Wednesday, 15, May, 7:18 AM

 

அரண்மனை வாயில்மணி
ஒலித்துவிட்டது..
இனி..
மனிதம் மறைந்து
மைதானங்கள் நிறையும்..
ஹிட்லரும் அசந்துபோகும்
வீர வசனங்கள் கேட்டு
அறுபது டிகிரி செல்சியசிலும்
நாப்பது ஹோஸ் பவரிலும்
பீறிட்டு பாயும் குருதி..
மூளை தன் பணிகளில்
தற்காலிக ஓய்வுபெற்று
முண்ணாணுக்குப் பொறுப்பளிக்கும்..
அட்ரீனலின் சுரப்பியின்
அட்டகாசம் தாங்கமுடியாது
தசைகள் திணறும்..
பூனைகளெல்லாம் மதங்கொண்ட
யானைகளாக மாறி
சொந்த மனைகளுக்குள்ளேயே
பிளிரும்..
உறவுகளெல்லாம் வெறும்
நிறங்களாகவே தெரியும்.
ஐவருக்கு அதிகமாய் கொண்ட
கூட்டுக் குடும்பங்களின் தலைவர்கள்
தேவர் மகன் சிவாஜி போல்
காட்சியளிப்பர்..
இறுக்கி மூடிய
கறுப்புக் கண்ணாடிகளுடன்
அஸ்வினிதேவர்களை
சுமக்கும் அக்னியாய்
கறுப்பு வீதியில்
வெள்ளைப்புகையுடன் காற்றைக்
கிழித்துக்கொண்டு பறந்த
பிராடோக்கள் இன்றுமுதல்
பாரி மன்னனின்
தேராய் சதாவும்
வீதியோரங்களில்
முடங்கிக்கிடக்கும்..
இத்தனை நாள்
கவிச்சல் வீசிய
கிண்ணியா கரைவலையும்
இன்றுமுதல் கருவிளை
மலராய் மணக்கும்..
கருவாட்டுக்கும்
கைகளுக்கும் வித்தியாசம்
தெரியாதளவு கவனிப்பாரற்று
காய்ந்துபோய் கிடந்த
மீனவன்
வீட்டு மண்சட்டியில்
கொழுத்த மாட்டிறைச்சிக் கறி
கொதிக்கும் அவன்
தலைவன்செலவில்..
மண்வெட்டி பிடித்து
காய்ச்சிப்போன
கீரை விவசாயியின்
விரல்கள்
ஐந்து வருடங்களுக்கு
முன்னர் கண்ட
ஆயிரம் ரூபா நோட்டினை
இப்போது மீண்டும்
பூரிப்புடன் தொட்டுப் பார்க்கும்..
சொந்த தாய்மாமாவுக்கே
ஸலாம் கூற மறுத்தவன்
இன்றுமுதல்
மூன்றாம் தலைமுறை
பந்தத்தையும் கூறிக்
கட்டியணைத்து கொள்வான்..
ஆனாலும்,
அத்தனையும் அடங்கிப் போகும்
அந்த ஐம்பத்தைந்தாவது நாள்
அதிகாலை தேர்தல் வெற்றிக்
கொண்டாட்ட பட்டாசு சத்தங்களில்..
நளீஜ் – 2020-06-10
(2020 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எழுதப்பட்டது)

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners