வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

 

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்-  

முள்மலர்கள் என்ற பெயரில் இனியவன் இஸாருத்தீனின் இரண்டாவது கவிதைத் தொகுதி 138 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே மழை நதி கடல் என்ற தனது கன்னிக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். முள்மலர்கள் கவிதைத் தொகுதியில் 33 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

mulஒரு நல்ல கவிஞனோடு கை குலுக்குகிறேன் என்ற தலைப்பில் தனது வாழ்த்துரையை புதுக் கவிதைகளின் தாத்தா, மு. மேத்தா அவர்கள் பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

''இலங்கைக் கவிஞர் இனியவன் இஸாறுதீன் தன் இதயத்தை திறந்து காட்டியிருக்கிறார். உயிர்த் துடிப்பாய் உணர்ச்சிப் பூச்சரமாய் உள்ளத்தின் வெள்ளப் பெருக்காய் இவரது கவிதைகள் காட்சியளிக்கின்றன. சொற்களின் சூரத்தனமும் இதில் இல்லை. கவித்துவத்தின் கஞ்சத்தனமும் இதில் இல்லை. யாப்பின் அதிகாரமும் இதில் இல்லை. புதுமையின் அகங்காரமும் இதில் இல்லை. அனுபவக் களஞ்சியமாக அறிவின் நதியோட்டமாக விளங்கும் ஒரு நல்ல கவிஞனோடு கைகுலுக்குகின்றேன். ஒரு நல்ல மனிதனை என் இதயத்துள் குடியமர்த்துகின்றேன். கவிதை பல பேரிடம் பொய்யாக இருக்கிறது. இவரிடமோ மெய்யாக இருக்கிறது.''

கவிஞர் வேதாந்தி என்று அழைக்கப்படும் சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனது விதந்துரையில் நம்பச் சொல்லுகிறேன் என்ற தலைப்பிட்டு, ஷகொக்குப் பறக்கும் - புறா பறக்கும் - குருவி பறக்கும் - குயில் பறக்கும் - நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். நான் ஏன் பறப்பேன்? என்று மார்தட்டி தனது எழுதுகோலில் ஈட்டி முனைகளைச் சொருகி இனியவன் இலாருத்தீன் முள் மலராய் மாறி முதுகெலும்புகளை நிமிர்த்தி வைக்கிறார்| என்கிறார்.

சமூக உணர்வினால் பாதிக்கப்பட்ட கவிஞர் என்ற தலைப்பிட்டு தனது அணிந்துரையை முன்வைத்துள்ளார் தென் கிழக்கு பல்கலைக் கழக மொழித் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ். அவர் தனதுரையில் 'கிழக்கிலங்கை கவிவளம் நிரம்பிய பிரதேசம் வீட்டிலும், வெளியிலும், வயலிலும், வாய்க்கால் வழியிலும் மக்கள் கவி பாடிக் களிக்கும் பிரதேசம். இம்மண்ணின் மக்களுக்கு கவி ஒரு வரம். இந்தத் தொடர்ச்சி செந்தமிழ்க் கவிதையிலும் அவர்களுள் பலரை வல்லவராக்கியுள்ளது. அவ்வகையில் அட்டாளைச்சேனையில் பலருக்கும் அறிமுகமானவர் இனியவன் இஸாருத்தீன் எனும் கவிஞர். முள் மலர்கள் தொகுதி மூலம் முற்றிலும் சமூக விமர்சனக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்' என்கிறார்.

உரிமையைத் தாருங்கள் (பக்கம் 39) என்ற கவிதையானது யதார்த்த வாழ்வில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்றது. முஸ்லிம்ளுக்கு எதிராக இடம்பெறுகின்ற நடத்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கவிதையானது, எந்தப் பிரச்சனை வந்தாலும் அல்லாஹ்வை நாம் வணங்குவதை யாராலும் தடுக்க முடியாத ஈமான் (நம்பிக்கை) எமக்கிருக்கிறது என்பதை ஆழமாக எடுத்தியம்புகின்றது.

நாங்கள் தொழும் மஸ்ஜித்
நாங்கள் ஓதும் வேதம்
நாங்கள் அணியும் ஆடை
நாங்கள் உண்ணும் ஆகுமான உணவு
எல்லாவற்றையும் எங்களுக்கு எதிராய்
இகசியமாகவும் பரகசியமாகவும் சிதைக்கலாம்

ஆனால் தடுக்க முடியுமா உங்களால்?
அல்லாஹ்விடம் நாங்கள்
பணிவதையும் கேட்பதையும் தியாகிப்பதையும்...

கரிப்புகை வாழ்வு (பக்கம் 46) என்ற கவிதையில் வாழ்க்கை பற்றிய தத்துவத்தை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர். மகிழ்ச்சியை விட வாழ்க்கையில் துயரங்களே தலைவிரித்தாடுகின்றன என்பதை சிமிணி விளக்குக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. வறுமையில் வாடும்போது அணைக்க வேண்டிய கைகள் ஆணி அறைகின்றன என்று துயருருவதை கீழுள்ள வரிகள் எடுத்தியம்புகின்றன.

சிமிணி உடைந்த விளக்குபோல நம் வாழ்வு
வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம்

ஆரத்தழுவி அணைக்க வேண்டிய கைகள்
ஆணி அறைகின்றன என்னில்
இல்லாமையால் நான்
தனிமையிலும் வெறுமையிலும் தவிக்கும் போது

இன்றைய உலகை இயக்க வைப்பதில் முக்கிய பங்கு கணனிக்குரியது. உலகத்தின் சுழற்சி கணனியில் தங்கியிருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை. கணனியின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் கணனியில் நான்கு மதங்களைப் பற்றிய தகவல்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மனிதர்களைப் போல் மதத்துக்காக முரண்படுவதில்லை என்ற உண்மையை அழகாக கணினி (பக்கம் 59) என்ற கவிதை உணர்த்துகின்றது.

குர்ஆன் பைபில் பகவத்கீதை
எல்லாவற்றையும் உனக்குள்
நீ வைத்திருந்தாலும்
அவை ஒன்றை ஒன்று மதவெறியில்
அடித்துக்கொள்வதுமில்லை
அழித்துக்கொள்வதுமில்லை

நீ ஒரு விமானம்
கடவுச் சீட்டில்லாமலும்
பயணச் சீட்டில்லாமலும்
எல்லோரும் உனக்குள்ளேயே
உலகம் சுற்றிப் பார்க்கலாம்

சின்ன அரும்புகளும் சில கேள்விகளும் (பக்கம் 63) என்ற கவிதை யுத்தம் பற்றிப் பேசுகின்றது. சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் யுத்தம் பற்றிய கணிப்பு எப்படியிருக்கும் என்பதை கீழுள்ள வரிகள் விளக்கம் தருகின்றன. மக்களுக்கு எந்தவித நலன்களுமே இல்லாத ஒரு போராட்டத்தால் அவர்களின் இயல்பு வாழக்கை பாதிக்கபட்டு, விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு வாழக்கைக் கோலமே மாறிவிட்டது. யுத்தத்துக்காக கோடிக் கணக்கில் பணம் செலவாகின. அந்த யுத்தம் பற்றிய சிறுவர்களின் கேள்வி வரிகள் இதோ..

இதுவரை
உங்கள் போராயுதத்தால்
உரிமையையா வென்றீர்கள்?
உயிர்களைத்தானே
கொன்றீர்கள்

கோடி கோடியாய்க் கொட்டிக் கிடந்த
மக்கள் பணத்தில்
கொலையாயுதங்கள்தானே
கொணர்ந்தீர்கள்...
அதில் என்ன எங்களுக்கு
கல்விக்கூடமா திறந்தீர்கள்?

இறுதிவலி (பக்கம் 102) என்ற கவிதையில் சிறுபான்மைச் சமூகம் அனுபவிக்கின்ற கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு காலத்துக்கும் ஏதாவது ஒரு சிறுபான்மை சமூகம் சின்னா பின்னமாக்கப்படுவதை கவிதையின் கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன.

இதுவரை
மதங்கொண்ட வேட்டைப் பற்களால்
சுவைக்கப்பட்ட மனிதம்
சக்கையாக்கப்பட்டு சிதைந்தது
சிறுபாண்மைச் சமூகம்

கானல்நீராகிப் போன காதல் பற்றி வெள்ளைக் காகிதம் (பக்கம் 110) என்ற கவிதை கூறி நிற்கின்றது. தடயங்கள் மட்டும் இருக்கின்ற ஒரு காதல் வலி இக்கவிதையில் மிக ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. தன் கனத்துப்போன மனசைப் பற்றிச் சிந்திக்காமல் ஊராரின் வாய்வார்த்தைகளைப் பற்றி சிந்தித்து காதலை இல்லாமலாக்கிக்கொண்ட காதலிக்கு, காதலன் எழுதும் வரிகளாக இவை காணப்படுகின்றன.

ஒரு நாள்
பக்கத்து வீட்டாரின்
பார்வைக்குப் பயந்து
நீ
என் விழிகளை விட்டே
விரண்டோடி விட்டாய்

சிரிப்பதற்குக் கூட
சிலருடைய சம்மதம்
வேண்டும் உனக்கு

முள்மலர்கள் என்ற இத்தொகுதியில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த விடயங்களையும், சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் கொண்டுள்ளது. ஒரு கவிஞன் சமூகம் பற்றிப் பேசாவிட்டால் அவன் கவிஞனாக இருக்கவே முடியாது. அந்த வகையில் தன் தேசத்தவருக்காக குரல் கொடுக்கும் கவிஞர் இஸாறுதீனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - முள்மலர்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - இனியவன் இஸாறுதீன்
தொலைபேசி - 0672278404
மின்னஞ்சல் - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
விலை - 400 ரூபாய்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19354
மொத்த பார்வைகள்...2076278

Currently are 479 guests online


Kinniya.NET