திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

எனதுஓய்வுநேரத்தையும் யாவருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்! -ஜரீனாமுஸ்தபா

P 2பிரபலநாவலாசிரியை ஏ.சி.ஜரீனாமுஸ்தபா அவர்களுடனான

நேர்காணல்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி


கேள்வி:-

உங்களது அறிமுகம்

பதில்:-

எனது பெயர் ஏ சி ஜரீனா முஸ்தபா பிறந்தது ஜயவர்த்தனபுர பிட்டகோட்டையில் வாழ்வது (120 h போகவத்தை ரோட் வெளிவிட்ட கடுவல முகவரியில் 1979 ம் ஆண்டு முதல் எழுதி வருகிறேன்.ஆயினும் 1985 ம் ஆண்டில்தான் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில்ஒலிபரப்பாகிய ஓர்முடிவில் ஓர்ஆரம்பம் எனும் நாடகத்தின் மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகமானேன்.அன்று முதல் இன்று வரையில் பாடல்கள் மொழிபெயர்ப்புகள் நாடகங்கள் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் தொடர்கதைகள் நாவல்கள் என கிட்டதட்ட எண்நூறுக்கும் (800) மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளேன்.ஆறுநாவல்;களை எழுதி முடித்துவிட்டு ஏழாவதுநாவலை எழுதிக் கொண்டிருக்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி:-

பிற முயற்சிகள் அனுபவங்கள்

பதில்:-

1985 ம் ஆண்டில் மதுகரம் எனும் இலக்கிய சஞ்சிகைக்கு துணைசிரியையாக இருந்தேன்.1986ம் ஆண்டு முதல் வெண்ணிலா எனும் இலக்கிய சஞ்சிகைக்கு

இணைஆசிரியையாக இருந்தேன். புல மாதர்கலைகளைக் கற்றிருக்கிறேன். புல ஊர்களுக்குச் சென்று கற்பித்த அனுபவம் உண்டு.சிங்களமொழியில் (பகுதிநேர)ஆசிரியையாக இலவசப்பாடங்கள் கற்பித்ததுண்டு.பல மொழிபெயர்ப்புகளை செய்ததுண்டு.தற்போது கடைஉரிமையாளரும் நிர்வாகியுமாக கடமையாற்றுகிறேன்.புங்காவணம் இலக்கிய சஞ்சிகைக்கு ஆலோசகராக உள்ளேன்.

கேள்வி:-நாவல்கள் தொடர்பான ஈடுபாடு

பதில்:- எனது தொழில்ரீதியாக மட்டுமன்றி நட்புரீதியாகவும் மிக அதிகமானவர்களோடு (பெண்கள்) பகும் வாய்ப்பு கிடைக்கிறது.ஆத்மீக ரீதியாகவும் (சமூக) Jaree 02உளவியல் ரீதியாகவும் பலரது பரஸ்பரங்களை பகிர்கின்ற அனுபவங்கள் அதிகமாகவே கிடைக்கிறது. ஆலோசனைகளுக்கும் ஆறுதல்களுக்குமென தொலைபேசியிலும் நேரிலும் பலரது வாழ்க்கைப் பாடங்களை உளவியல் ஆய்வின் மூலமாகஎழுத்துக்களிலின்றி வாசிப்புக்களிலின்றி நேருக்குநேர் உணர்வுரீதியாக உயிரோட்டத்துடன் தினம்தினம் படிக்கின்றேன். இவைகளின்போது அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறுகின்ற ஆலோசனைகளை இந்த சமூகத்திற்கே சொல்ல வேண்டுமென்ற ஆர்வம் பிறந்தது.அவற்றை வெறும் ஆலோசனைகளாக (கட்டுரைகளாக)மட்டும் சொன்னால் திருப்திகரமான ஓர் பலனைப் பெறமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. நான் தராதரம்பார்த்து தோற்றம்பார்த்து யாரையும் நேசிப்பதில்லை.பொதுவாக எல்லோருக்கும் இரக்கம் காட்டுவேன்.

அதே போன்று படித்தவர்க்கு மட்டுமன்றி பாமரர்க்கும் எனது கருத்துக்கள் சென்றடைய வேண்டுமென விரும்பினேன்.எதையும் விரிவாகவும் விபரமாகவும் எடுத்துச் சொல்ல நாவலே சிறந்த வழியென நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. எனது முதல் வெளியீடு ஓர் அபலையின்டயரி என்ற நாவல.; ஓர் மனைவி தனது தோழியைப் பற்றித் தனது கணவனிடம் வர்ணித்தாலும் ஓர் கணவன் தனது மனைவியைப்பற்றி தனது நண்பனிடம் விபரித்தாலும் ஏற்படும் விளைவுகளை வைத்து ஒவ்வொரு இளம் தம்பதிகளும் படிப்பினை பெற வேண்டுமெனும் நோக்கில் அந்த நாவலை எழுதினேன். அதை வாசித்த ஏராளமான வாசகர்கள் இது போன்ற தமது (கசப்பான) அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு இன்னும் நம் சமூகத்திற்கு இது போன்ற தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அந்த நாவலின் வெற்றி தற்போது மூன்;றாம்பதிப்பு வரை வெளியாகியுள்ளது. எனது இரண்டாவது வெளியீடு இது ஒருஇராட்சசியின் கதை. இது இந்தியாவில் மல்ஹாரி பதிப்பகமும் நர்கிஸ் முஸ்லிம்மாதர் மாதஇதழும் இந்து நடாத்திய சர்வதேச போட்டியில் பரிச பெற்றது. தனது சகோதரனுக்கும் கணவருக்கும் நடுவில் நடக்கின்ற போராட்டத்தில் சிக்கித் தவிக்கின்ற ஓர்பெண்ணின் கண்ணீர்க்காவியமே இந்த நாவல்.பொறாமைகளின் விளைவுகளை சித்தரிக்கும் கதை.அதற்;கும் பலத்த வரவேற்பு கிடைத்தது.

மூன்;றாவது நாவல் 37ம் நம்பர் வீடு எனும் நாவல். சோதனைகள் என்று வரும்போது யாரிடம் முறையிட வேண்டுமோ அவனிடம் முறையிடாமல் யாருடைய உதவியை நாட வேண்டுமோ அவனுடைய உதவியை நாடாமல் பதறித்துடித்து யார்யாருடைய உதவியெல்லாமோ நாடிச்சென்று தோற்றுப்போய் கடைசியாக கல்வியறிவற்ற ஓர் மூதாட்டியின் மூலமாகத் தேவையான தெளிவைப் பெற்று எல்லாம் வள்ள இறக்கமுள்ள ரஹ்மானிடம் முறையிட்டு அந்த கருணையுள்ள நாயனின் உதவியைப்பெற்று திருந்துகின்ற ஓர்குடும்பத்தின்(சூனியம்ஜின் சைத்தான்களின் ஊசலாட்டங்கள் பற்றிக்கூறும் கதை இது.நான்காவது வெளியீடு ரோஜாக்கூட்டம்எனும் சிறுவர்கதை தொகுதி.இதில் கல்வி பயில்கின்ற ஒவ்வொரு மாணவமாணவிகளுக்கும் உகந்த படிப்பினை தரும் சிறுகதைகள் அடங்கியுள்ளன.இது இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையினரால்(இலங்கை கல்வி அமைச்சு)அரச அங்கீகாரம் பெற்ற சிறுகதைத் தொகுதியாகும்.அ;தோடு எனது இது ஒரு இராட்சசியின் கதை எனும் நாவலுக்கும் 37ம் நம்பர்வீடு எனும் நாவலுக்கும்இலங்கை நூலக அபிவிருத்திச்சபை கல்விஅமைச்சின் அரசஅங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குறிய விடயமாகும்.அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி:-சிறுகதைகள் தொடர்பாககூறுங்கள்

Jaree 04பதில்:- சமகால யதார்த்தங்களின் மூலமாக கருக்களைப் பெற்றுக்கொள்கின்றேன். வெறும் கற்பனைகளின் மூலமாக மட்டும் நம் சமுதாயத்திற்குசிறந்த படிப்பினைகளை பெற்றுத்தர முடியாது.என்பதுதான் எனது கருத்து.ஓர்குடும்பத்தலைவிஎன்பதோடு மட்டுமன்றி பல பொறுப்புக்களையும் வேலைகளையும ;சுமந்து கொண்டிருப்பதால் ஓய்வு மிகஅரிதாகவே கிடைக்கிறது.ஆகவேதான் அந்த ஓய்வு எனக்கு மிகவும் பெறுமதியாக தோன்றுகிறது.அப்படி கிடைக்கின்ற ஓய்வை யாருக்கும் உபயோகமாகும் வகையில் பயன்படுத்தவே விரும்புகின்றேன்.என் ஆயுளுக்குப்பின்னாலும் எனது எழுத்துக்களும் கருத்துக்களும் உயிர்வாழக்கூடியவைகளாகும்.ஆகவேதான் ஏதாவது ஓர்வகையில் இந்த சமுதாயத்திற்கு படிப்பினையைத்தரக்கூடிய நிஜமான நிகழ்வுகளைக் கொண்டு கற்பனையால் உயிர்கொடுக்கின்றேன்.

கேள்வி:-உங்கள் அடுத்த முயற்சிகள் பற்றிக்கூறுங்கள்.

பதில்:- யதார்த்தங்கள் எனும் தலைப்பில் ஓர் சிறுகதைத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. ஓர்உண்மைச் சம்பவத்தைக் கொண்டு ஓர்நாவல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இன்னும் அதுகுறித்து ஆய்வுசெய்து கொண்டிருப்பதால் இன்னும் நாவல் முடிவக்கு வரவில்லை. அத்தோடு மித்திரன் வாரமலர் பத்திரிகையில் தொடர் கதையாக பிரசுரிக்கப்பட்ட அவளுக்கு தெரியாத ரகசியம் என்ற தொடர் கதையை நாவலாக வெளியிடும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. அத்தோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியீடு செய்யும் அளவிற்கு பத்திரிகைகளில் பிரசுரமான எனது ஆக்கங்கள் குவிந்துள்ளன. அவைகளை முடிந்தவரை நூல்களாக வெளியீடு செய்து எதிர்கால சந்ததிகளுக்கு சொத்தாக விட்டுச்செல்ல ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- ஏனைய பெண் எழுத்தாளர்களுக்கு உங்கள் தொடர்புகள் எவ்வாறு உள்ளது?

பதில்: இளம்பிராயத்தில் பல இளம்பெண்எழுத்தாளர்களோடு தொடர்புகள் கொண்டிருந்தேன். திருமணவாழ்வில் இனைந்தபின் அவர்களில் பலர் எழுத்து Jaree 03துறைகளைவிட்டும் நீங்கிவிட்டனர். அவர்களுக்கு பலதடைகள் ஏற்பட்டுவிட்டன. ஆயினும் இதுவரை அவர்களுடனான நட்பு நீங்கவில்லை. எனது திருமண வாழ்க்கை இலக்கியத்துறையில் எந்தத்தடையையும் ஏற்படுத்;தவில்லை. எனது கணவர் சகல முயற்சிகளுக்கும் உதவியாக இருந்ததினால்தான் என்னால் இவ்வளவு தூரம் பயணிக்க முடிந்தது. அவர் பக்கபலமாக இருப்பதினாலயே என்னால் பலநூல்களை வெளியீடு செய்யமுடிந்தது. அத்தோடு இப்போதும் பலபெண் எழுத்தாலர்கள் எனக்கு பக்கபலமாக உள்ளனர். அதில் எக்மி பதிப்பகத்தின் தலைவி பிரபலஎழுத்தாளர் சுலைமாசமி இக்பால் அவர்கள் முதன்மையானவர். அவரது நட்பு இறைவனத அருட்கொடையாகும். எனது இந்த நான்கு வெளியீடுகளுக்கும் நூலாக உயிர்கொடுத்த எக்மி பதிப்பகத்தின் தலைவர் சகோதரர் அச்செய்க்அல்ஹாஜ் இக்பால் மௌலவியின் துனைவியாவார். அவர்களதுபங்களிப்புக்களைமறக்கமுடியாது. பிரபல ஊடகத்துறை அதிகாரி எழுத்தாலர் நூறுல்ஜன் நஜ்முல்ஹீஸைன் எழுத்தாளரும்ஆசிரியையுமான பாயிஸாஅலி எழுத்தாளர் பாயிஸாகைஸ் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதமஆசிரியை எழுத்தாளர் ரிம்ஸாமுஹமட் எழுத்தாளர் கவிஞையுமான றிஸ்னா ஆசிரியையும்எழுத்தாளருமான ஜெனிராதௌபீக்கைருல்அமான் தடாகச்சங்கத்தின் தலைவி கலைமகள்ஹிதாயா ஆகியோர்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி:-ஊடகங்கள் உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு எவ்வாறு உதவியது?

பதில்: ஆரம்ப காலங்களில் நான் வானொலி நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக எழுதிவந்தேன். ஏ.சி. கமருன்நிஸா எனும் பெயரிலேயே எனது இலக்கியப் பயணம் ஆரம்பமானது. எம்பதுகளில் ஏ.சி. கமருன்நிஸாவை இலக்கிய உள்ளங்களுக்கு நன்கு பரிட்சையமாகி இருந்தது. இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் எனது நாடகங்கள் பலவும் ஏராளமான சிறுகதைகளும் ஒலிபரப்பாகின. அத்தோடு புவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி வாளிபவட்டம் மாதரமஜ்லிஸ் போன்றவற்றிலும் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் என அடிக்கடி ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதன் பின் தினமதி சிந்தாமணி தினகரன்வாரமஞ்சரி வீரகேசரி மித்திரன்வாரமலர் என தொடர்ந்து நவமணி அல்ஹஸனாத் எங்கள்தேசம் விடிவெள்ளி உண்மைஉதயம் ஓசை புங்காவணம் உட;பட எனது ஆக்கங்களைப் பிரசுரித்து என்னை வளர்த்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:-நூல் வெளியீடுகளில் விற்பனைகளில் சங்கடங்களை எதிர்கொண்டீர்களா?

பதில்: எனத முதல்நூலான ஓர்அபலையின் டயரி ஓராண்டு காலமாகி தொடர்கதையாக மித்திரன் வாரமலரில் பிரசுரிக்கப்பட்டது.அப்போதே அக்கதை பிரபல்யம் அடைந்து மிகவும் பேசப்பட்டது. ஆதை ஒரு நூலாக வெளியிடும்படி வாசகர்கள் தொடர்ந்தும் வேண்டி நின்றபோது அதில் எனக்கு எந்த அனுபவமும் இருக்கவில்லை.அதை வெளியீடு செய்தாலும் எப்படி விற்பணை செய்வது என்ற சங்கடம் இருந்தது. வெளியீட்டு விழாவின்போதுபெரும் திறளாக வந்து குவிந்த ரசிகர் கூட்டத்தைக் கண்டு திணறிப்போனேன்.பலர் என்னை நேரில் காண பேராவலுடன் இருந்ததாக சொன்னபோது வியந்துவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ். விற்பனையில்கூட நான் நினைத்தது போலன்றி மிகவும் சிறப்பாகவே அமைந்தது. ஆகவேதான் அந்த நூலை மூன்றாவது பதிப்பையும் வெளியீடு செய்ய நேரிட்டது. அத்தோடு இதை ஓர் வியாபாரமாக்கிக் கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவேதான் இதில் வரும் முதலை கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கின்ற மாணவ சமூகத்திற்காகவும் பல நற்காறியங்களுக்காகவும் பெரும்பாலும் அர்ப்பணிக்கிறேன். எனது மற்றைய வெளியீடுகளும் அவ்வாறே அமைந்தன.அவற்றுக்கு வெளியீட்டுவிழா நிகழ்த்தவில்லை. ஆயினும் விற்பனையில் எந்த சங்கடங்களையும் சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடவில்லை. 37ம் நம்பர் வீடு நாவல் பற்றிய கருத்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.அல்ஹம்துலில்லாஹ்.

கேள்வி: சிங்கள மொழியில் கல்வி கற்றுள்ளீர்கள் சிங்கள மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபாடு உள்ளதா? எதிர்காலத்தில் நோக்கம் உள்ளதா?

பதில்: இப்பகுதியில் வாழும் சிங்கள மக்களுக்கு அவசியப்படுகின்ற போது சின்னச் சின்ன மொழிபெயர்ப்புகளை உதவியாக செய்து கொடுப்பதுண்டு. வேலைகள் அதிகம் காரணமாக இப்போதைக்கு மொழிபெயர்புகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் செய்வேன்.

கேள்வி:-உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு உங்கள் குடும்பத்தில் (சமூகத்தில்) ஒத்துழைப்பு கிடைத்ததா? எந்தளவில் கிடைத்தது?

பதில்: ஆம் எழுதத்துவங்கிய காலங்களில் எனது மூத்த சகோதரர் ஜனாப் ஏ.சி. ஜமால் மொஹிதீனும் இளையசகோதரர் ஜனாப் அலிசப்ரியும்தான். எனக்கு தேவையான எழுத்து உபகரணங்களையெல்லாம் வாங்கித் தருவார்கள். எனது தேவைகளுக்காக நான் அடிக்கடி வெளியே எங்கும் செல்வதில்லை. இப்போதும் அப்படித்தான்.எனத கணவரும் மகன்கள் இருவரும் எனது தேவைகளை நிறைவேற்றுகின்றனர். எனது மகள்கள் இருவரும் எனது வேலைகளில் பங்கேற்கின்றனர். எனது குடும்பத்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் கிடைத்ததினால்தான் முப்பது ஆண்டுகளாக இத்துறையில் பயணம் செய்ய முடிந்தது.

Jaree 1கேள்வி:-நீங்கள் இலக்கிய அமைப்புக்களோடு இணைந்து செயற்பட்டுள்ளீர்களா?

பதில்: ஆம் 1985ம் ஆண்டில் ஜனாப் கலைநிலா ஜயூப்கான் பிரதம ஆசிரியராகக் கொண்ட மதுகலம் இலக்கிய சஞ்சிகைக்கு துணையாசிரியையாகஇருந்தேன். அதன் பின்.அ. நஸார் பிரதமஆசிரியராக கொண்ட வெண்ணிலா எனும் இலக்கிய சஞ்சிகைக் இணைஆசிரியையாக செயற்பட்டேன். அந்த சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களை நானே தெரிவு செய்வேன். எனது திருமணவாழ்வுக்குப் பிறகு இடமாற்றம் காரணமாக இவைகளிலிருந்து விலக நேர்ந்தது. தற்போது புங்காவணம் இலக்கிய சஞ்சிகைக்கு ஆலோசகராக உள்ளேன்.

கேள்வி:-உங்கள் குடும்பம் பற்றி

பதில்:- எனது கணவர் ஒரு வர்த்தகர். எனக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு மகன்களும் இரண்டுமகள்களும் உள்ளனர். மேலதிகமாக நான்கு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டோம். எல்லாமாக எட்டு குழந்தைகள். எல்லோரும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். அதில் ஒருவர்பெண்மகள். அவரையும் திருமணம் செய்துகொடுத்துவிட்டோம். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது எமக்க நான்கு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

கேள்வி:-மேலதிகமாக குழச்தைகளை தத்தெடுக்கும் எண்ணம் உருவாக காரணம் என்ன?

பதில்:- அநாதைகளை ஆதரிக்கின்ற இல்லமே இல்லங்களில் சிறந்த இல்லமென எங்கள் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.அதன் அடிப்படையில் நம் தாயார் நான்கு (4)பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்கள் நம் தாயாருக்கும் ஒன்பது (9)குழந்தைகள்.எல்லாமாக நாம் பதின்மூன்று குழந்தைகள்.நாம் யாவரும் ஒன்றாக வளர்ந்தோம்.ஒன்றாக வாழ்ந்தோம்.மிகவும் குதூகலமாகவும் சந்தோசமாகவும் இருந்தது அந்த வாழ்க்கை.அதை என்றுமே மறக்கமுடியாது.கல்விஅறிவற்றவர் எங்கள் தாயார்.ஆயினும் அவர் வாசித்த புத்தகங்கள்ஏராளம்.நான் தமிழ் படிக்கவில்லை.சிங்கள மொழியில்தான் கல்வி கற்றேன்.ஆயினும் எங்கள் தாயினதுவாசிப்பு ஆர்வம்தான் எங்களையும் வாசிக்கத்தூண்டியது. அன்பு இரக்கம் மனிதநேயம் விட்டுக்கொடுப்பு நற் பண்புகள் எங்கள் கலாச்சாரங்கள்என எல்லாவற்றையும் எங்களத சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே தாயிடத்திலிருந்த கற்றுக்கொண்டோம். பதின்மூன்றுபேரில் பதினொருபெண்களும் இரண்டு சகோதரர்கள் மட்டும்தான். அச்சகோதரர்களுக்குதாய் தந்தையர் இல்லாதவர்களையே திருமணம் செய்து வைத்தார் நம்தாய். நம் தாயாரின் நற்பண்புகள் நம் யாவரிடத்திலும் உள்ளது. நமது மூத்த மகனுக்கு திருமண வயது.நற்பண்புடைய ஓர் அநாதை மணமகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். இன்னும் கிடைக்கவில்லை.அப்படி ஒருவர் நற்குணத்துடன் கிடைக்க இறைவனிடம் நீங்களும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். ஆமீன்.

நேர்காணல்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி

 

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19899
மொத்த பார்வைகள்...2218084

Currently are 232 guests online


Kinniya.NET