இளைஞர் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர் போலீஸாரின் துரத்தலுக்குச் சிக்காமல் 3 மணிநேரம் போக்கு காட்டிய பின்னர் பிடிபட்டனர். அதில் ஒரு சிறுவன் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை புரசைவாக்கம், தாஷா மகான், பர்கத் தெருவைச் சேர்ந்த அக்பர் செரிப் என்பவரின் மகன் குல்பார்ன் செரிப் (21). இவர் அதே பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு குல்பார்ன் செரிப், தனது இருசக்கர வாகனத்தில் போர் நினைவுச் சின்னம் அருகே சென்றார். அங்கு அவர் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு சிறுவன் வந்தார் குல்பார்ன் செரிப்பிடம் பேச்சுக் கொடுத்து அவரிடம் இருந்த  பணம் மற்றும் கைக்கடிகாரத்தைப் பறித்தார்.

பின்னர், செல்போனைப் பிடுங்க முயற்சி செய்தார். அப்போது குல்பார்ன் செரிப் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடிக்க முயற்சித்தார். ஆனால், அச்சிறுவன் அவரைத் தாக்கிவிட்டு அங்கே ஏற்கெனவே மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து தப்பினார்.

இதையடுத்து,  குல்பார்ன் செரிப் அவர்களை துரத்திச் சென்றார். வாலாஜா சந்திப்பில் நின்றிருந்த பூக்கடை காவல் நிலைய ஜிப்சியில் இருந்த போலீஸாரிடம் தன்னிடம் வழிப்பறி செய்து தப்பிச் செல்லும் சிறுவர்களையும் மோட்டார் சைக்கிள் எண்ணையும் தெரிவித்தார்.

உடனடியாக போலீஸார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மைக் மூலம் தகவல் தெரிவித்தனர். அதில் 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பூக்கடை காவல் நிலைய தலைமை காவலர் மணிமாறன் , காவலர் திருமலை ராஜன் ஆகியோர் பைக்கில் சென்ற திருடர்களைத் துரத்திச் சென்றனர்.

வேப்பேரி  கால்நடை மருத்துவமனை வரை துரத்திச் சென்ற அவர்களால், அந்தச் சிறுவர்களைப் பிடிக்க முடியவில்லை. போக்கு காட்டிய அவர்கள் திடீரென மாயமாய் மறைந்து போனார்கள்.
பிறகு அவர்கள் 3 பேரும் அரசு பொது மருத்துவமனை அருகில் வந்தனர். போலீஸாருக்கு மைக் மூலம் தகவல் பரவி இருந்ததால் அங்கிருந்த போலீஸார் மீண்டும் துரத்திச் சென்றனர்.

போலீஸாரைப் பார்த்ததும், அவர்கள் 3 பேரும் மீண்டும் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றனர். போலீஸாரும் விடாது துரத்த அவர்களை ஏமாற்றி,  தேர்வாணையச் சாலை வழியாக புகுந்து, பிராட்வே பேருந்துக்குள் நுழைந்து சிறுவர்கள் வந்தனர்.

அங்கு, புளியந்தோப்பு காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசுந்தரம், ஆயுதப்படை காவலர் வீரமணி ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பைக்கை பார்த்ததும், அந்தச் சிறுவர்களைப் பிடிக்க முயன்றனர்.

ஆனால், அவர்கள் காவலர்களைத் தள்ளிவிட்டு, சாலைத் தடுப்பையும் அகற்றிவிட்டு வடக்கு கடற்கரைச் சாலை வழியாக ராயபுரம் நோக்கி தப்பிச் சென்றனர்.

அவர்கள் வடக்கு கடற்கரை வழியாக தப்பிச் செல்வது வயர்லஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக வடக்கு கடற்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் அருள்மணி தலைமையிலான போலீஸார் அவர்கள் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். ஒரு சிறுவன் தப்பி ஓடிவிட்டார்.

மற்ற இருவரையும் பிடித்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்  சத்திய மூர்த்தி நகர், குடிசை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தப்பி ஓடிய மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனர், நள்ளிரவில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறுவர்கள், மோட்டார் பைக்கில் தப்பித்து, போலீஸுக்குப் பல மணி நேரம் ஆட்டம் காட்டியும், விடாது தகவல் கொடுத்து அவர்களை போலீஸார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.