ஞாயிற்றுக்கிழமை, மே 19, 2013
   
Text Size

கிண்ணியாவின் சமகால கல்வி நிலை - ஒரு பார்வை!

S.A.Sarabdeen

பொதுப்பரீட்சைகளே பாடசாலையின் கல்வி நிலையினை தீர்மானிக்கின்றன.

பொதுப்பரீட்சைகள் என்பது அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தினால் வருடாந்தம் பாடசாலைகளில் நடாத்தப்படும் கீழ் குறிப்பிடப்படும் பரீட்சைகளாகும்.

1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த. (சா/த) பரீட்சை
3. க.பொ.த. (உ/த) பரீட்சை

இப்பரீட்சைகளில் பாடசாலைகளின் அடைவு மட்டம் எவ்வாறு அமைகின்றது என்பது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் 2007ம் ஆண்டிலிருந்து பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகின்றது. இதனை அடிப்படையாக வைத்து பெறுபேறுகளின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் பயனாக பெறுபேறுகள் முன்னேற்றம் கண்டு வருவதை பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின்படி உயர்தரம் கற்பதற்கு தகுதிபெறும் மாணவர்களின் வீதம் அதிகரித்து வருவதோடு அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறத் தவறும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதையும் இப்புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்நிலையில் எமது கிண்ணியா கல்வி வலயப் பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகளின் முன்னேற்றம் எந்நிலைமையில் காணப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கிண்ணியாப் பாடசாலைகளின் தரம், மாணவர்தொகை, ஆசிரியர் எண்ணிக்கை என்பன கீழே தரப்படுகின்றன.

Kinniya-Schools


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 61 பாடசாலைகளுள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 5 பாடசாலைகள் தவிர மீதியுள்ள 56 பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

கிண்ணியா வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் எண்ணிக்கை, சித்தியடைந்த (வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற) மாணவர்களின் எண்ணிக்கை என்பன கீழே காட்டப்படுகின்றன.

01

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளைப் பொறுத்தவரையில் கிண்ணியா வலயப் பாடசாலைகள் மிகப் பின்னடைவான நிலையில் உள்ளன என்பது அனைவரும் அறிந்த விடையமாகும். இதனைவிட அண்மையில் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் செய்யப்பட்ட பகுப்பாய்வில் பல விரும்பத்தகாத முடிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.

1. பரீட்சைக்கு விண்ணப்பித்த கணிசமான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதில்லை
2. வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுவது ஒருபுறமிருக்க 70 புள்ளிகளுக்கு மேல், 100 புள்ளிகளுக்கு மேல் பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

02
2011ம் ஆண்டு கிண்ணியாவில் பரீட்சைக்குத் தோற்றிய 1429 மாணவர்களுள் 311 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேலும், 560 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ளனர். இதே வருடத்தில் 13 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவரேனும் 100 புள்ளிகளைக் கூடப் பெறவில்லை. இதே போல் 5 பாடசாலைகளில் இருந்து ஒருவரேனும் 70 புள்ளிகள் கூட பெறவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

கடந்த வருடத்தில் இருந்து 70 புள்ளிகளுக்கு மேல் (35 + 35) பெறும் மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் சான்றிதழ் வழங்கி வருகிறது. இந்நிலைமையில் 2011ம் ஆண்டில் (1429 – 560 ஸ்ரீ 1118) 869 மாணவர்கள் இந்தச் சான்றிதழ்களைக் கூடப் பெற முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பது நோக்கத்தக்கது. இந்த நிலைமையானது ஏனைய வலயங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பின்னடைவான நிலைமையாகும்.

புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைவது (வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெறுவது) என்பது பெற்றோரது ஆசையும், எதிர்பார்ப்புமாக உள்ளது. சித்தியடைவது கௌரவமாகக் கூட கருதப்படுகின்றது. மாவட்டத்தில் இருந்து தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கோட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இது இன்று போட்டிநிறைந்ததாக மாறியுள்ளது.

ஆனால் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவது என்பது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமானதே சித்தியடைவது ஒரு புற மிருக்க 70 புள்ளிகளைப் பெறுவதிலும் நாம் மிகப் பின்னடைவாக உள்ளோம். இதற்கு எவ்வாறு வகை கூறப்போகிறோம்?

 

க.பொ.த. (சா.த) பரீட்சை

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் பரீட்சைத் திணைக்களம் க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேறுகளை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது (உ+ம் : நாடு பூராகவும் முன்னோடிப் பரீட்சை நடாத்துதல்) அதன் பயனாக தேசிய ரீதியில் பரீட்சைப் பெறுபேறு முன்னேற்றம் கண்டுவருவதை புள்ளிவிபரம் காட்டுகின்றது.

03

இப்புள்ளி விபரத்தின்படி உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 9’A’ பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. மறுபுறம் 9 பாடங்களிலும் சித்தி பெறத் தவறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவதை மேலுள்ள புள்ளி விபரம் எமக்கு தெளிவுபடுத்துகின்றது.

இனி நமது கிண்ணியா வலயத்தின் O/L பெறுபேற்று போக்குகளை நோக்குவோம்.. கிண்ணியா வலயத்தில் 25 பாடசாலைகளில் மாணவர்கள் O/L பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கீழ் உள்ள அட்டவணையில் கிண்ணியா வலயத்தின் பெறுபேறு தேசிய பெறுபேற்றுடன் ஒப்புநோக்கப்பட்டுள்ளது.

04

கிண்ணியா வலயம் 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டதன் பின்பும் சரி அதற்கு முன்னர் மூதூர் வலயத்துடன் கிண்ணியா கோட்டமாக இணைந்திருந்த போதும் சரி தேசிய ரீதியாக சித்தியடைந்தோர் வீதத்தை எட்ட முடியாத நிலையையே காணலாம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் 14 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன, 2011ம் ஆண்டு க.பொ.த. (சா.த) பரீட்சை பெறு பேறுகளின் படி உயர்தரம் கற்க தகுதி பெற்ற (சித்தி பெற்ற) மாணவர்களின் வீதம் வலய ரீதியாக, மாவட்ட ரீதியாக கீழே தரப்பட்டுள்ளது.

05

இவற்றுள் மட்டக்களப்புமத்தி, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மூன்று வலயங்கள் மாத்திரமே தேசிய சித்தி வீதத்தை விட அதிகமாகக் காணப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இப்பெறுபேறுகளின் படி கிண்ணியா வலயமே 14வது (இறுதி) வலயமாகக் காணப்படுவது நோக்கத்தக்கது. கடந்த காலங்களில் கந்தளாய் வலயமே இவ்விடத்தைப் பெற்று வந்தது. இப்போது கந்தளாய் முன்னேறியுள்ளது.

இலங்கையில் காணப்படும் 94 கல்வி வலயங்களிலும் கிண்ணியா வலயத்தின் நிலமையை நோக்குவோம். கிளிநொச்சி, துனுக்காய் தீவகம் ஆகிய வலயங்கள் முறையே 35.39%, 36.59%, 39.38% சித்தி வீதங்களுடன் 94ம், 93ம், 92ம் இடங்களில் காணப்படுகின்றன. இம் மூன்று வலயங்களும் வட மாகாணத்தின் மீள் குடியேறிய பாடசாலைகளைக் கொண்ட வலயங்களாகும்.

இந்நிலையில் கிண்ணியா வலயம்; 40.42 வீதத்துடன் 91ம் இடத்தில் காணப்படுவதும் நோக்கப்பட வேண்டியதாகும். இதே வேளை கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா வலயத்துடன் சமகாலத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 2011ம் ஆண்டு பெறுபேற்றின் படி தேசிய ரீதியாக 1ம் இடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிண்ணியா வலயத்தை தேசிய, மாகாண, மாவட்ட, ரீதியாக வலய ரீதியாக ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் அதன் நிலைமையை மேலும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

06
கிண்ணியா வலயத்தைப் பொறுத்த வரையில் 746 மாணவர்கள் சித்தியடையத் தவறியுள்ளதோடு 74 மாணவர்கள் 9 பாடங்களிலிலுமே சித்தியடையத் தவறியுள்ளனர். அதாவது 11 வருட கல்வியின் பின் இஸ்லாம் பாடத்தில் கூட சித்திபெறத் தவறியுள்ளனர் இந்த வீதமானது (5.9%) அனைத்து மாவட்டங்களின் வீதங்களையும் விட அதிகமானதாகும்.

மேலும் கிண்ணியா வலயப் பாடசாலைகள் பிரதான ஆறு பாடங்களிலும் பெற்ற சித்தி வீதத்தை தேசிய மற்றும் திருமலை, மட்டக்களப்புமத்தி வலயத்தோடு ஒப்பிட்டு நோக்குவோம்.

07

அனைத்துப் பாடங்களிலுமே எமது வலயம் தேசிய ரீதியாக பெறப்பட்ட சித்திவீதத்தை விட குறைவாகவே பெற்றுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல கிண்ணியா வலயத்திலுள்ள 25 பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் O/L பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவற்றுள் ஒரு சில பாடசாலைகளிலே தேசிய ரீதியாக A/L கற்க தகுதி பெறும் வீதத்தை எட்டுகின்றனர்.

O/L வரை வகுப்புகள் உள்ள பாடசாலைகளுள் தேசிய ரீதியாக O/L கற்க தகைமை பெறும் வீதத்தை (2010 – 60.05, 2011 – 60.80 ) 2010ல் 09 பாடசாலைகளும், 2011ல் 06 பாடசாலைகளுமே எட்டியுள்ளன.

கிண்ணியா வலயப் பாடசாலைகளில் 2010 மற்றும்2011ம் ஆண்டில் சா/த பரீட்சையில் தோற்றி உயர்தரம் கற்க தகுதி பெற்றோர் எண்ணிக்கையும், சதவீதமும் வருமாறு.

08


க.பொ.த. (உ/த) பரீட்சை பெறு பேறு

நாடளாவிய ரீதியில் வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உ/த பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களுள் சுமார் 140,000 பேர் சித்தி பெறுகின்றனர் சித்தி பெற்றோரில் சுமார் 50000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பித்தவர்களுள் சுமார் 21000 பேர்வரை நாட்டிலுள்ள 14 தேசிய பல்கலைகழகங்கள் 3 வளாகங்கள் மற்றும் 5 நிறுவாகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.


09

கிண்ணியா கல்வி வலயத்தில் 13 பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கிண்ணியா வலயத்திலிருந்து கடந்த மூன்று வருடங்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வருமாறு..

10

தகவல்: சம்மந்தப்பட்ட பாடசாலைகள்.

கிண்ணியா வலயத்தில் உள்ள 1AB, 1C பாடசாலைகளுள் முள்ளிப்பொத்தானை பாத்திமா மகளீர் மகா வித்தியாலயத்தில் இருந்து இந்த வருடமே மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

13 பாடசாலைகளில் இருந்தும் 700கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைக்குதட தோற்றுகின்றனர் சராசரியாக 60 மாணவர்கள் வரை பல்கலைகழகத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர் (இவர்களுள் சில மாணவர்கள் சில காரணங்களை முன்னிட்டு பல்கலைகழகம் செல்வதில்லை)

எனவே இது தோற்றிய மாணவர்களில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்படும் வீதம் அண்ணளவாக 9% ஆகும்.

இந்த 13 பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் உ/த பரீட்சைக்குத் தோற்றிய போதும் கடந்த மூன்று வருடங்களில்..

தி/அல்மினா மகா வித்தியாலயம்,

தி/ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம்,

தி/காக்காமுனை தாருல் உலூம் மகா வித்தியாலயம்,

தி/அலிகார் மகா வித்தியாலயம்

ஆகிய நான்கு பாடசாலைகளில் இருந்தும் ஒரு மாணவரேனும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படவில்லை.

தி/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம், தி/சிராஜ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவ்வருடம் ஒவ்வொரு மாணவர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இவ்வாறு நோக்கும் போது தி/கிண்ணியா மத்திய கல்லூரி, தி/அல் அக்சா கல்லூரி;, தி/முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இருந்து மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களில் ¾ பங்கினர் தெரிவு செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. மீதமுள்ள 10 பாடசாலைகளில் இருந்தும் ¼ பங்கிற்குக் குறைவான மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.

மேற் குறிப்பிட்ட 3 பாடசாலைகள் மாத்திரமே 1AB பாடசாலைகள் என்பதால் அவற்றில் இருந்து மாத்திரமே மாணவர்கள் விஞ்ஞானத்துறைக்குத் தோற்றுகின்றனர். கடந்த 12 வருடங்களில் இப்பாடசாலைகளில் இருந்து விஞ்ஞான, கணிதத் துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கை வருமாறு
அட்டவனை

11

மேலுள்ள 3 1AB பாடசாலைகளிருந்தும் கடந்த 12 வருடங்களில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கை 143 ஆகும். இதில் கிண்ணியா மத்திய கல்லூரி 103, அல் அக்சா கல்லூரி 30, மகளீர் மகா வித்தியாலயம் 10 என்ற எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா மத்திய கல்லூரி இருந்தே ; ¾ பங்கு மாணவர்கள் விஞ்ஞான , கணிதத் துறைக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

விஞ்ஞானத் துறையைப் பொறுத்தவரையில் மூன்று பாடசாலைகளிலுமே நீண்ட காலம் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது இவ்வருடம் கிண்ணியா மத்திய கல்லூரி தவிர இரண்டு மாகாணப் பாடசாலைகளுக்கும் விஞ்ஞான, கணித ஆசிரியர்கள் கிடைத்துள்ளனர். கிண்ணியா மத்திய கல்லூரியில் 1973ம் ஆண்டில் விஞ்ஞானத்துறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவியே வந்துள்ளது.

2002 ம் ஆண்டில் இருந்து உயிரியல், இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் நான்கு ஆசிரியர்கள் ஒரு போதுமே இருந்ததே கிடையாது. இந்நிலமைக்கு வகை கூற வேண்டியவர்கள் யார்?

மேலும் கிண்ணியா வலயத்தினைப் பொறுத்தவரை 3 பாடங்களிலும் சித்தி பெற்று பல்கலைக்கழக தெரிவிற்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களின் வீதம் சராசரியாக 50% ஆகவே காணப்படுகின்றது. தேசிய ரீதியாக இது சுமார் 60% ஆகும். அத்துடன் கலைத் துறையைப் பொறுத்தவரை பெண்பிள்ளைகளே ஆண்களைவிட பல்கலைக்கழகத்திற்கு கூடியளவு தெரிவு செய்யப்படுகின்றனர். அதிலும் கிண்ணியா மகளீர் மகா வித்தியாலயத்திலேயே கூடிய மாணவிகள் அண்மைக்காலமாகத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் வீதத்தைப் பொறுத்தவரையில் தேசிய ரீதியாக தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையில் 10% ற்கும் அதிகமான மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் நமது வலயத்தில் இது 8% மாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு மொத்தமாக மேற்குறிப்பிடப்பட்ட மூன்று பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளிலும் கிண்ணியா வலயப் பாடசாலைகள் பின்னடைவாக உள்ளமையை புள்ளி விபரங்கள் காட்டிநிற்கின்றன. இந் நிலமைக்கான காரணங்களைக் கண்டறிவதும் .அவற்றை நிவர்த்திக்க முயற்சிப்பதும்; தொடர்புடைய தரப்பினர் அனைவரினதும் கடமையாகும்.

ஏறக்குறைய சமகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டதும், சமமான வளங்களைக் கொண்டதுமான மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெறமுடியுமானால் ஏன் எம்மால் முடியாது என்று நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டியது தொடர்புடைய அனைவரினதும் கடமையாக இருந்து கொண்டிருக்கின்றது.

அண்மைக்காலத்தில் புதிய ஆசிரிய நியமனங்கள், புதிய கல்விசார் உத்தியோக நியமனங்கள் , முதிர்ந்த அனுபவமுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியேற்பு என்பன பாடசாலைகளின் பெறுபேற்றை உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக கல்வியோடு தொடர்புடைய கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரசியல்வாதிகள் அனைவருமே இந்நிலைமைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாவோம்.. என்ற உணர்வு எமக்கு ஏற்படுமானால் அதுவே இந்நிலைமையை மாற்றியமைக்க, வழியமைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆக்கம்:

எஸ்.ஏ. சராப்தீன் (அதிபர் - கிண்ணியா மத்திய கல்லூரி)

S.A.Sarabdeen (Principal - T/Kinniya Central College)

Share
comments

Comments   

 
0 #1 kinniyan 2012-06-27 23:59
kinni leaks should consult a psychiatrist
BEFORE MAKE ANY COMMENTS GET CURED YOUR SICK MENTALITY
Quote | Report to administrator
 
 
0 #2 grownsafir 2012-06-28 09:52
ஆக்கத்திற்கு நன்றி, கிண்ணியாவின் கல்வி நிலை இன்னும் முன்னேற்றமடைய ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கவேண்டும். நல்ல தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கிடையில் கடமை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். Teachers must know/learn some teaching strategy.
Quote | Report to administrator
 
 
0 #3 Kaalith Ahamed 2012-06-28 18:50
Kinnileaks in pani thodere vaalththukkel!
Quote | Report to administrator
 
 
0 #4 Aariff 2012-06-28 19:39
சகோதரர்களான பாசித், றிஸ்வி.... கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க..... கிண்ணி லீக்ஸ் சொல்வதில் என்ன குற்றமிருக்கு... அவர் உண்மையைத் தானே சொல்றார்..... சமூகத்தைப் பற்றி சிந்திச்சுப் பாருங்க....... உங்கட கல்வித் தரம் உயர்ந்திருக்கென்னு உங்களுக்கு யார் சொன்னா........ சாதாரண கிண்ணியாவிலுள்ள சாதாரண பாடசாலைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. ஒரு மத்திய கல்லூரியை இன்ளொரு மத்திய கல்லூரியுடன்தான் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். உங்கள மாதிரி ஆட்களினால்த்தான் தப்புச் செய்யும் அதிகாரிகள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்....... கொஞ்சம் சிந்தியுங்கள்........ மாதாநடதம் 40000 -50000 சம்பளம் மட்டுமே வருமானமாகக்கொண்ட ஒருத்தரால் மிஞ்சி மிஞ்சிப் போனால் எவ்வளவு சேமிக்க முடியும்......

மத்திய கல்லூரிக்கு வருமுன்னமும் வந்த பிறகும் உங்கட அதிபர்ர சொத்து மதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்க..... உண்மை புரியும்......
Quote | Report to administrator
 
 
0 #5 Mr.Kinniyan 2012-06-28 19:56
மிஸ்டர் ஆரிப் அப்படியில்ல.... அரூஸ் போன்றவர்கள் இதைப் பத்தி கதைக்கக் கூடாது...விமர்சனம் செய்யக்கூடாது,...இவனெல்லாம் ஒரு புல்லுருவி.....பாடசாலையில இவ்வளவு பற்றாக்குறை இருந்தும் இந்தளவுக்காவது பாடசாலைய ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ள அதிபரின் சேவை பாராட்டத்தக்கது. ....முதலில் உங்களால் முடியுமானால் பாடசாலையின் குறைகளை நீக்கி மற்ற நகர்ப்புற பாடசாலைகள் போன்னு எவ்வித குறையுமில்லாம மாத்த நடவடிக்கை எடுங்க அதுக்கப்புறம் பார்ப்போம்...சும்ம இருந்து கொண்டு விமர்சனம் செய்வது. லேசுதான்....
Quote | Report to administrator
 
 
0 #6 kinniyakaran 2012-06-29 08:25
அடிப்படை வசதிகளே இல்லாத இக்கல்லூரியை சகல வசதிகளும் ஏன் அதற்கு மேலதிகமாகவுள்ள நகர்ப்புற பாடசாலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்வது எந்த விதத்தில் பொருத்தமாக இருக்கும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. மேலேயுள்ள கட்டுரையில் குறிப்பிட்டது போல உயர்தரத்திற்கு 2002 இலிருந்து விஞ்ஞானப் பிரிவிற்கு ஆசிரியர் பற்றாக்குறை குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது...இவ்வாறான ஒரு நிலை மற்ற நகர்ப்புற பாடசாலைகளில் 1 வருடமேனும் நீடித்திருக்கிறதா? இப்படியிருக்க எப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது, மற்றர் நகர்ப்புற பாடசாலை மாணவர்களின் பெற்றார்கள் காட்டும் அக்கரை ஏன் எம் பெற்றார்களிடமில்லை? அதற்கு மாறாக ஆசிரியர்களையும் அதிபர்களையும் பாடசாலையையும் குறை கூறுவதே எம்மில் பலரின் வேலை... 10 வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினையை ஏன் இங்குள்ள பெற்றார்கள் கவனிக்கவில்லை...கிண்ணியாவில் புத்தி ஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எங்கே போய் விட்டார்கள்? அவர்கள் மாத்திரம் தங்களின் பிள்ளைகளை வெளி நகர்ப்புற பாடசாலைகளுக்க அனுப்பி படிப்பித்தால் இங்குள்ள ஏழை மாணவர்களின் நிலை என்ன,? இப்பிரச்சினை எப்போது தீரும்... இகுறை கூறுவதை விட்டு விட்டு இப்பிரச்சினைக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து நடவடிக்கை எடுத்தால் இன்ஸா அல்லாஹ் எல்லாம் நன்றாக அமையும்...
Quote | Report to administrator
 
 
0 #7 அப்துல் றசாக். 2012-06-29 15:24
எமது கிண்ணியா வலயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி முதலிடம் பெற காரணம் உண்டு... ஏனெனில் அங்குள்ள பெற்றார்கள், நலன் விரும்பிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக மற்றவரை குறை சொல்லாமல் தங்களால் இயன்றவற்றை செய்கிறார்கள்... ஆனால் இங்கே...??? எந்த நல்ல விடயம் செய்தாலும் அதில் ஒரு சந்தேகம்..குரோதம்...இப்படியிருக்க எங்கே எமது பிள்ளைகளின் கல்வி நிலையை முன்னுக்குக் கொண்டு வர முடியும்?, எதெற்கெடுத்தாலும் மொட்டக் கடிதம், கை கால் தலை இல்லாத துண்டுப் பிரசுரம்.. மற்றவர்களை அவமானப்படுத்துவது, பெரியவர்களை மதிக்காத தன்மை, ...ஏன் எமது பிரதேசம் மட்டும் இப்படியிருக்கிறது,..?
Quote | Report to administrator
 
 
0 #8 jawhar 2012-07-03 17:27
palarum parthu payen perach seytha athiferukku nantry
Quote | Report to administrator
 
 
0 #9 s.faiza Ali 2012-07-04 00:20
ஆழமான தேடலுடன் கூடிய அருமையான கட்டுரை.
இது தொடர்பில் ஆய்வுகள் செய்வோருக்கும் பெரிதும் பயன்படக் கூடியது.
கட்டுரையின் கடைசி நான்கு பந்திகளும் மிகுந்த கவனிப்புக்குரியவை.
தயவுசெய்து இதன் பிரதிகளை எல்லாப் பாடசாலைகளுக்கும் அனுப்பிவையுங்கள்.
Quote | Report to administrator
 
 
0 #10 J.M. Azhar 2012-07-05 23:49
அன்பின்..............
ஏன் தனிப்பட்ட கோபங்களை இங்கு போட்டு ஊரை நாரடிக்கின்றீர்கள் தயவு சமூக உணர்வுகளோடு எழுதுங்கள் திரு்த்த வேண்டியவைகளை நாகரீகமாகச் சுற்றிக் காட்டுக்கங்கள்.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...11553
மொத்த பார்வைகள்...213986

Currently are 49 guests online


Kinniya.NET