
கிண்ணியாவின் முதல் அஞ்சல் அலுவலர் மர்ஹூம் எஸ்.அப்துல் றஹீம் அவர்களாவார். இவர் 1925.11.21ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் மர்ஹூம்களான சைபுதீன் - அவ்வா உம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்.
பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் (அப்போது மகளிர் கல்லூரி காணியில் இயங்கியது) கல்வி கற்றார். இக்காலப் பகுதியில் இப்பகுதியில் வசித்த ஆங்கிலேய (பிரித்தானிய) ஆசிரியை ஒருவரிடம் ஆங்கிலமும் கற்றார். இதனால் ஆங்கிலத்தில் புலமை பெற்றார். சிறிது காலம் பிறப்பு, இறப்பு பதிவாளராகப் பணியாற்றினார். அதன் பின் 1949ஆம் ஆண்டு பதில் ஆங்கில ஆசிரியர் நியமனம் பெற்று தோப்பூர், மூதூர்ப் பகுதி பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
1951ஆம் ஆண்டு உபதபாலதிபராக இவர் நியமனம் பெற்றார். இந்தவகையில் கிண்ணியாவின் முதலாவது அஞ்சல் அலுவலர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். கிண்ணியா துறையடியில் இயங்கிய கிண்ணியா உப அஞ்சல் அலுவலகத்தில் உபஅஞ்சல் அதிபராகப் பணியாற்றினார்.
1952 ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டு வரை சுமார் 14 வருடங்கள் சீனக்குடா அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றியிருக்கின்றார். சில வருட காலம் திருகோணமலை, முள்ளிப்பொத்தானை ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் பதில் அஞ்சல் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். இதன் பின் வாழ்வின் இறுதி வரை கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றினார். சேவையில் இருந்து ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இவர் காலமானமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனது தந்தையாரின் புத்தகக் கடையிலிருந்து (ரஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்ஸ்) குர்ஆன் பிரதிகள், அறபுக் கிதாபுகள், இஸ்லாமிய நூல்கள் என்பன நாளாந்தம் வீ.பி.பி (Value Payable Parcel) மூலம் நாடு முழுவதும் அனுப்பப்படுவதால் கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தோடு எமக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இதனால் மர்ஹூம் அப்துல் றஹீம் அவர்களோடும் உரையாடும் வாய்ப்பும் அதிகம் எனக்கு கிடைத்தது.
மிகவும் சாந்தமான குணமுடைய இவர் இனிமையாகப் பேசுவார். எல்லோருடனும் சரளமாக நகைச்சுவையாகவும் பழகுவார். அவரது ஆங்கில உச்சரிப்பும், கம்பீரத் தொனியும் இன்றும் என் மனக்கண் முன் நிழலாடுகின்றது.
தொலைபேசி வசதிகள் குறைந்த , செல்லிடத் தொலைபேசிகள் இல்லாத அக்காலத்தி ல் தந்திச்சேவை மிகவும் முக்கியம் பெற்றிருந்தது. கிண்ணியாவிலிருந்து வெளியூருக்கு அனுப்பப்படும் தந்திகள் அஞ்சல் அலுவலகத் தொலைபேசி ஊடாகவே மறுமுனைக்கு அறிவிக்கப்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் அதனை அவர் வாசிக்கும் பாணி மிகவும் அலாதியானது.
A (ஏ) என்ற ஆங்கிலச் சொல்லை உறுதிப்படுத்த “Arthur” என்று அவர் சொல்வதும் M (எம்) என்பதை உறுதிப் படுத்த "Merry" என்று சொல்வதும் I (ஐ) என்பதை உறுதிப் படுத்த “I Sack” என்று சொல்வதும் இன்றும் நினைவில் இருக்கின்றது.
ஒருவகை பென்சில்களையே தமது எழுத்து வேலைகளுக்கு அப்போது அஞ்சல் அலுவலர்கள் பயன்படுத்தி வந்தனர். இவர் பென்சில் பிடிக்கும் பாணி, இவரது ஆங்கில எழுத்துநடை என்பன மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
திருமதி கைருன்னிஸா இவரது துணைவியாவார். உம்முல் ஹஸனாத், நஸீமா, மர்ஹூம் முகம்மது நஸார், மர்ஹூம் முகம்மது ஹுசைன், ஹம்ரத், முகம்மது ஹஸ்ஸாலி (ஆசிரிய ஆலோசகர்), பௌசுல் ஹிதாயா (ஆசிரியை), ஐனுல் பாஹிதா (ஆசிரியை), பாத்திமா மஹ்ஜபீன் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
இவர் 1982.08.21 இல் காலமானார். அன்னாரின் ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேடல்:
ஏ.சி.எம்.முஸ்இல்
Comment