வெள்ளிக்கிழமை, மே 24, 2013
   
Text Size

தங்க விதி!

london-muslim-extremist-1-2-09-10

 -மூதூர் மொகமட் ராபி

முஸ்லிம்களாகிய நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பல்லின மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும் ஒரு நாட்டில்தானே தவிர தனியே முஸ்லீம் நாட்டில் அல்ல. இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களைப்போல மொழியினாலோ வாழும் பிரதேசத்தினாலோ அல்லாமல் முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றுகின்ற மதத்தினால் ஒன்றுபட்டவர்கள்.

நமது நாட்டைப் போலவே உலகின் பல்வேறு கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவற்றிலே முஸ்லிம்களாகிய நாம் ஏனைய இனத்தவர்களோடு சேர்ந்து சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்ற அதேவேளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் நாம் பெரும்பான்மை சமூகமாகவும் வாழ்ந்து வருகின்றோம்.

இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளிலே வாழும் அரசுகளினாலோ அல்லது அங்குள்ள பெரும்பான்மை மக்களினாலோ தமது உரிமைகள் சிறிதளவேனும் பாதிக்கப்படுவதைக் கண்டால் உடனே துடிதுடித்துப்போய்.. நம்மை ஏதோ உலகமே முற்றாக ஒன்று திரண்டு நசுக்கியழிக்கப்போவதைப் போன்ற பாவனையுடன் ஊடகங்களின் முன்னே நின்று எத்தனை போராட்டங்களை நடாத்துகின்றோம்… பல சந்தர்ப்பங்களிலே அவற்றை மிகைப்படுத்திக்காட்டி உலகத்தின் கவனத்தையெல்லாம் ஈர்த்தெடுக்கின்றோம்.

கொழும்புகளிலும்; புதுடில்லிகளிலும் லண்டன்களிலும் நியூயோர்க்களிலும் பாரிஸ்களிலும் நம்மால் பல உரிமைப் போராட்டங்களையும் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்த முடிகின்றது. அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களிலே அந்தந்த நாட்டுச் சட்டங்களையே பயன்படுத்தி குற்றமிழைத்தவர்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனையையேனும் பெற்றுக் கொடுக்க முடிகின்றது.

ஆனால் நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது மேற்கூறியவாறு அங்கு ஆட்சியிலிருக்கும் இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடாத்த முடியுமா? குறைந்தபட்சம் அவ்வாறு ஒன்றை நடாத்துவது பற்றி நினைக்கத்தானும் இயலுமா?
இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை நடாத்தினால் அவர்களுக்கு என்ன கதியேற்படும் என்று யோசித்துப் பாருங்கள். “மனிதாபிமானமிக்க” நமது சாம்ராஜ்யங்கள் குறைந்தபட்சம் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?
இது என்ன நியாயம்?

ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன) ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம்.london-osama-protest-us-embassy-may-6-2011-5
இது எந்த ஊர் நியாயம்?

“தங்க விதி” என்று ஒரு தமிழ்ப்பதத்தை அறிவீர்களா நீங்கள்?

வேறு ஒன்றுமில்லை…நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.

இதையேதான், “மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது” என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள்.

“இதிலே பெரிதாக என்ன உள்ளது?” என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை முதல் அரசியல் பூசல்கள் வரை அணுவுலைகள் முதல் அண்டங்களின் ஆராய்ச்சி வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
சற்று யோசித்துப்பாருங்கள்..

நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் எதனையெல்லாம் எதிர்பார்ப்போம்…? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு… என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?
இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், மதிப்புக்குரிய எதிரிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் நாம் பிரயோகித்து வந்தால்தான்; அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.

அவ்வாறின்றி, “நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது” என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்…?

சரி அப்படி ஒரு எண்ணத்துடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்..? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?

இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம்…

“நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது”
இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?

நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. ஏன் இப்போதும் கூடமுடிகின்றது.
ஆனால் பிற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப்புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!

நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து வெறுப்பை உமிழ்கின்றோம். அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.

அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது நியாயமா? 

நண்பர்களே, நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால் அநியாயங்கள் எல்லாம் ஒருபோதும் நியாயங்களாகி விடாது.
தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.

இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது நிகழும் அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒடுக்குமுறைகள் யாருக்கு எதிராக எங்கு நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் எதுவிதமான தயவு தாட்சண்யமுமின்றிக் கண்டிக்கப்படவேண்டியதே.

அதேவேளை நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.

நண்பர்களே! மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள் - நான் கூறும் கருத்துகளில் தவறுகள் இருப்பதாக அறிந்தால் அவற்றை மறுக்கும் வகையிலே தர்க்க ரீதியான உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள்!

 

Mohamed Rafi - Mutur

Share
comments

Comments   

 
0 #1 kinniyan 2012-07-14 22:06
புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?
with 10 comments

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர் , இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி: புனித பூமி, புனிதமானது. ஒரு மதத்தின் கௌரவங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. அதனைப் பாதுகாப்பதும் அதன் மரபுரிமையை கௌரவிப்பதும் அம்மத்தை சேர்ந்தவர்களது மட்டுமல்ல அனைத்து மக்களதும் கடப்பாடாகும். இந்த விடயத்தில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. காரணம் இஸ்லாம் மார்க்கமும் தனக்குரிய புனித பூமிகளை பிரகடனம் செய்திருக்கிறது. அது பிரகடனம் செய்திருக்கும் புனித பூமிகளைப் பாதுகாப்பது உலக முஸ்லிம்களது கடமையாகும்.

அந்தப் பூமிகள் ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல முழு முஸ்லிம் உலகுக்கும் சொந்தமானவைகளாகும். அந்தப் புனித பூமிகளில் முஸ்லிம்கள் நுழைவதை புனித பூமிகளை நிர்வகிக்கும் நாடுகள் தடுக்க முடியாது. சஊதி அரேபியா அரசு அங்கிருக்கும் முஸ்லிம்களின் இரண்டு புனித பூமிகளைத் தரிசிப்பதற்காக வழங்கும் விசாக்களுக்குப் பணம் அறவிடாதிருப்பதற்குக் காரணம் அதுதான். ‘புனித பூமித் தரிசன விசா’ என்று ஒரு தனியான வீஸா நடைமுறையை இந்த நோக்கில் அமுலில் வைத்திருக்கிறது சஊதி அரசு. அது மட்டுமல்ல, இவ்வாறான இலவச அனுமதியைப் பயன்படுத்தி புனித பூமியில் நுழைவதற்கும் புனித பூமியின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாற்றமாக செயல்படுவதற்கும் வாய்ப்புக்களை வழங்கா வண்ணம் முஸ்லிமல்லாதவர்களை புனித பூமியின் எல்லைகளுக்குள் நுழைவதற்கு அவ்வரசுகள் அனுமதிப்பதில்லை. இத்தகைய நடைமுறைகள் இஸ்லாத்தில் இருப்பதனால் மற்றொரு மதத்தின் புனித பூமிகளை மதிப்பதற்கும் அங்குள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்குமான புரிந்துணர்வு முஸ்லிம்களிடம் ஏற்கனவே இருக்கிறது. தம்புள்ளை புனித பூமி விவகாரத்தையும் அதன் பெயரால் அங்கு முஸ்லிம்களது வணக்கஸ்தலம் தாக்கப்பட்ட சம்பவத்தையும் இந்தப் பின்னணியில்தான் நாம் நோக்குகிறோம்.
Quote | Report to administrator
 
 
0 #2 kinniyan 2012-07-14 22:07
எமது பிரச்சினை, மற்றறொரு மதத்தின் புனித பூமியை விளங்கிக் கொள்ள முடியாதிருப்பதல்ல. மாறாக புனித பூமி என்பதற்குரிய வரைவிலக்கணம் என்ன? .அதனை யார் தீர்மானிப்பது? எப்போது தீர்மானிப்பது? அதனைப் பிரகடனம் செய்வதற்கான உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறை எது?

நாம் ஏன் இவ்வினாக்களை எழுப்புகிறோம் எனின், இஸ்லாத்தில் இக்கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இருக்கின்றன. இஸ்லாத்திற்குரிய புனித பூமிகளை எவரும் தாம் நினைத்தவாறு பிரகடனம் செய்ய முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகும். இஸ்லாத்திற்குரிய புனித பூமிகள் உலகம் முழுவதிலும் மூன்று மட்டுமே இருக்கின்றன. 1. மக்கா 2. மதீனா 3. ஜெரூஸதில் இருக்கும் ‘பைதுல் முக்திஸ்’ பிரதேசம் இவைகளைப் புனித பூமிகளாக இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பிரகடனம் செய்திருகிறார்கள். அவர்களுக்குப் பின் நான்காவது ஒரு இடத்தை புனித பூமியாக பிரகடனம் செய்யும் அதிகாரம் முஸ்லிம் சமூகத்தில் இன்றுவரை எவருக்குமில்லை. எவரும் நான்காவது ஒரு இடத்தை இன்றுவரை புனித பூமியாக பிரகடனம் செய்ததுமில்லை. உலகம் முழுவதும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும் நான்காவது ஒரு இடத்தை எத்தகைய காரணங்களுக்காகவும் ஒருவர் இஸ்லாத்தின் புனித பூமியாகப் பிரகடனம் செய்யவும் முடியாது.

எனவே, ‘புனித பூமி’ என்பது ஒரு மதத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்றாகும். அதனால் அது அம்மதத்தின் மூலாதார நூல்களினூடாகவும் அம்மதத்தின் காரண கர்த்தாக்களினாலும் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். நினைத்த மாத்திரத்தில் ஒரு தனி நபரோ, ஒரு குழுவோ, ஒரு அரசோ பிரகடனம் செய்யும் ஒன்றாக அது இருக்க முடியாது. ‘புனித பூமி’ விடயத்தில் அவ்வாறனதொரு நடைமுறை பின்பற்றப்படுமானால் மட்டுமே அது குழப்பங்களையும் மதத் தீவிரவாதத்தையும் மதத்தின் பெயரால் மற்றறொரு இனத்தின் மீது பழி தீர்க்கும் வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்ய உதவும்.

ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் விரும்பும் வேளைகளில் தாம் விரும்பும் பிரதேசங்களைப் புனித பூமிகளாகப் பிரகடனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?இன்று ஒரு பிரதேசம், நாளை மற்றறொரு பிரதேசம் என புனித பூமிகள் பெருகிக் கொண்டே செல்லும், அவ்வாறு செல்லச் செல்ல அங்கிருக்கிருக்கும் ஏனைய மதத்தவர்களின் வணக்கஸ்தலங்களையும் உடைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும். சில போது ஒரு சமூகத்திற்கெதிராக செயற்படும் நோக்கிலும் புனித பூமிப் பிரகடனத்தை ஒரு சிலர் பயன்படுத்த முடியும். அது குறிப்பிட்ட மதத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடும் அநீதியாக இருக்குமே தவிர அந்த மதத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதாக அது ஒருபோதும் இருக்காது.
Quote | Report to administrator
 
 
0 #3 kinniyan 2012-07-14 22:08
மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அநீதிகள் இஸ்லாத்தின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படுவதை தடுக்கும் வகையில்தான் புனித பூமிகளைப் பிரகடனம் செய்யும் அதிகாரத்தை முஸ்லிம்களின் கைக்கு வழங்க மறுத்தார்கள் மாநபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள். அதுமட்டுமல்ல, புனித பூமிக்குரிய நடைமுறைகள், மரபுரிமைகள், பழக்கவழக்கங்கள், அங்கு செய்யக்கூடாதவைகள் என்பவற்றையும் நபியவர்களே வறையறை செய்திருக்கிறார்கள். இவற்றையும் நபிக்குப் பிறகு எந்த ஒருவரும் தான் நினைத்தவாறு மாற்றியமைக்க முடியாது. ஆக, இஸ்லாத்தின் புனித பூமிகளும் அவற்றின் நடைமுறைகளும் 1400 ஆண்டுகளாக எதுவித மாற்றங்களுக்கும் உட்படாமல் அமுலில் இருக்கின்றன. இதனால் புனித பூமி என்ற பெயரால் முஸ்லிம்கள் பிற மதத்தவர்களை துன்புறுத்தும் அல்லது பிற மதத்தவர்களுக்கு அநீயிழைக்கும் வாயிலை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்றே மூடிவிட்டார்கள்.

நபிகளாரின் பின் இரண்டாவது ஆட்சித் தலைவராக கடமை புரிந்த கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் ஜெரூஸலத்துக்குச் சென்றவேளை கிறிஸ்தவர்களோடு ஒரு தேவாலயத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டது. தேவாலயத்தின் பிதா கலீபா உமரை அங்கேயே தொழும்படி வேண்டிக் கொண்டார். அதனை ஏற்க மறுத்த கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் வெளியே சென்று மற்றுமொரு இடத்தில் தொழுதார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மதத்தின் பெயரால் ஒரு அநீதி நடப்பதையல்ல. நாளை நடைபெறுவதற்கான வாய்ப்பைக் கூட வழங்க மாட்டேன் என்பதாகவே அவரது பதில் அமைந்திருந்தது. சொன்னார்கள். ‘‘இரண்டாவது கலீபா உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் தொழுத இடம் இது என்ற காரணத்தைக் கூறி உங்களது தேவாலயத்தை உடைத்து முஸ்லிம்கள் தங்களது அறியாமையால் பள்ளியொன்றைக் கட்டிவிடுவதற்கான வாய்ப்பை நான் வழங்க விரும்பவில்லை.’’ எனவேதான் நான் வெளியே சென்று தொழுதேன்.’’ இங்கு இரண்டாம் கலீபா உமர் தனது பெயரால் ஓரிடம் புனிதப்படுத்தப்படக்கூடாது என்பதில் எத்துனை கரிசனையுடன் நடந்து கொண்டார்கள் என்பதையே பார்க்கிறோம்.

காரணம் ஓரிடத்தை தனது விருப்பப்படி புனித பூமியாக மாற்றவும் கூடாது, தனது பெயரால் பிற்காலத்தில் அந்த இடம் அபகரிக்கப்படவும் கூடாது என்பதே. புனித பூமி என்பது, அல்லாஹ்வினாலும் அவனது தூதராலும் பிரகடனம் செய்யப்பட்டதால் பிற சமூகங்களுக்கு ஏற்பட்ட நன்மைதான் அது. இதே போன்று புத்த மதத்தில் புத்தர் பெருமானால் பிரகடனம் செய்யப்பட்ட புனித பிரதேசங்கள் இருக்கலாம். அப்பிரதேசங்களின் நடைமுறைகளும் அவரால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறிருந்தால் அவற்றின் மரபுரிமைகளை மதிப்பது பௌத்தர்கள் மீது மட்டுமல்ல அது எம்மீதுமுள்ள கடமையாகும். இவ்வகையில், அவ்வாறான பிரதேசங்கள் புத்தர் பெருமானால் பிரகடனம் செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்தால் அங்கிருந்து எமது வணக்கஸ்தலங்ளை அகற்றுவதோ வேறு இடங்களில் அவற்றை அமைத்துக் கொள்வதோ எமக்குப் பிரச்சினையல்ல. எமது பிரச்சினை ‘புனித பூமிகளை’ பிரகடனம் செய்பவர்கள் யார்? அவர்கள் எந்த எல்லை வரை புனித பூமிப் பிரகடனங்களை விஸ்தரித்துச் செல்வர்? புனித பூமிப் பிரகடனம் எங்கு போய் முடியும்? இலங்கை புத்தர் பெருமானின் தேசம்? என்ற வாசகங்கள் இன்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகின்றன. நாளை இலங்கை முழுவதும் புனித பூமி என்று பிரகடனம் செய்யப்படுமா? அவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டால் அது புத்தர் பெருமானுக்கும் பௌத்த மதத்துக்கும் வழங்கப்படும் கௌரவம் என பௌத்த மக்கள் நினைக்கிறார்களா?

‘புனித பூமி’ எது? புனித பூமிக்குப் ‘புனிதம்’ எப்படி வருகிறது? இதனைத்தான் பௌத்த மக்களிடம் நாம் கேட்க விளைகிறோம். அவர்களது புனிதங்களின் மரபுரிமைகளை நாங்கள் மறுப்பவர்களல்லர். ஏனெனில், எமக்கும் புனிதத்தலங்களும் அவற்றிற்கான நடைமுறைகளும் இருக்கின்றன. 150 கோடிக்கும் அதிகமாக வாழும் 56க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய சமூகங்களில் ஒன்றுதான் முஸ்லிம் சமூகம். அத்தகைய ஒரு சமூகத்திற்கு உலகம் முழுவதும் மூன்று புனித பூமிகள் மாத்திரமே இருக்கின்றன. கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக நான்காவது ஒரு புனித பூமியை முஸ்லிம்கள் பிரகடனம் செய்யவில்லை என்பது… இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல சுமார் 10 நூற்றாண்டுகள் இஸ்லாம் உலகின் வல்லரசாக இருந்துள்ளது. இக்காலப்பகுதியில் உலகமெல்லாம் முஸ்லிம்கள் புனித பூமிகளைப் பிரகடனம் செய்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும்? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். படிப்பினை பெறுவோருக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...13976
மொத்த பார்வைகள்...216409

Currently are 130 guests online


Kinniya.NET