Thursday, 12, Sep, 2:01 AM

 

 
கிண்ணியாவின் முதல் கோட்டக் கல்வி அதிகாரி ஜனாப். எம்.எச்.எம்.கரீம் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது ஹனிபா (விதான்) – ஆமினா உம்மா தம்பதிகளின் தவப் புதல்வனாக 1936.12.28 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்ற இவர் இடைநிலை மற்றும் உயர்கல்வியை திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில மொழி மூலத்தில் கற்றார்.
 
1958.05.05ஆம் திகதி விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1959/60 காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞானப் பிரிவில் பயிற்சி பெற்றார். அதன்பின் கிண்ணியா மத்திய கல்லூரி, பொத்துவில் முஸ்லிம் மகா வித்தியாலயம், கண்டி சித்தி லெப்பை மகா வித்தியாலயம், கல்ஹின்னை முஸ்லிம் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார்.
 
பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை தொடர்ந்த இவர் 1974 ஆம் ஆண்டு கலைப் பட்டதாரியானார் இதன் மூலம் கிண்ணியாவின் ஆரம்ப காலப் பட்டதாரிகளுள் ஒருவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
 
1975ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தரம் இவருக்கு கிடைத்தது. கெக்கிராவ முஸ்லிம் வித்தியாலய அதிபராக நியமனம் பெற்ற இவர் இப்பாடசாலையை மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தினார். அதன் பின் சில காலம் கிண்ணியா மத்திய கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார்
 
1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவில் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த முதலாவது கல்வி நிர்வாக சேவை அதிகாரி என்ற பெருமையும் இவருக்குண்டு. 
 
இதனையடுத்து கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். ஐந்தாம் வகுப்பு வரை இருந்த இப்பாடசாலை இவரது காலத்தில் தான் II ஆம் தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 
 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களின் நிதி ஒதுக்கீடு மூலம் கிண்ணியாவின் முதலாவது 3 மாடிக்கட்டடம் அல் அக்ஸாவில் தான் கட்டப்பட்டது. அதுவும் இவரது காலத்தில் தான். இக்கட்டடம் அப்போது கல்வி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 
 
சிறிது காலம் வட்டாரக் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய இவர் கிண்ணியாவையும் உள்ளடக்கி இருந்த மூதூர்க் கோட்டக் கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்வி அதிகாரியாக 1987 ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது கோட்டக் கல்வி அதிகாரி இவராவார்.
 
இவரது காலத்தில் அதாவது 1988 இல் மூதூர்க் கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்கு போட்டிப் பரீட்சை மூலம் சுமார் 200 ஆரம்பக் கல்வி ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அப்போது மூதூர்த் தொகுதி எம்.பியாக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் இந்த ஆசிரியர்களுக்கான 21 நாள் சேவைக்கால முன் பயிற்சியை கிண்ணியா மத்திய கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தார்.
 
இந்தப் பயிற்சி நெறியின் பிரதம இணைப்பாளராகவும் இவரே பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டு திருகோணமலை பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நியமனம் பெற்றார். 1994.01.05 இல் ஓய்வு பெற்ற இவர் பல்வேறு தரப்பினரதும் தூண்டுதல் காரணமாக அரசியலில் பிரவேசித்தார்.
 
1994 ஆம் ஆண்டு கிண்ணியாப் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் அப்போது தவிசாளராக இருந்த நஜீப் ஏ மஜீத் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டதில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றினார். 
 
பல்வேறு புதிய வீதிகள் இவரது காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டன. பிரதேச சபையின் கீழிருந்த எழிலரங்கு மைதானத்துக்கு அருகிலிருந்த காணியைக் கொடுத்ததன் மூலம் அப்துல் மஜீது வித்தியாலயம் உருவாக ஒத்துழைத்தவர்களுள் இவரும் ஒருவர்.
 
திருமதி சித்தி பளீலா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். முகம்மது நவாஸ் (பொறியியலாளர்), மிஸ்ரியா (ஆசிரியை), றிபாயா (முன்னாள் ஆசிரியை), ஸீனத்துல் முனவ்வரா (ZDE), முகம்மது சதாத், றிஸ்மியா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
2018.04.02 ஆம் திகதி தனது 82வது வயதில் இவர் காலமானார். இவரது ஜனாஸா பெரிய கிண்ணியா பொதுமையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners