நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி மரணசான்றிதழ் வழங்குவதற்கான மரண  விசாரணைக்காகவே மேற்படி நபர்கள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரண விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களில் ஸஹ்ரானின் தங்கையான மதனியா நியாஸ், அவரது கணவர் எம்.எம்.நியாஸ், சாய்ந்தமருது தாக்குதலில் பலியான வார உரைகல் பத்திரிகையின் ஊடகவியலாளர் என கூறப்படும் நியாஸ் என்பவரின் மனைவி அஸ்மியா ஆகியோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில்  அழைத்து வரப்பட்டனர்.

இந்த விசாரணைகள் யாவும் நீதிவானின் அறையில் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு  நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா  (வயது 28) கடந்த புதன்கிழமை (26)  காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்த அவரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கடந்த தவணை அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவி இன்றை விசாரணைகளுக்கு கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்த விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி புதன்கிழமை  வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரானின் போதனையில் கலந்துகொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் பிணையில் விடுதலை

தடைசெய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன்  தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  இளைஞனை  கல்முனை நீதவான் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் இன்று பிணையில் விடுதலை செய்தது.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  மருதமுனையை சேர்ந்த ஏ.எச்.நில்ஷாத் எனும் நபரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவரது கைது விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட மனு  இன்று கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸ் சார்பில் ஆஜரான அப்துல் ஹை  குறித்த நபர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான காரணமெதும் இல்லை என அறிவித்ததைத் தொடர்ந்து இவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி  இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.

இவற்றை செவிமடுத்த நீதவான்  சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு முடிவுறும் வரை ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேக நபரைப் பணித்ததுடன் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார்.  

அத்துடன் இவ்வழக்கு விசாரணை  எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டது.
சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் தலைமையில் சட்டத்தரணிகளான, எம்.ஐ.இயாஸ்தீன், ஏ.ஜீ.பிரேம் நவாத், எம்.எப்.அனோஜ், எம்.ஐ.றைசுல் ஹாதி, ஐ.எல்.எம்.றமீஸ், என்.எம்.அசாம், றத்தீப் அஹமட், என்.எம் அஸாம்  உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

ஷஹ்ரான் குழு பயன்படுத்திய டொல்பின் ரக வான் வண்டி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு

இதேவேளை, பயங்கரவாதி  ஷஹ்ரான் ஹாஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக  வான் வண்டி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது.

கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று புதன்கிழமை, சாய்ந்தமருது பகுதியில் தாக்குதல் இடம்பெற முன்னர்   தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்த  ஷஹ்ரான் குழுவினர்  வாடகை வான் வண்டி ஒன்றின் மூலம் கிரியுல்ல நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களை  கொள்வனவு செய்திருந்தனர்.

இவ்வாறு  வாடகை மூலம் பெறப்பட்ட வான் வண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடரபான வழக்கு மன்றில் நீதிவானினால் விசாரணைக்கு எடுத்த கொள்ளப்பட்ட போது கடும் நிபந்தனைகளுடன் ரூபா 50 இலட்சம்  பிணையில் குறித்த வான் வண்டி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது விடுவிக்கப்பட்ட வான் வண்டி  வாடகை அடிப்படையில் பெறப்பட்ட போதிலும் பிணையில் விடுவித்த நீதிவான் உரிமையாளரிடம் வழக்கு தவணை நிறைவுறும் வரை  வாகன ஆவணத்தில்  பெயர் மாற்றம் செய்தல், விற்பனை செய்தல், கைமாற்றுதல், உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து  விடுதலை செய்துள்ளார்.

குறித்த வான் வண்டி அம்பாறை விசேட பொலிஸாரினால் காலை மன்றிற்கு கொண்டுவரப்பட்டதுடன் இவ்வாகனத்தை வாடகை அடிப்படையில் செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இன்று வரை வைக்கப்பட்டுள்ளார்.

இச்சாரதி தனது வாகனம் இன்னுமொரு தரப்பிற்காக வாடகைக்கு வழங்கியதாக கூறி  மேற்குறித்த பிணையில் விடுவிக்கப்பட்ட வாகன உரிமையாளரை அணுகி அதிக விலையில் வாடகை ஒன்று வந்துள்ளதாக கூறி வாகனத்தை கைமாறி எடுத்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், வாகனத்தின் ஆவணங்களில் தனது மனைவியின் பெயரை பதிந்துள்ளமையினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வான் வண்டியை குறித்த பெண்ணே நீதிமன்றிற்கு வந்து எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விசாரணை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

-பாறுக் ஷிஹான்-