Thursday, 12, Sep, 2:10 AM

 


நவாஸ் சௌபி

நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான பொதுப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட (Open & Limited) அடிப்படையில் கோரப்பட்டுள்ளன.

இலங்கை நிர்வாக சேவை - SLAS
இலங்கை கணக்காளர் சேவை -SLACS
இலங்கை திட்டமிடல் சேவை - SLPS
இலங்கை கல்வி நிர்வாக சேவை - SLEAS
இலங்கை விஞ்ஞான சேவை - SLSS

ஆகிய துறைகளுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்துடன் ஏற்கனவே இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை - SLTES வெற்றிடங்களுக்கான விண்ணப்பமும் கோரப்பட்டு அதற்கான பரீட்சையும் நடைபெறுவதற்கு நவம்பர் 29 திகதி அறிவிக்கப்பட்டவாறு உள்ளது.
இதில் கருத்தில் கொள்ளக்கூடிய முக்கிய ஒரு விடயமாகவிருப்பது இப்பரீட்சைகள் யாவற்றையும் ஒரே நேரத்தில் மொத்தமாக விண்ணப்பித்திருப்பதால் இப்பரீட்சைகள் ஏககாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும் என்ற நிலை தெரிகிறது.
எனவே இத்துறைகளில் திறந்த ரீதியாவும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் பங்குகொள்கின்ற தரப்பினர்கள் ஒரேநேரத்தில் எல்லாப் பரீட்சைகளிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பினை இழக்கின்றார்கள் காரணம் எல்லா பரீட்சைகளுக்கும் மொத்தமாக தாயாராகுதல் என்பது குழப்பமான ஒரு முடிவைத் தரும்.

பொதுவாக மேற்படி பரீட்சைகளில் வர்த்தகத் துறை பட்டதாரிகள் குறிப்பாக SLAS, SLEAS, SLACS, SLPS என முக்கியமாக நான்கு துறைகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் இதில் நான்கும் ஒரே தடவையில் நடைபெற்றால் அவர்கள் இதற்குள் தெரிவு
அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது.
இதன்படி உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் இங்கே மறுக்கப்படுவது போன்றே இவ்விண்ணப்பங்கள் மொத்தமாக ஒன்றாக கோரப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

நடத்துகின்றவர்கள் பொதுச் சேவை ஆணைக்குழுவாக இருப்பதால் அவர்களின் கீழ் உள்ள எல்லாத் துறைகளுக்கும் மொத்தமாக விண்ணப்பம் கோரி இருப்பது அவர்களுக்கு இலகுவானதாக இருந்தாலும்
இதனை எதிர்கொள்ளும் ஒரே தரப்பினர் எல்லாப் பரீட்சைகளுக்கும் எப்படி ஒரே நேரத்தில் தயாராக முடியும்.
இது விடயத்தில் எமது அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் யாரும் கவனம் கொள்வதுமில்லை இப்பரீட்சைகளை எழுத தகுதியானவர்களும் இதனைக் கருத்தில் எடுப்பதில்லை இதனை சுயதீனமான ஒரு செயற்பாடாக அப்படியே விட்டுவிடுகின்றோம்.
இவ் ஆட்சேர்ப்பு நடைமுறைக்குள்ளும் இனவாத கருத்து நிலை மேலோங்கி இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் அதற்கான ஒரு பொறிமுறை தொழிற்படுகிறதா? என்றும் சிந்திக்க வைக்கிறது.

இதனால் இன்று இப்பதவிகளை அடைவதற்கான சிறுபான்மை சமூகங்களின் போராட்டம் மிகக் கடினமான ஒன்றாக இருப்பது இதுவும் இனவாத சவால்களுக்குள் அகப்பட்டுள்ளதா? என நோக்கச் செய்கிறது.
கடந்தகாலங்களில் நடைபெற்ற இதுபோன்ற போட்டிப் பரீட்சைகளில் தெரிவான சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம் தரப்பினரின் எண்ணிக்கை இதனை உணரச் செய்கிறது.

இதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஒரு வகை இனத்துவ பாகுபாடு பார்க்கப்படும் உள்ளார்ந்த மனோபாவம் செயற்படுகிறதா? என்ற சந்தேகமும் ஐயமும் எழுவதாக பலரும் வாய் அலசுகின்றனர்.
1990 களுக்கு முன்பு இனவிகிதாசாரப்படியாக இருந்த இத்தகைய ஆட்சேர்ப்பு நடைமுறை நீதி மன்ற தீர்ப்பு ஒன்றின் ஊடாக அவ்வாறு இல்லாமல் பரீட்சை அடிப்படையில் தெரிவாகும் முடிவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதாவது இலங்கையில் வாழும் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் இன மத அடிப்படையில் அதனைப் பார்க்ககூடாது என்ற அரசியலமைப்பின் பிரிவின் கீழ் இனத்துவ நியமன முறை தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இனத்துவ அடிப்படையில் வரும் விகிதாசார அளவினைவிடவும் போட்டிப் பரீட்சையில் திறமையானவர்கள் அதிகமானவர்கள் சித்தியடைந்தால் மறுபுறம் இப்பதவிகளுக்கு எமது சமூகங்களிலிருந்து அதிகமானவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்று ஒரு சாதகத்தினால் இதனை ஏற்றுக்கொள்ளும் மகிழ்ச்சி இருந்தது.

ஆனால் இன்று இப்பரீட்சைகளின் அடிப்படையில் தெரிவாகின்றவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் அது விகிதாசார அளவிலும் பார்க்க இன்னும் மோசமான ஒரு எண்ணிக்கையாக 1 அல்லது 2, 3 என்றும் சிலநேரம் யாருமே இல்லை என்று சொல்லும் படியாகவும் மிகுந்த ஆபத்தான ஒரு முறையாக மாறி இருக்கிறது.

இதனை எந்த முஸ்லிம் தமிழ் அரசியல் தலைமைகளும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்தில் எடுத்து இதன் எதிர்கால ஆபத்தை கணித்து பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ பொதுஊடகங்களுக்கோ எத்தகைய கவனயீர்ப்பினையும் இதுவரை கொண்டுவரவில்லை.

இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் சிறுபான்மைச் சமூகங்களில் அதிகார நிர்வாகப் பகுதிகளில் பணிபுரிவதற்கு SLAS, SLEAS, SLACS, SLPS போன்ற தரங்களைச் சேரந்தவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.
இப்பரீட்சைகளினூடான ஆட்சேர்ப்பு நடைமுறை எதிர்கால்தில் இந்த ஆபத்தைத்தான் தரும் என்பதையே ஒவ்வொரு முறையும் எமக்கு உணர்த்துகிறது.

இதில் பரீட்சை முடிவுகளுக்கு அப்பால் நேர்முகப் பரீட்சை கணிப்பீட்டினையும் வைத்திருக்கிறார்கள் இதனூடாகவும் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. ஆரம்பகாலத்தில் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் மாத்திரம் நடைபெற்ற இத் தெரிவுகளுக்கு மேலாக அண்மைக்கலாமாக நேர்முகப் பரீட்சை புள்ளித் திட்டத்தையும் இணைத்து இறுதி தெரிவு நடைபெறுவதும் வடிகட்டுவதற்கான ஒரு உபாயமாக பயன்படுகிறது.

இதன்படிதான் கடந்த 2019 இல் நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப்பரீட்சையின் படி தமிழ் மொழியில் மொத்தமாக 160 பேர் மாத்திரமே நியமனம் பெற்றார்கள் மொத்தமாக வழங்கிய 3800 நியமனங்களில் 3600 அளவிலானவர்கள் சிங்கள மொழியிலும் வெறும் 160 தமிழ் மொழியுலுமாக வழங்கப்பட்டிருந்தது. இத்தகைய அநீதிகளை கடந்த ஏனைய துறைகளிலும் நாம் எண்ணிப்பார்க்கலாம் மலைக்கும் மடுவுக்குமான தொகையினர் நியமன் பெறும் ஆபத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எனவே இப்பரீட்சை நடைமுறைகளில் சிவில் சமூகங்கள் கற்ற சமூகங்கள் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது.

இந்த அரசாங்கம் தற்போது விண்ணப்பம் கோரியுள்ள நடைமுறைக்கான பரீட்சைகளை கால அவகாசம் வழங்கி நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும்.
இதற்கு மேலாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்ள் இச்சவால்களை மீறி வெற்றி கொண்டு உரிய இடங்களை அடையும் பொருட்டு கடின உழைப்பும் முயற்சியும் கொண்டு இப்பரீட்சைகளுக்கு தயாராக வேண்டும்

எமது கல்வியானது எமது எதிர்கால பரம்பரையின் சமூகத் தேவைகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இதனை ஒரு அமைப்பாக செயற்பட்டு நாம் நிறைவேற்ற வேண்டும். கூட்டு முயற்சியுடன் இதற்கான கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளுங்கள்.
உரிய துறை சார்ந்தவர்கள் இதற்கு முன்னின்று வழிகாட்டுங்கள்.
அதிகாரிகள் அற்ற ஒரு சமூகமாக எதிர்காலத்தில் நாம் ஆளாகிவிடுவோமா? என்ற ஆபத்தை நோக்கி எமது அரசியலை கூர்மையாக்குவோம்.

ஆட்சேர்ப்பு நடைமுறை இரகசியமானதும் சுயாதீனமானதும் என்றவகையில் இதிலுள்ள நம்பகத் தன்மை பற்றியும் நாம் கேள்வி எழுப்ப வேண்டிய நிலையை சிறுபான்மைச் சமூகங்களின் நியமன எண்ணிக்கை எமக்கு உணர்த்துகின்றது.

 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners