அம்பாறை திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தால் நடாத்தப்பட்ட அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியத்தின் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் தொடரில், தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே. ஜெகசுதன் தலைமையில் சுப்பர் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில், நேற்று நடைபெற்ற 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தை வென்றே லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ம் மின்னொளி விளையாட்டுக் கழகம், 10 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றுது.

பதிலுக்கு, 79 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 9.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனானது.

அந்தவகையில், சம்பியனான லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம், அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கிண்ணத்தையும் 15,000 ரூபாய் பணப்பரிசில்களையும் தட்டிச் சென்றதுடன், இரண்டாமிடத்தைப் பெற்ற மின்னொளி விளையாட்டுக் கழகம், இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் 10,000 ரூபாய் பணப்பரிசிலையும் தட்டிச் சென்றது.

இத்தொடரின் நாயகனாக, மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் கோபிநாத் தெரிவானதுடன், இறுதிப் போட்டியின் நாயகனாக லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சதுர்சன் தெரிவானார்.

இவ்விறுதிப் போட்டியில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி. கமலராஜன், சிறப்பு அதிதியாக கிராம உத்தியோகத்தர் அ. கந்தசாமி, அனுசரனையாளரும் தொழிலதிபருமான கே. இந்துனேஷ், அனுசரனையாளரான எம்.ஆர்.எஸ் அச்சகத்தின் உறுமையாளர் ஆர். மயூரதன், சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.