Thursday, 28, Sep, 12:18 PM

 

 
 
கிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08.15 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
 
தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும். உயர்கல்வியை அக்காலத்தில் சீனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். கிண்ணியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக முதல் நியமனம் பெற்றார். 
 
அதனையடுத்து 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். கிண்ணியா, கொழும்பு, கந்தளாய் போன்ற பிரதேச பாடசாலைகளில் இவர் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.
தான் கற்;பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். கடமை விடுமுறையோடு கற்றார். 1979ஆம் ஆண்டு வர்த்தகப்; பட்டதாரியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் வர்த்தகப்பட்டதாரி என்ற பெருமையை இவர்  பெறுகின்றார்.
 
கிண்ணியாவில் வர்த்தகப் பாடம் குறித்தும் அதன் எதிர்கால நன்மை குறித்தும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக க.பொ.த (சா.த) தரத்தில் வர்த்தகம் கற்கும் ஆர்வத்தைத் தூண்டினார்.
 
அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடையந்த இவர் அதிபர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
இவர் அதிபர் சங்கத் தலைவராக இருந்த போது கிண்ணியாவுக்கு தனி கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்தார். இதன் பிரதிபலனாக அப்போதைய வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சுந்தரம் டிவகலாலாவினால் கிண்ணியாவுக்கு அதிகாரம் கொண்ட உப வலயக் கல்வி அலுவலகம் வழங்கப்பட்டது.
 
முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் எ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் முக்கியமான ஒருவராக இவரும் செயற்பட்டுள்ளார்,
 
இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் 1960 ஆம் ஆண்டு சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்து 'சீலதரன்' என்ற புனைபெயரில் உலாவந்தார். நாவல், குறுநாவல், கவிதை, கட்டுரை என்பவற்றிலும் ஆர்வம் காட்டினார். 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 02 நாவல்களையும், 05 குறுநாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.
 
இவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலைமுரசு, தினபதி, வீரகேசரி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 
 
இவரது 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு 'பச்சைப் பாவாடை' என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளது. இவரது இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலும் வறுமை, திறமை, முன்னேற்றம் போன்ற கருப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
 
2002 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமன்றி இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
 
கிண்ணியாவின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் 2008 ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழாவில் 'இலக்கிய வேந்தர்' பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
நாகூர்தம்பி உம்மு கபீபா, உம்மு கபீபா ஆகியோர் இவரது துணைவிகளாவர். தாரிக் (அதிபர்), தரீப், ஆரிப் (ஆசிரியர்), சித்தி பஜீலா, பாத்திமா சுமையா, முகம்மது ஆசிக், பாத்திமா சுரையா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
 
2011.11.11 ஆம் திகதி இவர் காலமானார். இவரது ஜனாசா கந்தளாய் பேராறு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
 
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல் 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners