வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

இரும்புக் கதவுக்குளிருந்து கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

விவேகானந்தனூர் சதீஸின் இரும்புக் கதவுக்குள்ளிருந்து என்ற கன்னிக் கவிதைத் தொகுதி 119 பக்கங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண கலை இலக்கியக் கழகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. தான் வாசிப்பின் மீது காட்டிய நேசிப்பின் காரணமாக உள்ளத்தில் ஏற்பட்ட அருட்டுணர்வினால் 66 கவிதைகளை வாசகர்களுக்கு இந்நூலின் மூலம் தருகின்றார்.

irumbuஇந்நூலுக்கு யாழ்ப்பாணம் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆசியுரையையும், யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அணிந்துரையையும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் மு. கோமகன் வாழ்த்துரையையும், வவுனியா க. சத்தியசீலன் முன்னுரையையும், கலாநிதி நல்லையா குமரகுருபரன் நூலுக்கான பிற்குறிப்பையும் வழங்கியுள்ளார்கள்.

நூலாசிரியர் சதீஸ் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஷஷசங்கத்தமிழ் இலக்கணத்தையோ, தொல்காப்பிய இலக்கணத்தையோ நான் தொட்டுப் பார்க்கவில்லை. கண்டதையும் வாசிக்க காலம் இடங்கொடுக்காததால் கையில் கிடைத்தவற்றை வாசித்தேன். எமது சமுதாயம் எதிர்கொள்ளும் சடுதியான மாற்றங்களும் எனக்குள்ளே கணன்று கொண்டிருக்கும் குறிப்பிட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளும் நான் எழுத கால்கோளிட்டது. ... என்னுடைய வாழ்க்கையின் துன்பங்களும், எதிர்பார்ப்புக்களும், கற்பனையும் இக்கவிதைத் தொகுப்பில் அடங்கியிருந்தாலும் வாசிப்போரின் மனதில் சமூக உணர்வுடனான நற்பண்புகளை மீள் நிறைக்க உதவுமென என்னுள் எண்ணுகிறேன்.|| என்று குறிப்பிடுகின்றார்.

உலகில் தாயின் அன்புக்கு ஈடாக எதனையும் குறிப்பிட முடியாது. தன்னைப் பெற்ற தாயை கவிஞரும் மறவாமல் இந்நூலின் முதல் கவிதையை, பிரசவித்த பேரன்னையை வாழும்போதே வாழ்த்துகின்றேன் (பக்கம் 02) என்ற தலைப்பிட்டு தனது தாய்க்காகவே எழுதியுள்ளார். அக் கவிதையில் உள்ள சில வரிகள் இதோ..

ஐயிரண்டு திங்கள்
அகவயிற்றில் எனைத்தாங்கி
அழகாய் ஈன்றெடுத்து
உலகைக் காண்பித்த
உத்தமி நீயே அம்மா!

குருதியைப் பாலாக்கி
வியர்வையை நீராக்கி
நிறைவான அமுதூட்டி - நீ
பசியோடிருந்த நாட்களை
மறக்கவில்லை அம்மா!

விவேகானந்தனூரில்
விபரமாய் எனை வளர்த்து
கனகாம்பிபையூரில்
கச்சிதமாய் கல்வி நல்கிய
முதற் குரு நீதான் அம்மா!

கண்கள் சொன்னவை (பக்கம் 15) என்ற கவிதை காதலின் வலியைப் பறைசாற்றுகின்றது. சிறையில் வாடும் தலைவனின் காதல் உணர்வுகள் இச்சிறிய கவிதையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. பல சித்திரைகள் கடந்தும் கம்பிக்கூட்டு வாழ்வு விடியவில்லை என்ற வரிகள் மனதில் அதிர்வை ஏற்படுத்துகின்றன.

நித்திரையின்றி
நித்தமும் துடிக்குமென்
கண்கள் - பல
சித்திரைகள் கடந்தும்
கம்பிக்கூட்டு வாழ்வில்
விடியா வினாவாகவே
விளைகின்றது!

மணி (பக்கம் 23) என்ற கவிதை வாழ்வின் யதார்த்த நிலையை ஒப்புவித்திருக்கின்றது. பாடசாலைக் காலங்களில் எல்லா பாடவேளைக்கும், இடைவேளைக்கும் மணி ஒலிக்கும். மணியோசைக்கு பழக்கப்ட்டு விட்ட வாழ்வு சிறையினுள்ளும் தொடருவதை கீழுள்ள வரிகளின் மூலம் கவிஞர் உணர்த்துகின்றார்.

அன்று மணிக்குப் பணிந்தேன் பள்ளியில் பாடம் கற்பதற்கு.. இன்று மணிக்குப் பணிகின்றேன் சிறையில் வாழ்க்கைப் பாடம் கற்பதற்கு.. கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு - என்ற அரும்பதத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன் நன்றாய்!

பு(ப)கை வேண்டாம் (பக்கம் 40) என்ற கவிதை சிகட்டுகளால் சீரழிவோருக்காக எழுதப்பட்டிருக்கின்றது. சிகரட் பெட்டியில் காணப்படும் ஷபுகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்| என்ற வாசகத்தை வாசித்து வாசித்தே புகைத்தலை மேற்கொள்பவர்களை என்னவென்பது? எத்தனையோ ஆய்வுகள் செய்து, எவ்வளவோ கருத்தரங்குகள் வைத்து, எத்தனையோ கட்டுரைகளை எழுதி சமூக சீர்திருத்தத்தை செய்ய முனைந்தபோதும் அது தோல்வியாகவே இன்று வரை காணப்படுகின்றது. புகைத்தலின் பால் நாளாந்தம் இளைஞர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். புகைத்தலில் தொடங்கி போதை வரை செல்கின்றார்கள். அதனால் மற்றவர்களிடம் மதிப்பை இழக்கின்றார்கள். குடும்ப வாழ்வில் தன் மனைவியை இழக்கின்றார்கள், மொத்தத்தில் வாழ்வையே இழக்கின்றார்கள்.

புகைக்காதே தம்பி
புகைக்காதே
புகைத்தலின் ஈரலை
இழக்காதே
தன்னாலே
புற்று நோய் வரும்
புகைக்காதே
சுருள் புகை நீவிட்டு
திரியாதே
சுற்றத்தார்
சுவாசிக்க வைக்காதே
நீ தினம் புகைப்பது
நிக்கொட்என்
நஞ்சென்பதை அறிவாயா?

கொலை வெறி (பக்கம் 63) என்ற கவிதை இன்றைய வாழ்வியல் சார் விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது. வாகன நெரிசல், விபத்துகள், விலையேற்றம், ஆர்ப்பாட்டம், கண்ணீர் புகை என்று பல விடயங்கள் இக்கவிதையில் உள்ளடக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

வாகனங்களின் பெருக்கம்
வீதிகளின் நெருக்கம்
பயணிகளின் கலக்கம்
சாரதிகளின் மயக்கம்

விபத்துக்கள் அதிகரிப்பு
வீணான உயிரிழப்பு
தரமற்ற ஊர்திகளின்
தரமான புகைப்பு
தாரில்லா வீதிகளில்
தினம் புளுதி குளிப்பு

எண்ணெய் விலையேற்றம்
மக்கள் தடுமாற்றம்
வீதிகளில் ஆர்ப்பாட்டம்...

எப்படி இருக்கிறார்கள்? (பக்கம் 71) என்ற கவிதை நடந்து முடிந்த யுத்த கால நினைவுகளை ஞாபகப்படுத்தி மனதை ரணப்படுத்துகிறது. சொந்த பந்தங்களை, வீடு வாசல்களை எல்லாம் இழந்து அகதிகளாக்கப்பட்டவர்களின் சோகம் இதில் தத்ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. நன்றாக வாழ்ந்தவர்கள் நாய்படதா பாடுபடுவதை இதிலுள்ள வரிகள் நமக்கு உணர்ந்துகின்றன. அரவணைத்த உறவுகளை இழந்து, அரிசி தந்த வயல் காணிகளை இழந்து, தனி மரமாக, அதுவும் பட்ட மரமாக தவிக்கும் பலருக்கு இந்தக் கவிதை வடிக்கப்பட்டுள்ளது.

உங்களை காணாத கண்ணொன்று
கண்ணீர் சொரிகிறது
கன்னங்கள் பழுக்க கதறி அழுகிறது
என்னினமே என் உறவுகளே
எப்படி இருக்கிறீர்கள்?
அன்னையில்லையாம்
அம்மாவோடு
குடும்பமே செத்ததாம்
அப்பா காணாமல் போனாராம்
ஆவி துடித்தேன்
ஆரத்தழுவிய கரங்கள் இல்லையாம்
ஆனந்தக் கண்ணீர் வடித்த
கண்கள் இல்லையாம்
ஊன்று கோலிலே உங்கள் கால்களாம்...

இத்தொகுதியில் உள்ள அநேக கவிதைகள் சிறையில் வாடும் உள்ளத்தின் வேதனை வெளிப்படுத்தலாகவும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அவை கடந்து போன காலத்தின் தழும்புகளாகவும் இருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையை கவிதையாக சித்தரித்திருக்கும் சதீஸை வாழ்த்துகிறேன்!!!

நூல் - இரும்புக் கதவுக்குள்ளிருந்து
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - விவேகானந்தனூர் சதீஸ்
வெளியீடு - யாழ். கலை இலக்கியக் கழகம்
விலை - 230 ரூபாய்

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18577
மொத்த பார்வைகள்...2075501

Currently are 258 guests online


Kinniya.NET