இந்தியா – நியூஸிலாந்து இடையிலான போட்டி கைவிடப்பட்டது
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மழையின் இடையூறு இன்றும் தொடர்ந்துள்ளது.
இதனால் இன்று நடைபெறவிருந்த இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும் கைவிடப்பட்டது.
இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நொட்டிங்ஹாமில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும், ஈரலிப்புத்தன்மை காரணமாக மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நாணய சுழற்சிக்கு தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டியை ஆரம்பிக்க முடியாது போனது.
நான்கு தடவைகள் மைதானம் பரிசீலிக்கப்பட்ட போதிலும் இடையிடையே மழை பெய்ததால் போட்டியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்கமைய இந்தியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இதுவாகும்.