வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

சினிமா விமர்சனம்: விஸ்வரூபம்!

65534 512385548813633_2051400772_n

முதலிலே கதையை ஓரளவு சுருக்கமாக சொல்லிவிடலாம்.

அமெரிக்க வாழ் இந்தியராகிய கதக் நடன ஆசான் விஸ்வநாதன் (கமல்) சற்று பெண்மை கலந்த நடுத்தர வயது ஆசாமி. இந்தியாவில் வாழும் இளம் தமிழ்ப் பெண் நிரூபமா (பூஜா) அமெரிக்காவில் அணு இரசாயனவியலிலே கலாநிதிப் பட்டம் பெறும் நோக்கத்திற்காக கமலை வயது வேறுபாடு கூடப் பார்க்காமல் திருமணம் செய்து மனைவியாகின்றார். ஆனாலும் தன்னை மிகவும் நேசிக்கும் கமலுடன் ஒட்டுறவில்லாமலே வாழ்ந்து வருகின்றார். அவர் வேலைபார்க்கும் இரசாயனவியல் கம்பனியின் உரிமையாளரான தீபக் எனும் இளைஞன் பூஜாவில் காதல் வயப்படவே கமலிடம் இருந்து பிரிந்து தீபக்குடன் வாழ்வதற்கு உத்தேசிக்கின்றார். கமலை விவாகரத்துச் செய்வதாயின் கமல் பக்கம் ஏதாவது தவறு இருந்தால் தமக்கு வசதியாக இருக்கும் என்று எண்ணி அவரை இரகசியமாகக் கண்காணிக்க ஒரு பீட்டர் எனும் துப்பறிவாளரை அமர்த்துகின்றார்கள் பூஜாவும் தீபக்கும்.

கமலைப் பின்தொடரும் பீட்டர் மூலமாக கமல் ஒரு இந்து அல்ல என்பதும் அவர் விஸ்வநாதன் எனும் பெயரிலே தன்னை மறைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் முஸ்லீம் என்பதும் தெரியவருகின்றது. அதேவேளை கமலை பின்தொடரும்போது தவறுதலாக நியுயோர்க் நகரத்தையே நிர்மூலமாக்கும் இரகசியத் திட்டத்தடன் புறநகர்ப்பகுதியில் இரகசியமாகச் செயற்பட்டுவரும் தலிபான் தீவிரவாதக்குழுவின் மறைவிடத்திற்குச் சென்று விடும் பீட்டர் அங்கு அவர்களால் கொல்லப்படுகின்றார். பீட்டரின் டயறிக் குறிப்பில் பூஜா மற்றும் தீபக் ஆகியோரின் விபரங்கள் தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன. தீபக் ஏற்கனவே அதே தீவிரவாதிகளுடன் இரகசியத் தொடர்பிலிருந்து வருபவன். அவன் அவர்களது நியூயோர்க் நகரத்தை அழிக்கும் தீவிரவாதிகளின் இரகசியத்திட்டத்திற்கு பணத்துக்காக உதவி வரும் ஒருவன் என்பதால் அவன் மீதும் பூஜாவின் மீதும் அவர்களுக்குச் சந்தேகம் உண்டாகின்றது. இதனால் இருவரையும் விசாரிப்பதற்காக பூஜாவின் இடத்திற்குச் செல்லும் தீவிரவாதிகள் அங்கிருக்கும் கமலையும் சேர்த்துக் கடத்திக் கொண்டு தங்கள் இரகசிய இடத்திற்கு வருகின்றது.

அங்கு நிகழும் விசாரணையின் போது இந்து பெயரிலே வாழும் முஸ்லீமாகிய கமலின் புகைப்படத் தோற்றம் நியூயோர்க்கில் வேறு ஓரிடத்திலே மறைந்து வாழும் தீவிரவாதத் தலைவனான ஒமர் முல்லாவு (ராகுல் போஸ்) க்கு மின்னஞ்சல் செய்யப்படுகின்றது. அந்தப்படத்தைப் பார்க்கும் ஒமர் அதிர்ச்சியடைகின்றான். அங்கு தான் வந்து சேரும்வரை கமலை எங்கும் நகராதபடி முழங்காலிலே சுட்டுக்காயப்படுத்தி உயிரோடு வைத்திருக்குமாறு தொலைபேசியில் கட்டளையிடுகின்றான். அத்துடன் தீபக்கை உடனடியாகச் சுட்டுக் கொன்று விடுமாறும் சொல்கின்றான்.

தீபக் சுட்டுக் கொல்லப்பட்டதும் கமல், தானொரு முஸ்லிம் என்பதால் சாவதற்கிடையில் பிரார்த்தனை புரிய விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றார். அதன்படி அவரது கைக்கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. பிரார்த்தனையின் முடிவில் தீவிரவாதிகள் கவனக்குறைவாக இருக்கும் ஒரு தருணத்திலே உயிரைப்பணயம் வைத்து வெகுநுட்பமான அதிரடித்தாக்குதல் ஒன்றை நடாத்தும் கமல் அங்கிருந்து பூஜாவுடன் தப்பித்து விடுகின்றார். தனது அப்பாவிக் கணவனின் இந்தத் திடீர் மாற்றமும் அதிரடியும் பூஜாவுக்கும் அதிர்ச்சியளிக்கின்றது.

கமல் உண்மையிலே யார்... அவரது தோற்றத்தை புகைப்படத்தில் பார்த்ததும் தீவிரவாதத் தலைவன் அதிர்ச்சியடைந்தது ஏன்... என்பதையெல்லாம் முடிச்சவிழ்ப்பதுதான் படத்தின் தொடரும் கதை.

கமல்ஹாசனை ஒரு நடிகர் என்று சொல்வது ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை வெறும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்துவதற்கு ஒப்பானது. குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவிலே அறிமுகமானதிலிருந்தே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய வழமையான பாணியிலிருந்து ஏதாவது ஒரு வித்தியாச முயற்சியில் ஈடுபட்டு வருபவர் என்று கூறினால் அது மிகையாகாது. ஆம் தமிழ் சினிமா உருவாக்கம் அவரது ஆளுமைக்குட்படாத ஆரம்ப காலத்தில் அவர் நடித்த படங்களில் கூட குறைந்தபட்சம் தனது பாத்திரத்தை நடிப்பால் முன்னிறுத்துவதிலாவது ஏதாவது வித்தியாசத்தைக் காண்பித்திருப்பார். இதனை ஆரம்ப காலம் முதல் அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

மூடநம்பிக்கைகளுக்கும் போலியான சம்பிரதாயங்களுக்கும் பேர்போன தென்னிந்திய சினிமாவில் அதையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தனது திறமையையும் உயர்ந்த ரசனையையும் மட்டும் நம்பி இன்றுவரை சினிமாவின் ஏறத்தாழ அனைத்துத் துறையிலும் வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமலஹாசன்.

அவர் நினைத்திருந்தால் அவரிடமிருக்கும் பன்முக திறமைகளை வைத்து தனது சமகால கதாநாயகர்களைப்போல நூற்றுக்கணக்கான மசாலாப் படங்களை நடித்து 254461 455971017788420_746357377_nபெரும்காசு பார்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறில்லாமல் வசூல் வெற்றிக்காக அரைத்த மாவையே மாறிமாறி அரைத்துக் கொண்டிருக்கும் மசாலா கதாநாயகர்களிலிருந்து வேறுபட்டு, தான் சம்பந்தப்பட்ட படைப்புகள் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உயர்ந்த தரத்திலும் உலகத் தரத்திலும் பேசப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் கமல்ஹாஸன். இதற்காக அவர் கொடுத்துவரும் விலைகள் மிக அதிகம் என்றே கூறவேண்டும்.

விஸ்வரூபம் அடிப்படையில் இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் தீவிரவாத அச்சுறுத்தல்களை அடிப்படையாகக்கொண்ட சாகசக்கதை என்பதை முதலிலே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதன் கதைக்களம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். எனவே இந்தக் கதைக்கு இயல்பாகவே ஒரு சர்வதேச அடையாளம் வந்துவிடுகின்றது. எனவே ஒரு சர்வதேச முகம் கொண்ட கதையை அதே தரத்தில் காட்சிப்படுத்தியாக வேண்டும் எனும் அக்கறை படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் புலப்படுகின்றது.

இந்தப்படத்திலே இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா நடிகர் என்று கமலின் பல அவதாரங்கள் உள்ளன. இதிலே இயக்குனர் கமல்தான் மற்றைய எல்லோரையும் மிஞ்சுகின்றார். கதைக்கு அவசியமான படப்பிடிப்புத்தளம், தேவையான பாத்திரங்கள், பொருத்தமான நடிகர்தேர்வு, தொழினுட்பக் கலைஞர்களின் தேர்வு என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து இழைத்திருப்பதிலே அவரது அசாத்தியமான உழைப்பு மிளிர்கின்றது.

ஒரு திரைப்படத்தின் மையக்கதைக்கு அவசியமில்லாத அற்ப விடயங்களுக்கும் பாடல் காட்சிகளுக்கும் வீணாகச் செலவழிப்பதைத்தான் இதுவரை தமிழ் சினிமாவிலே பிரமாண்டமான படைப்பு என்று பல பிரபல இயக்குனர்கள் நமது தமிழ்பட ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் பிரமாண்டம் என்றால் என்ன என்பதையும் அதற்காக எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதையெல்லாம் தனது இயக்கத்தின் மூலமாக பாடம் நடாத்தியிருக்கின்றார் நமது சகலகலாவல்லவன்.

அத்துடன் நடிகர்களை அவரவர் பாத்திரங்களுக்குள்ளே - கமலின் வார்த்தைகளிலே கூறினால் - அடிப்பிடித்துத் தீய்ந்து விடாமலும் அதேவேளை பொங்கி வழிந்துவிடாமலும் கனகச்சிதமாக பொருந்திப்போகச் செய்திருக்கின்றார். அதுமட்டுமல்ல இந்தியத் திரையுலகின் திறமையும் புகழுமிக்க தேர்ந்த கலைஞர்களிலே ஒருவராகிய தன்னையே கூட (அதாவது நடிகன் கமலையே) அவரது வழக்கமான சில சேட்டைகளிலிருந்து விடுவித்து பாத்திரத்துக்குள் மட்டும் அடக்கி வாசிக்கச் செய்திருக்கின்றார் இயக்குனர் கமல். வழமையாக கமல் படங்களிலே இருக்கும் மதங்கள் பற்றிய கிண்டலைக்கூட இதிலே பெரிதாக காண்பிக்காமல் விட்டிருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த அளவுக்கு கதையின் போக்கு அறிந்து இயக்குனரின் ஆளுமை மற்றைய துறைகளை கட்டியாண்டுள்ளது.

இயக்குனருக்கு அடுத்ததாக விஸ்வரூபத்திலே கொடிகட்டிப் பறப்பவர் வசனகர்த்தா கமல் என்பதை படத்தின் உரையாடலை கூர்ந்து செவிமடுத்தவர்களுக்கு நன்கு புரியும். திரைப்படம் என்பது அடிப்படையில் ஒரு காட்சி ஊடகமே என்பதை நன்கு மனதிற்கொண்டு பாத்திரங்களின் முகபாவனைகளின் மூலமாக கதைகூறியிருப்பதுடன் ரசிகனுக்குப் புரியாமல் போகலாம் என்று கருதிய இடங்களில் மட்டுமே அவசியமான உரையாடலை வைத்திருக்கின்றார் வசனகர்த்தா கமல். ஒவ்வொரு காட்சியிலும் கதையை நகர்த்துவதற்கு உரையாடல்களை இயல்பாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இரசிக்கத் தக்கதாகவும் எழுதியிருக்கின்றார். பல இடங்களில் உரையாடல்களை ரசிப்பதற்கு உலக அறிவும் ஓரளவு புத்திசாலித்தனமும் அவசியமாகவுள்ளது.

அடுத்து கமலின் நடிப்புப்பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்பத்தில் வரும் நடனக்கலைஞர் வேடத்தை அவரது அளவுக்கு வேறுயாராலும் ரசித்துச் செய்ய முடியாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இதுவரையிலான தமிழ் சினிமாவில் பெண்மை கலந்த ஒரு ஆண் பாத்திரம் என்றால் வழமையாக அனைவரும் பெண்போன்றே அங்க அசைவுகளைக் காட்டி மிகையாகத்தான் நடிப்பார்கள். ஆனால் கமலோ தனது பாத்திரத்திற்கான ஒவ்வொரு அசைவிலும் தான் பெண்மையின் நளினம் கலந்த ஆண்தானே தவிர ஒரு பெண்ணல்ல என்பதை ஞாபகம் வைத்திருக்கத்தவறவில்லை. அந்தளவுக்கு அவரது உடல்மொழி கச்சிதமாகவுள்ளது.

அதேவேளை தீவிரவாதிகளின் முகாமில் வெகுளியான நடனக்கலைஞர் எனும் பாத்திரத்திலிருந்து திடீரென்று தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி உளவுத்துறை அதிகாரியாக இயங்கத் தொடங்கியதும் அவரது முகபாவமும் உடல்மொழியும் அப்படியே முழுமையாக மாற்றமடைந்து விடுவதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கின்றார். இப்படி மாற்றிக்கொள்வதற்கு அவரது கற்பனைத்திறனும் அர்ப்பணிப்பும் பரந்த அனுபவமும் கைகொடுத்திருக்கின்றன. அதேபோல ஆப்கானிஸ்தான் காட்சிகளிலே தீவிரவாதியாக நடித்திருப்பார் கமல். வேறு தமிழ் நடிகராக இருந்தால் அதற்குரிய ஆடைகளை அணிந்து தோளில் துப்பாக்கியோடு வீரவசனங்கள் பேசி முடிந்தால் சக தீவிரவாதிகளோடு சேர்ந்து ஒரு குழுப்பாடலைப் பாடியாடிவிட்டு காரியத்தை முடித்திருப்பார்.

ஆனால் தனது தீவிரவாதி பாத்திரத்தினூடாக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதிகளையும் அங்குள்ள முகாம்களிலே நிகழும் ஆயுதப் பயிற்சிகள், அமெரிக்க எதிர்ப்புணர்வுகள், பணயக் கைதிகளை அவர்கள் கையாளும் முறைகள், தற்கொலைத் தாக்குதல்கள், துரோகிகள் மற்றும் எதிரிகள் மீதான தண்டனை முறைகள் உட்பட தீவிரவாதிகளின் மனோபாவம் என்பவற்றையெல்லாம் மிகுந்த பிரயத்தனத்துடன் காண்பிக்கப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆப்கான் தலிபான்கள் புரியும் தீவிரவாதம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனவும் வல்லரசு நாடுகள் தமது நலன்களை பேணுவதற்காக தொடுத்த தாக்குதல்களின் எதிர்வினையே தவிர தலிபான்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டது அல்ல என்பது மிகச்சரியாக சில காட்சிகளினூடாகவும் பின்னணியில் இசைக்கப்படும் பாடல் வரிகளினாலும் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு காட்சியிலே நேட்டோப் படையினரின் ஹெலிகொப்டர் தாக்குதல் நிகழ்கின்றது. அந்தக் காட்சியிலே நிகழும் கடுமையான சண்டைக்கிடையிலே மாட்டிக்கொள்ளும் தீவிரவாதத்தலைவர், 'அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதில்லை.. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆண்(தீவிரவாதி)களாகிய நமது உயிர்கள்தான்!' என்று சகபாடிகளிடம் கூறுவதாக ஒரு காட்சி வருகின்றது.

இந்தக் காட்சியையும் உரையாடலையும் மேம்போக்காகப் பார்க்கும் யாருக்கும் அமெரிக்க இராணுவத்தினரை மனிதாபிமானிகளாக வலிந்து காண்பிப்பதற்காக எழுதப்பட்டது போலவே தோன்றும். ஆனால் தீவிரவாதத் தலைவர் அதை சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று பெண்களும் பிள்ளைகளும் ஒதுங்கியிருக்கும் ஒரு கட்டிடத்தை அவர்கள் கதறக் கதறக் குண்டுவீசி நிர்மூலமாக்கி விட்டுச் செல்கின்றது.

இப்போது கூறுங்கள் இது அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் நற்சான்றிதழா என்ன?

இவ்வாறான முரண்நகை காட்சிகளைப் புரிந்து கொள்வதற்கு உலக சினிமா பற்றியும் உலகளாவிய அரசியல் விடயங்கள் பற்றியும் நிறைய அறிவு வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கேள்வியுற்றதால் வெகுண்டு அன்றுதான் திரைப்படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அல்லது குழுவினருக்கு இவ்வாறான காட்சி உத்திகளை புரிந்துகொள்ள முடியுமா? இதனால்தான் படத்தின் ப்ரீவியூ காட்சிகளைப் பார்த்த பின்பும் குறித்த மதக்குழுவினர் ஒட்டுமொத்தமாக இந்தத்திரைப்படம் அமெரிக்கர்களுக்குச் சார்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் படத்திலே காண்பிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் மீதான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் தாக்குதல்களை இன்னும் தாக்கமாக காண்பித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காண்பித்திருந்தால் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது இஸ்லாமிய அமைப்புகள் முன்வைத்த அமெரிக்க சார்பு நிலை என்ற குற்றச்சாட்டினை இன்னும் வலுவாக மறுத்திருக்கலாம்.

ஆக ஒசாமா பின்லாடனைக் கொன்று வெற்றிக்களிப்பில் பராக் ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்காவிலே ஆரம்பித்து ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு பின்னோக்கிச் சென்று மீண்டும் ஆரம்பித்த அதேகாலத்திற்கு வந்து நியூயோர்க்கை நிர்மூலமாக்குவதற்காக தாலிபன்களின் வெகு நேர்த்தியாக திட்டமிட்டிருந்த தற்கொலைத் தாக்குதலை முறியடித்து நிமிர்வதுதான் விஸ்வரூபத்தின் கதை.

படம் ஆரம்பித்தபோது இருந்த பிரமாண்டமும் நேர்த்தியும் இறுதிக்காட்சிவரை சிறிதும் குறையாமல் இருந்து வந்தாலும் ஓர் ஆக்ஸன் த்ரில்லர் என்ற வகையில் பார்த்தால் படத்தின் விறுவிறுப்பு தொடந்து வருகின்றது என்று கூறமுடியாது. படத்தொகுப்பிலுள்ள சிறுசிறு குறைபாடுகள் காரணமாகவோ அல்லது சகல அம்சங்களையும் ஒரு படத்திலேயே சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ கதை ஆப்கானிஸ்தானுக்குள்ளே இறங்கி சிறிது நேரத்தில் சுவாரஸ்யம் சற்றுக் குறைந்து விடுகின்றது. ஆனால் காட்சியமைப்பின் நேர்த்தியுடன் திறமையான உரையாடலும் அதை காட்சிகளை ஒரேயடியாகத் தொய்ந்து போய் விடாமல் காப்பாற்றி விட்டிருக்கின்றது.

ஆக மொத்தத்தில் சர்ச்சைகளை தவிர்த்துவிட்டால், ஒரு சாகசத் திரைப்படத்தை உலகத்தரத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என்று தமிழ்த்திரையுலகினருக்கு கமல் காண்பித்திருக்கும் ஒரு விலையுயர்ந்த பாடம்தான் இந்த விஸ்வரூபம்.

-மூதூர் மொகமட் ராபி

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19353
மொத்த பார்வைகள்...2076277

Currently are 537 guests online


Kinniya.NET