ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2018
   
Text Size

ஒரு பாதை இருபயணம்..! "கவிதை" ஒரு நோக்கு

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களையும், உணர்வுகளையும், கவர்ச்சியுடன் உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே கவிதையாகும். இன்று மரபென்றும், புதிதென்றும் இரு வேறுபட்ட கோணங்களில் நின்று எமது கற்பனைகள் இக்கவியுலகிலும் பிரிவுகளைப் பிறப்பித்து விட்டன.

மரபு நாளை மடிந்துவிடுமென புதுக் கவிவடிப்போர் புன்னைக்க...... புதிது இன்றே புதைந்து விடுமென மரபினை வடிப்போர் மனம் நினைக்க..... ஏன் இந்தப் பாகுபாடுகள் எமக்குள்?

என்றுமே எனது நோக்கில் புதிதும், மரபும் கவித்தாய் ஈன்றெடுத்த இரு குழந்தைகள். மரபுக்கு மகுடம் சூட்டினால் புதிதுக்கு பொன்னாரஞ் சூட்டலாம் என்பதே எனது நோக்கு.
மரபெனும் மகுடி ஊதப்படும் போது மனப்பாம்புகள் ஆட்டங்காண்பது போல் புதிய புல்லாங்குழல் வாசிக்கப்படும் போதும் அம்மனங்கள் புளகாங்கிதமடையத் தவறிவிடுவதில்லை......

'காதல் களிப்பையும், காதல் தவிப்பையும் கனிரசம் ததும்பப் பாட புதுக் கவிதையை ஒரு வரப்பிரசாதம்' என ஒரு நண்பன் கூறினான். ஆனால் அதே கருத்தை மரபின் வரப்புக்குள் வகுத்தும் திறம்படப் படலாம் என்று நம்புகிறேன்.
-இதோ..... தன் காதல் கண்ணனின் பிரிவை நெஞ்சிலும், அவனது உருவைக் கண்ணிலும் சுமந்து கொண்டு ஜன்னலினூடே பார்வைச் செலுத்தி மன்னனின் வரவை எண்ணிக் காத்துக் கிடந்த கன்னிகை ஒருத்தியின் காதல் நிலையை இவ்விரு கவிப்பயணத்தின் ஊடாகவும் படம் பிடித்துப் பார்போமா?

கண்ணனின் வரவை எண்ணி
காந்தமாய் விழிகள் ரண்டும்
ஜன்னலி னூடே பாய்ந்து,
ஜாதகம் பார்த்தல் போலே
என்னமோ செய்ய! மாதின்
எண்ணமோ மன்னன் தோளைப்
பின்னியே சாய்தல் போலோர்
பிம்பமுந் தோன்று தங்கே.......

கருநிற வண்டைப் போல – அவள்
கண்களுஞ் சுழன்று ஆட
ஒரு நிலை போடு நோக்கி – மனம்
ஒவ்வொரு கணமுந் தேட
இரு நதி பாய்தல் போலே – கீழ்
இறங்கிடுங் கண்ணீர்த் துளியோ.....
உறுதியாய் நெங்சில் வீழ்ந்து – கால்
உணர்வினைத் தூவு தாமோ......!

கவிதைகளின் உள்ளடக்கத்தை பற்றி ஒரு வேகத்தையும் வீரியத்தையும் கொடுத்தது புதுக்கவிதை. ஆனாலும் கவிதை என்பது இலக்கணம் அறிந்தவர்களால் மட்டுமே எழுதக்கூடியது என்ற நிலை இருந்தது. அந்தக் கட்டுப்பாட்டைம் தகர்த்தது புதுக்கவிதை.
இப்பொழுது புதுக்கவிதை என்ற பயிருக்கு நடுவில் கலைகளும் வளர்கின்றன. இதனால் கவிதை தேங்கி விட்டது என்றும் புதுக்கவிதை செத்து விட்டது என்றும் சில பேர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
மேலே நாம் அதே கருத்தினை ஓரளவு மரபு நெறிக்குள் அடக்கி, ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பாடலாம்.......

காதலனைத் தேடியிளங் கன்னிமனந் தாவும்!- விழி
காணும்வரை நிலைமறந்து கண்ணீரைத் தூவும்!
ஆதவனுந் தோன்றாத அடிவானம் மாதிரி! உயிர்
அவனைக் காணும்வரை மாறிவிட்டால் காதலி!

புவிமீது ஒரு நாளும் மாறாத இன்னலில்!- இவள்
புழுவாகத் துடிக்கின்ற நிலை காண்பீர் ஜன்னலின்
செவியோரம் அவன் பாடும் உயிர்ப்பாடல் கேட்பீர்!
சிறைவாசம் புரிகின்றதால் அவன் பாதை நோக்கில்!

கவிதைகளில் மரபா? புதிதா? ஏன்று பார்ப்பதைவிட அது கவிதையா? என்று பார்ப்பதே சிறந்தது என நினைக்கிறேன். மரபு என்பது மதிக்கத்தக்கது. ஆனால் அது மட்டும் பின்பற்றத்தக்கது என்பது பேதமையானது.

ஒரு மங்கையின் மன நிலை மரபுக்குள் இவ்விதம் மாறுபட- அது புதுசுக்குள் எப்படிப் பிரவாகின்ற தென்பதையம் கெஞ்வம் பார்போமா?

ஒ......
இந்தக் கன்னி நிலாவை
ஜன்னல் சிறைக்குள்
கைதியாக்க –
எந்த நீதிமன்றம்
தீர்ப்பளித்தது?
மனசைத் திருடிய மலருக்கு
இங்கென்ன
மரணதண்டனையா ?
என்ன அதிசயம்......
காற்றோ.....நீரோ....இல்லாத
சந்திரனில்
இரு
நதியூற்றுக்கள்....!!

புதுமை ஒவ்வொரு நாளும் பூத்துக்கொண்டே இருக்கிறது. மரபு அதை மறுப்பது கிடையாது. மரபுக்கவிதை எழுதுவதைவிட புதுக்கவிதை எழுதுவது கடினம் என்பதை உணர வேண்டும். மரபுக்கவிதைக்கு ஒரு வடிவம் உண்டு. புதுக்கவிதையோ தனது அற்புதமான கற்பனையினாலே ஆழமான கருத்தோட்டத்தாலே உள்ளார்ந்து உணர்ச்சியினாலே மட்டுமே தன்னை கவிதை என்று காட்டிக் கொள்ள முடியும்.
உண்மையிலேயே புதிசினால் பிறர் மனசைச் சீக்கிரம் தொடமுடிந்து விடுகிறது. இருந்தும் மரபின் வெண்பா இலக்கணத்தால் கூட நாம் இதைச் சாதிக்கலாம்.....

காந்த விழிரண்டு காதல் வயத்தினால்
சாந்தமெலாம் நீங்கி ஜன்னலிலை – நீந்த
முடியாமல் நின்றுதான் மூச்சை எறிந்தே
விடிவை அழைக்கிறாள் வேண்டி!

கண்ணன் வரவை வரமாக நோக்கித்தன்
எண்ண அலைகளுடன் ஏக்கத்தை – மன்னன்
திசைநோக்கித் தூதனுப்பத் தீரா வெறிசுமந்து
அசையாதிருக் கின்றாள் அவள்!

புதிய சிந்தனைகளைப் புதுமையாக கவர்ச்சியாக சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் புதுக்கவிதை. மரபு கவிதை எழுதி வந்தவர்களும் இப்போது புதுக்கவிதையின் திசையில் திரும்பியள்ளார்கள். புதுக்கவிதை வடிப்போரும் மரபின் பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.
புதுக்கவிதை வளர்வதால் மரபுக்கவிதை அழிந்து போய் விடும் என்ற வாதத்தில் வலிமையில்லை. சமுகத்துக்காக கடமைகளைச் செய்கின்ற கலை வடிவம் எதுவாயினும் அவை அழிவதில்லை. அவற்றை கண்ணென மதிக்க வேண்டும். மரபுக் கவிதையினால் புதுக்கவிதையைத் தடுக்கமுடியாது. புதுக்கவிதையினால் மரபுக்கவிதையை அழிக்கமுடியாது.

மரபுக்கவிதை என்பது நேற்றைய புதுக்கவிதை
புதுக்கவிதை என்பது நாளைய மரபுக்கவிதை.

-கிண்ணியா எம்.ரீ.சஜாத்-

sajaath1[1]

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...14517
மொத்த பார்வைகள்...2071441

Currently are 243 guests online


Kinniya.NET