திங்கட்கிழமை, ஜூலை 23, 2018
   
Text Size

வெண்ணிறத்து மக்காத் தொப்பி (சிறுகதை)

capம்மாவுக்கு பெரும் ஆச்சர்யம்... சற்றுக் கோபம் கூட வந்தது. போயும் போயும் .... ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'ஆஃப்டர் ஓல்' அந்த மாதிரி... பெறுமானமோ அல்லது பெறுமதியோ இல்லாத ஒரு தொப்பிக்காக பொறுமை இழந்து.. பொறுத்தார் பூமியாழ்வார் எனும் பொது மொழி மறந்து ஏன் இப்படி இவன் தாம் தூம் என குதிக்கிறான்.

கடந்த இரண்டு நாளாய் வீட்டை ரெண்டு அல்லது மூன்று படுத்திவிட்டான் அல்லாமா. வீடு அல்லோல கல்லோலப்பட்டது போயும் போயும் ஒரு தொப்பி காணாமற் போனதற்காக வீட்டை, வீட்டிலுள்ள கப்போர்ட், அலுமாரி, டவல் ட்ரெக், ப்ரீஃப் கேஸ், டீவி ஸ்டான்ட், வெளியே கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடை உலர்த்தப் பயன்படுத்தும் கொடி என அத்தனை இடங்களையும் ஒன்று விடாமல் குடைந்து தேடி

அலுத்ததுதான் மிச்சம்.

தொலைந்து போன அவனது தொப்பி இரண்டாவது நாளாக இன்று வரை கிடைக்கவேயில்லை. உம்மா தொடக்கம் வீட்டிலிருந்த அத்தனை பேருக்கும் எரிச்சல் ஆலாபனை... இந்த வீட்ல எந்த சாமான் வெச்ச எடத்துல இருக்குது.. ஏதாவது காணாமப் போயிட்டா யார்க்கிட்ட கேட்டாலும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது என கைய விரிக்குறது... அப்ப இந்த வீட்ல பேய் பிசாசா இருக்குது... எனக் கத்த ஆரம்பித்துவிட்டான்.

சும்மாவே எடுத்ததற்கெல்லாம் சுருக்கென்று கோபம் வந்து காட்டுக்கத்து கத்தும் அல்லாமா இந்த தொப்பி தொலைந்ததிலிருந்து எக்கச்சக்க டெஸிபலில் அவனது குரல் எகிர ஆரம்பித்திருந்தது.

'என்ட பெட்ரூம் டவல் ட்ரக்லதான் வெச்சன். இப்ப பார்த்தா ரெண்டு நாளா தொப்பியக் கானோம். பெட்ரூம்ல வெச்ச சாமான் இல்லாமப் போவுதுன்னா இந்த ஊட்டுல இனி எங்கதான் வெக்கிறது இந்த வீட்ல மனுஷனுக்கு கொஞ்ச நஞ்சமாவது ப்ரைவெஸி இருக்குதா....' பெட்ரூமை முழுமையாக அடைத்துக் கொண்டிருந்த ஏழடி நீளமும், ஆறடி அகலமுமான கட்டிலுக்குக் கீழ் டோர்ச்சினைப் பிடித்து பார்வையால் துழாவிக் கொண்டே மீண்டும் மீண்டும் தேவைப்படும் போதெல்லாம் கத்திக் கொண்டிருந்தான் அல்லாமா.

உம்மாவுக்கு அவனைப் பார்க்க கோபமாக வந்தாலும் அந்தக் கோபம் ஓரிரு நிமிட இடைவெளியில் இறந்து போனது. இவனுக்கு எதுக்கெடுத்தாலும் நுனிமூக்குல கோபம் வந்துடும். எதுக்குத்தான் இவன் ஆர்ப்பாட்டம் பண்ணல்ல.. இதுவொன்னும் அவனுக்கு புதுசில்லையே.... இதுக்கு முன்னரும் இப்படிக் காட்டுத்தனமா கத்துறத நூறு தடைவ பார்த்தாச்சு.

கோவக்காரன்தான்... ஆனா... கொஞ்ச நேரத்துல அது அடங்கிப் போயிடும். அப்புறம் கோபத்துல தொலஞ்சி போன அறிவ வழி தவற விட்டுவிட்டு உணர்ச்சி வசத்தால யார் மீது வார்த்தைகளை ஏவி காயப்படுத்துவானோ அந்த நபரைத் தேடிப் போய் இரவு தூக்கம் வராம எழும்பிப் போய் 'அல்லாஹ்வுக்காக என்ன மன்னிச்சிடு தாத்தா ... மன்னிச்சிருங்க உம்மா... மன்னிச்சிருங்க மச்சான்....பின்னர் அதுவே அவன் மீது பாவத்தினையும் அச்சச்சோ என உச்சுக் கொட்டுவதனையும் உருவாக்கி விடும்.

என்கிற ரகம்.

ஆனாலும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அல்லாமா கோபத்தில் சத்தமிட்டு ரகளை பண்ணியதற்கும், கோபப்பட்டு வார்த்தைகளை நெருப்புக் கொள்ளியில் போட்டு கொளுத்தியதற்கும் ஏதோ ஒரு காரணம் சினனதாகவோ பெரிதாகவோ ... அல்லது என்னமோ ஒரு எழவாகவோ இருந்தது. 'அவன் கத்துறதும் சரிதான். இந்த ஊட்டுல அவன்ட ரூமுக்குள்ள அடுத்தவர்களுக்கு என்ன வேலை... அவன்ட கம்ப்யூட்டர போட்டு மாங்கு மாங்குன்னு கண்டபடி அடிக்குறதும் அப்புறம் அது வேலை செய்யாம நின்னு போறதும்......பத்தாதுக்கு ஏ டீ எஸ் எல் கனெக்ஸன்...மாசத்துக்கு பத்தொன்பது ஜீ பீ எல்லா மண்ணாங் கட்டியையும் டவுன் லோடு பண்ணுறேன்னு கெடக்கப்பட்டதையெல்லாம் டவுன் லோடு பண்ணி அப்புறம் பாத்தா பத்தொன்பது ஜீ பீயும் பதினஞ்சு நாள்ள முடிஞ்சாச்சு.....அதுக்கப்புறம் அவனுக்கு ஈ மெயில் செக் பண்ணவும் வழியில்லாம....அவன் கத்தாம வேற என்னதான் செய்வான். அது மட்டுமர் அவன்ட ஒபீசுக்குள்ளே அவன்ட அனுமதி இல்லாம போய் அங்க தோண்டுறதும் இங்க தோண்டுறதும்... இப்படின்னா எவனுக்குத்தான் டென்ஷன் ஆகாது... நீயும் கத்துற மாதிரி கத்திக்கிட்டே இரு நாங்களும் பண்ணுறத பண்ணுவோம்ற மாதிரி இருக்கு இந்த வீட்ல......' என உம்மா அவனுக்கு இதற்கு முன் எல்லா சந்தர்ப்பங்களிலும் சப்போர்ட் பண்ணியிருக்கின்றங்க.

ஆனால் இந்தத் தடைவ உம்மாவுக்கு சற்று எரிச்சல் வந்து என்றைக்கும் இல்லாதவாறு சத்தமாக ஆர்ப்பாட்டம் போட்டு... ஒரு விதத்தில் அவன் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தான். ஆந்த ஆட்டம் அந்த வார்த்தைகள்... கொழுந்து விட்டெரியும் அவனது கோபத்தீ அத்தனையும் போயும் போயும் சாதாரண

தொப்பிக்குப் போய் இப்படி யாரும் பேயாட்டம் போடுவாங்களா... 'தொப்பிதானே ஒங்கிட்டதான் அஞ்சாறு தொப்பி இருக்கே பேசாம விட்டுட்டு வேலையப்பாரு... கோவத்துல வாயிலிருந்து வாற வார்த்த வெளங்குறதில்லையா மனுஷனுக்கு...'

துல்லியமாக உம்மாவின் வார்த்தைகளை காதுகளுக்குள் வாங்கிக் கொண்டவன் தனது தேடுதலை விட்டுவிட்டு உம்மாவைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையில் பச்சைமிளகாய்... உம்மாவுக்குப் பக்கத்தில் அவனது தங்கச்சி... மூத்த நாநா... அநதக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள சின்னச்சின்ன வாண்டுகள். அல்லாமா தொப்பி தேடி பிரளி பண்ணிக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து மருதானை சினிசிட்டியில் நைட் ஷோ முடிந்து பஸ் பிடிக்கும் அவசரத்தில் உள்ள ரசிக மகாஜனங்கள் போல அவசரமாய் கலைந்து சென்றிருந்தார்கள்.

கண்களில் கோபத்தின் சுவடுகள்... உதடுகளில் ஆத்திரத்தின் உளி செதுக்கிய கல்வெட்டுகள்.. உம்மாவாச்சே.. அடங்கிய கோபத்தோடு ஆனால் அது ஓரளவுக்கு வெளிப்படும் சாயல் 'என்னம்மா சொல்லுறீங்க தொப்பியோ கொப்பியோ அது என்னோட பொருள்... சின்னதோ பெரிசோ அது என்னோட இருந்திட்டு போகட்டும். நான் என்ட பெட்ரூம்ல வெச்ச தொப்பிய யார் எடுத்திட்டுப் போனது... நெனச்சக்குள்ள பத்திட்டு வருது.... இந்த வீட்டுல இனி எங்கதான் வெக்கிறது... இனி மடுவு கிண்டி பொதச்சித்தான் வைக்கனும்....' அந்த வார்த்தைகளை முடிக்கையில் என்ன சத்தமிது... பற்களின் நெறிபடுகின்ற சப்தம்... அவனது கோபம் குறையவில்லை என்பதற்கான உடனடிச் சான்று.

உம்மாவும் ஏனையோரும் கண்கண்ட சாட்சிகள்.... 'என்னமோ செய்... நான் சொல்லுறத நீ எப்பதான் காது குடுத்து கேட்டிருக்க... சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுறதும், ஆத்திரப்படுறதும் கண்ட மாதிரி பேசுறதும், போயும் போயும் ஒரு தொப்பிக்குப் போய் ரெண்டு நாளா என்னவெல்லாம் நீ பேசிட்டே இதெல்லாம் தேவையா...'

'அப்படி என்ன பேசிட்டேன்... கோபத்திலேயும் நியாயமாகத்தான் பேசுவேன்... நீங்களே சொல்லுங்க.......இந்த வீட்ல எனக்கு என்ன ப்ரைவெஸி இருக்கு... தெனமும் ஏதோ ஒரு சாமான் மிஸ்ஸாகுது... இல்லன்னா நான் வெச்ச எடத்திலர்ந்து இன்னோர் எடத்துல கெடக்கு... இதெல்லாம் என்னாங்குறன்....'

'நீ என்ன பேசினேன்னு... ஒனக்கு வேணா மறந்திருக்கலாம். நீ பேசுறத கேட்டுட்டு இருந்த எங்களுக்கில்ல தெரியும்... மொதல்ல கோவத்த கொற.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்பாங்க....அது சரியாத்தானிருக்கு. படிச்சவன் நீ.....நிதானம் தவறி பேசுறத மொதல்ல நிறுத்து....அவ்வளவு நல்லமில்ல. இது கூட்டுக்குடும்பம்.. அதுவும் நெறய சின்னப் புள்ளங்க இருக்குற எடம். அப்படி இப்படிததான் இருக்கும்.....' உம்மாவின் வழமையான பல்லவி இன்று சற்று தூக்கலாக.....அதில் கோபமும் கலந்திருந்தது.

'அவனுக்கு என்ன சொன்னாலும் வெளங்காது.. புதுசா செஞ்சா பரவாயில்ல.......இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டதுதானே... ஒரு தொப்பிக்குப் போய் இவன் இப்படிக் கத்துறது புதினமா இருக்கு... எது எதுக்கு ஆத்திரப்படுறது... எதெதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுறதுன்னு இவனுக்கு வௌஸ்தை கெடையாது.. அதுக்குள்ள குர்ஆனைப் படிச்சிருக்கேன். ஹதீஸ படிச்சிருக்கேன். அப்பப்ப பயான் வேறு... ரொம்பப் பெரிய உத்தியோகத்துல இருக்கான். படிச்சவன் மாதிரியா பிஹேவ் பண்ணுறான்.' இப்போது தங்கச்சியின் முறை. தங்கச்சி வழமையாகவே இப்படித்தான் அல்லாமாவோடு நேருக்கு நேர் நின்று உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சரிசம விகிதத்தில் பேசிவிடுகின்ற துணிகரமான கரக்டர். அவனது அன்புத் தங்கச்சி அவனது ரெண்டு தாத்தாமார்களை விட வித்தியாசம்...தாத்தாமார்கள் என்றால் என்ன பேசினாலும் கணக்கிலெடுத்துக் கொள்ள மாட்டார்கள்..அவன் சின்னவன்...பேசினால் பேசி விட்டுப் போகட்டும்...பின்னர் எல்லாம் சரியாகி விம் என நினைக்கின்ற ரகம்...இவனால் அவ்வப்போது அவர்கள் அழுததும் உண்டு....ஆனால் எதிர்த்துப் பேச மாட்டார்கள். ஆனால் தங்கச்சி அப்பிடியில்லை....நெத்தியடி கொடுக்கின்ற ரகம்...முகத்துக்கு நேரே கதைத்து விடுவாள்...இப்பொதும் அப்படித்தான்.

அவன் பேசுகின்ற போது அந்த வீட்டில் எல்லோரினது குரல்வளைகளும் தற்காலிக அமைதியாய் பிரகடனம் செய்கின்றபோது அவனுக்கு அடுத்ததாகப் பிறந்த தங்கை மட்டும் அவனுக்கு சரிசமமாக பதில் சொல்லிவிடுகின்ற தன்மை... அதில் நக்கலும் நையாண்டியும்.

கொஞ்சம் கூட பயமில்லாம...

'இல்லாம சின்ன விஷயத்துக்குப் போய் ... போயும் போயும் ஒரு தொப்பியைக் காணல்லன்னு இப்படி நீ கத்துறதப் பாத்தா எனக்கு தலை சுத்துது. வாங்கம்மா அவனுக்கு என்ன செய்யனும்னு தோணுதோ அத செய்யட்டும். நாம இங்கிருந்து போயிடுவோம்....' உம்மா தங்கச்சி நானா எல்லோரும் ரிஷப்ஷன் ஹோலில் போய் அமர்ந்து கொண்டார்கள்.

தனியே நின்று கொண்டிருந்த அல்லாமாவின் காதுகளில் அவர்கள் பேசுவது இப்போது கேட்டாலும் என்ன பேசுகின்றார்கள் என்று அவனுக்கு தெளிவற்ற அலைவரிசையில் ஒலிக்கின்ற மந்திரி குமாரி பாடலாகத் தெரிந்தது.

தலைவலித்தது அவனுக்கு..

இவங்களுக்கு எங்கே தெரியப் போகுது... என மனசுக்குள் நினைத்துக் கொண்டான் மீண்டும் வெளியே இறங்கியவாறு பாத்ரூமுக்கு பக்கத்திலிருந்த கொடியில் இன்னுமோர் தடவை தேடிப்பார்த்தான். பத்தாவது தடவையாக அந்தக் கொடி அவனது பரிசீலணைக்கு இப்போது உட்பட்டிருந்தது.

'நான்தான் வேறு எங்காச்சும் தொப்பியைத் தொலச்சிட்டேனோ..இல்லன்னா வேறு எங்காவது வெச்சிட்டு மறந்து போயிட்டேனோ இல்லையே எனக்கு நல்லா ஞாபகம் இருக்குதே வெள்ளிக்கிழமை காலை சுப்ஹு தொழுதுவிட்டு வந்து வந்த வேகத்துல தொப்பியக் கழட்டி இந்தா பெட்ரூம்ல இருக்குற டவல் ட்ரெக்குல கொழுவி வெச்சிட்டு சின்னதா ஒரு தூக்கம் போட்டு... அப்புறம் காலைல கூட பார்த்தேனே... தொப்பி இருந்திச்சே...

பெட்ரூமுக்குள் வந்து இரும்பு அலுமாரியை திறந்து மீண்டும் கையை விட்டு துழாவினான். இரும்பு அலுமாரியின் இடது பக்க மேற்தட்டில் அவனது முப்பது நாப்பது ஷேர்ட்டுகள்... அதெல்லாம் களைத்துப் போட்டாச்சு... அப்புறம் கீழ்த்தட்டில் முழுக்க முழுக்க கொட்டுன் மற்றும் டெனிம் டிரவுஷர்கள்.... அவைகளும் அவனது கைகளால் கலைந்த கோலங்களாகி... ஆச்சு... அந்த அலுமாரி இத்தோட மூன்று தடைவ அலங்கோலமாக்கப்பட்டு விட்டது.

எல்லா இடங்களையும் பார்த்தாச்சு... அவனது வீட்டுக்கு முன்னால் உள்ள அவனது தாத்தாமார்களின் வீடுகளிலும் தேடுதல் நடவடிக்கை.. அனைத்தும் தோல்வியில் அர்ப்பணம்.

தொப்பி கிடைக்கவே இல்லை கடைசி மட்டும்.. கோபமும் எரிச்சலும் தொப்பி கிடைக்கவே இல்லை என்கிற உண்மையையும், சரிசம விகிதத்தில் கவலையாக இப்போது மனசு கனத்தது.

தொலைந்து போன தொப்பி இனி அவனுக்குக் கிடைக்கப் போவதேயில்ல என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

இந்த வீட்ல காணாமல் போன எந்த சாமானாவது இது வரை திருப்பிக் கிடைச்சிருக்கா. இல்லையே... இந்த வீட்ல மட்டும் அப்படி ஒரு காணாமல் பொனதாகச் சொல்லப்படுகின்ற ஏதாவது ஒரு பொருள் திரும்பக் கிடைத்தால் அது உலகின் இன்னுமோர் அதிசயம்...அதிசயம் நிகழ்த்திக் காட்ட எங்க வீட்டு சனங்கள் எப்பொதுமே தயாரில்லை......அதனால் அப்புறம் இந்தத் தொப்பியின் கதையும் அப்படித்தான்... காணாமற் போனோர் பட்டியலில் தொப்பி கடைசியாய் சேர்ந்திருந்தது அவ்வளவுதான்.

அவ்வளவுதானா?

குண்டூசி ஒன்று இதயத்தின் நடுப்பகுதியில் திடீரென்று குத்தி மறைந்தது... இனித் தேட இடம் ஏதுமில்லை. தோண்டைக்குள் திடீரென்று நீர் காணாமல்போனது.

அக்ராஷ் எடுத்திருப்பானோ... இது அவன்ட வேலையாய்த்தான் இருக்கும்.. இந்த வீட்ல தன்ட இஷ்டத்துக்கு எல்லாப் புள்ளங்களும் நடக்குதுகள்... அக்ராஸ்தான் எடுத்திருப்பான். பெரிய்ய வாலு... கேட்டா மட்டும் நான்தான் எடுத்தேன்னு சொல்லிடுவானா... முகத்த ரொம்ப அப்பாவியாக வெச்சுக்கிட்டு எதுவுமே தெரியாத மாதிரி... நான் எடுக்கல்ல... எனக்கென்னதுக்கு அதுவும் மாமாட தொப்பி... அவங்கட்ட கேக்காம நான் எடுப்பேனா.. எனக்கிட்ட மத்ரஸா போறதுக்கு ஒரு தொப்பி தொழப் போறதுக்கு ஒரு தொப்பி இருக்கு... அப்படித்தான் சொல்லுவான்... அதற்கு அவனது உம்மா .. அல்லாமாவின் தாத்தா.

'பாவம் அவன்... எல்லாத்துக்கும் அவனையே சந்தேகப்பட்டுக்கிட்டு இதெல்லாம் அநியாயாம்... பச்சப் புள்ளயப் போய் இப்படி குத்தவாளி மாதிரி விசாரிக்கிறது ரொம்பத் தப்பு...' என பக்க வாத்தியம் வாசிக்க ஆரம்பித்துவிடும். அவ்வப்பபோது மகனைக் குத்தம் சொல்லிவிட்டானே என்று எதிர்பாராத சமயங்களில் ரெடிமேட் கண்ணீர் வேறு.

'சுத்தம்'

எனவே இந்தத் தொப்பிக் கதைக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்... என்றாலும் அந்தத் தொப்பி எங்கே போயிருக்கும்... வழமையாக ஐந்து நெரத் தொழுகைக்கும் அல்லாமா அந்தத் தொப்பியைத்தான் பள்ளிக்கு அணிந்து செல்வான். அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் அந்தத் தொப்பி என்றால்... கடந்த ஒரு வருடமாய் அவன் தலை மீது அமர்ந்து கொண்டு அவனோடு கூடவே வாழ்ந்த தொப்பி அவனது வானாளில் அவனுக்கு புத்தி தெரிந்த நாளிலிலிருந்து ஒரு தொப்பியை பத்திரம் காத்து இவ்வளவு காலம் பயன்படுத்தி வந்திருக்கின்றான் என்றால் அது இந்தா இதோ தொலைந்து போனதாகச் சொல்லப்படும் தொப்பிதான். கூடவேயிருந்த ஒரு ஜீவன் நிரந்தரமாய்ப் பிரிந்து போன உணர்வில் அவனுக்கு ஒரு கணம் தொண்டை அடைத்தது.

பொதுவாக லேசில் எதற்காகவும் உணர்ச்சி வசப்படாத அல்லாமா இந்தத் தொப்பி விஷயத்தில் லேசாக மனசுடைந்து போயிருக்கின்றான். என்பதனை அவனது முக ரேகைகள் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன.

'தம்பி ஒரு தடவை முப்பதினாயிரம் ரூபாவை தொலைச்சப்போ செல்போன் காணாமல் போனப்போ கார் எக்ஸிடென்ட் ஆனப்போ ... இந்த மாதிரி எவ்வளவோ நடந்திருச்சி... பெரிய பெரிய நஷ்டமெல்லாம் ஏற்பட்டிருச்சி அப்பல்லாம்.

'ஒனக்கு காசிட அருமை வெளங்கல்ல..'

'காசு இன்னிக்கு வரும் நாளைக்குப் போகும்....இதெல்லாம் பெரிசில்லம்மா...'

'முப்பதினாயிரத்த ஒரேயடியாக தொலச்சிட்டு வந்து நிக்கிறியே... எங்கடா தொலச்ச...'

'ஆஃப்டர் ஓல் முப்பதினாயிரம்... அதுக்குப் போய் ஏதோ உலகமே அழிஞ்சிட்டாப் போல ஏம்மா இப்படி இடிஞ்சி போயிருக்குற...'

'பார்த்து ஓடக் கூடாதா.. இப்ப பாரு பெரிய்ய எக்ஸிடென்ட்.. நீ தப்பி வந்தியே அது போதும்... அஞ்சாறு லட்சம் நட்டம்... என்ன காதுல வாங்கிக்க மாட்டியே ... ஒன்னோட பிடிவாதம்தான் நட்டத்துக்கு மேலே நட்டத்த கொண்டு வந்திட்டு இருக்கு... இனியாவது புரிஞ்சு நடந்துக்க...'

'டேக் ஈட் ஈஸி... அது அது விதிப்படிதான் நடக்கும்.. நம்ம கையிலே எதுவுமே இல்லை...'

'இப்படி என்ன நடந்தாலும் என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் ரொம்பக் கூலா இருப்பான்.. ஒன்னுமே நடக்காத மாதிரி சும்மா கல்லு மாதிரி இருப்பான். ஆனா இப்ப என்னடான்னா ஒன்னுமே இல்லாத தொப்பிக்குப் போய் வானத்துக்கும் பூமிக்குமா தாம் தூம்னு குதிக்குறான்.. புதுனமா இருக்கு... இவன் எப்ப என்ன செய்வான்னு ஒன்னுமே புரியுதுல்ல... என்ட அல்லாஹ் நீதான் அவனுக்கு புத்தியக் கொடுக்கனும்...'

உம்மா முன் ஹோலில் சொல்லிச் சொல்லி பெருமூச்சு விடுவது அவனுக்கு தெளிவாகக் கேட்;டது.

'அதானே.. இதுக்கு முந்தி எத்தனயோ இந்த வீட்ல நடந்திருக்கு... மோட்ட பைக்ல போய் அஞ்சாறு தடவை எக்ஸிடென்ட் ஆகி அந்த பைக் நாறிடுச்சி.. எவ்வளவோ செலவு அதுல ... அது மாதிரி மூன்று தடவை காரைக் கொண்டுவிட்டான்.. கடைசில என்னடான்னா... கன்டம்ப்ட் பண்ணுற அளவுக்கு வந்தாச்சு... அப்பெல்லாம் அம்ம முன்டி மாதிரி ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்தவன்... ஒன்னுக்கும் பிரயோசனமில்லாத தொப்;பிக்குப் போய்... என்ன எழவுன்னே புரியுதுல்ல...' இது தங்கையின் அலுப்புக் கொண்ட வார்த்தைகள்.

'என்னதான் மனசுல நெனச்சிட்டு இருக்கானோ தெரியல்ல.. அது சரி தொட்டிப் பழக்கம் எதுக்கெடுத்தாலும் ஆ ஊன்னு கத்துறது.. அவனுக்கு ரொம்ப பழக்கப்பட்டு;ப் போயிடுச்சி... அடி நாள்ள இருந்து ரத்தத்துல ஊறிய பண்பு.. அத இப்ப நாம நெனச்சா திருத்தலாமா என்ன... அவனாப் பார்த்து திருந்திக்கிட்டாத்தான்...'

நாநாவின் குரலும் அவன் செவிப்பறையில் புதிதாக இப்போது சேர்ந்து கொண்டது.

ஆனாலும் கடந்த ரெண்டு நாளாய் நான் கொஞ்சம் ஓவராகத்தான் நடந்திக்கிட்டேனோ.. கோபமும் ஆத்திரமும் ஆறாம் அறிவுக்கு திரைபோட்டு விடுகின்றன... அதனால் எழுகின்ற குழப்பங்கள்தான் இவை. எப்படியாவது இந்தக் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொன்ட்ரோல் பண்ணப் பழகிக் கொள்ள வேண்டும் என அல்லாமா இப்படி தனக்குள் பேசிக் கொண்டது கடந்த பத்து வருஷத்துக்குரிய வார்த்தைகள்.

இப்படியே மூனு மாசம் ஓடிவிட்டது.. அதற்குள் புதிது புதிதாய் சந்தோஷங்கள், புதுசு புதுசாய் கவலைகள். புதிது புதிதாய் லாபங்கள் நட்டங்கள் என ஆயிரம் விஷயங்கள் வாழ்வைக் கடந்து சென்றுவிட்டன.

'மாமா'

'என்னமா'

அல்லாமாவின் பெட்ரூம் வாயிலில் மனால். அவனது இரண்டாவது தாத்தாவின் நான்காம் பிள்ளை.. எட்டு வயசு.. ஆனால் பார்வைக்கு ஒரு பன்னிரெண்டு வயசுக்காரியாக சொல்லுவார்களே மூக்கும் முழியுமாக ரொம்ப மூக்கும் முழியுமாக அழகாக வழமையாக ரோஜாப் பூத்த உதடுகளில் புன்னகை பொறுத்திக் கொண்டு.

இன்னும் ரெண்டு மூன்று வருஷத்துல இந்தப் புள்ள குதிரையாட்டம் வளர்ந்து நிக்கும் அப்புறமா இதன் பின்னாலே கண்கொத்தி பாம்பாட்டம் திரிஞ்சு பாதுகாக்க வேண்டியிருக்கும் என பெற்றோர் இப்போதே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

'என்னம்மா'

'இந்தத் தொப்பி ஒங்கடயா' மனால் நீட்டிய அந்தத் தொப்பி... அதேதான் அதே தொப்பிதான்.. மூணு மாசத்துக்கு முந்தித் தொலைந்து போய் ... இனிக் கிடைக்காது என எண்ண வைத்த தொப்பி....வீட்டை ரெண்டு படுத்தி நான்கு படுத்தி பத்துப் படுத்தி படுத்திப் படுத்தி அங்குலம் அங்குலமாக இன்ச் பை இன்ச்சாக எங்கேயும் எப்போதும் அவனைத் தேட வைத்த தொப்பி...உம்மா முதற் கொண்டு தங்கச்சி நாநா என எல்லோர் வாயாலும் அவனுக்கு ஃபீட் பெக் கிடைக்கச் செய்த தொப்பி....தொண்டை வரழ ஒரு சொட்டுக் கண்ணீரோடு இனித் திரும்பக் கிடைக்காதா என ஏக்கம் கொள்ள வைத்த தொப்பி.....இதோ அவன் கண் முன்னால்....ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சில நேரங்களில் சில ஆச்சர்யங்கள். அதில் இந்தத் தொப்பியும் அடக்கம்.

'உனக்கெங்கம்மா கெடச்சது' அல்லாமாவின் சந்தோஷம் வார்த்தைகளில் ஆர்வத்தோடு தென்பட்டது.

'மாமா என்ட டிரெஷ் வக்குற கப்போர்ட்ல கெடந்தது... உம்மாக்கிட்ட காட்டினேன்.. உம்மாதான் சொன்னாங்க ஒங்கக்கிட்ட கொண்டு போய் காட்டச் சொல்லி....'

'ஐ... ஸீ...'

அல்லாமா 'அல்ஹம்துலில்லாஹ்' என தனக்குள் சொல்லிக் கொண்டான்... மனசுக்குள் புது உற்சாகம் சந்தோஷமாக இருந்தது.. இனி இல்லை என்று ஆகிய ஒன்று இந்தா வந்திட்டேன் என்று கண்முன்னே இதோ இதோ ... அவன் வீட்டையே ரெண்டுப்படுத்தி தேடிய , அடுத்தவர்களை ஆத்திரத்தில் பேச வைத்த தொலைந்து போன ஆத்திரத்தில் கோபத்தை அதிகரித்த அந்தத் தொப்பி... அவனோடு குறிப்பிட்ட காலம் கூட வாழ்ந்த தொப்பி... அவன் பெறுமானமிக்க பொருள்களில் ஒன்றாய் கருதிய தொப்பி...

தலையில் அணிந்து கொண்டான்.

'மனால்க் குட்டி இந்தா இத வச்சுக்க மாமாட சின்ன அன்பளிப்பு...' என அவன் நீட்டிய மஞ்சற்தாளை வாங்கிக் கொண்ட மனால்

'மாமா என்ன இது நூறு ரூபா தாரீங்க...' வழமையாக குழந்தைகளுக்கு அவன் இருபது ரூபாதான் கொடுப்பான். இன்று என்ன புதிதாய் நூறு ரூபா... அதனால்தான் மனால் சந்தேகத்தோடு அவனைக் கேட்க

'ஒனக்குத்தான்மா... எடுத்துக்க...' சந்தோஷத்தில் மனால் பறந்து சென்றாள்.. இன்னும் ஒரு அரை மணித்தியாலத்தில் அந்த வீட்டில் உள்ள ஏனைய எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த நூறு ரூபா சங்கதி கடத்தப்பட்டு.....

'என்ன நீங்க மனாலுக்கு நூறு ரூபா குடுத்திருக்கீங்க... எனக்கும் தாங்க... அது சிபானி மகன் ஹஸி... பெரிய்ய வாலு... அடுத்த பிள்ளைகளுக்கு கொடுத்துத் திண்ண மாட்டாhன்.

'எனக்கும் நூறுவா தாங்க.. இல்லாட்டி கல்லாலே ஒங்களுக்கு எறிவேன்..' மனாலின் பின்னால் நவால்.

'சாச்சா எனக்கும் நூறுவா தாங்களேன். மனாலுக்கு குடுத்திருக்கீங்க...' வழமையாக காசு கேட்பதனை ஒரு தவறாத கடமையாகவே கொண்டிருக்கும் லுத்பா...சின்ன நாநாவின் மகள். கொடுக்காவிட்டால் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்.. கொடுத்தே தீர வேண்டும். 'தார காசுக்கு என்னம்மா வாங்கப் போற என்ற எப்போது கேட்டாலும் ஒரே விடைதான்

'முறுக்கு.'

எல்லாவற்றையும் கடந்து இதோ எனது நேசத்துக்குரிய நெருக்கமான தொப்பி கிடைத்துவிட்டது.. இனி எல்லா நேரத் தொழுகையிலும் என் தலை மீது இந்தத் தொப்பி இன்ஷா அல்லாஹ் இருக்கப் போகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

சொல்லிக் கொண்டு திரும்பியவனுக்கு எதிரே உம்மா 'என்ன மூனு மாசத்துக்கு முந்தி காணாமல் போன தொப்பி கெடச்சிட்டுப் போல.. நீதான் எங்கேயோ வெச்சிட்டு வெச்ச எடத்த மறந்து போய் இங்க வந்து தேடினா தொப்பி இருக்குமா.......என்ன ஆச்சு. அதுக்குள்ள ஆயிரம் ஏச்சுப் பேச்சு....'

'என்ட அல்லாஹ் திரும்பவும் தொடங்கிட்டீங்களா ஒங்க புராணத்த'

'மனுஷனுக்கு பொறுமை வேணும். இந்தா காணாமல் போனது கெடச்சாச்சு... நீ எப்படியெல்லாம் கத்தி ரகள பண்ணின.. என்னாச்சு.. ஒன்றுமேயில்ல....'

'ஏம்மா பழசயெல்லாம் தோண்டிட்டு.. விடுங்கம்மா ஒங்க தொணதொணப்ப. தெனம் தெனம் கேட்டுக்கேட்டு காதுக்குள்ள ஏகப்பட்ட காயம்...' அலுத்துக் கொண்டான் அல்லாமா

'அது சரி நான் எப்ப என்ன பேசினாலும் ஒனக்குத்தான் புடிக்காதே.. இந்த வீட்ல என்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் நான் சொல்லுறதக் கேட்டு எதிர்ப்பேயில்லாம நடந்துக்குவாங்க.. நீ மட்டுத்தான் இப்படி... ம.. அதுசரி ஆம் அல்லாமா ஒங்கிட்ட ஒன்னு நான் கேக்கலாம்னு நெனச்சிருக்றேன்....'

'என்னமா கேளுங்க... நான் என்ன செஞ்சாலும் எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்குறது ஒங்க வழக்கமாய் போச்சு... ம்.....கேளுங்க.. சொல்றன்....'

'ஒனக்கு இதுவரைக்கும் என்னவோ நடந்திருக்கு... எவ்வளவு சாமான இதுவரைக்கும் தொலைச்சிருப்பே... ஆனா அப்பல்லாம் எந்தக் கணக்கும் இல்லாம இருந்திருக்க. நான் கூட பல தடவை ஒன்ன கண்டிச்சும் பேசிருக்கன்.. பணத்தோட அரும தெரியாதவன்னு... ஆனா இந்த தொப்பிக்குப் போய் என்னா குதியக் குதிச்ச நீ... சாதாரண இந்த தொப்பிக்குப் போயும் போயும் அப்படி என்னதாண்டா இருக்கு அதுல..'

உம்மாவின் வார்த்தையில் ஆர்வமும் கேள்வியும் கம்பளிப் பூச்சாய் நெளிந்து கொண்டிருந்தன..

'என்னம்மா இப்படி கேக்குற நீ நெனக்குற மாதிரி ஒன்னுமில்ல... நான் ரொம்பக் காலம் பாவிச்ச சாமான் திடீர்னு காணாமல் போனா யாருக்குத்தான் கோவம் வராது... அந்த மாதிரித்தான் நானும்......'

'நான் ஒன்ன பெத்த தாய்டா.. ஒன்ன பத்தித் தெரியாதா எனக்கு... நிச்சயமா அந்தத் தொப்பில ஏதோ ஒன்று இருக்கு... இல்லன்னா நீ இந்தளவு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கமாட்டா... லட்சக்கணக்குல நட்டம் வந்தாலும் மனசுக்கு எடுக்காத நீ போயும் போயும் ஒரு தொப்பிக்காக இந்தளவு படுத்தியிருக்கமாட்ட... சொல்லு. அந்தத் தொப்பியில அப்படி என்னதான்டா இருக்கு..........'

ழு -

ரத்மல திருகோணமலை மாவட்டத்துக்கும் அனுராதபுர மாவட்டத்திற்கும் இடையில் எல்லைக்காவல் புரிகின்ற ஒரு குக்காத கிராமம்.. பிரதான வீதி. அதற்குப் பக்கத்தில் எட்டு கிலோமீற்றருக்கு அப்பால் ஹொரவப்பத்தானை ரத்மல ரஹீம் சேர் வீடு.. பென்னம் பெரிய வளவுக்குள் பெரிசாய் வீடு. சுத்தமாகத் தெரிந்தது... முன் வளவில் முறைத்துக் கொண்டிருக்கும் குரோட்டன்களைத் தாண்டி அந்த வீட்டு முற்றத்தில் ஒரு மாலைப் பொழுது. ரஹீம் சேர்....அவர் ஒரு ரிட்டையர்டு ப்ரின்ஸிபல்....அவருக்குப் பக்கத்தில் அப்துல்லாஹ் சேர்....அவருக்கு இன்னும் ஏழெட்டு வருஷமிருக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்கின்ற ராச உத்தியோகத்திலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறுவதற்கு.....பக்கத்தில் அல்லாமா. வவுனியாவுக்கு தேவை கருதி பயணம் போனவன் வீடு திரும்பும் வழியில் காரை நிறுத்தி விட்டு ரஹீம் சேர் வீட்டில் கொஞ்ச நேரம் இதோ கோப்பி அந்திக் கொண்டிருக்கிறான். அப்துல்லாஹ் சேர் ரொம்ப நெருக்கம் அவனுக்கு...ரொம்ப நல்ல மனிதர்.....பெரிய்ய படிப்பு படித்திருந்தும் நல்ல உத்தியோகத்திலிருந்தும்....நிறைய வசதி வாய்ப்பிருந்தும்....அவை எதுவும் தன்னைப் பாதிக்காத படி இன்னி வரைக்கும் அவர் அப்துல்லாஹ் சேர் மட்டும்தான் என்பதனை பாதுகாத்து வந்து கொண்டிருப்பவர்.....ஏற்கெனவே சொன்ன படி அல்லாமாவும் அவரும் ரொம்ப நெருக்கமானவர்கள்.....அல்லாமாவின் எல்லா விடயங்களிலும் நூறு வீதத்துக்கும் மேல் அக்கறை கொண்ட ஆன்மா...'உங்க உம்மாவுக்கு அடுத்ததா உங்க மேலே அக்கறையும் பாசமும் கொண்டவன் நான்தான்' என அடிக்கடி சொல்லிக் கொள்ளுவார்.

ரஹீம் சேர் வீட்டுக்கு அல்லாமா வந்தது கேள்விப்பட்டு அவரது வீடு தேடி வந்திருந்தார்; அத்தனை வேலைப் பழுவுக்குள்ளும்....ரொம்ப ரொம்ப பிஸியான மனுஷன்..........தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்...........நட்பும் தோழமையும் உண்மையாயிருந்தால் உலகின் அத்தனை விடயங்களையும் அது புறந்தள்ளி விட்டு எப்போதுமே முன்னணி வகித்து விடுகின்றது.....அதுதானே உண்மையும் கூட. ஆனாலும் அந்த வகையான நட்பு உலகில் ரொம்ப அரிது....காணக்கிடைப்பது ரொம்பக் கஷ்டம்....தேவைகளை பின்னணியில் வைத்துக் கொண்டு அன்பு பாராட்டும் நவீன சடத்துவ உலகின் ஆளுமைகளுல் அப்துல்லாஹ் சேர் வித்தியாசப்பட்டு நிற்கின்றார்.

'யா அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும்......இந்த மாதிரியான மனிதர்களை தோழமை படுத்தித் தந்ததற்கு....'

அந்தி மாலைத் தேனீர் உதடுகளில் ஒரு நதியென நகர 'அல்லாமா ' என அழைத்த பக்கத்திலிருந்த அப்துல்லாஹ் சேரை பார்த்தான்

'என்ன சேர்.....' அவரை எப்போதும் அவன் சேரென்றுதான் அழைப்பான்.

'உங்க தலைக்கு இந்தத் தொப்பியப் பொட்டா ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்குறன்.....' என்ற அப்துல்லாஹ் சேர் எதுவும் மேலே சொல்லாமல் அல்லாமாவின் பதிலுக்குக் காத்திராமல்; அவர் மக்காவில் வைத்து அவருக்கென ஆசைப்பட்டு வாங்கி இது வரை காலமும் தனது தலையில் அணிந்து வந்து கொண்டிருந்த அந்த தூய வெள்ளை நிற மக்கத்துத் தொப்பியைக் கழட்டி அல்லாமாவின் தலையில் பாசத்தோடு போட்டு விட்டார்;.

 

 கிண்ணியா சபருள்ளா

பெருந்தெரு கிண்ணியா-06

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...21673
மொத்த பார்வைகள்...2078597

Currently are 381 guests online


Kinniya.NET