
கிண்ணியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுள் இளவயதில் தெரிவு செய்யப்பட்ட முதலாமவராக மர்ஹூம் எம்.ஈ.எச்.முகம்மது அலி காணப்படுகின்றார். இவர் 1952 ஆம் முதல் 16 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகள் செய்துள்ளார்.
மர்ஹூம்களான முகம்மது எகுத்தார் ஹாஜியார் -இமாம் பீவி தம்பதிகளின் தலைமகனாக 27.03.1927 இல் பெரிய கிண்ணியாவில் இவர் பிறந்தார். தனது 20வது வயதில் 1947ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போதிலும் இவரால் அப்போது வெற்றி பெற முடியவில்லை.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்ட இவர் 6050 வாக்குகள் பெற்று தனது 25வயது வயதில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.
தனது தாய்மொழியாம் தமிழ் சிறப்புப் பெற வேண்டும் ஹன்சாட்டில் அந்த மொழி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் முதன் முதல் உரையாற்றிய பெருமை இவரையே சாரும்.
1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்ட இவர் 10,549 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 1960ஆம் ஆண்டு முதல் மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாகியது.
1960 மார்ச் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட இவர் 10,680 வாக்குகள் பெற்று மூதூர்த் தொகுதியின் 2வது எம்.பியாகத் தெரிவானார். எனினும் 1960 ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவரால் வெற்றி பெறமுடியவில்லை.
1962ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட இவர் 14,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1965 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு 20,237 வாக்குகள் பெற்று முதலாவது எம்.பியாகத் தெரிவானார்.
அல்லை – கந்தளாய் புதிய விவசாயக் குடியேற்றத் திட்டத்தில் கூடிய ஆர்வம் காட்டிய இவர் கனிசமானளவு முஸ்லிம், தமிழ் மக்களை இப்பகுதியில் குடியேற்றினார். அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதை பல கட்டங்களில் உறுதி செய்தார். பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் தமிழ் பேசக் கூடிய குடியேற்ற பரிபாலன அதிகாரிகள் இருவரை நியமித்தார். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக் கருதி கந்தளாய் பொலிஸ் நிலையமும் இவரால் உருவாக்கப் பட்டதே.
1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டபோது அதனை எதிர்த்து தமது பதவியை இராஜினாமாச் செய்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
1956களில் சுதேச வைத்திய சபையில் தமிழர், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை ஆட்சேபித்து நியாயம் பெற்றார்.
கிண்ணியா ஆஸ்பத்திரி தனக்கென தனியான காணியில் அமைக்கப்பட்டதும் இவரது முயற்சியினால்தான். கிண்ணியாத்துறைக்கு தனியான பாலம் அமைக்கப்பட வேண்டும், குறிஞ்சாக்கேணி, கட்டைபறிச்சான் ஆகிய ஆறுகளுக்கு பாலம் அமைக்க வேண்டும் போன்ற தனிநபர் பிரேரனைகளை பாராளுமன்றத்தில் 1967 இல் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
மூதூர் ஜெட்டி நிர்மானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தமை, மூதூர் வைத்தியசாலைக்கு கட்டடம் வழங்கியமை, கிளிவெட்டி மற்றும் தோப்பூரில் உப தபாலகம் நிறுவியமை, பாலத்தோப்பூரில் புதிய பாடசாலை அமைத்தமை, மூதூரில் மீனவர் வீடமைப்புத்திட்டத்தை வழங்கியமை போன்றனவும் இவரால் மேற்கொள்ளப்பட்டன.
முஸ்லிம் மக்களுக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் அதன் மூலமே முஸ்லிம்களின் கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முடியும் என்ற பிரேரணையை 1967 இல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியவர் இவர்.
முஸ்லிம் மக்களின் தாய்மொழி தமிழா அல்லது சிங்களமா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்தான் என்பதை மிகவும் ஆணித்தரமாக இவர் வலியுறுத்தினார்.
கிண்ணியா மத்திய கல்லூரியை தேவையான வசதிகளோடு ஆரம்பித்ததோடு மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களை இங்கு அதிபராக நியமித்தவரும் இவரேயாவார். அதேபோல பூவரசந்தீவு அல்மினா வித்தியாலயம், சிராஜ்நகர் வித்தியாலயம் போன்றனவும் இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
1980 காலப்பகுதியில் மாலைதீவு தூதுவராக இவர் நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து இராஜதந்திரியாக நியமனம் பெற்ற முதல்வர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவர் இந்த இரு நாட்டு உறவுகள் மேம்பட பல்வேறு பணிகளைச் செய்தார்.
தான் எம்.பியாக இல்லாத காலத்திலும் பெரியாற்றுமுனையிலுள்ள தனது சொந்தக் காணியை தனது தந்தையின் பெயரில் பாடசாலை ஆரம்பிக்க அன்பளிப்புச் செய்தார். அதுதான் எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயம் ஆகும்.
அபுல்ஹஸன் நோனாசுந்தரி இவரது துணைவியாவார். பௌசியா, முபாரக் அலி, புவாத்அலி, அம்ஜாத் அலி, லியாக்கத் அலி, பரீனா, சுல்பிகார் அலி, பர்ஸானா, பாயிஸா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
மக்களின் பேராதரவுடன் சுமார் 16 வருட காலம் மூதூர்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகள் செய்த மர்ஹும் எம்.ஈ.எச்.முகம்மது அலி 31.12.2004 இல் காலமானார். அன்னாரின் ஜனாஸா திருகோணமலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பட்டது.
தேடல்:
ஏ.சி.எம்.முஸ்இல்
Comment