Wednesday, 15, May, 8:32 AM

 

 
இலங்கை  வங்கி முகாமையாளராகப் பணிபுரிந்த ஜனாப் ஏ.எச்.முகம்மது யூசுப் கிண்ணியாவின் முதலாவது வங்கி முகாமையாளர் ஆவார். இவர் மர்ஹூம்களான அப்துல் ஹமீது - அனிபா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1950.01.10 ஆம் திகதி பெரியாற்றுமுனையில் பிறந்தார்.
 
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், கிண்ணியா மத்திய கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர் மத்திய கல்லூரியிலிருந்தே பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானார்.
 
தனது அயரா முயற்சியினால் 1972ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியானார். இதனால் கிண்ணியா மத்திய கல்லூரியின் முதல் கலைப்பட்டதாரி என்ற பெருமையும் இவருக்குண்டு.
 
01.04.1974 இல் இலங்கை வங்கியில் வங்கி அலுவலராக நியமனம் பெற்ற இவர் திருகோணமலை, கொழும்பு, மூதூர் ஆகிய நகரங்களிலுள்ள இலங்கை வங்கிக் கிளைகளில் பணிபுரிந்துள்ளார்.
 
இவரது அர்ப்பணிப்பான சேவையின் காரணமாக 1989ஆம் ஆண்டு இலங்கை வங்கியின் கிளை முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் திருகோணமலை கச்சேரிக் கிளை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது வங்கி முகாமையாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
 
கிண்ணியா மக்கள் வங்கிக் கிளை கொள்ளையிடப்பட்டதனால் கிண்ணியாவிலிருந்த இலங்கை வங்கிக் கிளையும், மக்கள் வங்கிக் கிளையும் திருகோணமலை கிளைகளுடன் இணைக்கப்பட்டன. இதனால் வங்கிப் பயனாளிகள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
 
இதனை மீளக் கொண்டு வருவதற்கு பொதுமக்களோடு இணைந்து முயற்சித்தார். இதன் பயனாக 1990இல் இக்கிளை மீளக் கிண்ணியாவில் திறக்கப்பட்டது. இக்கிளையின் முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டார். இதன் பின் கந்தளாய்க் கிளை முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
இலங்கை வங்கியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவர் தனது 32 வருட கால வங்கிச் சேவையிலிருந்து 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
 
திறமையும், ஆற்றலும் நிரம்பப் பெற்ற இவர் 1975 ஆம் ஆண்டு  உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்தார். எனினும், அப்போது சிபார்சு கிடைக்காததால் இப்பதவி இவருக்கு கிடைக்காமல் போய் விட்டது.
 
இவரோடு சித்தியடைந்த ஒருவர் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி சில வருங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தார் இப்பதவி இவருக்கு அப்போது கிடைத்திருப்பின் குறைந்த பட்சம் பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவி வரையாவது இவர் முன்னேறியிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
 
திருமதி சித்திபரீதா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். டாக்டர். பாத்திமா நஸ்லியா யூசுப், பாத்திமா நாதியா யூசுப் (ஆசிரியை), டாக்டர் சில்மியா யூசுப் ஆகியோர் இவரது புதல்விகளாவர்.
 
இவரது ஆரோக்கியத்துக்கு பிரார்த்திப்போம். 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners