சிலி நாட்டு இராணுவ விமானமொன்று 38 பேருடன் காணாமற்போயுள்ளது.

அந்தாட்டிக்கா நோக்கிப் பயணித்த வழியிலேயே இது காணாமற்போயுள்ளதாக சிலி விமானப்படை அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.

பன்ரா அறேனஸிலிருந்து அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 4.55 மணிக்குப் புறப்பட்ட C-130 Hercules போக்குவரத்து விமானமே, பிற்பகல் 6 மணியின் பின்னர் தொடர்பினை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன விமானத்தில் பயணித்தவர்களில் 17 விமான ஊழியர்களும் 21 பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.

திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புகள் தொடர்பான ஒத்துழைப்புகளை வழங்குவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த விமானம் காணாமற்போயுள்ளது.

காணாமற்போன விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிலி நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.