Breaking News:

தேசத்தைக் காக்க ஒன்றுபடுவோம்...!

அவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள்
எதற்கிப்படிச் செய்தார்கள்
என்றெல்லாம்
எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை
எண்ணிப்பார்க்க விருப்பமுமில்லை
அந்த முகங்களை
ஆங்காங்கே ஊடகங்களில்
காணுகின்ற போது
அருவருப்பாகவும் வெறுப்பாகவுமிருக்கிறது

உலகத்திலுள்ள
எல்லா அசிங்கங்களையும்
ஒன்றுசேர்த்தால்
என்ன உருவம் கிடைக்குமோ
அந்த உருவமாகத்தான்
அவர்கள் என் கண்களுக்குக் காட்சி தருகிறார்கள்

இறைவா!
இப்படியொரு அசிங்கத்தை
இனிமேலும்
எம் கண்களுக்குக் காட்டிவிடாதே!
இப்படியொரு கொடூரத்தை
இனிமேலும்
எமது மனித குலம்
சந்தித்திடக் கூடாது

தமது வணக்கஸ்தளத்தில்
இறைவனை வணங்கிக்கொண்டிருந்த
எனதருமைச் சகோதரர்கள்
ஒரு நொடிப்பொழுதேனும்
இந்தக் கொடூரத்தை எண்ணியிருக்கமாட்டார்கள்

ஒரு கன்னத்திலடித்தால்
மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன
அந்த இயேசுபிரானின்
உருவச் சிலையையே சின்னாபின்னப்படுத்திய
அரக்கர்களைச் சித்தரிக்க
என்னிடம் வார்த்தைகளில்லை

இவர்களைக் குறிக்குமளவிற்கு
எனது தாய்த்தமிழில்
கேவலமான சொற்கள்
எதுவுமில்லை

இவர்கள்
எமது மனித குலத்தின்
எதிர்ப்பதங்கள்
மனித குல அகராதியில்
இவர்களை அடையாளப்படுத்த
இனியும் எந்தப் பதங்களையும் அனுமதிக்காதீர்கள்

அந்தக் காலைப் பொழுதில்
தாயின் கைகளைப் பிடித்து
தந்தையின் தோள்களில் சாய்ந்து
மதமென்றால் என்னவென்றே தெரியாது
வணக்கஸ்தளத்தினுள் சென்ற
பச்சிளம் பாலகர்கள்
வெடித்துச் சிதறினார்கள்

இரத்தம் குடிக்கும்
அயோக்கியத் தீவிரவாதிகளே
இந்தப் பிஞ்சுகளின்
பால் வாசனையில் கூடவா
உங்கள் கல் மனசு கரையாமல் போய்விட்டது...?

எத்தனை தாய்மார்கள்…
எத்தனை முதியோர்கள்…
அவர்களுடைய பொக்கு வாய்ச்சிரிப்பும்
தளர்ந்த நடையும் கூடவா
உங்கள் காட்டுமிராண்டித் தனத்தை
தனிக்காமல் விட்டுவிட்டது...?

எத்தனையோ
இளைஞர் யுவதிகளை
உமது இரும்புக் குண்டுகள்
இல்லாது செய்திருக்கி ன்றன
அவர்கள் உம்மைப்போல்
இந்த உலகில் வாழப்பயந்து
உயிரை மாய்த்துக்கொண்ட கோழைகளல்லர்
வாழ்க்கையை வாழுவதற்காக
இறுதி மூச்சு வரை போராடிய
இரும்பு நம்பிக்கை படைத்தவர்கள்
என்ற உண்மை உமக்கொரு போதும்
புரியாது!

இந்த மனித குலத்தை
கருத்தால் எதிர்கொள்ளத்
துணிவில்லாத துர்ப்பாக்கியசாலிகள்தான்
துப்பாக்கி ஏந்துகிறீர்கள்
உமது கொள்கைகளைத்
தப்பாக்கி நாம் மீண்டெழுவோம்

மதங்கள்... மார்க்கங்கள்...
வணக்கங்கள்... வழிபாடுகள்...
இவற்றையெல்லாம் தாண்டி
அன்பினாலும் கருணையாலும்
பண்பினாலும் பாசத்தாலும்
கண்ணீராலும் இரத்தத்தாலும்
வலியாலும் பசியாலும்
துன்பத்தாலும் இன்பத்தாலும்
நாங்கள் ஒன்றுபட்டவர்கள்

வேசம் போடும் நாசகாரிகள் உம்மை
தேசத்தைவிட்டுத் துடைத்தெறிவோம்
வாசம் வீசும் மானுடத்தை
இனி
பாசம் கொண்டு மலரச் செய்வோம்

- ரா.ப.அரூஸ்
கிண்ணியா.

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top