Breaking News:

பனித்துளிகள் (சிறுகதை)

2.10 க்கு விரல் ஒப்பமிட்டுப் பாடசாலை கேற்றடிக்கு வந்தும் பத்து நிமிடம் கடந்து விட்டிருந்தது. இடப்பக்கமாய் வளைந்து நீண்டு கிடக்கும் கிண்ணியாப் பாலத்தையும் வலப்பக்கமாய் தெம்பிலியும் வாழைக்குலைகளும் பளபளக்கும்நூர்தீன் நானாவின் பழக்கடையையும் இன்னும் எத்தனை தடவைகள்தான் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருப்பது.

எல்லா ரக வாகனங்களும் சர்ர்சர்ரென விரையும் இந்த மட்டக்களப்பு வீதியில் எனதருமைக் கணவனாரின் பைக்கை மட்டும் இன்னமும் காணோமே....

பாவம் அவரும் என்னதான் செய்வார்.அந்தப் பாதிமெண்டல் 1.30 க்கு ஸ்டாப்மீட்டிங் போட்டிருக்கும். நல்லவேளையாக சின்னவள் பீரியட் வயிற்றுவலியென்று ஸ்கூல் போகலே. இல்லாட்டி இப்ப அவளும் கூடத்தான் ரோட்டில் காய்ந்துகொண்டிருப்பாள்.

இவருக்கு மறுபடியும் கோல் பண்ணுவோமா என நினைத்துப் போனைக் கையில் எடுத்தாலும் தேவையில்லாம திரும்பத்திரும்ப சங்கடப்படுத்த வேணாமே என ஹேன்ட்பேகினுள் திணிக்கிறேன்.

மீதமாய் என்னோடு ஒட்டிக்கொண்டிருந்த நாலைந்து சீருடைச் சிட்டுக்களும் ஒவ்வொன்றாய்...அவரவர் ஓட்டோக்களிலும் பெற்றவர்களுடனுமாய் கிளம்பிக் கொண்டிருக்க...

‘’என்ன ரீச்சர்....சேர் இன்னும் ஏத்துறதுக்கு வரலையா...’’என்றபடி கேற்றை மூடி நடக்கத் தொடங்கிவிட்டாள் எங்க அலுவலகி சுஜானாவும்.

இப்போது எஞ்சி இருந்தது நானும் நதாவும் மட்டுமே.’’என்ன புள்ளே..ஓட்டோ வரலையா’’ என்கிறேன்.

கையில் இருந்த சிறிய குச்சியினால் கேற்றை மெதுமெதுவாய் தட்டியபடியே ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் சிலிர்த்தபடியாய்’’ இன்னமும் காணலையே ரீச்சர்’’ என்றாள்.

‘நாம கிளம்ப முதல் இவள வழியனுப்பியாகணுமே’என்ற புதிய ஆதங்கம் இப்போதெனக்கு. இல்லாட்டி பாவம் என்னவர்.’

இப்படியான தனிமைப்பட்ட சூழலில் எப்படி இந்த வளர்ந்த பிள்ளைகளைத் தனியே விட்டுட்டு நாம வீட்ட போற’ என்று என்னோடு காத்திருக்கத் தொடங்கிடுவார். ரெண்டு பெண்பிள்ளைகளைப் பெற்ற தந்தைக்கேயுரிய பொறுப்புணர்வுதான் அவருக்கும்.

அப்பாடா நல்லவேளையாக நதாவின் ஹோர்ன் சத்தம். நிமிர்ந்து பார்த்தேன் எங்கட மில்லுக்கு  அடிக்கடி அரிசிஏத்த வார இவருக்கு பழக்கமான தம்பிதான்.

ஓடிப்போய் ஏறியவள் என்பக்கம் திரும்பி ‘’உங்கட ஊட்டுவழியாத்தான் போவம் நீங்களும் ஏறுங்க ரீச்சர்’’ என்றாள் ஒருவகைத் துள்ளலோடு

‘’இல்லையேம்மா...நீங்க வெள்ளைமணல் பக்கமாத்தானே போவிங்க...’’

‘’நீங்க மொதல்லே வந்து ஏறுங்க ரீச்சர்...நான் இண்டேகி பைசல்நகருக்கு ம்மாக்கிட்டே போவபோறேன்.’’

என்னவருக்கும்ஓட்டோவில போறதா  ஒரு msg வைத்துப்போட்டுஅவளருகில் போய் உட்கார்ந்தவாறே கொஞ்சம் கலவரமாய் ‘’என்னது...ம்மா வீட்டுக்கா..’’என்றேன்.

அலைகடலோரமாய் ரம்மியமான சூழலும் குளுகுளுவென்ற இயற்கைக் காற்றுமாய்...வெளிச்சிக்கல்கள் கூட ஏதுமற்ற இப்பாடசாலைக்கு மாற்றலாகி வந்து நான்கு வருடங்கள் முடிந்து விட்டிருந்தன. பெற்றோர்,பிள்ளைகள் சக ஆசிரியர்களால் எந்த நெருக்கீடுகளும் இதுவரை வந்ததில்லை. ஆறாம் வகுப்பு தொடக்கம் பதினோராம் வகுப்பு வரைக்கும் நம்மட பாடத்திற்கு நாம மட்டுமேதான். நம்மட வலயம் நம்மள மாதிரி இன்னொருவரையும் இங்கே அனுப்பிவைக்காதா என்ற ஒரேயொரு எதிர்பார்ப்பைத்தவிர.

 இடைவெளியற்ற தொடர்ச்சியான பாடவேளைகள்....இரவுபகலாய் கண்களைப் பூக்கச்செய்யும் ஒப்படை,செயற்பாட்டுபத்திரங்கள்... கற்பித்தல் கடந்த இதர வேலைக்களுமென இடையிடையே களைப்பும் அயர்ச்சியுமாய் உடலும் உள்ளமும் சோர்ந்தே போனாலும் அதையும் மீறிய தெம்பையும் புதிய உற்சாகத்தையும் எனக்குள் உற்பவிப்பவை இந்த நதாபோன்ற சுறுசுறுப்பான செல்வங்கள்தான்.

இவளை ஆறாம் வகுப்பில் இருந்தே அவதானித்து வருகிறேன்.கெட்டிக்காரி.நேர்த்தியாக வருவாள்.லேப்புக்குள்ளே போறன்டா அவளுக்கு உயிர்.பரிசோதனைக்கென்று நாம கொண்டுவரச்சொல்ற பொருட்களுக்கு மேலையும் குசினிக்குள்ள உள்ள உப்பு,புளி,மஞ்சள் எல்லாம் அள்ளிக் கொண்டு வருவாள்.

ஏலவலுக்கும் நல்ல ஸ்கூலும் நல்ல ரீச்சர்சும் செட்டாகிட்டா சந்தேகமேயில்லை இவளொரு டொக்டர்தான்.என்று மனசுக்குள் அடிக்கடி கனாக் காண்பேன்.நம் கனவு நனவாக வேணுமேஎன்ற பிரார்த்தனைகளும் கூடவே வரும்.

‘என்ன புள்ளே ம்மாவீடு .....வாப்பாவீடு என்று கதை விடுகிறாய்....’’

மெதுவாய் கேட்டேன்.

அவள் சொல்லத் தொடங்கியபோது ‘அட இவ்வளவு நாளும் இது பற்றி விசாரிக்காம இருந்திட்டோமே என்று எனக்கே என்மீது எரிச்சலும் கோபமும்...

 என் வீடு வந்ததும் தேங்க்ஸ் சொல்லி  இறங்கிக் கொண்டேன்.அதற்கு முன்னமே ‘மறக்காம நாளெக்கி ம்மாவே கூட்டி வாமா என்றேன்.

‘’ ம்மாவேயா..’’.

உற்சாகமாய் தலையாட்டினாள்.

இடைவேளை நேரம் லேப்பிற்குள் பிள்ளைகள் கலைத்துப் போட்ட பொருட்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தபோது

‘’அஸ்ஸலாமு அலைக்கும் ரீச்சர் ‘’

நதாவோடு அவளருகில் முப்பத்தைந்து வயதில் இன்னொரு நதா.

‘’வலைக்குமுசலாம் வாங்கம்மா எப்படி சுகமா...’’

நதாவின் படிப்பில்  தொடங்கிய எங்கள் பேச்சு அவட உம்மா பற்றி வந்தபோது இடைவேளை முடிந்திருந்தது.timetable பார்த்தேன் இந்த ஐந்தாம்பாடம் எனக்கு ப்ரீதான்.நதாவை அவட வகுப்பிற்கு அனுப்பிவிட்டு சப்ராசிடம் ஒரு பெப்சிக்கு ஓடர் செய்தேன்.

‘என்னம்மா நதா இப்ப கொஞ்ச நாளா செரியான டல்லா இருக்கா. ஹோம்வொர்க் ஒண்டும் பண்ணி வாறதும் இல்லே அதோட மற்றபிள்ளகளோடையும் கடுகடுன்னு இருக்கா எடுத்ததெற்கெல்லாம் டென்ஷன்...தனிமையிலே ஆழ்ந்த யோசனை...அதுமட்டுமில்லாம ஸ்கூல் விட்டா ஒருநாள் வெள்ளைமணல்,ஒருநாள் பைசல் நகர் என்று மாறிமாறித் திரிஞ்சா அவ எப்படிப் படிக்கிற...என்னதான்மா ஒங்கட பிரச்சினை...’’

‘’.ஓம் ரீச்சர் நான் ஸ்கூலுக்கு நாலஞ்சி தரம் வந்தப்பவேல்லாம் ஒங்களே சந்திக்க முடியாமப் போயிற்று.நதாட கிளாஸ் டீச்சருக்கு எல்லாம்தெரியும்’’ ....குரல் கொஞ்சமாய் கரகரக்க...

‘நதாட வாப்பா...’’ மெதுவாய் இழுத்தேன்.

‘’அவர் சூடான் நாட்டுக்கு வேலைக்கு போனார்.இப்ப லீவுல வந்திருக்கார்போல .’’

‘’எனா சூடானுக்கா....மரியான் படத்துல நம்ம தனுஷ் தீவிரவாதிங்களுக்கிட்ட மாட்டி சீரழிஞ்சு வீடுவந்து சேருறத பாத்துப் போட்டுமா அங்க அனுப்பினிங்க...’’சிரித்தபடியே கேட்டேன்.

இயல்பாகப் பழகியவள்போல என் தோளில்தட்டியபடியே ‘’ரீச்சர்..’’என்று கலகலத்தவளின் முகம் திரும்பவும் மெதுமெதுவாய் இறுகிக் கண்களும் கலங்கிட...நான்பதறிப் போனேன்.

‘’சொறிமா...நான் தவறா ஏதும்.....’’

‘’இல்லே...இல்லே..அவரு தீவிரவாதிங்ககிட்ட அகப்பட்டிருந்தாலாவது உசிரக் குடுத்தாவது மீட்டு வந்திருப்பேனே ரீச்சர்.ஒரு கேடுகெட்ட பொம்பிளக் கிட்ட இல்லையா மாட்டிகிட்டார்.எண்ட வாழ்க்கையே செதஞ்சு போச்சே....’’மறுபடியும் சிறு விசும்பல்.

ஆறுதலுக்கு அவள் தோளைமெதுவாய் தொட்டேன்.

‘’பிறகு.....?.’’

‘’என்னையும் விரும்பித்தான்  முடிச்சார்.டைவிங் போவார் .போதுமான வருமானம் நதாக்கு ஒரு தம்பியும் இருக்கு.ஒரு கொறையுமே இல்லாம நல்லாத்தான் வாழ்ந்தோம்...என்ன செய்றது... விதி ...இவருக்கு வந்த பேராசை...வெளிநாட்டு போறேன்டு .ஓடியோடித் திரிஞ்சார் கொழும்பிலே லொட்ஜிலே கண்ட பழக்கமாம் பிறகு பார்த்தா...எனக்குத் தெரியாம அவளோடையும் கள்ளத்தனமா ....’’மறுபடியும் கன்னங்களில் ஈரம்.

ஊருக்குள்ளே கொஞ்சங் கொஞ்சமாய் கசிஞ்சாலும் நான் நம்பவேயில்ல ரீச்சர்...அவரில அவ்வளவு நம்பிக்கை.எல்லாம் முடிஞ்ச பிறகுதான் உண்மை தெரிஞ்சுது.எவ்வளவு அழுது கெஞ்சி மன்றாடியும் பயனில்ல...அவர்ட முழுக் குடும்பமும் ஒத்துத்தான் கூட்டிக்குடுத்திருக்காங்கபோல.....ஊர்ல ஒலகத்துல நடக்காத ஒன்டா...அவன் ஆம்பிளைதான எதுவும் செய்வான்.ஒனக்கு சோறும் சீலையும் தந்தா சரிதானே எண்டாங்க.’’

‘என்னது சோறும் சீலையும் மட்டும்தான் ஒரு பெண்ணோட வாழ்க்கையா...அப்பா அதைத் தாண்டி அவளுக்கு இந்த  உலகத்துல ஒண்டுமே இல்லையா...என்ன கணிப்பீடு இது..’

எனக்கும் சூடானது..

‘’அப்ப அவர் என்னம்மா சொன்னார்?’’

‘’சந்தர்ப்பசூழல் தவறு நடந்திட்டு...ஒனக்கு ஒரு கொறையுமே வராம பார்த்துக்கிட்டு அவளையும் வெச்சுக்கொள்றேனே’’  எண்டார்

‘’.சீ...யாருக்கு வேணும் இந்த அரை வாழ்க்கை ....நீ அவளோடையே கிடந்து சாகுடாண்டு சொல்லிப்போட்டு  எங்க வீட்டுக்கே திரும்பி வந்திட்டேன் ரீச்சர்.’’

ஏன் ரீச்சர் நான் இப்படி செய்திருந்தா நெலமே எப்படி இருந்திருக்கும்?நாமளால இப்படியெல்லாம் நெனச்சுக் கூட பார்க்கேலுமா..?

‘’சரிமா..முதல் மனைவியோட அனுமதி இல்லாம ஆண்கள் ரெண்டாவது முடிக்கேலா  என்டுதான சொல்றாங்க ...பிறகு ஒங்களுக்குத் தெரியாம இது  எப்படி,,,?

கண்களைத் துடைத்துக் கொண்டவாறு நிமிர்ந்தவள் ‘அவன்களுக்கு ’எதுக்கு

ரீச்சர் நம்மட அனுமதியெல்லாம்..இங்கே எல்லாமே சும்மா பேருக்குதான்..காசவீசி எறிஞ்சா இந்தக் கள்ள மௌலவிமார் ஒடனே காவின் எழுதிடுவாங்களே...’’

ச்சே...என்ன மனிதர்கள் இவர்கள்...பெண்களின் உணர்வுகளுக்கெல்லாம் ஒரு தனித்துவம் மதிப்பு மரியாதை என்றெல்லாம்  ஒண்டுமே இல்லையா...

என் உடலும் மனசும் ஒருசேர ஒடுங்கிப்போனது..

‘’அப்ப பிள்ளைகள்....’’.

 ‘’எவ்வளவோ மன்றாடியும் தர மறுத்திட்டான்.மகன் ஒருநாள் அவருக்கிட்ட சொல்லிக்கொள்ளாமலே ஒடி வந்திட்டான்.வாப்பாக்காரன் வந்து காலுல உழுந்தும் அவன் போகல நதாதான் பாவம்.அங்கேயும் இங்கேயுமா அல்லாடுறா..

யா அல்லாஹ் இதென்ன கொடுமை.இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?பெற்றவர்களின் பொறுப்பற்ற நடத்தைகளால்...தேவையற்ற சலனங்களால்..சபலங்களால்...பிள்ளைகளுக்கு எவ்வளவு பெரிய சிக்கல்கள்?

மனசு மறுபடியும் பதறியது.

‘’இவ்வளவுநாளும் போனது போகட்டும்...நதாட ஒலேவல் எக்ஸாமுக்கு இன்னமும் மூன்று மாசந்தான் இருக்கு.ஒழுங்கா க்ளாஸ் போகணும்,ஒழுங்க படிக்கணும்.நல்ல ரிசல்ட்டுக்கு எதிர் பார்க்கிற பிள்ளை இல்லையா இவள்.

உங்க கணவரோட பேசி ஒரு இடமா அவ இருக்கிறமாதிரிப் பாருங்க.அங்கே ரெண்டு கொப்பி...இங்கே மூண்டு உடுப்பு... இதெல்லாம் படிக்கிற பிள்ளைக்கு ஒருநாளும் சரிப்பட்டு வராது/’’என்றேன் கொஞ்சம் இறுக்கமாய்.

‘’அவ அங்கேதான் இருந்தா ..எனக்கு நல்லாத்தெரியும் அவருக்கு பிள்ளைகள் என்டா உசிர்.அந்தப் பொம்பிளையும் ஒரு குறை வைக்காமதான் பார்த்திருக்கா..அவருக்கு அங்கேயும் ரெண்டு வயசு மகன்.அவன்ட துடினம் கரைச்சல் தவிர வேற ஒரு பிரச்சினை இல்லேண்டுதான் அடிக்கடி சொல்லும்..அதுதான் பிள்ளையைஒரேயடியா  வரச்சொல்லி தெண்டிக்கல்ல.

இப்பதான் அவளுக்கு அங்கே புதுப்பிரச்சினை....’’என்று சொல்லி இழுத்தாள்.

‘’என்ன’’

‘’அவட தம்பிக்காரன் ஒருத்தன் அங்கே அடிக்கடி வாறானாம்.இடைக்கிடையே ராவைக்கும் நிக்கிறானாம்.அவனது பார்வை போக்கு சரியில்லையாம்.அதான் பயப்படுறாள்.’’

ச்சே...ஒரு பிள்ளைக்குத் தன்சொந்த வீடே பாதுகாப்பு இல்லாமப் போறது மகா கொடுமை.

;;ரீச்சர்...பாடம்’’

 பத்தாம் வகுப்பு மொனிற்ரர் சிம்லா.

‘’அட பெல்லடிச்சது விளங்கல்லையேமா...சரி போங்க வாறன்’’.

அப்ப ‘’சரி ரீச்சர் நாங்க பிறகு பேசுவம்...என்ரபிள்ளையை  நல்லா கவனிச்சுக் கொள்ளுங்க.புத்தி சொல்லிக் கொடுங்க.உங்கட கதைய அவள் கேட்பாள்.’’

[நல்ல வேளையாக அன்றைக்கொரு வாப்பா சொல்லிவிட்டுப் போனமாதிரி ‘’பொடியன் சொன்னசொல் கேட்கிறான் இல்லே ஒங்களயும்  கரைச்சல் குடுத்தான் எண்டா கண்ணை மட்டும் விட்டுப் போட்டு பயப்பிடாம மத்த எல்லா இடமும்அடியுங்கரீச்சர் ‘’ எண்டு இவளும் சொல்லவில்லை.]

வீட்டுக்கு வந்து நெடுநேரமாகியும் ஒரு வேலையும் ஓட வில்லை.நதாட கிளாஸ் ரீச்சர் நஜினாவுக்கு callஎடுத்தேன்.

‘’.............அப்ப இது ஒங்களுக்குமட்டும்தான் டீச்சர் இது தெரியா..’’

‘’அதெல்லாம் விடுங்க ரீச்சர்.இவ ஒழுங்கா எக்ஸாம் எழுதி அடுத்த கட்டத்திற்கு போகணும்.இருந்து படிக்க இவளுக்கு பாதுகாப்பான வீட்டுச் சூழல் தேவை....அவட வாப்பாவோடையும் பேசிப் பார்ப்பமா...’’

சுகைரா ரீச்சரோடும் பேசுவோம்சரியா...’’

மாடியில் ஆலோசனை வழிகாட்டலுக்கான அறை.

‘’அஸ்ஸலாமு அலைக்கும் நான் நதாட வாப்பா.’’

ஒரு நாற்பது..நாற்பத்தொரு வயசிருக்கலாம்.குப்பென்ற சென்ட் மணமோ...சிகரட் நெடியோ இல்லாமல் உடையும் பேச்சும் பார்வையும்கூட கண்ணியமாகவே தெரிந்தது.நதாவின் உம்மா வாறது தொடர்பில் நாங்க அவருக்கு அறிவிக்கவில்லை.

அதிபரிடம் இது தொடர்பில் பேசி ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தோம். எங்கட அதிபர் நலீப்சேர் எங்களில் முழு நம்பிக்கை வைத்து எங்களை சுயமாக இயங்க விடுபவர்.அவரின் ஆழமான வாசிப்பு அனுபவமும் நல்ல இலக்கிய ரசனையும் கூட இதற்குக் காரணமாய் அமைந்திருக்கலாம்.அதிலும் ஆங்கில இலக்கியத்தில்  ஆழமான ஈடுபாடு கொண்டவர். 

 நான்,வகுப்பாசிரியை நஜீனா,கவுன்சிலிங் சுகைரா ரீச்சர். நதாவின் உம்மா தவிர அறைக்குள் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

கண்டவுடன் இருவருக்குமே அதிர்ச்சி,பதட்டம்,கோபம்,ஆத்திரம்.

நாங்கள் மாறி மாறிப் பேசினோம்.

எங்கள் மூவரின் பேச்சும் நதாவின் படிப்பு,,பாதுகாப்பு,அவளின் டாக்டர் கனவுகள் பற்றி மட்டுமே

.எனினும் உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எவ்வளவு நேரத்திற்குப் பொறுக்கும்,

இடையிலே அவள்தான் ஒரு கட்டத்தில் எல்லை மீறினாள். ‘’ச்சீ...நீயெல்லாம் ஒரு மனுசனா,,,?நம்பி வந்த என்ன நடுத்தெருவிலே விட்டுப்போட்டு அவளோட போனாய்தானே...இப்ப பெரிசா சபையிலே பேச வந்திருக்கார்...’’

அவன் கிடந்து பதறினான்

‘’இல்லே..இல்லே..அதே மட்டும் இங்கே இழுக்காதிங்க..இங்கே நாம நதாட படிப்பு பத்தித்தான்  பேசுறோம்....நான் ஒங்களே ஏமாத்தலதானே...கை விடலதானே....’’

என்னது...ஏமாத்தலையா...இதெவிட என்னடா ஏமாற்றம் வேணும்...??’’

அவள் குரல் உயரஉயர...இங்கே வேறு யாராவது வந்து விடுவார்களோ என்று  நான் உண்மையில் பயந்தே போனேன்.நல்ல வேளை அப்படியொன்றும் நடந்து விடவில்லை.

திடீரென சுஹைரா டீச்சர்தான் கேட்டாங்க,

‘’நீங்க ரெண்டுபேரும் டைவர்ஸ் பண்ணிட்டிங்களா...’’

‘’எங்க டீச்சர்...நான் காதிக்கோட்டுக்கல்லாம் குடுத்தேந்தான் ....இவன்ஒரு தவணைக்குமே வரலையே ...மாசாமாசம் காசெல்லாம் ஒழுங்கா தாரத்தாலே எங்களுக்கும்  பெரிசா ஒரு நடவடிக்கையும் எடுக்கேலாண்டு அவங்களும் கையை விரிச்சிட்டாங்க...’’

‘’அப்ப ஒங்களுக்கு இன்னொன்று முடிக்கிற ஐடியா ஏதும்...’’

‘’ச்சீ...இன்னொன்டா...விரும்பி முடிச்சி...2 புள்ளைகள் பெத்து 12 வருஷம் ஒன்டா வாழ்ந்த இவனே இப்புடித் துரோகம் செஞ்சிட்டான் ...இனி இன்னொருத்தனை நான் நம்பவா..?’’

நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம்.

சுகைரா ரீச்சரே திரும்பவும் தொடங்கினார்.ஆலோசனை வழிகாட்டலுக்கும் பொறுப்பானவர் அல்லவா...இப்படியான எத்தனை பிரச்சனைகளைத்தான் கண்டிருப்பார்.

‘’பிள்ளையின் படிப்புக்காக கொஞ்ச நாளாவது ரெண்டு பெரும் சேர்ந்து வாழுங்களேன்மா...நதாவும் எங்களுகிட்டே இதத்தாம்மா சொல்றா.உம்மாவும் வாப்பாவும் ஒண்டா சேரணும்.எப்பவுமே ரெண்டுபேருமே எங்களுக்கு வேணுமென்று....’’

முதலில் இருவருமே மிகக்கடுமையான வார்த்தைகளால் இதற்குத் தம் எதிர்ப்பை வெளிக்காட்டினாலும் நாங்கள் மூவருமே மாறிமாறி முன்வைத்த கருத்துகளுக்குள் கொஞ்சம் அடங்கிப் போனார்கள்.

எனக்கு அந்தப் பெண்ணின் சுயமரியாதையில் கை வைக்கிறோமோ என்ற குற்றவுணர்வு அதிகமாய் அழுத்தியது.

அன்றைக்கு என்னவோ நதாவின் பாதுகாப்பு,படிப்பில் மட்டுமே எங்கள் மொத்தக் கவனமும்.’

’யா அல்லாஹ்..எல்லாத்துக்கும் நீயே பொறுப்பு’’

அடுத்துவந்த மூன்று மாதங்களிலும் ஏனைய பாட ஆசிரியர்களாலும் அவதானித்துக் கூறக் கூடிய அளவுக்கு நதாவில் நல்ல முன்னேற்றம்.

இடைக்கிடையே நதாவின் உம்மாவுக்குக் கோல் பண்ணுவேன்.உற்சாகமாய் பதில் வரும் .பிள்ளையின் படிக்கிற ரூமுக்குள் நல்ல பவரான லைட் போட்றது தொடங்கி pastpappers வாங்கிகுடுக்கிறது...பிள்ளை படிச்சுமுடிச்சித் தூங்குற வரைக்கும் வீட்டில முடியுமான அளவு நாமளும் முழிச்சிருக்கிற வரைக்கும் எங்கட உரையாடல் தொடரும்.

‘’எனா...இந்த வார டிசம்பர் லீவுல அந்தப்பிள்ளை நதாவோட வீட்ட ஒரு தரம் போய் வருவமா...?அதுட உம்மா என்ன எப்பவும்தான் கூப்பிடுறா...’’

கணவரிடம் மெதுவாய் கூற...அவரோ ஒரு நக்கல் சிரிப்போடு அதைவிடவும் மெல்லிய குரலில் என்னிடம் கேட்டார்...’’என்ன அந்தப் பிள்ளை நல்லாப் படிக்குதா எண்டு பார்க்கவா...இல்லே...அவட உம்மாட familylife பற்றி நோண்டவா...அங்கே போவப்போறிங்க....’’

டிசம்பரின் இடைவிடாத மழையும் வெள்ளமும் அது பரிசாய் கொண்டு தந்த குளிர் காய்ச்சலும்...எனக்கே எனக்கான விருந்தினர்களுமாய்...எப்போதும் போலவே எனது விடுமுறைக் காலம் மட்டும் வீட்டோடையே முடிந்துவிட....உண்மையில் .நதாவை[பற்றிய நினைவே முற்றாய் மறந்துபோனது.

அடுத்து வந்த ஜனவரியின் நடுப்பகுதி.

எங்கள் புதிய ஆறாம்தர விஞ்ஞானிக்குஞ்சுகளோடு லேப்பிற்குள்.

இன்னமும் பெயர் மனசுக்குள் சரியாய் நிக்காத புதுமுகங்களின் செல்லக்கலகலப்புகள். நுணுக்குக் காட்டியில்வைத்து அவதானிக்கவென அந்தப் பிஞ்சுகள் கொண்டுவந்து குவித்திருந்த பழைய பாண்துண்டுகளும்.பரமீசியங்கள் நீந்தி விளையாடும் வைக்கோல்நீர் பொலித்தீன் முடிச்சுகளும்...பூஞ்சணம் பிடித்த microscope lens களுமாய் நான் வியர்த்து வழிந்து கொண்டிருந்தவேளை....

‘’ரீச்சர்..’’

எனக்கு மிகவும் பரிச்சயமான அந்தக் குரல்...

நதாவின் உம்மாதான்’

 முன்னரையும் விடவும் கொஞ்சம் பளபளப்பாய்...புதிய டிஸைன்அபாயா.. ரெப்செய்த சோலுமாய் சிரித்தபடி அருகில் வந்தவள்...’எப்படி சுகமா...’’ என்றாள்.

‘’நல்ல சுகம்...நீங்க..நதாவெல்லாம் எப்படி...’’

‘’நல்லம்டீச்சர்....நீங்க சொன்ன மாதிரியே நைட்டா சென்டர்ல IT கிளாஸ்,பிறகு இங்கிஷ் கிளாசுக்கெல்லாம் போறா...மகனையும் இங்கேயே செர்த்துவிடுவம் என்றுதான் நானும் அவங்களும் வந்த...நிறையத்தரம் ஒங்களுக்கு கோல் எடுத்தேன்...ஆன்சர் இல்லே...நம்பர் மாத்திட்டிங்களா...நதா ஒங்களுக்கு சலாம் சொல்லச்சொன்னா...மீட்டிங் தொடங்கப்போகுது..நான் போயிற்று வரவா...ரீச்சர்..’’என்று திரும்பியவளிடம்

கேட்பதா...விடுவதா என்ற சிறிய மனப்போராட்டத்தின் முடிவில் கேட்டே விட்டேன்.

‘’பிறகு...ஒங்கட familylife எல்லாம் எப்படிம்மா  போகுது...’’

அதற்குள் அவள் போன் வைப்ரைட்டாகியது.அவள் கணவராகத்தான்இருக்க வேண்டும்.ஒருவிதப் பூரிப்போடு விரைந்து அருகில் வந்தவள் முகத்தில் படர்ந்திருந்த வியர்வையைக்கூடப் பொருட்படுத்தாமல் என்னை இறுக அணைத்து கன்னத்தில் ஒரு முத்தமும் வைத்தபடி ‘’அவங்க கூப்பிடுறாங்க...  பிள்ளைகளையும் கூட்டிகிட்டு ஒங்கட ஊட்ட வாரேன்ரீச்சர்....’’’என்றபடி விரைந்தாள்.

நதா என்றால் அர்த்தம் பனித்துளியாம்

இருபத்தொரு வருட ஆசிரியப் பணியில் கடந்துவந்த பனித்துளிகளின் பலவகைமைகளை என்னவென்பது...

நாம் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் போராடியும் பெற்றவர்களின் அலட்சியப்போக்குகளால்,பொறுப்பற்ற செயல்களால்...மோசமான குடும்பச்சூழ்நிலைகளால்....பெரும் எதிர்பார்ப்புகளோடு மண்ணில் விழுந்த மறுகணமே வற்றி வரண்டு காய்ந்துபோனபனித்துளிகளும்....

சூழல் வேப்பநிளைக்குத் தகுந்த மாதிரி தன உடல் வெப்பநிலையை மாற்றி வாழப்பழகிக்கொண்ட ஈருடகவாழிகளாய் ....இவள் போன்ற தான் பெற்றவைகளுக்காய்...தன சுயம்,பிடிவாதம்,தன்மானம் அனைத்தையுமே துறந்து தாய்மையின் அர்ப்பணிப்புகளால்  வற்றாத நதியாகி சமூகத்துக்குப் பெரும்பயன்தரும் பனித்துளிகளும் எனநான் நனைந்து கரைந்த வைரத் துளிகள்தான் எத்தனை...எத்தனை....

மெதுவாய் கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொள்கிறேன்...நிறைந்த மனசோடு.

 

எஸ்.பாயிஸா அலி

         

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top