Thursday, 28, Sep, 1:21 PM

 



கிண்ணியாவின் முதலாவது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களாவர். இவர் முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் - சல்மா பீவி தம்பதிகளின் புதல்வராக 1957.01.01 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

கிண்ணியா மத்திய கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி, யாழ்ப்பாணம் சென் ஜோன் எகடமி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். சட்டக்கல்லூரியிலும் கல்வி கற்றார்.

சிப்பிங் நிறுவனம் ஒன்றில் இணைந்து கனிஸ்ட நிறைவேற்றுத்தர தொழில் புரிந்தார்.
இவரது தந்தை மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் 1987 இல் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட அரசியல் இடைவெளியை நிரப்பும் பொருட்டு அரசியலுள் நுழைந்தார்.

1989 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 9,850 விருப்பு வாக்குகள் பெற்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.

1993 இல் நடைபெற்ற கிண்ணியா பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 9 ஆசனங்களைக் கொண்ட கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளரானார். இந்த வகையில் கிண்ணியா பிரதேச சபை வரலாற்றில் முதல் தவிசாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா – அஸ்ரப் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்காது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தின் கீழ் வேட்பாளர்களை களமிறக்குவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய நஜீப் ஏ மஜீத் இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிட்டு 21,590 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் வென்ற முதல் எம்.பி என்ற பெருமையை பெறுகின்றார்.

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுசன முன்னணி (PA) களமிறங்கியது. முஸ்லிம் காங்கிரசும் இந்த முன்னணியில் இணைந்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இவர் 18,173 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இக்காலப் பகுதியில் தபால் தொலைத் தொடர்பு பிரதியமைச்சர் நியமனம் பெற்றார்.

ஒரு வருட இடைவெளியில் 2001 இல் மற்றுமொரு பொதுத் தேர்தல் வந்தது. இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (UPFA) போட்டியிட்டு 13,488 விருப்பு வாக்குகளைப் பெற்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.

2004 இல் இன்னொரு பொதுத் தேர்தல் வந்தது. இத்தேர்தல் சகலரும் இன உணர்வுடன் முகங்கொடுத்த ஒரு தேர்தலாக இருந்தது. எனவே, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகல முஸ்லிம் வேட்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்டனர். இத்தேர்தலில் போட்டியிட்ட இவர் 26,948 விருப்பு வாக்குகளைப்பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

இவர் அரசின் பக்கம் இணைந்ததால் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் பிரதியமைச்சரானார். 2007 இல் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சரவை அந்தஸ்தற்ற கூட்டுறவு அமைச்சுப் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் கிண்ணியாவின் முதல் அமைச்சர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

2010 பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 15,913 விருப்பு வாக்குகள் பெற்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.
2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு 11,726 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார். 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இந்த இரு கட்சிகளும் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்தன. மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் முதல் அரைவாசிக்காலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், மிகுதி அரைவாசிக்காலம் முஸ்லிம் காங்கிரசுக்கும் வழங்குவதென இதன்போது உடன்பாடு காணப்பட்டது.

இதன் அடிப்படையில் 2012 இல் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையையும், இலங்கையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
2015 பொதுத் தேர்தலில் இவர் போட்டியிட்ட போதிலும் இத்தேர்தலில் 4,877 விருப்பு வாக்குகளே இவருக்கு கிடைத்தன. இதனால் பாராளுமன்ற உறுப்பினராக முடியவில்லை.

இதன்பின்னர் 2020 இல் நடந்த போதுத் தேர்தலில் இவர் வேட்பாளராக களமிறங்கிய போதிலும் இவர் களமிறங்கிய கட்சியின் வேட்புமணு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடவில்லை.

ஆரவாரமில்லாத அமைதியான போக்குள்ள இவர் பாடசாலைக்காலத்தில் சிறந்த தட, கள விளையாட்டு வீரராகவும் றக்பி வீரராகவும் பிரகாசித்துள்ளார்.

இவர் நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தோர் அவற்றை சரியாக நிறைவேற்றாததால் சில இழப்புகளை இவர் சந்திக்க வேண்டி வந்ததாக இவருக்கு மிக விசுவாசமான ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல் பொறுப்புகளை சுமந்தவர் என்ற வகையில் முடியுமான பல சேவைகளை இன மத பேதமற்ற முறையில் மாவட்டம் முழுவதும் இவர் செய்துள்ளார்.

தற்போது சிறிது உடல்நலக் குறைவுடன் உள்ள இவரது உடல் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திப்போம்.

 

தேடல்:


ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners