திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

ஆயுசு நூறு..! (சிறு கதை)

'என்ட அல்லாஹ் என்ட ரப்பே'

'என்ன படச்சவனே........என்ட ரஹ்மானே.. என்ட துஆவ நீ அங்கீகரிச்சுட்ட. ரப்புல் ஆலமீனே எல்லாப் புகழும் உனக்கே' என கண்ணீர்த் துளிகளை சமர்ப்பணம் acசெய்தவாறு உம்மாவின் குரலில் ஒலித்த வார்த்தைகளை சன்னமாக கேட்டவண்ணம் பயாஸ் கண்களை இறுகிப் போயிருந்த சிரமங்களுக்கு மத்தியில் திறந்து பார்த்தபோது அவனுக்கெதிரே அவனது உம்மா இரு கரமேந்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு... அந்தத் தாயின் கண்ணீரின் பிரகாசம் அவனது விழி நீருக்குள் விழுந்து தெறித்தது.

படுசுத்தமாக இருந்தது அந்த ப்ரைவேட் ஹொஸ்பிட்டல். ஒரு கலதாரியையோ இல்லாவிடில் தாஜ்சமுத்திரத்தையோ நினைவுபடுத்தும் அதன் பிரமாண்டம் கரன்ஸிகளின் மொசைக்குகளில் கண்களுக்கு பிரியாணி. தூசுகளற்ற ஃப்ளோர் டைல்ஸ்களில் விழுகின்ற மனித நிழல்கள் மரியாதை சுவைத்துக் கொண்டிருந்தன.

வெள்ளை வர்ணங்களில் அம்பியூலன்ஸ் கணக்கில் குறுக்கறுத்துருந்த நேர்சுகள் எயார் ஹொஸ்டஸ் ரேஞ்சில் ரெடிமேட் புன்னகைகளை உதடுகளில் பொறுத்திக் கொண்டு..... அது ஏன் பெரும்பாலான அரச ஆஸ்பத்திரிகளில் பணி புரிகின்ற நேர்ஸ்கள் மட்டும் நோயாளிகளோடு எரிந்து விழுகின்றனர்.

'ஹலோ சேர் இப்ப எப்படி'

கோல்கேட் பற்பசை விளம்பரத்தில் திரையில் விரியும் வெண்ணிறப்பற்கள் வரிசைக்கார நேர்ஸின் புன்னகைக்கு படுக்கையிலிருந்தவாறே ஒரே புன்னகையால் பதிலளித்த பயாஸ் அவனது வலக் கண் மற்றும் இடக் கண்ணை அந்த அறையில் சுற்றவிட்டதில்

அழுது கொண்டிருக்கும் உம்மா, மலர்ந்த முகத்தோடு வாப்பா, இன்னும் ஓயாத விசும்பலோடு மனைவி நர்க்கீஸ், மாமா. மாமி, மற்றும் அவனது இரண்டு வயதுச் செல்லம் அஸ்மா.

'அல்லாஹ்தான் வாப்பா ஒன்னக் காப்பாத்தினான்.....' என்ற அவனது உம்மா அருகே வந்து அவனது நெற்றியில் முத்தமிட்டார். மனைவி நர்க்கிஸ் அவனது வலக்கையின் உள்ளங்கையில் தனது முகத்தைப் பதித்துக் கொண்டாள். 'ஹாய் டாடி' என்ற அவனது செல்லத்தினை அவனது வாப்பா தூக்கி அவருக்குப் பக்கத்தில் வைத்தார். சற்று சிரமத்தோடு எழுந்தவனுக்கு கைகளை முட்டுக் கொடுக்க உதவி செய்தவர்

'எப்படிரா இருக்க...'

தனது அஸ்மாவை முத்தமிட்ட பயாஸின் கண்களில் கண்ணீர். சென்டிமென்டடல்; சீருங்காரங்களில் அவனது அஸ்மா அங்கே ஓர் சின்ட்ரெல்லாவாகிப் போனாள். அனைவரும் அவளை நெருங்கி விட்ட மூச்சில் நிம்மதியின் இழை ஓடிக் கொண்டிருந்தது.

'இனி எந்தப் பிரச்சினையுமில்ல. அவர் ஆபத்தான கட்டத்த தாண்டியாச்சு. இன்னும் அஞ்சு ஆறு நாள்ள மிஸ்டர் பயாஸ டிஸ்சார்ஜ் பண்ணிராலம். டோன்ட் வொரி....ண' சேர்ஜன் எடிசன் உத்தரவாதம் தந்த பிறகுதான் அந்தக் குடுத்பத்துக்கே உயிர் வந்தது. பிழைப்பானா இல்லையா என்ற வாதங்கள்தான் இதுவரை டொக்டர்களால் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால்

'அல்லாஹ் ஒங்களக் காப்பாத்திட்டான். நாங்க செய்யாத துஆவும் இல்ல... வைக்காத நேத்திக் கடனுமில்ல. நீங்க எங்களுக்கு திருப்பி கெடச்சதே போதும். நெறய நேத்திக்கடன் இருக்கு. அதெல்லாம் ஒடனேயே நெறவேத்தனும்.....' மனைவி நர்க்கிஸின் வார்த்தைகள் கேர்வையற்று வெளியானதில் கலங்கிய கண்களுக்கு பெரிய பங்குண்டு.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் சரியாக இருபது நாள் பயாஸை பொறுத்தவரை அவனது வாழ்வில் இருண்ட நாட்கள். மூச்சுப் பேச்சின்றி என்ன நடக்கின்றது ஏது நடக்கின்றது என எதுவுமே தெரியாமல் எல்லா அங்கங்களும் செயலற்று இருதயம் மட்டும் தொழிற்பாட்டில் இருக்க அவன் முற்றிலும் சுயநினைவிழந்து..

கோமா ஸ்டேஜ்.

பின் மண்டையில் பலத்த அடி... நிறைய ரத்த சேதம். கால் எலும்புகளிலும் கன்ன எலும்புகளிலும் முறிவு.. தோள்பட்டையில் டிஸ்ஸூஸ் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்க... யார்தான் நம்பினார் அவன் மீண்டும் பிழைத்து வருவானென்று. ரத்தம் பூசப்பட்ட அவனது உடலை அள்ளிப் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வந்த போதும் சரி. அவனது இயக்கமற்ற உடல் அவசர சத்திரசிகிச்சைக்காக ஒபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனபோதும் சரி எவரும் நம்பவில்லை.

'யா அல்லாஹ் எம்புள்ளயக் காப்பாத்து....'

'யா அல்லாஹ் எம் புருஷனக் காப்பாத்து. எம் புள்ளக்கு வாப்பாவத் திருப்பிக் கொடு...'

'யா ரப்பீ.. எம்புள்ளய கை விட்டுறாதே......' என்கிற அவனது குடும்பத்தின் நம்பிக்கையும், அவநம்பிக்கையும் கலந்த பிரார்த்தனைகளைத் தவிர வைத்தியர்களால் கூட எதுவும் உறுதிப்படுத்திச் சொல்ல முடியாத அளவுக்கு அவனது உடல் சின்னாபின்னப்பட்டு ஏகப்பட்ட காயங்களோடும் முறிவுகளோடும் அது அவன்தானா என்கிற அளவுக்கு உடல் பூராவும் குருதியாபிஷேகம். பெரிய பிரச்சினை என்னவென்றால் அவனது பின் மண்டையில் பலத்த அடி... நிறைய ரத்த வெளி நடப்பு. விளைவு இதோ கோமா ஸ்டேஜில் ஒபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றான். பௌதீக விதிகளுக்குள்ளாக சம்மணம் கட்டிக் கொண்டு இருக்கின்ற கொஞ்சூன்டு பகுத்திறிவினை வைத்துக் கொண்டு எதனையும் யோசித்துப் பார்க்கின்ற மனித குலத்தின் நடப்பு விதிக்கு முரணற்ற வகையில் பயாஸுக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட சேர்ஜன்கள் ஆரம்பத்தில்.

'வீ ட்ரைட் அவர் பெஸ்ட்.. பட் சுவர்லி அவர் கோமா ஸ்டேஜ்ல இருக்குறதால எப்ப கண் விழிப்பார்னு கன்பார்மா சொல்ல முடியாத நிலைல இருக்குறம். நாளைக்கு அல்லது நாளன்னைக்கு இல்லன்னா ஒரு வாரத்துல ஒரு மாசத்துக்குள்ள.. எப்பன்னு எதிர்வு கூற முடியாது. பட் வீ ஹோப் ஹீ வில் ரீகவர் கன்ஷயஸ்னஸ் சூன்.....' என்று சொல்லவிட்டார்கள். அவர்களது மாமூல்த்தனமான மருத்துவ வார்த்தைகள் அவர்களைப் பொறுத்த வரை சாதாரணம்.....ஆனால் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு சதாவும் ரணம்.

ஆனாலும் இருபதே நாட்களில் பயாஸ் கண் விழித்து தொலைந்து போன தனது சுய நினைவினை மீட்டெடுத்துக் கொண்டான். உண்மையில் சில விஷயங்கள் எமது அறிவுக்கு உட்படாத எல்லையைத் தாண்டி பிரம்மிப்பூட்டும் வகையில் ஆச்சரியங்களை விழிகளுக்கு அன்பளிப்பு செய்துவிட்டுப் போய்விடுகின்றன. அது போலத்தான் பயாஸும் இருபது நாளைக்குப்பின் இதோ இன்று எல்லோரையும் பார்த்து சிரித்து மெல்லிய சப்தத்தில் பேசிக் கொண்டிருக்கின்றான்.

மனித கட்டுப்பாட்டினையும் கொள்ளளவு சக்தியையும் மீறி அவனது விடயங்கள் சென்று விடுகின்றபோது நல்லவனாயிருந்தாலும், கெட்டவனாயிருந்தாலும் தன்னைப் படைத்தவனிடம் முற்று முழுதாக அவன் சரணாகதி அடைவதனைப் பார்க்கையில் மனிதன் எப்பேர்பட்ட பலவீனன் என்பது துல்லியமாகத் தெரிந்து விடுகின்றது.

இந்த இருபது நாளும் என்ன நடந்தது

'இன்னிக்கு என்ன தேதிம்மா'

'இருபத்தெட்டு'

'என்ன இருபத்தெட்டா'

கடைசியாக கடந்த எட்டாம் திகதி பிரீமியோ காரின் உபயத்தில் சிணுங்கிக் கொண்டிருந்த ஏஸியினை உள் வாங்கிக் கொண்டு சரியாக மாலை ஐந்து மணிக்கு மெத்தென்ற குஷனில் குந்திக் கொண்டு தனியே டிரைவிங் செய்தது. கார்ப்பெட் ரோடில் இன்னும் வேகம் இன்னும் கொஞ்சம் என உள்ளுணர்வின் எச்சரிக்கை மணியை ஒரு பக்கம் உதறித் தள்ளியவாறு எக்ஸிலேட்டரை மிதித்த வேகத்தில் மணிக்கு நூற்றிருபது கிலோமீட்டர் என மீட்டர் மொனீட்டர் 'ப்ளீஸ்' பீ அலேர்ட் என்பதனைப் பொருட்படுத்தாமல்

டிரைவிங்க ஒரு வகையான த்ரில்லிங்.

வேகம் மரணத்துக்கான அழைப்பிதழ் என்பது தெரிந்தும் வேகம் தருகின்ற த்ரில்லிங்கில் உருவாகும் கிளர்ச்சி கில்லிங் என்பதனை மறந்து ரஷ் அவர் அது.

இந்த இருபது நாளில் நான் எங்கே இருந்தேன். என்னைச் சுற்றி என்ன நடந்தது. நான் வாழ்ந்தேனா இல்லை தற்காலிகமாக மரணித்து பின்னர் மீண்டும் இருதயமும் சுவாசமும் ஒக்ஸிஜனும் பொறுத்தப்பட்டு இந்த உலகுக்கு வாழ்வதற்காக அனுப்பப்பட்டேனா. நான் இந்த இருபது நாளில் இருந்தது ஒளியிலா இருளிலா எவ்வித செயற்பாடுகளும் இயக்கங்களுமற்று அண்ட வெளியில் நான் மிதந்து கொண்டிருந்தேனா... அப்படின்னா என் பாதங்களுக்குத் தேவையான புவியீர்ப்பு சக்தியை எவர் பறித்துக் கொண்டார்..

பத்து டஜன் கேள்விகளுக்கு ஒற்றைப் பதிலும் இல்லாமல் அவன் குழம்பிப் போயிருந்தான்.

'ப்ளீஸ் பயாஸ். பீ கூல்.. நீயா எதையும் மனசுல போட்டு சும்மா குழப்பிக்காதே.. மேஜர் எக்ஸிடன்ட் நீ பொழச்சது பெரிய புண்ணியம். அந்த மாதிரி ஒரு எக்ஸிடன்ட்ல யாரும் பொழக்கிறது சாத்தியமே இல்ல. பட் நீ பொழச்சி வந்திருக்க. நீ பொழச்சி வந்தியே அதுவே எங்களுக்குப் போதும். அத நெனச்சி சந்தோஷப் படு. அத விட்டு கண்டதையும் நெனச்சு வீணா மனசப் போட்டுக் கொழப்பிக்காதே...' வாப்பாவின் குரல் உடைந்திருந்தது. ரொம்பவும் தவித்திருக்கின்றார். பெத்தவராச்சே... குடும்பத்தில் மூத்தவன். மூத்த பிள்ளையாக அவர் அவனைத்தான் கையில் ஏந்திக் கொஞ்சினார். அப்பேர்ப்பட்ட தகப்பன் இந்த சின்ன வயசில் அல்பாயுசில் போய் கைகளில் ஏந்திக் கொஞ்சிய அன்புத் தந்தையை சந்தூக்கில் வைத்து தூக்கிச் செல்ல வைக்கப்பார்த்தான்.

'வாப்பா இருபது நாளா நான் பேச்சு மூச்சில்லாம கெடந்தேனா..'

'சந்தேகத்தையெல்லாம் விட்டுடு பயாஸ். இருபது நாளக்கப்புறமாவது நீ விழிச்சுப் பார்த்தியே அது போதுண்டா எங்களுக்கு. எங்கே நீ கோமாவுலேயே இருந்திடுவியேன்னு எப்படி துடிச்சிருப்போம் தெரியுமா... இந்த இருபது நாளக்குள்ள வீட்டுல யாருக்குமே சோறு தண்ணி கெடயாது. நேந்த கையும் துஆவுமா ராப்பகலா தொழுதுக்கிட்டு அழுதுக்கிட்டு.....' வாப்பா சொல்லச் சொல்ல

முந்தானை ஓரத்தை வாயில் வைத்துக் கொண்டு பெற்ற வயிறு விசும்பிக் கொண்டிருந்தது.

'அல்ஹம்துலில்லாஹ். நான்தான் பொழச்சி வந்துட்டேனே... அல்லாஹ் என்னக் காப்பாத்திட்டான். எல்லாமே நல்லபடியா முடிஞ்சிடுச்சி. அழாதங்கம்மா. டோன்ட் வொரி வாப்பா...' என்று சொன்னாலும் அந்த இருபது நாள் இடைவெளி அவனை மிகவும் அச்சுறுத்திற்று.

கடந்த எட்டாம் திகதி மாலை ஐந்து மணிக்கு அந்தக் கார்பெட் ரோட்டில் மணிக்கு நூற்றி இருபது கிலோமீட்டரில் சிறகு கட்டிக் கொண்டு பறந்த காருக்கு நேரெதிர்த் திசையில் அதற்கு சமனான வேகத்தில் வந்து கொண்டிருந்த டிப்பர் ஒன்று காரை நெருங்க திடீர் என தனது கட்டுப்பாட்டினை இழந்த பயாஸின் பிடியிலிருந்து கார் நழுவி டிப்பரில் வலப்பக்க மூலையின் பகுதியில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மூர்க்கத்தனமாக முத்தமிட்டதில் டிப்பர் ஒரு பக்கம் கார் ஒரு பக்கம் என பிரியாவிடை வைபவம் பண்ணிக் கொண்டிருந்ததில் கார் வீதி நடுவிலிருந்து கொங்கிரீட் போஸ்ட்டுடன் இரண்டாம் தடவையாக முத்தமிட்டு நொறுங்கி... வீதி ஒரத்தில் தலைக்குப்புற வீசியெறியப்பட்டது.

இதில் பெரிய விஷயம் என்வென்றால் பயாஸ் சீல்ட் பெல்ட் அணிந்திருந்தும் அவனது பின் மண்டையில் பலமாக அடி அப்புறம் அவனுக்கு எதுவுமே தெரியாது. அந்தக் கணத்தில் விழிகளின் கேட்டுகளை மூடிக் கொண்டான். மூளையின் கட்டளைகளுக்காக காத்திருந்த ஏனைய எல்லா அங்கங்களும் கட்டளைகள் வராத ஸ்லிப்பர் ஷெல்ஸ்களாக ஸ்தம்பிதமற்று இருதயம் மட்டும் இந்த இருபது நாளில் கடைசி நம்பிக்கையில் துடித்துக் கொண்டிருந்தது.

தப்புதான் வேகமாக ஓட்டியது. ஆனால் கடந்த ஐந்து வருஷத்தில் ஏற்பட்ட முதல் விபத்து இது. படு மோசமான விபத்தாக ப்ரொஜெக்ட் பண்ணப்பட்டு அந்த எக்ஸிடென்ட்டை நேரில் கண்டவர்கள்................காரில் வந்தவன் எப்படியும் போய்ச் சேர்ந்திருப்பான் என்றனர். அந்தளவுக்கு காரின் எல்லா எலும்புகளும் நொறுங்கிப் போய் அஷ்ட கோணலாகி அசிட் அடிக்கப்பட்ட முகம் போல சைட் கண்ணாடிகள் உடைந்து தொலைந்து போன இடம் தெரியவில்லை.

முற்றிலும் உடல் சிதைந்த காருக்கு எப்படியும் ஒரு ப்ளாஸ்டிக் சேர்ஜரி தேவைப்படும். தேவைப்படுமளவுக்கு

'காருக்கு என்னாச்சு வாப்பா'

'....................'

'ஏன் அமைதியாயிருக்கீங்க.....'

'நான்தான் சொன்னேனே நீ பொழச்சி வந்துட்ட அது மட்டும் போதும்னு. வேறு என்னத்த இழந்தாலும் எங்களுக்கு கவலையில்ல. மத்த விஷயம் எல்லாத்தையும் விட்டுட்டு கம்ப்ளீட் ரெஸ்ட் எடு. ரிலாக்ஸா இரு. இன்னும் ஒரு மாசத்துல முள்ளந்தண்டுல சின்னதா இன்னுமொரு சேர்ஜரி செய்யனும்னு டொக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. அதனாலதான் சொல்லுறன் நீ தேவையில்லாத விஷயங்கள எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம பெட் ரெஸ்ட் எடு. நீ குயிக்கா இதுலர்ந்து ரீகவர் ஆகனும். அது மட்டும்தான் எங்களுக்கு இப்ப இருக்குற தேவையும் எதிர்பார்ப்பும்....வேறு எதுவும் எங்க மனசுல இப்ப சுத்தமா இல்ல...அதனாலதான் சொல்லுறன்....கண்டதயும் யோசிச்சு மனசப் போட்டுக் கொழப்குறத விட்டுட்டு ரிலாக்ஸா இரு'

'அதெல்லாம் சரி வாப்பா. எக்ஸிடென்ட் பட்ட என் காருக்கு என்னாச்சு.. சொல்லுங்க வாப்பா. நான் அறிஞ்சே ஆகனும். கவலைப்படாதீங்க. என்ன நடந்தாலும் நான் ஸ்டெடியா இருப்பேன். சாவோட வீட்டுக்குப் போய் திரும்பி வந்திருக்கேன். இத விட பெரிய அதிர்ச்சி வேற ஏதாவது இருக்க முடியுமா சொல்லுங்க .. என்னாச்சு என் காருக்கு'

பயாஸ் இயல்பாகவே ரொம்ப பிடிவாதக்காரன்...ஒரு விஷயத்தில் பிடித்து விட்டானென்றால் அதில் கரை காணாமல் உண்ண மாட்டான் உறங்க மாட்டான்...ஒற்றைக்காலில் நிற்கின்றதோர் கொக்காக...விடாக் கண்டன்....லேசில் விட மாட்டான்.....இதோ கேட்கின்றான்...சொல்லியே ஆக வேண்டும்..இல்லையென்றால் அந்த விஜயத்தினை அறியும் வரை ஓய மாட்டான்....ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிட்டா என்ன பண்ணுறது..அதை விட உத்தமம்

'கார் கம்ப்ளீட்டா நொருங்கிடுச்சு. இனி அத திருப்பி ரெப்பயார் பண்றது சாத்திமே இல்லன்னு ரிப்போர்ட் வந்திருக்கு. கார கன்டம்ப் பண்ணியாச்சுன்னு டொயோட்டா நிறுவனத்திலேர்ந்து ரிப்போர்ட் வந்திருக்கு. அல்லாதான் ஒன்ன பாதுகாத்தான்....எப்பேர்பட்ட விபத்து..அதுல நீ தப்பி வந்திருக்கேன்னா.....அல்லாஹ்வுக்குத்தான் எல்லாப் புகழும்'

'ஓ.. யா அல்லாஹ். கார கன்டம்பட்; பன்னுற அளவுக்கு எப்போர்பட்ட மோசமான விபத்து. மணிக்கு நூற்றி இருபது கிலோமீட்டரில் மிதந்த கார் மணிக்கு நூறு கிலோமீட்டரில் ஓடி வந்த பாரமான வாகனத்தோடு திடீரென்ற உரசினால் துண்டிக்கப்பட்ட அங்கங்களை அள்ளிக்கொண்டு கப்றுக்குள் வைக்கப்பட வேண்டிய விபத்தின் அகோரம்.

'இந்த சின்ன வயசுல அல்பாயுசுல போயிட்டான்டா. பாவம் எப்ப பாரு வேகம் ... கேட்டா த்ரில்லிங்னு பேரு வேற'

'நல்ல பையன் எங்கேயோ வர வேண்டியவன் இப்படி இடையில் தொலஞ்சி போயிட்டான்....'

'அகால மரணமடைந்த அஹமது பயாஸ் என்பவரின் நல்லடக்கம் இன்று பொது மையவாடியில் மாலை நான்கு மணிக்கு இடம்பெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்....'

என்பன போன்ற வார்த்தைகளுக்கு அறிமுக விழா செய்யவிருந்த பயாஸின் இந்த அகோரமான விபத்தில் எப்படி இவன் தப்பித்தான். எல்லாம் அல்லாஹ்வின் செயல் தவிர வேறென்ன. கார் கன்டம்ப்ட் பண்ணுகிற அளவுக்கு எக்ஸிடென்ட். ஆனால் நான் மட்டும் பலத்;த காயங்ளோடு தப்பியிருக்கின்றேன். அதுவும் இருபது நாள் கோமா ஸ்டேஜ். இருண்ட உலகில் வாழ்வா சாவா என நிச்சயப்படுத்த முடியாத கணங்கள். மயிரிழையினைத் தாண்டியும் நான் இந்த கோர விபத்திலிருந்து தப்பித்திருக்கின்றேன்....பூமியில் வாழ்வதற்கு இன்னோர் வாய்ப்பு.

'நீ எக்ஸிடென்ட் பட்டு இந்த ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு வந்த உடனேயே ஒன்னக் கொண்டு போனது இந்த ஒபரேஷன் தியேட்டருக்குள்ளதான். மொத்தமா பத்து மணித்தியாலங்களுக்கு மேலே டொக்டர்ஸ் ஒன் உசிரக் காப்பாத்துறதுக்காக எப்படி போராடிக்கிட்டு இருந்தாங்க தெரியுமா .. அதுலயும் அவங்க ரொம்பப் பயந்தது ஒன்னோட கிரிட்டிகல் ஹெட் இன்ஜேரிஸாலதான.; பட் எப்படிNயுh அல்லாஹ்ட துணையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சி....' என்ற அவனது வாப்பா மகனின் கையைப் பிடித்து தனது கண்களில் ஒத்திக் கொண்டார்.

கிரிட்டிக்கல்; ஹெட் இன்ஜேரிஸ்...............கணிசமான இரத்த சேதம். பத்து மணித்தியாலத்துக்கு மேற்பட்ட சேர்ஜரி. தொடர்ந்து இருபது நாள் கோமா ஸ்டேஜ். அத்தனையும் தாண்டி இதோ இன்று முழுசாக உசிரோடு இருக்கின்றேன்.

அற்புதம் தவிர வேறென்ன.

இப்போதைக்கு பெரும்பாலும் அவனது உடம்பு பூராவும் பெண்டேஜ்ஸ் ப்ளாஸ்டர்கள்.

'ஆ...ஆ...'

'என்ன பயாஸ்'

'இல்லம்மா கால் எலும்புலயும், நெஞ்சுலயும் ரொம்ப வலிக்குது. கால அசைக்க முடியல்ல.....ஆ...ஆ..ஆ...சிவியரு; NபுயுPனுர் இருக்கு வாப்பா....'

'இப்பதானே காயம் ஆறிட்டிருக்கு. அதெல்லாம் நாளாக நாளாக சரியாயிடும். ஆனா நீ கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கனும்னு டொக்டர்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாhங்க. நீ குடுக்குற ஒத்துழைப்புலதான் இருக்கு ஒங் காயங்கள் எவ்வளவு குயிக்கா ஆறுதுங்குறது...' வாப்பா கவலையோடு சொன்னார்.

எப்பேர்ப்;பட்ட ஆபத்திலிருந்து வெளியாகி மயிரிழையில் தப்பி பொழச்சி வந்திருக்கேன். பாசத்தப் பொழியும் தாய் தகப்பன் அழகான மனைவி, சதாவும் கண்களுக்குள் நிழலாடும் செல்லக்குட்டி அஸ்மா... வளர்ந்து வரும் இளந்தொழிலதிபர் என அத்தனையும் தொலைத்துவிட்டு வாழ வேண்டிய வயசில் காலனின் காலனித்துவ ஆட்சிக்கு கீழே காலாவதியாக இருந்தேனே.

இப்பேர்பட்ட ஆபத்திலிருந்து என்னைப் பிழைக்க வைத்து என்னாயுளை உத்தரவாதம் செய்தது எது... அது மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத தத்துவம்.

கண்களை இறுக மூடிக் கொண்ட பயாஸின் மனத்திரையில் எக்ஸிடென்ட் நடந்த அன்று எக்ஸிடென்ட் நடக்க முன்னர் நடந்த சம்பவங்கள் ஃப்ளாஷ் பேக்கில் மனசின் வெள்ளித் திரையில் விரிய ஆரம்பித்தன.

காரை ரிவேர்சில் எடுத்து பிரதான கேட்டுக்கு வந்தவன். வலப்பக்க கண்ணாடியை ஏதொ ஓர் தேவைக்கு திறந்து பாதி மூடிக் கொண்டிருக்;கையில் வெளியே இரண்டு பேர்...

நாற்பத்தைந்து மதிக்கத்தக்க வயதில் எபபோதோ சலவை செய்யப்பட்ட சேலையோடு ஒரு பெண். அவள் தலைமுடி வாரி ரொம்ப நாளாயிருக்கும் போல. பக்கத்தில் ஆறு வயதில் ஒரு பையன். பயாஸைப் பார்த்து சிரித்தான். கள்ளமில்லாச் சிரிப்பு. அதில் தூய்மை தெரிந்தது.

'ஏதாச்சும் கொடுங்கையா'

அவசரமாக போட் மீட்டிங் செல்ல வேண்டியிருந்தது பயாஸுக்கு. ஏற்கனவே லேட். இப்போது இவர்கள் வேறு காரைச் செல்ல விடாது அடைத்துக் கொண்டு.

'ஏதாவது கொடுங்க தொர. பசிக்குது... இது எம் புள்ளங்க. அவனுக்காவது ஏதாவது குடுங்க. சாப்புட்டு ரெண்டு நாளாச்சு.....சின்னப் பையன் பசி தாங்க மாட்டான்...ஏதாச்சும் குடுங்க தொர...'

பாவமாயிருந்தது.............அந்தப் பையன் இன்னும் பயாஸைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். எரிச்சல் வந்தது அவனுக்கு. வெளிக்கிடுற நேரம் பார்த்து இதுகள் ச்சே என்ன டோர்ச்சர்டா இது என்றாலும் எரிச்சலை விட அவர்களைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.

பொக்கட்டைத் துழாவியதில் கிடைத்த நூறு ரூபா நோட்டை அந்தப் பெண்ணுக்கு கொடுத்துவிட்டு காரின் எக்ஸ்லேட்டரை மிதித்தான். புழுதி சற்றுக் கிளம்ப ஆரம்பிக்கையில்

'நீங்க நல்லாயிருக்கனும் தொர.......நீண்ட ஆயுளோட நீங்க நல்லா வாழனும். அல்லாஹ் ஒங்களுக்கு எப்பவும் துணை நிற்பான். எந்தக் கொறையும் வராம நீங்க நூறு வயசுக்கு வாழுவீங்க......' என அந்தப் பெண் இரு கரமேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது மூடப்படாத காரின் இடப்பக்க கதவினூடாக தவழ்ந்து பயாஸின் காதுகளுக்குள் விழுந்தது.

கிண்ணியா சபருள்ளா - பெருந்தெரு கிண்ணியா-06

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21674
மொத்த பார்வைகள்...2078598

Currently are 382 guests online


Kinniya.NET