும்ப பொழச்சி வந்தாலே போதும்..ச்சே....என்ன முட்டாள்த்தனமான காரியத்த பாத்திட்டன்...அவங்கிட்ட காரக் கொடுத்தது எவ்வளவு பெரிய முட்டாத்தனம்....

இல்லியே...இதுக்கு முன்னமும் பல தடவ காரோடியிருக்கானே...அவனுக்கு நல்ல டிரைவிங் சென்ஸ் இருக்கே...எல்லாம் கழா கத்ர்...நடக்கனும்னு எழுதியிருக்கு....நடந்திட்டுது....அவத் தல எழுத்து....யா..அல்லாஹ்...அவன்ட உசிர போட்டு வை...'

துனக்குத் தானே வாக்கியங்களமைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் உதடுகள் மட்டும்....

'ஓ...ரப்புல் ஆலமீனே....எம் புள்ளய எங்கிட்ட திருப்பிக் கொடு...பள்ளிக்கு என்ட வயல்ல ரெண்டு ஏக்கர எழுதி வக்கிறன்...'

சரியாக மூன்று மணி நேரத்தின் பின் அந்த ஒப்பரேஷன் தியேட்டரின் கதவு திறகக்ப்படும் ஓசை கேட்டு வாஹிதும் அவரது மனைவியும் ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை ஸ்பரிசித்த கணக்கில் எழுந்து நின்றார்கள்.

ஆந்த ஒப்பரேஷன் தியேட்டரிலிருந்து முதலில் வெளி வந்தது...சாட்சாத்...டொக்டர் பெரேராவேதான்..அந்த சாந்தமான முகத்தில் புரிந்து கொள்ள முடியாத புன்னகையினை உதடுகளில் பொறுத்திக் கொண்டு வெளியே வந்தவரை ஒரே பாய்;ச்சலில் நெருங்கிய வாஹிது 'டொ...க்..ட...ர்...டொக்டர் வா....வா....வா...ட் ஹேப்பன்ட்.....சொல்லுங்க எம்மகனுக்கு என்னாச்சு....அவன் பொழச்சிட்டானா.....உசிரோட இருக்கானா....என்னாச்சு....அவன் என்ன நிலைல இருக்கான்...டெல் மீ...டொக்டர்...'

ஒரு நூறு வருடத்துக்கான பதற்றமும் கால்கள் நழுவி பூமிக்குள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் அபாயகரமான நிகழ்வும் மைக்ரோ நொடியில் நடந்து முடிந்த சத்திர சிகிச்சையின் பெறு பேற்றினை அறிய வேண்டுமென்ற பேரவாவும் இதோ நின்று விடப் போகின்றேன் என்று எச்சரிக்கை மணியடிக்கும் இதயமும் அவரை நடுக்கத்தோடு ஆனால் அவச கணங்களோடு வெளியே வந்த டொக்டரிடம் வியர்த்தவாறு வினவ வைத்தது.

இயல்புகளும் யதார்த்தங்களும் அததற்குரிய நேரங்களில் சரியாக வெளிப்பட்டு விடுகின்ற வித்தைகளினை கற்றுத் தேர்ந்த வித்தகம் வியப்பின் உச்சக்கட்டம்.

குளறிய வார்த்தைகளால் தன்னை நெறுங்கிய வாஹிதை நெற்றியில் அரும்பிய வியர்வைத்துளிகளை தனது ஹேன்ட் கெர்ச்சீஃபினால் மெல்லத் துடைத்துக் கொண்ட டொக்டர் பெரேரா 'டோன்ட் வொரி உங்க சன் ஆபத்தான கட்டத்த தாண்டியாச்சு...ஹீ ஈஸ் நவ் ஃசப்....நோ ப்ராப்ளம்'

ஐஸ் கட்டிகளை நெஞ்சுக்குள் கொட்டிய உணர்வில் 'அல்ஹம்துலில்லாஹ்' என காத்திரந்தது போல திடீரெனக் கசிந்த கண்ணீருடன் குதூகலித்த வாஹிது டொக்டர் பெரேராவை நெருங்கி அவரது கைகளினைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு அவரை நெருங்கிய போது...

அதனை சற்றும் கணக்கில் கொள்ளாது வாஹிதை முற்றிலும் தவிர்த்துக் கொண்டு 'நேர்ஸஸ் வருவாங்க அவங்கக்கிட்ட ஏனைய விபரங்களக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க' எனச் சொன்ன டொக்டர் பெரேரா காற்றினை விட வேகமாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்லவும் வாஹிது குழப்பமாகி கன்னத்தில் அறை வாங்கிய நிலையில் நின்று கொண்டிருக்கவும் சரியாக இருந்தது.

வுpதிர்த்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்த வாஹிது தன்னை டொக்டர் பெரேரா ஒரு வார்த்தையேனும் பேசாது வேண்டுமென்றே தன்னை முற்றிலும் நிராகரித்து விட்டுப் போனது மனசுக்குள் ஒரு நெருஞ்சியாய்....

சுருக்.....

கோபித்துக் கொண்டார் போலும்.......அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த நேரம் நானும் அந்தளவு சூடாகப் பெசியிருக்கக் கூடாது...மேட் எ மிஸ்டேக்...தப்பு பண்ணிட்டேன்......நானிருந்த நிலை..என் இயலாமை என்னை அவரோடு அப்படி பேச வைத்து விட்டது.என்றாலும் எனது நிதானத்தை இழந்திருக்கக் கூடாது....'

குழப்பத்தோடு டொக்டர் தன்னை சற்றும் மதியாது ஒரேயடியாக கோய் விட்டதில் உள்ளத்தின் ஒரு பகுதியில் சற்று உடைவு.

'மிஸ்டர் வாஹிது'

'யெஸ்'

அருகில் வந்த தாதி 'ஒங்க மகன் பொழச்சிட்டாரு....டொக்டர்ஸ் நோர்மல் நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க.அவர்ர உசிருக்கு இனி எந்த ஆபத்துமில்ல...டொக்டர் பெரேரா அவர காப்பாத்திட்டாரு. அனுபவசாலி....த கிரேட்டஸ்ட்....இன்னும் வன் அவருல ஒங்க மகன் கண் விழிச்சிருவாரு.இப்ப மயக்கத்துலதான் இருக்காரு.அவர நோர்மல் வோர்டுக்கு மாத்தினதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம்....'

'தேங்க்ஸ் டொக்டர்' மனசுக்குள் அடிக்கொரு தடவை கோடி நன்றிகளால் டொக்டர் பெரேராவை ஞாபகித்துக் கொண்டிருந்த வாஹிதுக்கு சத்திர சிகிச்சையின் பின்னர் தன்னோடு டொக்டர் பெரேரா நடந்து கொண்ட விதம் தன்னை முற்றிலும் தவிர்த்து நிராகரித்து வ்pட்டு ஒரேயடியாய் அந்த இடத்திலிருந்து விர்ரெனப் புறப்பட்ட விதம்.....எல்லாமே அவருக்குள் ஏதோ ஒன்றை.....

'மிஸ்' என்ற வாஹிதினை

'யெஸ்'

என்றாள் அந்த மருத்துவ மாது.

'நத்திங்...ஒங்கக்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்'

'சுருக்கா சொல்லுங்க...நான் வோர்டுக்குப் போகனும்' அவளது பதிலில் அவசரம் தெறித்தது.

'ஒப்பரேஷன் முடிஞ்சு வெளீல வந்த ஒங்க சேர்ஜனுக்கிட்ட ரெண்டு வார்த்தை பெசலாம்னு அவருக்கிட்ட போனேன்...அவரு என்னான்னா எதுவுமே பேசாம என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டு ஒருயெடியா போயிட்டாரு...ஒங்க சேர்ஜன் எப்பவுமே இப்படித்தானா....அட் லீஸ்ட் ரெண்டு வார்த்தை எங்கிட்ட பேசியிருக்கலாம்.நான் காலைல பேசினத மனசில வெச்சுக்கிட்டு கோவிச்சிட்டு போயிட்டார் போல....ஐ ஃபீல் வெரி சொரி....i ஃபீல் கில்ட்டி....ஏதோ ஒரு வேகத்துல கவலைல பேசிட்டன்.....நான் மட்டுமில்ல என்ட நிலைல இருக்குற எல்லாப் பேரண்ட்சும் இப்படித்தான் பேசுவாங்க....பரவாயில்ல எனி ஹவ் ஐ ஆம் ஒப்லைஜ்ட் டு தேங்க் ஹிம் எகெய்ன் என்ட் எகெய்ன்.....'

பெருமூச்செறிந்தார் வாஹிது...அவர் கண்களில் உற்பத்தியாகிய கண்ணீர் இன்னும் காலாவதியாகாதிருந்தது.

'பட் வன் திங்...டொக்டர் பெரேரா என்னோட ரெண்டு வார்த்தை பேசியிருக்கலாம்.....'

உண்மையில் வாஹிதின் குரலில் நிஜமான வருத்தமும் கவலையும் நிழல் படிந்து போயிருந்தன.

இப்போது அந்தத் தாதியினைப் பார்த்த வாஹிது ஒற்றைப் பனை மரத்தில் திடீரென விழுந்த இடியின் அடியோடு கண்களில் ஆச்சர்யத்தை காட்சிப்படுத்தினார். அவளது கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் இதோ நிலத்தில் வீழ்ந்து சிதறிச் சாகப் போகின்றேன் என்றவாறு கண்களின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தது.

'வெரி சொரி......ஏன் அழுறிங்க...நான் ஏதாவது தப்பாப் பேசிட்டடேனா' பதறிகார் வாஹிது.

'நோ நோ....அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல...நீங்க டொக்டர் பெரேராவைப் பத்தி பேசினப்ப தாங்க முடியல்ல அதான் அழுதிட்டேன்...முடியல்லங்க....'

இன்னும் அதிர்ச்சிக்குள் வாஹிது இறங்கி நடந்தார்.

'ஏன்...என்னாச்சு....ஒண்ணுமே புரியல்ல......டொக்டர் பெரேராவுக்கு ஏதாச்சும்...'

'டொக்டர் பெரேரா ரொம்ப நல்ல சேர்ஜன்னும் கைராசிக்காரர்னும் பேரெடுத்தவர்..அது மட்டுமில்ல ரொம்பக் கெட்டிக்காரரு.அதெல்லாம் தாண்டி ரொம் நல்ல மனுஷன்.அஞ்சு வருஷத்துக்கு முந்தி அவர்ர மனைவி தவறிப் போயிட்டா...ஒரே ஒரு மகன்..அவனும் டொக்டருக்குத்தான் படிச்சிட்டு இருந்தான்......'

'படிச்சிட்டு இருந்தான்' இறந்த காலதத்pல் அந்தத் தாதி பேசியது அவரது மூளையின் நியூரோன்களுக்குள் அபாய சைரன் அடிக்கத் தொடங்கியது.

சம் திங் ரோங்

'ஆமாங்க டொக்டர்ட ஒரே ஒரு சன் நேத்து மாலை நடந்த ஒரு மோசமான எக்ஸிடென்டுல அடி பட்டு ஒன் த ஸ்பொட் செத்துப் போயிட்டான். எத்தனையோ பேரின்ட வாழ்க்கைய தன்ட வைத்தியத்தால காப்பாத்தின டொக்டருக்கு தன்ட மகனக் காப்பாத்த முடியாமப் போச்சு....இன்னிக்கு அவர்ர செத்துப் போன மகன்ட ஃபியுனரல்....ஒங்க சன் அடிபட்டு ஹொஸ்பிடல்ல சேர்த்தப்போ டொக்டர் தன்ட மகன்ட இறுதிக் கிரியைகள்ள இருந்தாரு.....அதெல்லாம் விட்டுட்டுத்தான் ஒங்க மகன்ட சேர்ஜரிக்கு வந்திருந்தாறு.....கனத்தைல இப்ப எல்லாரும் அவருக்காக வெயிட் பண்ணிண்டு இருக்காங்க...அதான் ஒங்க சன்னின்ட ஒப்பரேஷன் முடிஞ்சதும் உடனடியா டொக்டர் யாரோடயும பேசாம புறப்பட்டுப் போயிட்டாரு....வெரி சேட்.....'

கிண்ணியா சபருள்ளா - பெருந்தெரு கிண்ணியா-06

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14512
மொத்த பார்வைகள்...2071436

Currently are 195 guests online


Kinniya.NET