Breaking News:

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புக; திருமலையில் ஜனாதிபதி உத்தரவு

நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

“பயிர் செய்கையை விரிவுபடுத்த அதிக நிலம் தேவை. எனவே, விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை விரைவாக அடையாளம் காண வேண்டும். விளைச்சலை அதிகரிக்க காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் முக்கியமானதாகும். இந்த நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு உதவுங்கள் ”என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

அனைத்து பிரதேசங்களிலும் விவசாயத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது முக்கிய தேவை ...

                    விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்க உதவுங்கள் ...

  • ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் ...

சமூகத்தின் மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000 பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் பெறுவோர்களுக்கு ஒரு துறையில் மட்டும் வரையறுக்கப்படாத பல்நோக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இன்று (27) முற்பகல் திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவில் உள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற  “கிராமத்துடன் உரையாடல்”  12வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத்  தெரிவித்தார்.

 “கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

திருகோணமலை நகரிலிருந்து 45 கி.மீ தூரத்தில் மொரவெவ, குச்சவெளி, பதவி ஸ்ரீபுர மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவபத்தானை பிரதேசத்திற்கு எல்லையாக கோமரன்கடவல அமைந்துள்ளது. கோமரன்கடவல நகரின் மத்தியிலிருந்து கிவுலேகடவல கிராமத்திற்கு உள்ள தூரம் 8 கி.மீ ஆகும். அநுராதபுர யுகத்திற்கு சொந்தமான பல தொல்பொருள் எச்சங்களை கொண்ட கிராமமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோமரங்கடவல மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்த பிரதேசங்களாகும்.

கிவுலேகடவல, அடம்பனே, குட்டிக்குளம் மற்றும் கோணபெந்திவெவ ஆகிய கிராமாங்கள் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவுக்கு சொந்தமானவையாகும். 416 குடும்பங்களைக் கொண்ட கிவுலேகடவல கிராமத்தின் மக்கள் தொகை 1191 ஆகும். இவற்றில் 125 குடும்பங்கள் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களாகும். நெற் பயிர்ச்செய்கை பெரும்பான்மையான மக்களின் பிரதான ஜீவனோபாயமாகும். சோளம், கௌபீ, கடலை மற்றும் மரக்கறி பயிர்களும் இடைப் பயிர்களாக பயிரிடப்படுகின்றன.

ஜனாதிபதி அவர்கள் “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக கிவுலேகடவல பாடசாலைக்கு செல்லும் வழியில் பாதையின் இரு புரங்களிலும் கூடியிருந்த மக்களிடம் பிரதேசத்தின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அருகிலிருந்த சில வீடுகளில் இருந்த மக்களுடனும் உரையாடிய ஜனாதிபதி அவர்கள் இம்முறை போகத்தின் போது நெல் விளைச்சல் குறித்தும் கேட்டறிந்தார். கிலோவொன்றுக்கு 50 ரூபா குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாத ஈரலிப்பான நெல்லை 43ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார். தங்களது நெல் அறுவடையை அரசாங்கத்திற்கோ அல்லது கொள்வனவு செய்யும் எந்தவொரு தரப்பினருக்கும் தங்களது விருப்பத்தின் பேரில் விற்பனை செய்ய முடியும் என்றும், அரசாங்கம் அதற்கு எவ்வித நிபந்தனையையும் விதிக்க வில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

'கிராமத்துடன் உரையாடல்' திட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு, எஸ்.எல்.டி மொபிடெல் நிறுவனமும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் பாடசாலை சேவைகள் இராஜாங்க அமைச்சும் இணைந்து கிவுலேகடவல பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்து வைத்து, டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி தொகுதி மற்றும் இணைப்பை ஜனாதிபதி அவர்கள் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

கந்தளாய் கம்தலாவ மகா வித்யாலயத்தின் மாணவர் சதுர மதுமால் வடிவமைத்த " காலணிகளில் பொருத்தப்பட்ட நடக்கும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய கண்டுபிடிப்பை  ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் முடிவு செய்துள்ளார். 'அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை' என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்களினால் பாடசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடங்களுக்குரிய 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் கோமரங்கடவல மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையாகும். கிராமவாசிகள் முன்பு பயங்கரவாத அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

போரினால் இடம்பெயர்ந்து அமைதிக்கு பின்னர் தமது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பி மீளக் குடியேறிய கிராம மக்களின் விபரங்கள் குறித்து ஆராய்ந்ததன் பின்னர் உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள்அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காணி கச்சேரியொன்றை நடத்தி மகதிவுல்வெவ மற்றும் திவுல்வெவ பகுதிகளில் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.

யாங் ஓயா திட்டத்தால் காணிகளை இழந்து நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், ஏனைய பிரச்சினைகளை தீர்க்கவும் மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வாக அடுத்த ஆண்டுக்குள் திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளை உள்ளடக்கிய 67 கி.மீ நீளமுள்ள யானை வேலியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணிகளை விரைவாக நிறைவுசெய்யவும், பக்மீகம, மதவாச்சிய, தம்பலகாமம், பத்தாம் கட்டை, மொரவெவ உள்ளிட்ட கிராமங்களில் செயலற்றிருக்கும் யானை வேலிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு  பணிப்புரை விடுத்தார்.

பிரதேச செயலாளர், வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் இணைந்து யானை வேலியை அமைத்தல் மற்றும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

கோமரங்கடவல பிரதேசம் நாட்டின் மிகவும் பின்தங்கிய கல்வி வலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகள், பௌதீக வளங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பல கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 34 பாடசாலைகளில் ஆசிரியர் இல்லங்களை நிர்மாணிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் ரூ .34 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக 15 பாடசாலைகளில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவெனாவிற்கும் 05 கணினிகள் வீதம் வழங்கவும் நாட்டின் அனைத்து பிரிவெனா கல்லூரி மாணவர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிவுலேகடவல வித்தியாலயத்திற்கு ஒரு கூட்ட மண்டபம் மற்றும் வகுப்பறைகள் அமைக்கவும், கோமரங்கடவல மகா வித்யாலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோமரங்கடவலவை ஒரு கல்வி வலயமாக பெயரிடுவது மற்றும் மஹதிவுல்வெவ மகா வித்தியாலயத்தை ஒரு மும்மொழி மாதிரி பாடசாலையாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அடம்பனே - புலிகண்டிகுளம், ஏபாகம - கோனபெந்திவெவ, கிவுலேகடவல - ஹெலம்பவெவ, குட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய வீதி வலையமைப்பை புனரமைப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

திரியாய சந்தியிலிருந்து கிரிஹண்டு சேய விஹாரை வரையான வீதி, பக்மீகம - ரங்கிரி உல்பத மற்றும் மல்போருவ - புல்மோட்டை வீதி உள்ளிட்ட 41 வீதிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் காபட் செய்து  அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தினார்.

அடம்பனே கெத்தாராம விகாரை உட்பட பல வழிபாட்டுத் தலங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

சுகாதார வசதிகள் குறைந்த மட்டத்தில் இருப்பது இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினையாகும். கோமரங்கடவல கிராம மருத்துவமனை மற்றும் கந்தளாய் தள வைத்தியசாலை, மொரவெவ, தம்பலகாமம் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் மருத்துவர், தாதி மற்றும் ஏனைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பதவி ஸ்ரீ புர பகுதியில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், உடனடியாக இரத்த சுத்திகரிப்பு பிரிவொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

புலிகண்டிகுளம் , கோனபெந்திவெவ, ஏபாகம கால்வாய், திம்பிரிவெவ, ஏபாகம குளம், மக ஹெலம்ப குளம் உள்ளிட்ட நீர்ப்பாசன முறையை புனரமைக்கவும், விவசாயத்திற்கு தேவையான வசதிகளை வழங்கவும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பிரதேசத்தின் 39 குளங்களை புனரமைப்பதற்காக ரூ .125 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 'நீர்ப்பாசன சுபீட்சம்' திட்டத்தின் கீழ் மேலும் 99 குளங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

54 கிராம அதிகாரி பிரிவுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அடம்பனே நீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுகோரல, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சு செயலாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.02.27

Sponsored Section
  • Prev
Gbase Technologies is a multi-computer based company mainly we serve in web design and creative ...
கிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். !
Ultra Modern Digital Scanning (அதி நவீன)   Duration varies • Price varies Ultra Modern ...
Top