Thursday, 28, Sep, 1:29 PM

 

 
கிண்ணியாவின் முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இப்றாஹீம் - சவுதா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1937 ஆம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்ற இவர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது இடைநிலை மற்றும் உயர்தர கல்வியைக் கற்றார்.
 
1958.07.21 இல் ஆங்கில உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் ஆசிரியர் கலாசாலைக்குச் சென்று கணிதப் பிரிவில் பயிற்சிபெற்று பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக வெளியேறினார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் கணித ஆசிரியர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். கிண்ணியா, மூதூர், தோப்பூர், திஹாரி, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
 
மாணவர்களோடு மிகவும் நிதானமாக நடந்து கொண்ட இவர் இலகுவான வழிமுறையைக் கையாண்டு கற்பித்தலை மேற்கொள்வதில் வெற்றி கண்டார். அல் அக்ஸாக் கல்லூரியில் இவரோடு கற்பித்தவன் என்ற வகையில் இவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு நிறையவே எனக்கு கிடைத்தது. ஆங்கிலத்தில் புலமையுள்ள இவர் தனது ஆசிரியர் குழாத்தோடு நிதானமாக செயற்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. 
 
மிகவும் நகைச்சுவையாகப் பேசும் இவரது ஹாஸ்யத்தினால் பல்வேறு தரப்பினரதும் மனதில் இவர் நீங்கா இடம் பிடித்திருந்தார். ஆசிரியர் குழுக் கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு றகுமான் சேர் இல்லையென்றால் அந்தக் கூட்டம் கலகலப்பாக இருக்காது. சோபை இழந்ததாகவே காணப்படும். கூட்டத்தை கலகலப்பாக்குவதில் அவர் கையாண்ட உத்தி தனி ரகமானது.
 
உண்மையான ஆசிரியர் ஒருவருக்கு தன்னைவிட மற்றையவன் விஞ்சி விடுவான் என்ற எண்ணம் இருக்கவே முடியாது. அந்த கொள்கை இவரிடம் நிறையவே இருந்தது. தனது மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும் என்ற அக்கறை இவரிடம் நிறையவே காணப்பட்டது. இதனால் தன்னால் முடியுமான பங்களிப்புகளை இவர் செய்தார்.
 
றகுமான் மாஸ்டர் என எல்லோராலும் அழைக்கப்பட்ட இவரது நகைச்சுவைப் பேச்சு பலரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. இவரது நகைச்சுவைகள் முல்லா, அபூநவாஸ் பீர்பால், தெனாலிராமன் கதைகளோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடியளவுக்கு கருத்தாழமிக்கவையாக இருந்தன. 
 
எந்த ஒரு விடயமும் மக்களை இலகுவாகச் சென்றடைய வேண்டுமாயின் அது சுவாரஸ்யமானதாகவும், சுருக்கமாவும் இருக்க வேண்டும் என்பதற்கு இவரது செயற்பாடுகள் முன்னுதாரமாகும்.
 
ஒருமுறை இவரது வீட்டில் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அப்போது இவரது மக்களில் ஒருவர் வாப்பா, வாப்பா வெள்ளை மணல் வருகின்றது என்று சொல்லியுள்ளார். உடனே இவர் இன்னும் கொஞ்சம் தோண்டிப்பார். நாச்சிக்குடா வரும் என்றாராம். (வெள்ளைமணல் என்ற கிராமத்துக்கு அயல்கிராமம் நாச்சிக்குடா)
 
அல் அக்ஸா கல்லூரி சந்தியில் ஐதுருஸ் தேனிர்க்கடை இருக்கின்றது. இக்கடையிலிருந்த தாஹிர் என்பவரிடம் தோசை எவ்வளவு என்று கேட்டுள்ளார். அவர் அதன் விலையைக் கூறியுள்ளார். அதன்பின் சம்பல் எவ்வளவு என்று கேட்க அது சும்மா என்று தாஹிர் கூறியுள்ளார். உடனே இவர் சம்பல் சும்மாதானே எனக்கு கொஞ்சம் சம்பல் தா என்று கேட்டாராம்.
 
இது போன்ற பல்வேறு நகைச்சுவைகள் இவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  சிலர் தங்களது விடயம் எடுபட வேண்டும் என்பதற்காக றகுமான் மாஸ்டர் சொன்னாராம் என்று ஆரம்பிப்பதிலிருந்து அவரது செல்வாக்கு மக்கள் மனங்களில் எந்தளவு உள்ளது என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
 
 இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றலைக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில் றகுமான் சேருக்குரிய ஆற்றல் சிறந்த நுட்பத்துடனான கற்பித்தல், நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் என்பனவாகும். 
 
ஹப்ஸாபீவி இவரது வாழ்க்கைத் துணைவியாவார். லரீமா ஜெலீனா, ஜமால்தீன், முஜிபுர் ரஹ்மான், ரமீஸா சில்மியா, சுல்பிகா நஸீரா (ஆசிரியை), மஹ்தி ஹஸன் ஆகியோர் அவரது பிள்ளைகளாவர்.
 
பல்வேறு துறைசார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்கிய றகுமான் சேர் கடந்த 2001.05.18 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஜனாஸா மாஞ்சோலைச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
 
 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners