இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.

அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் போர் தாகத்தில் இருக்கிறதுஹ என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார். ஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.