நில்லாது சுழலும் வெள்ளைப் பம்பரம்
சொக்கலேற்றுக் குண்டுமுகத்தில்
சதா தேடல் கொண்டலையும்
தேனீக்களின் சோடிச் சிறகுகள்
சோர்வும் வாட்டமுமாய்
இன்று சோர்ந்து போனதுமேனோ ........!
இறுகத் தொடங்கியிருக்கும்
சிறு மணல் திட்டை
வார்த்தைகளால் கிளருகிறேன்.
ஈரங்காய்ந்த இதழ்களில்
தயங்கிதயங்கி
வெளிவரத் தொடங்கியவை
யாருக்கான அணுவெடிகளோ....?
‘உத்து உத்துப் பார்க்கிறார்.
‘‘கையை அழுத்திப் பிடிச்சார்’’
‘ஷூக்காலால் நாலஞ்சி தரம்......’’
‘’மேசயத் துடைக்கச் சொல்லிப் போட்டு
குனியிறப்போi இங்கே ரன்ன்ண்டுதடவ ..
தொட்டிருக்கார்.......’’
காரத்துளிகளுக்குள் அமிழ்வதும்
கரைந்தழிதுமாய் குருணிச் சொற்கள்
உதறும் விரல்களின்
நடுக்கங்களை மறைத்திட
ஜன்னல் சட்டகம் பயன்படுமா.....
‘’சரிசரி...
.இப்ப வகுப்புக்கு போங்கடா .....
உங்களோடவே இருக்கிறம்தானே...’’.
பதறியடித்து விரல் பதித்துத் திரும்புகையில்
சாந்தமாக்குமொரு சகோதரப் புன்னகை.......
எதேச்சையாய் எதிர்ப்படுகையில்
நட்பாயொரு மோர்னிங் .......
அவளொத்த மகளுக்காய்
வினாப்பத்திரம் செயலட்டை .....
விடை குழம்பும் கணிதச் சிக்கலென
ஒரு தகப்பனாய் எதிர்வந்து நிற்கையிலும்.....
ஆகவுந்தான் குழம்பித் தவிக்கிறேன்
வெளித்தொங்கிய நாவில்
வீணிவடிய அலையும்
இன்னொரு சொறிமுகமும்
இக்கனவானுடையதுதானா ........
எஸ்.பாயிஸா அலி.
Comment