Wednesday, 29, Nov, 4:48 AM

 

 
 
கிண்ணியாவின் முதலாவது உதவி அரசாங்க அதிபர்  (AGA) மர்ஹூம் ஏ.எம்.சாகுல் ஹமீது அவர்களாவர். இவர் யாகுவர் பரம்பரையைச் சேர்ந்த மர்ஹூம்களான அப்துல் மஜீத் - ஒஜிதூன் பீவி தம்பதிகளின் புதல்வராக 1931.08.07ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையில் கற்ற இவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்கு தனது இடைநிலைக் கல்வியை கற்கச் சென்றார். அங்கு ஆங்கில மொழி மூலத்தில் கற்ற இவர். 1950 ஆம் ஆண்டு SSC பரீட்சையில் ஆங்கிலமொழி மூலத்தில் சித்தியடைந்தார்.
 
1952ஆம் ஆண்டு ஆங்கில உதவி ஆசிரியராக காக்காமுனை அரசினர் கலவன் பாடசாலையில் நியமனம் பெற்றார். அதன் பின் கிண்ணியா மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
 
நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம், ஹொரவப்பொத்தானை முஸ்லிம் மகா வித்தியாலயம், வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், காக்காமுனை அரசினர் கலவன் வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
 
துறைமுகங்கள் கப்பற்றுறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களின் சிபார்சுக்கமைய 1979ஆம் ஆண்டு வளர்ந்தோர் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றார். அந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது வளர்ந்தோர் கல்வி அதிகாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார். 1988 வரை இப்பதவியை இவர் வகித்துள்ளார்.
 
1988 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இனப்பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இதனால் இப்பகுதிகளுக்கு உதவி அரசாங்க அதிபர்கள் கடமைக்கு வர தயக்கமடைந்தனர். இச்சூழ்நிலையினால் கிண்ணியாவிலும் உதவி அரசாங்க அதிபரின்றி பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
 
இதனை நிவர்த்திக்க பொருத்தமான யாரையாவது உதவி அரசாங்க அதிபராக நியமித்து பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் அப்போது ஏற்பட்டது. இதனைக் கவனத்தில் கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் மகரூப் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட அமைச்சரவை அனுமதி மூலம் இலங்கை நிர்வாக சேவையைச் சேராத இவருக்கு உதவி அரசாங்க அதிபர் நியமனம் கிடைத்தது. 
 
1988 - 89 ஆண்டு காலப்பகுதியில் கிண்ணியா உதவி அரசாங்க அதிபராக இவர் பணியாற்றினார். இவ்வகையில் கிண்ணியாவின் முதலாவது உதவி அரசாங்க அதிபர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
 
இக்காலப் பகுதியில் கிண்ணியா பட்டின சபையின் விசேட ஆணையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இதனை விட மர்ஹூம் மகரூப் அவர்களின் சிபார்சுக்கமைய 1984 முதல் 1988 வரை கிழக்குப் பிராந்திய போக்குவரத்துச் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
 
அமைதியான சுபாவமும், ஆரவாரமில்லாத போக்கும் கொண்ட இவர் நான் கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனாக இருந்த காலத்திலேயே அங்கு அதிபராகப் பணியாற்றினார். காலைக் கூட்டங்களில் அதிகமான அறிவுரைகளைக் கூறும் இவர், 'ஆன படியினால இவற்றை நல்ல முறையில் கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்' என்று மாணவர்களைக் கேட்டுக் கொள்வது இன்றும் எனது ஞாபகத்தில் நிலைத்து நிற்கிறது.
 
1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் நீண்ட காலம் பெரியாற்றுமுனை யாஹூவப் பள்ளிவாயல் பரிபாலன சபைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 
 
திருமதி அமீனுன்பீவி இவரது வாழ்க்கைத் துணைவியாவார். சித்தி நைரூஸ், முகம்மது நளீம் (தவிசாளர், கிண்ணியா நகரசபை), முகம்மது நபீல், முகம்மது நளீர், சித்தி நபீலா (ஆசிரியை), முகம்மது நஸீம் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
1999.03.04 ஆம் திகதி இவர் காலமானர் இவரது ஜனாஸா கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பட்டது.
 
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners