Breaking News:
 
 
கிண்ணியாவின் முதல் தபால்காரர் 'மனாப் நானா' என எல்லோராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் ரீ.அப்துல் மனாப் அவர்களாவார். மர்ஹூம்களான அப்துல் கரீம் -தையூப்,  கயாத்து – காதரும்மா தம்பதிகளின் புதல்வராக 1926.06.28ஆம் திகதி சின்னக்கிண்ணியாவில் இவர் பிறந்தார்.
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்ற இவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் ஆங்கில கல்வியில் கொண்ட மோகம் காரணமாக திருகோணமலை சென்று ஆங்கிலக் கல்வி கற்றார். 
தனது 19வது வயதில் இலங்கைக் கடற்படை சிவில் பிரிவில் பணியாற்றி வந்த இவர் 24வது வயதில் அதாவது 1950.06.28ஆம் திகதி தபால்காரராக (Postman) நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது தபால்காரர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
 
அப்போது ஆங்கிலம் வாசிக்கத்தெரிந்த ஒரு சிலருள் இவர் இருந்ததால் இந்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட இவர் ஆரவாரமில்லாமல் தனது பணியை மேற்கொண்டு வந்தார்.
 
இவர் நியமனம் பெற்ற காலப்பகுதி கிண்ணியாவின் கல்வி வளர்ச்சியின் ஆரம்பப் பகுதி என்பதால் கிண்ணியாவுக்குள் அவ்வளவு கடிதப் போக்குவரத்து இருக்கவில்லை. இதனால் ஒரு தபால்காரரின் தேவை மட்டுமே கிண்ணியாவில் இருந்தது. இதனால் இவர் மாத்திரமே கிண்ணியாவுக்கு வரும் கடிதங்களை விநியோகிக்கும் பொறுப்பை செய்து வந்தார். 
 
சைக்கிளில் செல்லும் நடைமுறை அப்போது இருக்காததால் தோளில் தபால்பையை சுமந்து கால்நடையாகவே சென்று கடிதங்களை விநியோகித்து வந்தார். பின்னர் சனத்தொகை அதிகரிப்பு, கல்வி மட்ட அதிகரிப்பு என்பன காரணமாக தபால்காரர்களின் தேவை அதிகரித்து வந்ததால் தபால்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டது. தபால்காரர்களுக்கு சைக்கிள் கொடுக்கும் நடைமுறையும் வந்தது.
 
1954.03.15 ஆம் திகதி பூவரசந்தீவைச் சேர்ந்த முகம்மது மீராசா- றகுமத்தும்மாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் தனது நிரந்தர வசிப்பிடத்தை கிண்ணியாவுக்கு தெற்கேயுள்ள பூவரசந்தீவுக்கு மாற்றினார். இவர் அங்கிருந்தே தனது கடமைக்காக தினமும் கிண்ணியாவுக்கு வந்து சென்றார்.
 
பூவரசந்தீவு - கிண்ணியாப் போக்குவரத்துக்கு நேரடி தரைமார்க்கப் பாதை அன்று இருக்கவில்லை. இடையில் குறுக்கிடும் களப்புகளைக் கடந்தே செல்ல வேண்டும்.  இவ்வாறான சூழ்நிலையில் தமது சைக்கிளை தோளில் சுமந்து களப்புகளைக் கடந்து இவர் பயணஞ் செய்தார்.
 
வீட்டிலக்கம், வீதியின் பெயர் என முழுமையான முகவரி எழுதப்படாத நிலையிலேயே அனேகமான கடிதங்கள் கிண்ணியாவுக்குள் வரும். (இந்த நிலை இன்றும்  காணப்படுகின்றது.) ஒரு சிறந்த தபால்காரர் என்ற வகையில் கிண்ணியாவிலுள்ள சகல தரப்பினரையும் இவர் தெரிந்து வைத்திருந்ததால் அவற்றை உரியவருக்கு விநியோகிப்பதில் இவருக்கு சிரமம் இருக்கவில்லை. 
 
பிற்காலத்தில் இவரோடு இணைந்து பணியாற்றிய இளம் தபால்காரர்களுக்கு உரிய முகவரிக்காரர்களை அடையாளங்காட்டிக் கொடுப்பதில் இவர் ஆற்றிய பணி மகத்தானது.
 
மர்ஹூம் பாருக் (முன்னாள் தபால்காரர்), இப்னு சுஹூத், மர்ஹூம் நிஹ்மத்துல்லாஹ் (முன்னாள் ஆசிரியர்), முதார் பீவி, ஆபிலா, லைலா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
தனது 32 வருட கால தபால்காரர் சேவையிலிருந்து 1982.06.28ஆம் திகதி இவர் ஓய்வு பெற்றார். தனது 82வது வயதில் 2008.10.17 ஆம் திகதி இறையடி சேர்ந்தார். இவரது ஜனாஸா பூவரசந்தீவு பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

தேடல்:

ஏ.சி.எம்.முஸ்இல்

 

முதன்மையானவர்கள்

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top