வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018
   
Text Size

"பக்கத்துக் கடலிலே மீன்பிடிக்க உரிமை இருப்பதுபோல், பக்கத்துக்கு காடுகளை வெட்டி காணியாக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது!" - மூதூர் முத்து மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்..!

majeed mp 003இஸ்லாமியப் புரட்சி வீரர்களின் வரிசையில் ஈழத்து முஸ்லிம்களால், அதிலும் குறிப்பாக கிழக்கிலங்கை மக்களால் என்றைக்கும் நினைவு கூறப்பட வேண்டியவரே மர்ஹூம் ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களாவார்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 350 வருட கால வரலாற்றையும் 100 வருடக் கல்வி வளர்ச்சியையும் 80 வருட கலை இலக்கிய வரலாற்றையும் கொண்ட 98 வீத முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமே கிண்ணியாவாகும். இக்கிண்ணியா மண்ணிலேதான் 1932.11.13 இல் அப்துல் லெத்தீப் விதானையார், றாபியா உம்மா தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பெரிய கிண்ணியாவில் அப்துல் மஜீத் பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியைத் தி/பெரிய கிண்ணியா ஆண்கள் மகா வித்தியாலயத்திலும் அடுத்து, மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியையும் இறுதியில், திருகோணமலை இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்றார்.

அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கை வசதிகள் இருக்க வில்லை. உள்ளக மாணவராகக் கல்வியைத் தொடர்வதில் மஜீத் அவர்களுக்குப் பல தடைகள் இருந்தன. எனினும் பட்டப்படிப்பில் அவருக்கிருந்த ஆர்வம் காரணமாகத் தன் உயர் கல்விக்காக இந்தியா பயணமானார்.

ஆரம்பம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, இறுதியாண்டு சென்னை பிரசிடன்சிக் கல்லூரி ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தார். அங்கு பீ.ஏ பட்டத்தில் தமிழ் மொழியின் பட்டை தீட்டப்பட்ட வைரமாகவும் மேடைப் பேச்சிலும் அரசியல் விவகாரங்களிலும் புடம் போடப்பட்ட பொன்னாகவும் தாணகம் திரும்பினார். இருபதாம் நூற்றாண்டில் இன்பத் தமிழில் இணையிலா மாற்றத்தை ஏற்படுத்திய தி.மு.க தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருநாநிதி, நெடுஞ்செலியன் போன்றோரின் தொடர்புகளே இதற்குக் காரணமாகும்.

அவ்வாறு 1953 ஆம் ஆண்டு அப்துல் மஜீத் அவர்கள் தன் பொன்னாட்டுக்குக் காலடி எடுத்து வைக்கும் போது கிண்ணியாவில் மட்டுமன்றி திருகோணமலை மாவட்டத்திலேயே முதல் முஸ்லிம் பட்டதாரியாகக் காலடி வைத்தார். வந்த சில காலங்களுள் கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் பொறுப்பினை ஏற்றார். இதன் மூலம் அதிபர், ஆசிரியர் என்ற சொற்களுக்கே புது இலக்கணம் வகுத்தார். கல்வியின் மகிமையறியாத அக்காலத்தில் இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை அதிகம். இவ்வாறாகப் பள்ளியை விட்டும் விலகி வீதிகள், விளையாடுமிடங்கள், சினிமாக் கொட்டகைகளில் காலத்தை வீணடித்த மாணவர்களை மீண்டும் கல்வியைத் தொடர வைத்தார்.

பாடசாலையில் வகுப்பு வகுப்பாகச் சென்று சினிமாப் பார்த்தவர்களிடம் விசாரணைகள் நடாத்துவார். மாணவர்களின் நிலை தொடர்பாக அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றோரிடம் கலந்துரையாடுவார். இவ்வாறான கண்டிப்பான நடவடிக்கைகளால் அன்றைய மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கத்திலும் உயர்ந்து நின்றார்கள்.

தனது சீர்திருத்தத் திட்டங்களை பாடசாலையோடு மட்டும் சுருக்கிக் கொள்ள விரும்பாத மர்ஹூம் மஜீத் அவர்கள் சமூகத்தின் அரசியல் விடுதலையைக் கருத்திற் கொண்டு 1960 மார்ச்சில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்தார். எனினும் பழைமையில் ஊறிப்போன நெஞ்சங்கள் புதிய முகத்தைப் பிரதிநிதியாக்கத் தயங்கின. ஆனாலும் அவரின் அயராத முயற்சியும் அல்லாஹ்வின் அருளும் 1960 ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்து அவரது அரசியல் பாதைக்கு வழி சமைத்து மூதூர் மஜீத் என்ற முத்திரையை இலங்கை மக்கள் இதயத்தில் பதிக்கச் செய்தது.

அவரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் போக்குவரத்து மராமத்து உதவி அமைச்சர் பதவியை வழங்கி அன்னாரைக் கௌரவித்தார்.

துணிச்சலும் விவேகமும் எளிமையும் நிரம்பிய அரசியல் வாதியாக விளங்கிய அவருக்கு புல்மோட்டை முதல் பொத்துவில் வரை முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படும் ஆறுகள், குளங்கள், காடு கழனிகள், அணைக்கட்டுக்கள், குக்கிராமங்கள் முதலானவற்றின் பெயர்கள் மனப்பாடம். தனது தொகுதி என்ற எல்லைக்குள் நின்றுவிடாது முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தினதும் உயர்ச்சியில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்ததற்கு இதுவொன்றே தக்க சான்றாகும்.majeed mp 001

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் மூதூர் முதல்வராக முடிசூடி தகவல் ஒலிபரப்புப் பிரதியமைச்சராகவும் திருகோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியாகவும் பொறுப்புக்கள் பல சுமந்த அவ்வேளையிலும் மக்களை விட்டும் ஒதுங்கியிராது மக்களோடு மக்களாக வாழ்ந்து அவராற்றிய சேவைகள் ஏராளம்.

அடுத்து அவரது அரசியல் செயற்பாடுகளில் முக்கியமானதொன்றைக் குறிப்பிட்டேயாக வேண்டும். நடமாடும் சேவை எனும்போது முன்னால் ஜனாதிபதி ஆர் பிரமதாசாவே அனைவரது நினைவிற்கும் வரும். ஆனால் அச்சாதனையை 1960 ஆம் ஆண்டு காலத்திலேயே தொகுதி மட்டத்தில் செய்து காட்டினார்கள் மர்ஹூம் ஏ. மஜீத் அவர்கள்.

அவர் கச்சேரி அலுவலர்கள், அரசபணி உத்தியோகஸ்தர்கள், கல்வி அதிகாரிகள், பொறியியலாளர்கள் முதலானோரை இணைத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் செல்வார். மக்களின் குறைகளை அவர்களின் காலடிக்குச் சென்றே தீர்த்து வைத்தார். இவ்வாறு நிர்வாகத்தை மக்கள் முன் கொண்டு வந்த பெருமை மர்ஹூம் மஜீத் அவர்களையே சாரும்.

அது மட்டுமின்றி அவர்களின் வீடு கூட எப்போதும் ஒரு அரச பணியகமாகவே காட்சியளிக்கும். அரசியலைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு முஸ்லிம் என்பதை ஒரு போதும் மறந்தது கிடையாது. அதிகமாக நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்ட அன்னாரின் இல்லத்தில் ஒரு நூல் நிலையமே வைத்திருந்தார். (இன்று கூட அவற்றை குடும்பத்தார் பாதுகாத்து வருகின்றனர்.)

அதிகமாக அவர்கள் வாசிப்பது இமாம் கஸ்ஸாலி அவர்களின் நூல்களைத்தான். இதனால்தான் அவர் “தனித்திரு, பசித்திரு, விழித்திரு” என்ற இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஆன்மீக வாழ்விற்கான கூற்றினை அரசியல் வாழ்வில் பிரயோகித்துக் காட்டினார். அரசியலில் மட்டுமன்றி, கலை-இலக்கியங்களிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம். கிண்ணியாவின் பாரம்பரிய விளையாட்டான சீனடி, சிலம்படி அவருக்கு அத்துப்படி. மற்றும் கட்டுரை, மேடைப் பேச்சு முதலியவற்றில் பாடசாலைக் காலத்திலிருந்தே ஈடுபட்டார். 1954 ஆம் ஆண்டு மாணவனாய் இருந்தபோதே மகாவலிகங்கை கந்தளாய்க் குளத்திற்கு திருப்பப்பட வேண்டும் என்ற அவரது கட்டுரை பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியானது.

கிண்ணியா, மூதூர், தோப்பூர் முதலியவற்றில் மன்றங்கள் அமைத்து அதன் மூலம் இலக்கியப் பணிகள் பல புரிந்தார்கள். 1964இல் அகில இலங்கை இஸ்லாமியக் கலை விழாவைக் கிண்ணியாவில் நடத்தி முழு இஸ்லாமிய உலகுக்குமே புதுவழி காட்டினார். அவ்வேளையில் தியாகி, அண்ணல் கவிதைகள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தின் கவிதைப் பிதா என வர்ணிக்கப்படும் கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதை நூலை வெளியுலகிற்கு கொண்டு வந்ததன் மூலம் அண்ணல் கவிதைகள் க.பொ.த உயர்தர மற்றும் போராதனைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டதிலும் சேர்க்கப்பட்ட பெருமை மர்ஹூம் மஜீத் அவர்களையே சாரும்.

இதேபோல் அறபாத், கர்பலா, நமது பாதை, சிந்தனைக்கோவை, அன்னை, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முதலிய நூல்களும் இவரது முயற்சியினால் உருவானவையே. இதைவிடவும் "திருக்குர்ஆன் ஓர் இறை இலக்கியம்" எனும் மஜீத் அவர்களின் கட்டுரையொன்று ஏறாவூர் முற்போக்கு வாலிபர் மன்றத்தினால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1974 இல் இந்தியாவில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை காமராஜா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுபீடம் அமைக்க உதவியது. 1979இல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய நான்காவது மாநாட்டில் "சிறப்பான வரலாறு கண்ட இலங்கை முஸ்லிம்கள்" என்ற கட்டுரை பலரின் பாராட்டைப் பெற்றது.

அன்னார் ஷஹீதாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு "சங்கமம்" எனும் தலைப்பில் ஒரு நாவலைத் தான் எழுதி வருவதாகவும் விரைவில் அதை வெளியிட இருப்பதாகவும் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். எனினும், துரதிஷ்டவசமாக அது தொடர்பாக தெரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

majeed mp 002"நபி வழி எம்வழி, தமிழ்மொழி எம்மொழி" என்பதைக் கூறி அப்துல் மஜீத் அவர்கள் 1961இல் தமிழ்மொழி அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்மொழியிலேயே முஸ்லிம் மாணவருக்கு இஸ்லாமிய இலக்கியம் கா.பொ.த சாதாரண தரத்தில் ஒரு பாடமாக்கப்பட வேண்டும் எனவும் அடித்துக் கூறினார். அவரது முயற்சியின் விளைவாக இவை சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தமை முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியாக இவர் ஆற்றிய பங்களிப்பு மட்டுமல்ல. தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டாகவே கருதப்பட வேண்டும்.

தகவல் ஒலிபரப்புப் பிரதியமைச்சராக இருந்தபோது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் சேவையில் புதிய பதவிகள் பலவற்றை உருவாக்கியதோடு மட்டுமன்றி சமய நிகழ்ச்சிகள் பலவற்றை புகுத்துவதற்கும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பு நேரத்தை நீடிப்பதற்கும் உதவினார். மேலும் 1965இல் கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரியைப் புணரமைத்து ஆரம்பித்து வைக்கும்போது "எதிர் காலத்தில் இங்கிருந்து இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்கள், அரபு இலக்கியவாதிகள், இஸ்லாமிய தத்துவஞானிகள் உருவாக வேண்டும் என்பது எனது இலட்சியம்" எனக் கூறினார்.

அத்தோடு 1972இல் கல்லூரிக்கு அரச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்து ஒரு கலாசார மண்டபத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். இக்கல்லூரியின் 50 ஆண்டு பூர்த்தி விழாவும் குர்ஆனை மனனம் செய்த 11 ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டமை இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும். இன்று இக்கல்லூரி உருவாக்கிய பல நூறு உலமாக்கள் நாடு முழுவதும் இருக்கின்றனர்.

மர்ஹூம் மஜீத் அவர்கள் முஸ்லிம் தலைவர்களாக கொழும்பலிருந்து சேவையாற்றி வந்த சேர். ராசிக் பரீத், எம்.கே.எம். கலீல், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம்.எச். முஹம்மட், ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்றோருடனும் அக்காலத்தில் கட்சி பேதமின்றி மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையும் தேசிய ரீதியாக முஸ்லிம்களுக்காக குரல் எழுப்ப முக்கிய காரணங்களாக அமைந்தன எனலாம்.

இது தற்கால எமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சிறந்த ஒரு பாடமாகும். இவ்வாறு அவர் அரசியலில் நுழைந்த காலம் முதல் இறுதிவரையும் மக்களுக்காகவே உழைத்தார். ஒரு சமூக நல்லிணக்கவாதியான அவர் சமத்துவம் பேசியமைக்காகவே விரோதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டு 1987.11.13 அன்னார் ஷஹீதாக்கப்பட்டார்.

அவரது உயிர் பிரியும்வரை "அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹு அக்பர்" என்றே கூறியதாக அருகில் இருந்தோர் கூறுகின்றனர். யா அல்லாஹ்! மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொள்வதோடு அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியைக் கொடுத்தருள்வாயாக.

 

துணை நூல்கள்:
மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீத் நிணைவு மலர் (1988),
தடங்கள் (15ம் வருட நினைவு மலர் - 2002),
நத்வதுல் புஹாரி 50வது ஆண்டு நிறைவு மலர் (2007),
மற்றும் குடும்பத்தாரிடம் சேகரித்த தகவல்கள்.


அப்துல் மஜீத் அவர்களின் அரசியல் கருத்துக்கள் சில…

1. மூதூர் தெகுதியில் வாழும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்குமிடையிலான இரும்புத்திரை உடைக்கப்பட வேண்டும். (1960)

2. வீட்டுக்கு வீடு வேலி இருப்பதுபோல நாட்டுக்கு நாடு பொருளாதாரத் திட்டம் வேண்டும்.

3. பக்கத்துக் கடலிலே மீன்பிடிக்க உரிமை இருப்பதுபோல், பக்கத்துக்கு காடுகளை வெட்டி காணியாக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.

4. இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி

5. எமது கலாசாரம் கஃபா

6. ஐக்கியம், நம்பிக்கை, கட்டுப்பாடு, தியாகம், பொறுமை என்று பல இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு அவசியம். (1966)

7. ஈழமணி நாட்டில் வாழும் 10 இலட்சம் முஸ்லிம்களின் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். (1970)

8. இலங்கையின் சிறுபான்மை முஸ்லிம்கள், உலகில் பெரும்பான்மையாக வாழ்கிறோம். (1972)

9. நமது அடிப்படை உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கப் பொருத்தமான பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

10. ஒரு மஜீது போனால் இத்தொகுதியிலிருந்து ஒன்பது மஜீதுகள் உருவாக்கப்படுவார்கள். (1960)

 

 

ஆக்கம்:

எஸ் பாயிஸா அலி - கிண்ணியா

Share
comments

Comments   

 
0 #1 kinniyan 2012-08-19 12:10
HE IS A LIVING HERO

IF HE IS ALIVE HE WOULD HAVE USED DIFFERENT STRETEGIES TO HANDLE THE CURRENT POLITICAL AND SOCIAL STREEM

IT IS NOT NECESSARY TO VOTE HIS SON WHO IS ILLITERATE(SORRY TO SAY THIS),NOT ELLIGIBLE TO REPRESENT KINNIYA,EVEN UNABLE GIVE A TALK ON ANY TOPICS IN MEDIAS

BUT PERSONALLY I LIKE HIM ,HE IS A GOOD HUMAN

BUT REMEMBER YOU( CANDITATE AND VOTERS) HAVE TO ANSWER ON THE DATE OF JUDJEMENT ON UR RESPONSIBILITIES

THANKS
KINNIYA NET
Quote | Report to administrator
 
 
+3 #2 கனகசபை தேவகடாட்சம் 2012-11-30 12:26
அமரர் மஜீது அவர்களின் நினைவு தாங்கிய தரவுகள் சிறப்பு. .அரசியலின் சகாப்தம் அவர். தமிழ் அரசியல்வாதிகளின் கலங்கரை விளக்கு. வாசிக்கப்படவேண்டிய புத்தகம் அவர்.
- கனகசபை தேவகடாட்சம் -
Quote | Report to administrator
 
 
0 #3 எம்.எஸ்.எம் ஸாதீக் 2013-05-01 10:12
திறனும்-ஆற்றலும், சமூக நன்நோக்கும் கொண்டு இன்னும் "மஜீத்" கள் உருவாக்க முயலுங்கள். நன்றி! ஸாதீக், ஆஸாத் பவுன்டேஷன் ஶ்ரீலங்கா
Quote | Report to administrator
 
 
0 #4 GuestErync 2018-04-19 22:51
guest test post
bbcode: http://temresults2018.com/
html
http://temresults2018.com/ simple
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...18576
மொத்த பார்வைகள்...2075500

Currently are 216 guests online


Kinniya.NET