திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

சிறுகதை: ஒரு நாள்.. ஒரு இரவு

tr

கந்தளாய் டிசம்.29

நேற்று முன் தினம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவுத் தபால் ரயிலில் 2ம் வகுப்புப் பெட்டியில் பயணித்த பயணி ஒருவரின் பொதியைத் திருடிக்கொண்டு நழுவ முயன்ற திருடன் ஒருவனை அந்தப்பயணி துணிகரமாக மடக்கிப் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றது.

மேற்படி துணிகர சம்பவம் அதிகாலை 3.40 மணியளவில் கந்தளாய் ரயில் நிலையத்தில் நிகழ்ந்ததாக ரயில்வே பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி திருடனும் அதே ரயில் பெட்டியில் கொழும்பிலிருந்து பயணித்ததாகவும் கந்தளாய் நிலையத்தை ரயில் அண்மிக்கும் தறுவாயில் குறித்த பயணி கழிப்பறைக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த திருடன் அவரது பொதியை எடுத்துக்கொண்டு சந்தேகம் வராத வகையில் தந்திரமாகத் தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

கழிப்பறையில் இருந்து வெளியே வந்த பயணி நடந்ததை அறிந்தபோது ரயில் கந்தளாய் நிலையத்தை விட்டு நகர ஆரம்பித்துள்ளது. அதேவேளை புகையிரத மேடையில் பொதியோடு திருடன் நிற்பதைக் கவனித்த குறித்த பயணி வேறுவழியின்றி ஓடும் ரயிலிலிருந்து திருடன் மீது பாய்ந்து சண்டையிட்டு தனது பொதியை மீட்டதாகவும் தெரியவருகின்றது. மேலும் இதன்போது இருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிகின்றது.

ரயில்நிலைய ஊழியர்களும் பொலீசாரும் இருவரையும் மடக்கிப் பிடித்துபோது முதலில் அந்தப் பொதி தன்னுடையது என்று வாதிட்ட திருடன் பின்பு உண்மை அம்பலமானதும் தப்பியோடுவதற்கு முயன்றதாகவும் பொலீசார் கூறினார்கள்.

தற்போது மேற்படி திருடன் கந்தளாய் பொலீசில் ஒப்படைக்கப்பட்ட பின்பு சிகிச்சைக்காக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும்கந்தளாய் பொலீசார் தெரிவித்தனர்.

- தினக்குரல்


சிறுகதை:  

ஒரு நாள்.. ஒரு இரவு


கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் இரவுத்தபால் ரயில்வண்டி கோட்டைப் புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.அது புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன.

அன்று ஞயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை கழிந்து வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டாம் வகுப்புப்பெட்டிகளில்கூட இருக்கை கிடைக்காமல் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.'யாராவது வராமலிருந்து விட்டால் பார்க்கலாம்'எனும் நப்பாசையுடன் முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஆசனங்களிலே சிலர்தற்காலிகமாக அமர்ந்திருந்தனர்.

அப்படி அமர்ந்திருந்தவர்களில் நானும் ஒருவன்.இருபத்தியேழு வயதைக் கடந்தும்இன்னும் படிப்புக்கேற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை எனக்கு. ஊரிலே என்னோடுஒன்றாகப் படித்தவர்களில் பலர் அரச உத்தியோகத்திலும் தொழில்களிலும் இருக்கும்போதுவேலை எதுவுமின்றி இருப்பதுஎனக்குஅவமானமாக இருந்தது. ஓர் அரசாங்க வேலையை வாங்கித் தருவார்கள் என்று நம்பி உள்ளுர் அரசியல்வாதிகள் சிலருக்கு தேர்தல் காலங்களிலே எடுபிடியாளாக மட்டுமின்றி சிலவேளைகளிலே அடிதடியாளாகவும்இருந்திருக்கின்றேன். ஓரிரு தடவைபொலீஸ் தடுப்புக்காவலிலும் கூட இருந்திருக்கின்றேன்.ஆனால்கடைசியில் கிடைத்ததெல்லாம் வெறும் ஏமாற்றமும் கெட்ட பெயரும்தான் தவிர வேறு எதுவுமில்லை.பதவிக்கு வந்த பலர் என்னை மறந்துபோனார்கள். இன்னும் சிலர்நீதிமன்றத்துக்குஆளனுப்பி பிணையெடுத்ததும் கை விட்டார்கள்.

அதன் பிறகு எனக்கு இந்த சமூகத்தின் மீது ஒருவித அருவருப்பு கலந்த வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. யாரைப் பார்த்தாலும் என்னை ஏமாற்றுவதற்கே வருகின்றார்கள் என்றுஎண்ணத் தோன்றியது. எவரையும் நம்ப முடியாமல்பல மாதங்கள் தவித்தேன். பொதுவாக எல்லோரையும் நம்புவது ஆபத்து ஆனால் எவரையுமே நம்பாதது அதைவிட ஆபத்து என்பார்கள்.

துரோகத்தின் காயங்கள் சிறிது ஆறியதும்மனதைத் தேற்றிக்கொண்டு வேலைவாய்ப்புக்காகஅரபுநாடுஒன்றிற்குச்செல்வதற்கு முடிவெடுத்தேன்.அதற்காகமுகவர் நிலையமொன்றில் என்னுடைய கடவுச்சீட்டையும் கட்டணப் பணத்தையும் ஒப்படைத்துவிட்டு கொழும்புக்கும் ஊருக்குமாக அடிக்கடி அலைந்து கொண்டிருக்கின்றேன்.அப்படியொரு எரிச்சல் நிரம்பிய பயணங்களிலே ஒன்றுதான் இன்றைய ரயில் பயணமும்.

ரயில் புறப்படுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக ஒலிபெருக்கியில் மூன்று மொழிகளில் மாறி மாறி இரைந்து முடித்தார்கள்.அதில் ஒன்று ஏறத்தாழ தமிழ் போலிருந்தது.

நான் அமர்ந்திருந்த ஆசனம் ஏற்கனவே வேறுயாராலோ முன்பதிவு செய்யப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனாலும் நேரம் நெருங்கிவிட்டதால் இனிமேல்யாரும் வரமாட்டார்கள் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் இருந்தேன்.சிலவேளையாராவது வந்தால்என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு கண்களை உள்ளங் கையால் மறைத்தபடி தூங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

'எக்ஸ்க்யூஸ்மீ'

என்று யாரோ என்னைத் தட்டி எழுப்பினார்கள். கண்ணை இலேசாக விழித்துப் பார்த்தேன். நடுத்தர உயரமும் பருமனும் உள்ளஒருமனிதன்தோளிலும் கைகளிலும் பயணப்பொதியோடு நின்றிருந்தான்.டீசேர்ட் ஜீன்ஸ் அணிந்துதலைமுடியை குட்டையாக வெட்டி அடர்த்தியான தாடி வைத்திருந்தான். ரயில் கிளம்பிவிடும் என்று அவசர அவசரமாக படியேறி வந்திருப்பான் போல.மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது அவனுக்கு.

'ஹலோ, இது 33ம் நம்பர் ஸீட்தானே..?' என்று என்னைப் பார்த்துக் கேட்டான் அவன்.எனது இருக்கையின் மீது அவன் கூறிய இலக்கம் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதை அவன் பார்த்துவிட்ட போதிலும் 'இந்த ரயிலே என்னுடையதுதான்' என்பதுபோல்நான் அமர்ந்திருந்த தோரணைஅவனுக்கு பலத்த சந்தேகத்தைக்கொடுத்திருக்க வேண்டும். பயணச்சீட்டின் பின்புறம் எழுதப்பட்டிருந்த ஆசனப்பதிவுஇலக்கத்தை மறுபடியும் சரி பார்த்துக் கொண்டான்.

நானும் வேறுவழியின்றி அப்போதுதான் அந்த இருக்கையின்இலக்கத்தைபார்ப்பதுபோல பாவனை செய்துவிட்டு எரிச்சலோடு எழுந்து விலகிக்கொண்டேன். அவன் 'தேங்க்யூ' என்று என்னைப் பார்த்து முறுவலித்துஅதுவரை நான் கோலோச்சிய அந்த யன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான். வசதியான இருக்கைசட்டெனப் பறிபோனதிலே எனக்கு அவன் மீது எரிச்சல் மண்டியது.சிறிது நேரம் அவனை லேசாய் முறைத்தபடி நின்றிருந்தேன். ஆனால் அந்த தாடிக்காரன் அதையெல்லாம் கவனிக்காதவனாகதனதுபொருட்களைஉரிய இடங்களிலே வைப்பதிலேயே கவனமாக இருந்தான். பின்பு எதற்கோநிமிர்ந்தவன் சட்டென என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.தன் பக்கத்து இருக்கையின் மீது தட்டிக் காண்பித்துஅதிலே என்னை அமருமாறு சைகை செய்தான்;.

அவனது புன்னகை மிகவும் வசீகரமாக இருந்தது. ஆள் பார்ப்பதற்கும் நன்றாகவே இருந்தான். ஆனாலும் ஏனோ எனக்கு அவன் மீது காரணம் புரியாதஒரு வெறுப்புஉண்டானது. அவன் இருந்த பக்கத்திற்கு எதிர்ப்புற வரிசையில் மேலும் இரண்டுமுன்பதிவு ஆசனங்கள் வெறுமையாக இருந்தன.அதிலொன்றில் போய் அமர்ந்து கொண்டேன்.உறங்கிக் கொண்டிருந்த என்னைத் தொந்தரவு செய்த குற்றவுணர்வு அவனுக்குள்ளே இருந்திருக்க வேண்டும் போல. இப்போது நான் அமர்ந்து கொண்டதால் அதுமறைந்து அவன் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

'சே! நான் இன்னும் கொஞ்ச நேரம் எழுந்து நின்றிருக்கலாம்' என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு இருக்கை கிடைத்ததிலே அவனுக்கு ஏற்பட்ட சிறு திருப்தியைக்கூட என்னால் பொறுக்க முடியவில்லை. இம்முறை அவன் என்னோடு பேசுவதற்கு விரும்பியவனாக மீண்டும் என்னைப் பார்த்துபுன்னகைத்தான். ஆனால் பதிலுக்கு நான் முகத்தை இறுக்கமாகவைத்திருக்கவே சற்றுக் குழப்பமாகிபின்வாங்கி விட்டான். அதன் பிறகு அவன் என்பக்கமே திரும்பவில்லை. தன்கையிலிருந்த சஞ்சிகை ஒன்றைப் புரட்டிப் பார்த்தவாறு இருந்துவிட்டான்.

நேரம் சரியாக 9 மணியானதும் ரயில்நீளமாய் ஒருதடவை கூவிவிட்டுஅசையத் தொடங்கியது.வெளியே புகையிரதமேடையில் நின்றிருந்தவர்கள் சட்டெனகிடைத்த பெட்டிகளிலே தொற்றிக்கொண்டார்கள். ஒன்றின் மீது ஒன்று பிணைந்து நெளிந்து கொண்டிருக்கும்தண்டவாளங்களின் மீதேறி தலைநகரத்தைப் பின்னோக்கித் துரத்திக்கொண்டிருந்தது எங்கள் ரயில்வண்டி. ஆங்காங்கே ரயில்வே கடவைகளிலே வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு வரிசையாகக் காத்திருக்கும் வாகனங்களையும் பின்னோக்கி ஓடும் மின்கம்ப வெளிச்சப் புள்ளிகளையும் யன்னலினூடாக வேடிக்கை பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். மருதானைரயில் நிலையம்;,தெமட்டகொட ரயில்வே யார்ட்வழியேஊர்ந்து கொண்டிருந்தஅந்த இயந்திர மலைப்பாம்புகளனிப் பாலத்தைத் தாண்டியதும் தலைதெறிக்கும் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.அதற்கேற்றபடி பயணிகள் பெட்டிகளும்கடகடவென்ற ஓசையோடு ஆடிக்கொண்டு வரலாயின.

ரயில் ராகம நிலையத்தைச் சென்றடைந்ததும் என்னுடையஆசனத்திற்கு மீண்டும் ஓர் ஆபத்து வந்தது. இம்முறை தந்தை, தாய்,இளம் யுவதி, சிறுகுழந்தைகள் என்று ஒரு குடும்பமேஎங்கள் பெட்டியில் ஏறிக்கொண்டது. நான் அமர்ந்திருந்த பக்கமிருந்த நான்குஆசனங்களையும் அவர்கள் முன்பதிவு செய்திருந்த காரணத்தால் நானும் மற்றவர்களும் எழுந்துகொள்ள வேண்டியதாயிற்று. என்னோடு நின்றவர்கள்இருக்கைகள் தேடி வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விட அந்த இடத்தில் நான் மட்டும் அங்கிருந்து விலகாமல் தனியாக நின்று கொண்டிருந்தேன். அந்தக் குடும்பத்திலிருந்த அந்த அழகான இளம் யுவதிதான் அதற்குக் காரணம்.அவள் இறுக்கமான டெனிம் ஜீன்சும் மேலே கிளிப்பச்சை நிறத்தில் சிக்கனமான மேல்சட்டையும் அணிந்து படு கவர்ச்சியாக இருந்தாள். அவளை ரசித்தவாறே நான் தொடர்ந்து நின்று கொண்டிருந்தேன்.

அதேவேளை முன்பு என்னைத் தன்னருகே அமருமாறு கூறியஅந்தத் தாடிக்கார மனிதனின் அருகேயிருந்த ஆசனம் இப்போதும் வெறுமையாகவே இருந்து கொண்டிருந்தது.அப்போது நினைத்தாலும் என்னால் அதிலே போய் உட்கார்ந்திருக்க முடியும். ஆனாலும் அதில் அமர்வதற்கு என்னுடைய மனம்ஏனோ இடம் தரவில்லை.

தாடிக்காரன் மீது மீண்டும் எரிச்சல் உண்டானது எனக்கு. அவனுடைய முகத்தைப் பார்க்க விரும்பாமல் அந்த இளம் பெண்ணையும் யன்னலினுடாகத் தெரியும் இருட்டையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டு வந்தேன். ஆனாலும்முதுகுக்குப் பின்னால் என்னை அந்த தாடிக்காரன் ஏளனமாகப் பார்ப்பதுபோல உள்ளுணர்வு உறுத்தியது. சட்டெனத் திரும்பிப்பார்த்தேன். ஆனால் அவனோ தன் சஞ்சிகையில்மூழ்கியிருந்தான்.

ரயில் மீண்டும் பெருங்குரலெடுத்து அலறிவிட்டு கிளம்பியது. சிறிது நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றகால்களும் வலிக்க ஆரம்பித்தன.

'சே! ஒரு ஆசனம் வெறுமையாக இருக்கும்போது நான் ஏன் இப்படிக் கால்வலிக்க நின்று கொண்டு வருகின்றேன்.. அந்தத் தாடிக்காரன் எனக்கு யார்? அவன் மீது எதற்கு நான் தேவையில்லாமல் வெறுப்புக் கொள்கின்றேன்..யார்மீது உள்ள வெறுப்பு இது? என்மீதே எனக்கு உள்ள விரக்தியா அல்லது என்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உள்ள வெறுப்பா.. யார்மீதுள்ளகோபத்தை இந்த தாடிக்காரன்மீது தீர்க்கின்றேன்..?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டு வந்ததிலே பொல்கஹவெல சந்திப்பு வந்துவிட்டது.எங்கள் பெட்டியிலிருந்த பலர்இறங்கிக்கொள்ள வேறுசிலர் ஏறிக்கொண்டனர். அப்பொழுதுகிடைத்த வெறுமையான ஒரு இருக்கையில் நான் சட்டென அமர்ந்து கொண்டேன். முன்பதிவு செய்திருந்தவர்களே வந்தாலும் இனிமேல் எழுந்து கொள்வதில்லை என்ற வைராக்கியத்தோடு அதிலே உட்கார்ந்திருந்தேன்.

இப்போது அந்த தாடிக்காரன் தனக்கருகில் இருந்த அடுத்த இருக்கையையும் சேர்த்தவாறு சரிந்து அமர்ந்திருந்தான். இதனால் அடுத்த வரிசையில்எதிர்ப்புறமாக உட்கார்ந்திருந்தஎனக்கு அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. அவன் சஞ்சிகையை மூடிவைத்துவிட்டு மூக்குக்கண்ணாடியை கழற்றி தனது டீசேர்ட்டில் தொங்கவிட்டான்.இருகைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தி சோம்பல் முறித்தபின்பு எதிரேயிருந்த அந்த அழகிய இளம்பெண்ணின் தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஏதோ இரண்டொரு வார்த்தை பேசினான்.பின்பு அந்தப் பெண்ணிடமும் ஏதோ சிரித்துப் பேசினான். அவனையே அவதானித்;துக் கொண்டிருந்த என்மீது அவனது பார்வை எதேச்சையாக வீழ்ந்ததும் அவனுடைய உதடுகளில் ஒரு மெல்லிய ஏளனம் தோன்றி மறைந்தது போலிருந்தது எனக்கு.

அவனுடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மேலும் எரிச்சல் உண்டானது. அவன் என்னை வெறுப்பேற்றுவதற்காகத்தான் இதையெல்லாம் செய்கின்றானோ என்ற சந்தேகமும் உண்டானது.'நான் இடம் தந்தபோது வீம்பாக அதிலே உட்காராமல் நின்றுவிட்டு இப்போது அடித்துப் பிடித்துப்போய் உட்கார்ந்திருக்கின்றாயா?' என்று கேட்பது போலிருந்தது அவனுடைய பார்வையும் தோரணையும். வெறுப்பு மேலிட மேலே கடகடப்புடன் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சட்டென எழுந்து சென்று அவனுடைய நெஞ்சுச்சட்டையைக் கொத்தாகப்பிடித்துத் தூக்கி செவிட்டில் நாலு அறைவிட்டு மகிழ்ந்தேன் - என் கற்பனையில். உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் செய்யமுடியாதபடிசுற்றிலும் சகபயணிகள் விழித்துக்கொண்டு இருந்தார்கள். சிறிதுநேரம் தூங்கினாலாவது அவனுடைய தொல்லை குறையுமென்றால்பாழாய்ப்போன தூக்கமும் வரமாட்டேன் என்கிறது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஓடும் ரயிலுக்குள் எங்காவது எழுந்துபோய் நடந்துவிட்டு வரலாம் என்றால் கிடைத்துள்ள இடமும் பறிபோய்விடும்.

சட்டென ஒரு யோசனை தோன்றியது.உடனே ஜீன்ஸ் பக்கட்டிலிருந்த என்னுடைய செல்போனை விடுவித்தேன். அதிலிருந்த வீடியோ ஆட்டங்களை திறந்து விளையாட ஆரம்பித்தேன். முன்பிருந்தஎரிச்சலும் மனப்பாரமும் சிறிது குறைந்தது போலிருந்தது. இருட்டைக் கிழித்து விரையும் ரயிலையும் என்னை எரிச்சலூட்டும் தாடிக்காரனையும் மறந்துமுழுமூச்சாகவிளையாடிக் கொண்டிருந்தேன்.இடையிலே ஒரு தடவை நினைவு வந்து நான்பார்த்தபோதுஅவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். அதன்பிறகு வேறு எதையும் யோசிக்காமல் மீண்டும் செல்போன் விளையாட்டில் வெகுதீவிரமாக இறங்கிவிட்டேன். எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை.'உங்கள் சார்ஜ் குறைவாக உள்ளது'எனும் ஓரிரு எச்சரிக்கை ஒலிகளுக்குப் பின்பு சட்டென அணைந்து போனது எனது செல்போன்.

இனிமையான கனவு ஒன்று சடுதியாகக் கலைந்ததைப் போலிருந்தது எனக்கு.

'சே!' என்று எரிச்சலோடு சுற்றிலும் பார்த்தேன்.ரயில் மிதமான வேகத்தில் விரைந்து கொண்டிருக்க அந்த தாடிக்காரன் தனது மடியிலே அழகான லேப்டொப் கம்ப்யூட்டர் ஒன்றை வைத்திருந்து அதன் திரையில்எதையோ வெகுசுவாரசியமாக ரசித்துப் பார்த்தபடி இருந்தான்.கம்ப்யூட்டர் திரையின்பளிச்சீட்டில் அவனுடைய முகம் வெகுபிரகாசமாக இருந்தது.

'சரி, அவன் எக்கேடாவது கெட்டுப்போகட்டும்' என்றுவிட்டு நான் என்னுடைய இருக்கையிலே சாய்ந்து கண்களை மூடிஉறங்குவதற்கு முயன்றேன். தூக்கம் கண்களைத் தழுவும் நேரத்தில் திடீரென எழுந்த சிரிப்பொலிகள் என்னைத் திடுக்கிட்டு விழித்தெழ வைத்தன.இந்த நேரத்திலே யார் இப்படிச் சிரிப்பது என்று சுற்றிலும் பார்த்தேன். அந்த தாடிக்காரனும் ராகம ஸ்டேசனில் ஏறிய குடும்பத்தினரும்கூடியிருந்து கம்ப்யூட்டர் திரையில் எதையோரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் திரையைக் காண்பித்துஅவ்வப்போது ஏதோ விளக்கம் கூறிக்கொண்டிருக்க அவர்கள் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தணிந்து கிடந்தஎன் எரிச்சல் அடுப்பு மீண்டும் புகையத் தொடங்கியது. அதிலும் பச்சைநிறமேலாடையும்ஜீன்சும்அணிந்திருந்த என்னுடையஅழகிஅந்த தாடிக்காரனுடன் வெகுநெருக்கமாக ஒட்டியவாறு உட்கார்ந்திருந்தது என்னை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு சென்றது.

'சே! என்ன ஜென்மங்கள் இவர்கள். யாரோ ஒருஅந்நியன் லேப்டொப்பில் படம் காட்டினால் இப்படியா போய் பசைபோல ஒட்டிக் கொள்வார்கள்? அதுவும் அந்தச் சிறுக்கி.. சனியன்! வாழ்வுதாண்டா ஒனக்கு'

இப்போது எனக்கு லேசாகப் பசித்தது.

அருகில் விழித்திருந்த ஒருவரிடம்'அண்ணன், மாகோ சந்தி எப்ப வரும்?' என்று கேட்டேன்.அவருக்குத் தூக்கி வாரிப்போட்டிருக்க வேண்டும் போல. 'என்னது? மாகோவா..? இப்பதானே மாகோ சந்தியில ஒரு மணித்தியாலமாகக்காத்துக் கிடந்து வெளிக்கிட்டிருக்கிறம்.. என்ன தம்பீ,இதுதான் முதலாவது ட்ரெயின் பயணமா?' என்றார் அவர் ஆச்சரியத்தோடு.

'இல்ல.. நான் தூங்கிட்டன் போல!' என்று அசடு வழிந்தேன்.

'இல்லியே.. நீங்க முழிச்சுட்டுத்தானே இருந்தீங்க? செல்போன்ல என்னமோ வெளையாடிக்கிட்டு இருந்தீங்களே..' என்றவாறு என்னைச் சந்தேகமாகப் பார்த்தார்.அதன் பிறகு நான் அவரோடு பேச்சுக் கொடுக்கவில்லை.

'ஓகோ ட்ரெயின்ல வந்த சனமெல்லாம் மாகோ சந்தியில இறங்கிச் சாப்பிட்டு டீ கோப்பியெல்லாம் குடித்து ப்ரஷ்ஷா இருக்குதுகள்.நான்தான் மாகோ வந்தது கூட தெரியாமல் கேம்ஸ்லேயே மூழ்கிஇருந்திட்டன் போல' என்று அதுபற்றியசிந்தனைனயிலாழ்ந்து விட்டேன்.

ரயில் கல்லோயா சந்தியை வந்தடைந்தும்அங்கு சிறிது நேரம் தரித்து நின்றது.பின்னர் மட்டக்களப்பு செல்லும் பயணிகள் பெட்டிகளை கழற்றியதும் மீண்டும்திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டு விட்டது.அந்தத் தாடிக்காரன் தன்னுடைய லேப்டொப் கம்ப்யூட்டரை அணைத்து மூடினான். அதை ஒரு கைக்குழந்தையை தாய் கையாள்வது போல மிகவும் கவனமாக பொலித்தீன் உறையிலிட்டு கறுப்புநிறத் தோல் பை ஒன்றினுள் வைத்தான். பின்பு எழுந்து நின்று அந்தப் பையின் தோள்பட்டியை உடலில் குறுக்காக அணிந்து மடியில் இருக்குமாறு வைத்தவாறு மீண்டும் அமர்ந்து கொண்டான். அவனுடையஇந்த அதிகூடிய பத்திரம்எனக்குவினோதமாக இருந்தது.

'அந்த லேப்டொப்புக்கு ஏதாவது நடந்து பழுதாகிப் போனால்..' என்றுதறிகெட்டு ஓடியது என் எண்ணம். அதன் பிறகு ஏனோ என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இன்னொருவனுக்கு அநியாயம் நினைத்து விட்டாலே மனிதனுக்கு நிம்மதி போய்விடும் என்பது உண்மைதான் போலும்.வெகுநேரம்வரை மயக்கமும் விழிப்புமாக மாறி மாறி உழன்று கொண்டிருந்தேன்.

இடையிலே ரயில் எங்கோ ஒரு சிறிய ஸ்டேசனில் நின்று புறப்படுவது தெரியவே யன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். பெயர்ப்பலகையில்'அக்போபுர' என்று எழுதியிருந்தது.என்னுடைய டிஜிட்டல் மணிக்கூடு அதிகாலை 3:56 ஐக் காட்டியது. இதே வேகத்தில் போனால் இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் அடுத்த ஸ்டேசன் கந்தளாய் வந்து விடும். என்னுடைய ஊருக்குச் செல்வதற்கு அங்குதான் நான் இறங்கி பஸ் பிடிக்கவேண்டும்.

தாடிக்காரன் மீதிருந்த எரிச்சல் எனக்கு இன்னும் அடங்கவில்லை என்பதால் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்று பார்க்க வேண்டும் போலிருந்தது. இருக்கையில் இருந்தவாறு சிறிது சரிந்து எட்டிப் பார்த்தேன். அவன் தனதுலேப்டொப் கம்ப்யூட்டர் பேக்கின் பட்டியை தன்னுடைய மார்புக்குக் குறுக்கேமாட்டியபடி இருக்கையிலே நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

'அட!தாடிபடு விவரமான ஆள்தான். தூங்கினாலும் லேப்டொப் பேக்கை விடவில்லையே.. அவனுக்கு அது அவ்வளவு முக்கியமான விடயம் போல?'என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதுசற்று நேரத்தில் எதிர்பாராத ஒன்று நடந்தது.

அந்தத் தாடிக்காரன் சட்டென விழித்தெழுந்தான்.அப்போது என்னையும் அவனையும் தவிரஅந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் எல்லோருமே அவரவர் ஆசனங்களிலே இருந்தபடியே ஆழ்ந்த தூக்கத்திலிருந்தார்கள். அவன் தனது செல்போனில் நேரத்தைப் பார்த்த பின்பு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் மேலோட்டமாகபார்த்தான். உடனே நானும் தூங்குவதுபோல பாவனை செய்தபடி அவன் என்ன செய்கின்றான் என்று கவனித்தேன்.அவன் தன்னுடைய தோளிலே தொங்கிக் கொண்டிருந்தலேப்டொப் பேக்கைசட்டெனக் கழற்றித் தனது இருக்கையில் வைத்தான். அவனுக்கு ஏதோ அவசரமாக இருக்க வேண்டும். மீண்டும் சுற்றிலும் பார்த்தான். அந்த பேக்கின் பட்டியை ஆசனத்தில் மாலையிடுவதுபோலஅணிவித்துவிட்டுஅதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு சென்றுவிடாதபடி தோள் பட்டியால் ஏதோசெய்தான். பின்பு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சற்றுத் தள்ளியிருந்த கழிப்பறைக்குள்அவசரமாக நுழைந்தான்.

அவன் கழிப்பறைக்குள் நுழைந்தஅதேவேளை ரயில் தனது வேகத்தைப் படிப்படியாக குறைத்துக்கொள்ள ஆரம்பித்தது. அப்படியானால் அதுகந்தளாய் ஸ்டேசனைத்தான்அண்மித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான்யூகித்து விட்டேன்.

உடனடியாக என் மண்டைக்குள்ளேதிடீர் யோசனை மின்குமிழ் ஒன்று பளிச்சிட்டது.

கழிப்பறையிலிருந்து தாடிக்காரன் வெளியே வருவதற்கிடையில் நான் விரைந்து செயற்படத் தீர்மானித்தேன்.வேகம்குறைந்து ரயில்வண்டி கந்தளாய்ஸ்டேசனை நெருங்குவதற்குமுன்பே நான் எழுந்து நின்று விட்டேன். கண்மூடித் திறப்பதற்குள் தாடிக்காரனின் இருக்கையை அடைந்தேன். தாடிக்காரன் அதிலே கட்டிவைத்திருந்த லேப்டொப் கம்ப்யூட்டர் அடங்கிய பேக்கை கஷ்டப்பட்டு விடுவித்துக் கையிலேடுத்தேன். சட்டென அதை என்னுடைய தோளில் அணிந்து கொண்டுடேன்.ரயில் நின்றதும் அதேவேகத்தில் ரயிலிலிருந்துபுகையிரத மேடையில்இறங்கினேன். எங்கே தாடிக்காரன் கழிப்பறையிலிருந்து வெளியில் வந்து கண்டு விடுவானோ என்று மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டதில் அந்த அதிகாலைப் பனிக்குளிரிலும் எனக்கு வியர்த்தது.வேகமாக நடந்தாலோ ஓடினாலோபார்க்கும் யாருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்பதால்பயணச்சீட்டைஒப்படைக்கும் இடம் வரையிலாவது இயல்பாகநடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துவெகுநிதானமாக நடந்து கொண்டிருந்தேன்.

பிரயாணிகள் இறங்கியதும் நான் வந்த ரயில்ஒருதடவை பெரிதாக அலறிவிட்டு திருகோணமலையை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்தது.ரயிலை ஒட்டியபடி புகையிரத மேடையில் நடந்து கொண்டிருந்த என்னைபயணிகள் பெட்டிகள் ஒவ்வொன்றாக தாண்டிச் செல்ல ஆரம்பித்தன.ஆனால் அந்தத் தாடிக்காரனின் பெட்டி என்னைத் தாண்டும்போது மட்டும்என்னுடைய முகத்தில் குரூரப் புன்னகை ஒன்றுதோன்றி மறைந்தது.

-மூதூர் மொகமட் ராபி

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21672
மொத்த பார்வைகள்...2078596

Currently are 380 guests online


Kinniya.NET