திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

நான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும்..? - முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்

najeeb[1]மாகாண சபையின் செயற்பாடுகள். சமகால நிகழ்வகள் குறித்து கிழக்கு முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் நவமணிக்கு வழங்கிய விஷேட செவ்வி

கேள்வி: மாகாண சபையின் செயற்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில்: போரினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தற்போதைய ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தினைக் கண்டு வருகின்றது. கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் உட்பட சகல துறைகளிலும் திட்டமிட்ட அடிப்படையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்திலில் மாகாண அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் வேறுபாடுகள் எதுவுமின்றி அபிவிருத்தி செய்யப்படும். மூவின மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சகல திட்டங்களும் முன்னெடுக்கப்படும். சகல தரப்புடனும் கலந்துரையாடல்களை நடாத்தி மாகாணத்தினை சகல துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்வதே எனது பிரதான நோக்கமாகும்.

கேள்வி: அபிவிருத்திப் பணிகளின் போது அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையாமே?

பதில்: இது பிழையான கருத்து. ஒரு சில ஊடகங்களே இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. முதலமைச்சருடன் அமைச்சர்களுக்குப் பிரச்சினை கிடையாது. நான்கு அமைச்சர்களும் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார்கள். அமைச்சர்களான உதுமாலெப்பை, மன்சூர், ஹாபிஸ் நஸீர் அஹமத், அமில வீர திஸாநாயக்க ஆகியோர் என்னோடு நெருங்கிச் செயற்படுகின்றனர். என்னோடு அடிக்கடி கலந்துரையாடல்களை நடாத்தி அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொள்கின்றனர்.

எந்த அமைச்சரும் எனக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. அவர்களின் எதிரியாக நான் செயற்படவும் மாட்டேன். அபிவிருத்திப் பணிகளில் கட்சி, பேதம் பார்க்காது சகலருக்கும் சமமான முறையில் பணியாற்றி வருகின்றேன். ஒரு சில சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பேச்சின் மூலம் அதனைச் சீர் செய்து கொள்கின்றோம்.

கேள்வி: அபிவிருத்திப் பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு பற்றி..?

பதில்: முதலமைச்சர் என்ற வகையில் நான், மு.கா.வுக்கு எதிராகச் செயற்படவில்லை. அவர்களுக்குரிய இடத்தினை வழங்கி வருகின்றேன். ஒரு சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் ஆளுநரின் தலையீடுகள் உள்ளன. இதன் காரணமாக அவைகளை முன்னெடுக்க முடிவதில்லை. இதற்காக என்னை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. அரசின் பங்காளிக் கட்சியென்ற வகையில் அவர்களுக்கும் அபிவிருத்தியில் பங்குண்டு. அவற்றினை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் தடையாகச் செயற்படமாட்டேன்.

கேள்வி: மு.கா.வுடனான உங்கள் உறவு பற்றி?

பதில்: மு.கா.வுடன் எனக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. என்னைப் பொறுத்த வரையில் பகைவர்கள் கிடையாது. நேர்மையாகச் செயற்படுகின்றேன். எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்றேன். முகாவுடன் அவ்வாறான உறவினை வைத்துள்ளேன்.

கேள்வி: மாகாண சபைத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லையென குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே?

பதில்: இவ்வாறான கூற்றுக்களில் எந்த உண்மையும் கிடையாது. தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு சில தீர்மானங்கள் ஆளுநரின் அனுமதி கிடைக்காமையினால் நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்படுவதுண்டு. அல்லது நிராகரிக்கப்படுவதும் உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் தங்களது கட்சிக்கு அநீதியிழைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

கேள்வி: மாகாண அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரித்தார்களா?

பதில்: அவ்வாறு எவரும் பகிஷ்கரித்தது கிடையாது. ஊடகங்களில் இது தொடர்பாக வந்த செய்திகளில் உண்மை கிடையாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றிருந்தார்கள். வேறு தேவைகளுக்காக வெளியிடங்களுக்குச் சென்றிருந்தனர். தகுந்த காரணங்களுக்காக அவர்களால் சமூகமளிக்க முடியவில்லை. இதனை பகிஷ்கரிப்பு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி: ஆளுநரது தலையீடு உங்கள் முயற்சிகளுக்கு பதிப்பதாக உள்ளதா?

பதில்: ஆம், பல்வேறு தடவைகளில் ஆளுநர் சுயமாகத் தீர்மானங்களை மேற்கொள்கிறார். இதனால் அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுப்பதில் தடைகள் ஏற்படுகிறது. மிக முக்கிய அபிவிருத்தி முயற்சிகளில் தடைகள் ஏற்படுவது குறித்து நானும், அமைச்சர்களும் பல தடவைகளில் அதிருப்தியுற்றிருக்கின்றோம். ஆளுநரின் தலையீடு கிழக்கு மாகாண சபையில் அதிகரித்திருப்பது உரிய அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்து விளக்கியுள்ளேன். ஒரு சில விடயங்களில் சிறந்த முடிவுகள் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி: முதலமைச்சர் என்ற வகையில் உங்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப் போகிறார்களே?

பதில்: யார் எனக்காக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப் போகிறார்கள். அதனைச் சொல்லுங்கள். நான் நம்பிக்கையாக நடக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் கொண்டு வரப்பட வேண்டும். எவருக்கு எதிராகவும் நான் சதி செய்தது கிடையாது. எவரையும் நான் புறக்கணித்ததும் கிடையாது.

என்னோடு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதுபற்றி என்னோடு நேரடியாகப் பேசலாம். எவரோடு, எந்த நேரத்தில் பேசுவதற்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எந்தக் கட்சியினரும் என்னோடு பேசலாம். அதை விடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து எதைத் தான் செய்யப் போகிறார்கள்.

கேள்வி: உங்கள் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளில் நிறைவுறுமா?

பதில்: அப்படியான ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சா த்திடவில்லை. பங்காளிக் கட்சிகளுடன் இது பற்றிக் கலந்துரையாடியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜனாதிபதியே இந்தப் பதவிக்கு என்னை நியமித்தார். ஜனாதிபதி விரும்பும் பட்சத்தில் நான் பதவி விலகவும் தயாராகவே இருக்கின்றேன்.

கேள்வி: கல்முனை மாநகர சபை விவகாரம் பற்றி…?

பதில்: கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் மீனவ சமூகத்துக்காக நூலகமொன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேயர் ஷிராஸ் மீரா சாஹிப் மேற்கொண்டிருந்தார். இந் நூலகத்துக்கு அவரது தந்தையின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. இந்த முறைப்பாடுகளை அடுத்தே நூலகத் திறப்பு விழாவினை இரத்துச் செய்யுமாறு செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தேன்.

கேள்வி: யார் முறைப்பாடு தந்தார்கள்?

பதில்: கல்முனை மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 மு.கா பிரதிநிதிகளே என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநகர சபை நிதியில் நிறுவப்பட்ட நூலகத்துக்கு தனது தந்தையின் பெயர் சூட்டப்பட்டமை குறித்து பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் எழுத்து மூலமும் கோரினர். இதனையடுத்தே திறப்பு விழா நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டேன்.

கேள்வி: கல்முனை மேயரின் பிழையான செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டீர்களா?

பதில்: ஆம், அவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து விசாரிப்பதற்கென குழுவொன்றினை நியமித்திருக்கிறோம். அக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்தக் குழு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும். விசாரணைகள் விரைவில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: மேயர் தவறிழைத்திருப்பது உறுதியானால் பதவி நீக்குவீர்களா?

பதில்: விசாரணை முடிவின் பின் அதுபற்றி உரிய தீர்மானத்துக்கு வருவேன். காலி மேயர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அங்கு போல் இங்கும் மேற்கொள்ள முடியும்.

கேள்வி: உங்கள் உத்தரவை மீறி நாட்டின் நீதியமைச்சர் நூலகத்தைத் திறந்து வைத்துள்ளாரே?

பதில்: ஆம், சிலநேரம் எனது உத்தரவு அவருக்கு தெரியாதிருக்கலாம். என்றாலும் இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

கேள்வி: திருமலை நகர சபையின் விவகாரம் பற்றி?

பதில்: திருமலை நகரசபை விவகாரம் தொடர்பில் அரசு தலையீடு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவரின் கவனத்திற்குக்கொண்டு வந்ததையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: விசாரணை தொடர்ந்து இடம்பெறுமா?

பதில்: அரசாங்கத்துடனோ, மாகாண சபையிடமோ அனுமதி பெறாது வெளிநாட்டுத் தூதரகமொன்றுடன் ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது தொடர்பில் நகர சபைத் தலைவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பான விசார ணைக்குழுவொன்று விரைவில் நியமிக்கபடும்.

கேள்வி: நீங்கள் அரசின் பொம்மையாகச் செயற்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றதே?

பதில்: மாகாண சபையின் பணிகளையே நான் மேற்கொண்டு வருகின்றேன். எனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பணியாற்றி வருகின்றேன். அரசாங்கம் தான் நிதி வழங்குகிறது. அரசாங்கமே அபிவிருத்தித் திட்டங்களை இங்கு முன்னெடுக்கின்றது. பொம்மையாகச் செயற்பட வேண்டிய தேவை எதுவும் எனக்குக் கிடையாது. எனக்கெதிராக எதனைச் சொன்னாலும் பரவாயில்லை. மக்கள் சேவையே எனது இலக்கு. அதனை நான் கர்ச்சிதமாக செய்து முடிப்பேன்.

கேள்வி: மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுக்கிறீர்கள்?

பதில்: சகல சமூகங்களுக்கும் பொதுவாகவே சேவைகளை முன்னெடுக்கின்றேன். கட்சி பேதம் பார்ப்பதும் கிடையாது. அபிவிருத்திப் பணிகளை சீராக முன்னெடுக்கும் வகையில் கண்காணிப்பினையும் மேற்கொண்டு வருகின்றோம். இதன் பொருட்டு கண்காணிப்பு உறுப்பினர்களை நியமதித்திருக்கின்றோம். கடந்த நிதியாண்டில் இந்த உறுப்பினர்களுக்கு முப்பதாயிரம் அலவன்ஸுடன் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு இந்த அலவன்ஸைப் பெற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையிலேயே கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு அலவன்ஸ் வழங்கும் முறை முதன் முதலாக அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் ஏனைய மாகாண சபைகளும் கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு அலவன்ஸ் வழங்க வேண்டுமெனக் கோரியதையடுத்து இந்த ஆண்டு அலவன்ஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி: கருமலையூற்று விவகாரம் பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில்: கருமலையூற்றில் பழைய பள்ளிவாசலை 2006 ஆம் ஆண்டில் நான் புனரமைப்புச் செய்தேன். தொழுகைக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டேன். இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டேன். இப்போது இப் பகுதி இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப் பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றுவது குறித்து உரிய தரப்புடன் பேசி வருகின்றேன். நாசூக்கான முறையில் இப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம்.

கேள்வி: திருமலை அபிவிருத்தி முயற்சிகள் பற்றி..?

பதில்: இம் மாவட்டத்தில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத வகையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, ஏனைய அமைச்சர்கள், மாகாண சபை ஆகியவற்றின் உதவியுடன் பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அத்தோடு அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவியுடனும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி: இந்திய தூதரகம் மூலம் வீடு அமைக்கும் முயற்சிகள் எப்படி?

பதில்: தோப்பூர் பூர்க்சந்தப்பளை பகுதியில் 2008 இல் முஸ்லிம்களைக் குடியேற்றினேன். அப்போது தமிழர்களின் காணிகளைப் பறிப்பதாக குற்றம் சாட்டினார். எனினும் அங்குள்ள தமிழ் மக்களுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கினேன். இந்தப் பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1000 வீடுகள் நிர்மாணிப்பது குறித்துப் பேசி வருகின்றேன். அத்தோடு சம்பூர் பிரதேசத்தில் 900 குடும்பங்களுக்கு மேலும் 1000 வீடுகள் கட்டிக் கொடுப்பது பற்றியும் இந்தியத் தூதுவரிடம் பேசவுள்ளேன். இச் செயற்பாடுகள் வெற்றியளிக்குமென நம்புகின்றேன்.

(நேர்காணல்: ஸிராஜ் எம். சாஜஹான்)

நன்றி: நவமணி'

Share
comments

Comments   

 
0 #1 உண்மை விளம்பி 2013-06-16 21:06
யாருக்கு நம்பிக்கையாக நடக்கிறீர்கள் முதலமைச்சரே?அரசுக்கா?
Quote | Report to administrator
 
 
+1 #2 Muhaijeer 2013-06-18 23:39
Avar andrilirunthu indruvarai makkalukkaha paadupattukode irukkirar (Endru solranga).

Anaan avaral mudiyala.
Vittudungalan avar valamaipola thoongattum.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...19863
மொத்த பார்வைகள்...2218048

Currently are 429 guests online


Kinniya.NET