வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

முதூர் மண்ணின் நம்பிக்கை தரும் 'ஏமாற்றம்' - ஒரு சிறப்புப்பார்வை

mutur -01

ஒவ்வாரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருப்பது வழமை. நமது ஊரான மூதூருக்கு உள்ள சிறப்பியல்பு என்று நான் கருதுவது மிகக்குறைந்த வசதிகளைக் கொண்டு நம்மவர்கள் மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளைத்தான். இது கல்வி, கலாசாரம், கலை இலக்கியம், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல், விளையாட்டுத்துறை என்று அனைத்து விடயங்களுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருந்து வருகின்றது.

அந்த வகையில்தான் மூதூரின் முதலாவது திரைப்படமான ஏமாற்றம் என்ற இந்த திரைப்பட முயற்சியையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. திரைப்படம் சார்ந்த குறைந்தபட்ச அறிவுதானும் இல்லாதநிலையிலே குறைவான தொழினுட்ப வசதிகளையும் அனுபவமின்மையையும் வைத்துக்கொண்டு திரைப்படமொன்றை உருவாக்க நினைத்த தைரியத்தை முதலிலே பாராட்டியாக வேண்டும்.

ஏனெனில் இந்தப்படத்தின் இயக்குனர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இளைஞர் எச். பீ. எச். அர்ஷாத் படத்தின் பின்னிணைப்பிலே தோன்றி குறிப்பிட்டிருக்கும் தகவல்களையும் பார்க்கையிலே இந்தப்படத்தின் கதைத்தேர்வு, திரைக்கதை, பாத்திரங்கள் தேர்வு, நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு, இசைச்சேர்ப்பு முதலிய அம்சங்களையும் குற்றங்காணவிழைவதிலே அர்த்தமில்லை என்றுதான் தோன்றுகின்றது.

இத்திரைப்படத்தின் இறுவட்டை பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்து அதன் கலை மற்றும் தொழினுட்ப அம்சங்களை நன்கு உள்வாங்கி விமர்சனம் செய்வதுதான் மிகச் சரியானது. ஆயினும் அதற்குப் பதிலாக ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தை பார்த்து எனது கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும் வேலைப்பளுவிற்கிடையில் பார்வையாளர்களாகிய உங்களோடு சிறிய தலைப்புகளில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு முயற்சித்திருக்கின்றேன்.

கதைத்தேர்வு:

இன்று மூதூர் இளைஞர்கள் என்றாலே உள்ளுரிலும் வெளியூர்களிலும் நிதிமோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிடுபவர்கள் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டு வருகின்றது. அதேவேளை இத்தகைய அபிப்பிராயங்களின் மறுதலையாக இவ்வாறான மோசடிக்காரர்களை நம்பி இலகுவாக ஏமாந்து விடுபவர்களாகவும் அதே மூதூர் இளைஞர்கள்தான் இருந்து வருகின்றார்கள் என்பது முரண்நகை.

இவ்வாறான ஒரு சூழலிலே இந்த அம்சங்களை கருவாக திரைப்படத்திற்குரிய கதை அமைந்திருப்பது வெகுபொருத்தம்.

திரைக்கதை / வசனம்:

திரைக்கதைதான் ஒரு திரைப்படத்துக்கு மையநரம்புத்தொகுதி போன்றது.

ஒரு சிறந்த சிறுகதையோ நாவலோ காட்சிகளை எழுத்திலே விபரித்து நம் கண்முன்னே நிறுத்தும். அங்கு கதையாசிரியரின் விவரணைகளுடன் வாசகர்களின் நமது கற்பனாசக்தியும் ஒன்றிணைந்து காட்சிகள் வடிவம் பெறும். ஆனால் ஒரு சிறந்த திரைப்படம் என்பது ஏறத்தாழ முழுமையான காட்சி ஊடகம். எனவே திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் ஒருவர் திரைக்கதையில்தான் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஆனால் சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட சில வேளைகளிலே தமது குரல் வளத்தையும் கேட்டல் அறிவையும் கொண்டு சிறப்பாக பாடிவிட முடிவதுண்டு. அதுபோலவே இங்கு பல குறைபாடுகளுடன் கூடிய ஆனால் கதைக்கு பெரியளவிலே உறுத்தல் தந்திராத திரைவடிவம் ஒன்று இயல்பாக அல்லது அதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது.

உரையாடல் முழுவதும் உள்ளுருக்குரியதாக எழுதப்பட்டிருக்கின்றது. இதனால் திரைப்படமானது ஏனைய பல குறைபாடுகளையும் மீறி நமக்குரியதான உணர்வை ஏற்படுத்துவதையும் நமது சமூகத்தை விட்டு அந்நியப்பட்டு விடாதிருப்பதையும் உறுதிசெய்திருக்கின்றது. குறிப்பாக முஸ்பீக்கின் தந்தையின் மரணக்காட்சியையும் அதன் பின்னரான உரையாடலையும் குறிப்பிடலாம்.

பாத்திரத்தேர்வு / நடிப்பு:

தொழில்சார் நடிகர்களோ நாடகக் கலைஞர்களோ இல்லாத நிலையில் நண்பர்கள் வட்டத்திற்குள் பாத்திரங்களைத் தேர்வு செய்யவேண்டிய நிலை எந்தவொரு இயக்குனருக்கும் சிரமமானது. அதுவும் கெமராக் கூச்சமின்றி உடல்மொழி சார்ந்து இயல்பாக நடிப்பதற்கு தனித்திறமையும் கடுமையான பயிற்சியும் தேவை. இருந்தபோதிலும் வெகு சொற்ப அளவிலாவது முயற்சித்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நடிப்பின் குறைபாடுகள் பல சந்தர்ப்பங்களிலே காட்சித் தொகுப்பின் மூலம் வெகுசமார்த்தியமாக மறைக்கப்பட்டுள்ளது சிறந்த உத்தி.

வயதான பாத்திரங்களுக்கு நாடகபாணி ஒப்பனைகளுடன் கூடிய இளைஞர்களுக்குப் பதிலாக வயதானவர்களையே பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்புகளை இயக்குனர் தவறவிட்டிருக்கின்றார். இதற்குரிய காரணம் அவரது விளக்கத்திலே சொல்லப்படவில்லை. ஆனாலும் அவற்றுக்குப் பொருத்தமானவர்களும் திறமையானவர்களுமான மூத்தவர்கள் ஊரிலே கிடையாது என்பதைவிட அத்தகைய வயதிலிருப்பவர்களுக்கு திரைப்பட முயற்சி மற்றும் நடிப்புத் தொடர்பான ஆன்மீகத்துக்கூடான தவறான பார்வையே காரணமாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

ஒளிப்பதிவு:

இயக்குனரின் தகவலின்படி சாதாரண ஸோனி எச்டீ வீடியோ கெமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அதுமட்டுமே ஒரு பெரும் குறைபாடு என்று சொல்லமுடியாது. ஏனெனில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' இதே கெமராவினால் மட்டுமே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒரு முழுநீளத் தென்னிந்தியத் திரைப்படம்.

ஆனால் 'மும்பை எக்ஸ்பிரஸ்' வேறுபல துணைச்சாதனங்களின் உதவியோடு திறமை வாய்ந்த தொழினுட்பக்குழுவினால் சாதனைக்காகப் புரியப்பட்ட முயற்சி என்பதால் அதனை இதனுடன் ஒப்பிடமுடியாதுதான். ஆனாலும் ஒரு காட்சியை படமாக்கும்போது பல்வேறு கோணங்களில் படமாக்கினால் அது காட்சியுடன் பார்வையாளனை ஒன்ற வைக்கும். சில காட்சிகளிலே அது செய்யப்பட்டிருக்கின்றது எனினும் பாத்திரங்கள் உரையாடும் காட்சிகளில் விசுவின் படங்கள் போல கெமிரா ஆணி அடித்தாற்போல ஒரே இடத்திலே அமர்ந்து சலிப்பூட்டுகின்றது. ஒளிப்பதிவிலே தனியே சாதனங்களையும் கணனி மென்பொருட்களையும் நம்புவதைவிட ஒரு இயக்குனர் தனது கற்பனைத்திறனை நம்புவதுதான் சிறந்தது.

காட்சித்தொகுப்பு / இசைச் சேர்ப்பு:

எவ்வளவு மோசமான திரைக்கதையையும் கூட தூக்கி நிறுத்தக்கூடியது காட்சித்தொகுப்பு. இந்த 'ஏமாற்றத்தை' யும் காட்சித்தொகுப்பு ஒன்றுதான் வெகுவாகத் தூக்கி நிறுத்தியிருக்கின்றது. ஆயினும் சில இடங்களில் அவசியமில்லாத எடிட்டிங் சில்மிஷங்கள் தூக்கலாகி கவனத்தைக் கலைக்கின்றன.

அதுபோலவே காட்சிக்குப் பொருத்தமான இசைச் சேர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. பல இடங்களிலும் இவை சரியாக இருந்தபோதிலும் சில இடங்களிலே சோற்றுக்குக் கறி என்று இல்லாமல் கறிக்குச் சோறு என்பது போல ஆகிவிட்டிருக்கின்றது.mutur -02

ஆக மொத்தத்தில் நான் ஆரம்பத்திலே குறிப்பிட்டது போன்று திரைப்படம் சார்ந்த குறைந்தபட்ச அறிவுதானும் இல்லாத நிலையிலே குறைவான தொழினுட்ப வசதிகளையும் அனுபவமின்மையையும் வைத்துக்கொண்டு திரைப்படமொன்றை உருவாக்க நினைத்த ஏமாற்றம் இயக்குனர் மற்றும் குழுவினரின் தைரியத்தையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

அதேவேளை திரைப்படத்தின் முடிவில் இயக்குனர் குறிப்பிட்டுள்ள விடயங்களிலே சில விமர்சனங்களும் உள்ளன. நமது ஊரிலிருந்து உருவாகும் திரைப்படங்கள் மூதூருக்குரிய திரைப்பட முயற்சியின் விளைவு என்ற உரிமையை நாம் முழுமையாக அனுபவிப்பதாயின் அது தனியே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமேயுரியதாக மாத்திரம் அமைந்து விடாமல் சகல மக்களுக்குமுரிய உணர்வகளைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

அதுமட்டுமன்றி உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களாக ஈரான் இஸ்லாமியக்குடியரசின் இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய திரைப்படங்கள் பெண்களின் மகத்தான பங்களிப்புடன் உருவாகி வருகின்ற நிலையில் இளைஞர் அர்ஷத் தனது திரைப்படத்தில் பெண்களையே பயன்படுத்தவில்லை என்று பெருமையாகக் குறிப்பிடுவது படுபிற்போக்கான மனோபாவம் ஆகும். மாறாக பெண்களுக்கும் மதவிழுமியங்களுக்குட்பட்ட வரையறைகளுக்குள் எதிர்காலத்தில் திரைப்பட வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்று அவர் தனது கருத்தைத் திருத்தியமைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.

இறுதியாக, ஏமாற்றம் என்ற இத்திரைப்படத்திலே எத்தனையோ குறைபாடுகள் இருந்தபோதிலும் இதன் மூலம் நமது இளைஞர்கள் சமூகத்துக்கு ஒரு செய்தியை தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

அதாவது நமது ஊரிலே திறமையான இளைஞர்களுக்கும் அவர்தம் துணிச்சலான முன்னோடி முயற்சிகளுக்கும் பஞ்சமில்லை எனும் தகவலையும் வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்குமிடத்து பெரியளவிலே சாதிக்கும் வல்லமையை நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தின் இயக்குனருக்கும் இதற்காக உழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

-மூதூர் மொகமட் ராபி (2012.11.07)

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19353
மொத்த பார்வைகள்...2076277

Currently are 539 guests online


Kinniya.NET