தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி விற்பனை செய்கிறது.
அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
எம் எஸ் சி ஹெச் எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலை பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில் சில மாற்றங்களை செய்து ´666 ஜோடி ஷூ´ என வெளியிட்டு இருக்கிறது.
அவ்வமைப்பு ரேப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கருப்பு சிவப்பு நிற ஷூவில் தலைகீழான சிலுவைச் சின்னம், பென்டாகிராம் எனப்படும் நட்சத்திரக் குறி, லூக் 10:18 என்கிற சொல் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஷூவின் விலை 1,018 அமெரிக்க டாலர். இந்த ஷூ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இது பதிப்புரிமை மீறல் என நைக் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை லில் நாஸ் எக்ஸ் பாடகரின் ´மான்டெரோ´ (கால் மீ பை யுவர் நேம்) என்கிற பாடல் வெளியானது. அதில் சொர்கத்தில் இருந்து நரகத்துக்கு ஒரு கம்பத்தைப் பிடித்துக் கொண்டு வருவது போல ஒரு காட்சி இருக்கிறது.
அப்படி வரும் அந்தப் பாடகர், 666 ஜோடி ஷூக்களை அணிந்திருக்கிறார். இந்த ஷூக்கள் ஒவ்வொன்றிலும் நைக்கின் பிரத்யேகமான ஏர் பபிள் குஷன்களைக் கொண்ட பாதப் பகுதிகள் இருக்கின்றன. அதில் சிவப்பு நிற சாயமும், கலைப் பொருட்கள் சேகரிப்புக் குழு உறுப்பினர்கள் கொடுத்த ஒரு துளி உண்மையான மனித ரத்தமும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் நியூ யார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில், எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பின் ஷூக்களை விற்பதைத் தடுக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனத்தின் இலச்சினையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடுத்திருக்கிறது நைக் நிறுவனம். அதோடு, இந்த மாற்றி வடிவமைக்கப்பட்ட சாத்தான் ஷூக்களை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறுகிறது நைக்.
“எம் எஸ் சி ஹெச் எஃப் மற்றும் அதன் சாத்தான் ஷூக்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். நைக் மற்றும் எம் எஸ் சி ஹெச் எஃப் அமைப்பு இணைந்து செயல்படுவது போல ஒரு தவறான புரிதலை உண்டாக்கும்” எனவும் அவ்வழக்கில் கூறியுள்ளது நைக் நிறுவனம்.
“எம் எஸ் சி ஹெச் எஃப்-ன் சாத்தான் ஷூக்களை நைக் நிறுவனம் அங்கீகரித்திருக்கிறது என்கிற தவறான செய்தியால், ஏற்கனவே சந்தையில் குழப்பம் நிலவுகிறது. சாத்தான் ஷூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நைக் நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என நைக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை, தெற்கு டகோட்டாவின் ஆளுநர் கிறிஸ்டி நொய்ம் உட்பட அமெரிக்காவில் இருக்கும் சில பழமைவாதிகள், ட்விட்டரில் சாத்தான் ஷூக்களின் வடிவமைப்பு குறித்தும், பாடகர் லில் நாஸ் எக்ஸ், எம் எஸ் சி ஹெச் எஃப் குறித்தும் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டனர்.
பாடகர் லில் நாஸ் எக்ஸ் தன் மீதான விமரசனங்களுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ளார்.
Comment