கிண்ணியா நகர சபை, பிரதேசபை வரவு செலவு திட்டம் தோல்வி; மக்கள் நலனா – பதவி மோகமா? ஓர் சட்ட ரீதியான நோக்கு.
ஏ.எஸ்.எம் நளீஜ் LL.B (R)
கிண்ணியா பிரதேசபையின் வரவு செலவு திட்ட முதாலவது சமர்ப்பிப்பு மற்றும் கிண்ணியா நகரசபையின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது சமர்ப்பிப்பும் (குறைநிரப்பு வாசிப்பு) தோல்வியடைந்துள்ளன என்று சொல்வதை விட பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று கூறலாம்.
இந்த வரவு செலவு திட்ட தோற்கடிப்பு நிகழ்வுகள் கிண்ணியா வரலாற்றில் புதிய விடயமாக காணப்படுவதுடன், இதற்காக கூறப்படும் காரணங்கள் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான மன நிலையினையும் உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனவே இந்த வரவு செலவு திட்ட தோற்கடிப்புகள் மற்றும் தவிசாளர்களின் பதவிகள் பறிக்கப்படுதல் என்பவற்றுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளை சுருக்கமாக விளக்க முனைகின்றேன்.
நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டங்கள் வேவ்வாராக இருந்தாலும் வரவுசெலவு திட்டம் மற்றும் தவிசாளர் பதவி தொடர்பிலான சட்டத்தின் பிரிவுகள் மாறினாலும் ஏறத்தாள ஒன்றையொன்று ஒத்த ஏற்பாடுகளே காணப்படுகின்றன. எனவே இங்கு நகரசபைகள் கட்டளைச்சட்டத்தினை உதாரணமாக கொண்டுள்ளேன்.
நகரசபை ஒன்றின் வரவு செலவு திட்டம் பற்றி உள்ளூர் அதிகார சபைகள் சட்ட ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன..?
2017 ஆம் ஆண்டுவரை பல்வேறு திருத்தச் சட்டங்களால் திருத்தியமைக்கபட்ட வாறான 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகர சபைகள் கட்டளைச்சட்டம் பிரிவு 178(1) மற்றும் அதன் உப பிரிவுகளை சுருக்கமாக நோக்குகின்றபோது..
நகரசபை ஒவ்வொன்றினதும் தவிசாளரானவர் ஒவ்வோர் ஆண்டும் விதிகளினால் குறித்துரைக்கப்பட்ட திகதியொன்றில் குறிக்கபட்ட படிவத்தில் அடுத்துறும் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும். இது அடுத்து வருகின்ற ஆண்டில் கிடைக்கக்கூடிய வருமானத்தின் மதிப்பீடு மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினத்தின் விபரங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
என குறிப்பிடுகின்றது.
அதே போன்று 2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட வாறான நகர சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 178A ஆனது இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம் மீதான தவிசாளர் மற்றும் சபையின் அதிகாரங்கள் பற்றி ஏற்பாடு செய்கின்றது.
அதாவது, சபையானது தவிசாளரினால் சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவு திட்டத்திலுள்ள எல்லா விடயங்களையும் அல்லது அவற்றுள் எவற்றையேனும் திரிபு படுத்தினால் அல்லது நிராகரித்தால் ஆலது ஏதேனும் புதிய விடயத்தை சேர்த்தால் அந்த சபையின் முடிவுக்கு தவிசாளர் இணங்கி கொள்ளா விட்டால், அவர் சபையின் பரிசீலனைக்கு மீண்டும் வரவு செலவு திட்டத்தை சமர்பித்தல் வேண்டும்.
இவ்வாறு சமர்பிக்கப்படும் வரவு செலவு திட்டமானது சபை ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டுக்குள் சமர்பிக்கப்படும் வரவு செலவு திட்டமாயின் சபையினால் நிராகரிக்கப்பட்டாலும் கூட தவிசாளரின் அதிகாரத்தினால் அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே கருதப்பட்டு நடைமுறைக்கு வரும்.
எனினும் இக்கட்டளைச் சட்டத்தின் 178 ஆம் பிரிவுக்கும் 178A என்னும் பிரிவுக்குமிணங்க சபை தொடங்கிய இரண்டு ஆண்டுகளிற்கு பின்னரான அதாவது மூன்றாவது ஆண்டுக்குரிய அல்லது நான்காவது ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டமாயின் சபையானது, வரவு செலவுத்திட்டத்தில் உள்ள எல்லா அல்லது எவையேனும் விடயங்களைத் திரிபுபடுத்தினால் அல்லது நிராகரித்தால் அல்லது ஏதேனும் விடயத்தை அதற்குச் சேர்த்தால், சபையின் அத்தகைய முடிவுக்கு தவிசாளர் உடன்படாவிட்டால், அவர், சொல்லப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மேலும் பரிசீலனை செய்யப்படுவதற்காகச் சபையிடம் மீளச் சமர்ப்பித்தல் வேண்டும்.
ஒரு வரவு செலவுத்திட்டம், அது இரண்டாவது தடவையாக மீளச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குள் சபையினால் நிறைவேற்றப்படாத விடத்து, தவிசாளர், சொல்லப்பட்ட இரண்டு வாரக் காலப்பகுதியின் முடிவில் தவிசாளர் என்ற பதவியிலிருந்து விலகியுள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்.
என சட்டம் ஏற்பாடு செய்கின்றது.
இங்கு சட்டம் தவிசாளர் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் விடயம் என்ன??
தவிசாளர் மக்கள் நலன் கருதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் வகையிலான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும். அல்லது மக்கள் நலன் கருதி சபை உறுப்பினர்கள் கூறும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
தவிசாளரினால் சமர்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு சபையினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு அல்லது திருத்தங்களுக்கு “சபையின் அத்தகைய முடிவுக்கு தலைவர் உடன்படாவிட்டால்” தான் பொதுமக்கள் நலன் கருதி தனி நபரின் அதிகாரப் போக்கினை இல்லாமலாக்கும் வகையில் தவிசாளர் பதவி பறிபோகும்.
எமது உறுப்பினர்கள் எந்த மாற்றத்தை முன்வைத்தனர், எதை தவிசாளர் நிராகரித்தார்?
ஆனால், தற்போது எமது கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளிலே தாவிசாளர்களினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டங்களில் சபை உறுப்பினர்கள் மக்கள் நலன் கருதி என்ன மாற்றம் அல்லது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு கோரிக்கை முன்வைத்தனர்.?
அல்லது சபை உறுப்பினர்கள் தவிசாளரின் வரவு செலவு திட்டத்தின் எந்த விடயம் பொதுமக்களுக்கு பாதிப்பானது என்று கூறி அதனை நிராகரித்தனர் என்பதை பொதுமக்கள் குறித்த வளவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க வேண்டியது மக்களின் கடமையும் கூட.
உண்மையில் ஒரு தவிசாளரின் பதவி சட்டப்படி எப்போது பறிக்கப்படலாம்?
1977 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட வாறான நகர சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 184 ஆனது நகரசபை ஒன்றின் தவிசாளரை நீக்குதல் மற்றும் சபையை கலைத்தல் பற்றிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது.
பிரிவு 184(1) இன் பிரகாரம்,
தவிசாளர் ஒருவர்
(அ) சபையின் கூட்டங்களை நடத்தவோ அல்லது கூடங்களில் கலந்துகொள்ளவோ தொடர்ந்து மறுப்பது; அல்லது
(ஆ) இந்த சட்டத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே புறக்கணித்தல், அல்லது தவறான நடத்தை; அல்லது
(இ) உள்ளூராட்சி அமைச்சரின் அல்லது சட்டத்தின் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் அல்லது பரிந்துரைகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படியாமை அல்லது புறக்கணித்தல்; அல்லது
(ஈ) திறமையின்மை மற்றும் தவறான நிர்வாகம்; அல்லது
(உ) இந்த நகரசபைகள் கட்டளைச்சட்டம் மூலம் தவிசாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தல்,
போன்ற சந்தர்ப்பங்களில் உள்ளூராட்சி அமைச்சர், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஆணை மூலம் தவிசாளரை பதவியில் இருந்து நீக்கலாம்;
(இங்கு தவிசாளரை மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களையும் நீக்கி விட்டு சபையையும் கலைக்கும் அதிகாரம் இச்சட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்வதற்காக அமைச்சர் விஷேட விசாரணை குழு ஒன்றை அமைத்து அதன் தீர்ப்பின் பிரகாரம் முடிவெடுப்பார். அதற்காக விரிவான ஏற்பாடுகள் நகரசபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 184 (1A) தொடக்கம் 184(8) வரை குறிப்பிடப்பட்டுள்ளது)
ஆனால், அவ்வாறு அமைச்சர் தவிசாளரை நீக்குவதற்கு விசாரணை குழு அமைக்க வேண்டுமாக இருந்தால், மேலே (அ ) முதல் (இ) வரை பட்டியலிடப்பட்ட தவறுகள் தவிசாளரினால் புரியப்பட்டமை தொடர்பில் ஆதாரத்துடன் முறைப்பாடுகள் செய்யப்படவேண்டும். அதாவது தவிசாளர் உண்மையில் மேற்குறித்த தவறுகளை புரிந்திருக்க வேண்டும்.
புதிய தவிசாளர் தெரிவு..?
இவ்வாறு பிரிவு 178(1) இன் கீழ் வரவு செலவு திட்டம் தோட்கடிப்பின் மூலமோ அல்லது 184(1) ஒழுக்காற்று ரீதியாகவோ தவிசாளர் நீக்கப்படும் போது புதிய தவிசாளரை தெரிவு செய்யும் ஒழுங்குகள் 2012ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாரான உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 66G இலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த தவிசாளர் பதவி வெற்றிடமாகிய தினத்திலிருந்து ஆறு வாரங்களுக்குள் உள்ளூராட்சி ஆணையாளரினால் புதிய தவிசாளர் தெரிவுக்காக சபை கூட்டப்பட்டு புதிய தவிசாளர் தெரிவு நடாத்தப்படவேண்டும்.
எனினும்,
இங்கு பொதுமக்களாகிய நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில், தற்போதைய சூழ்நிலையில் எமது கிண்ணியாவின் இரண்டு சபைகளினதும் தவிசாளர்கள் மீது ஏனைய உறுப்பினர்களால் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அதன் காரணமாகவே அவர்களின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. எங்கேயுமே வரவு செலவு திட்டத்திலுள்ள குறைபாடு காரணமாக அவை தோற்கடிக்கப்ப்டாதாக கூறப்படவில்லை.
ஆனால், தவிசாளர்கள் மீதான அவ்வாறான குற்றச்சாட்டுகள் எவையும் இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்ப்டவுமில்லை, அமைச்சருக்கு விசாரணைக்காக சமர்பிக்கப்ப்டவுமில்லை. வெறுமனே வாய் மூலமான குற்றச்சாட்டாகவே காணப்படுகின்றன.
உண்மையிலே தவிசாளர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால், அதனை ஆதாரபூர்வமாக அமைச்சருக்கு முறைப்பாடு செய்வதன் மூலம் சட்ட ரீதியாக தவிசாளரின் பதவியை இல்லாமல் செய்யலாம். அதுதான் முறையும் கூட. பொதுமக்கள் மீதும் ஜனநாயகம் மீதும் அக்கறையுள்ள உறுப்பினர்களாக இருந்தால் தவிசாளர் மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் மக்கள் முன் நிறுத்தி, சட்ட ரீதியாக அதனை அணுகலாம்.
அவ்வாறு இல்லாமல், தவிசாளரினால் சமர்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் எந்த குறை நிறைகளையும் விவாதிக்காமல், வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன் கருதி தாம் சேர்க்க விரும்பும் அல்லது நீக்க விரும்பும் விடயங்கள் எவை என்ற எந்த அறிவும் இல்லாமல் வெறுமனே அதில் என்ன இருக்கின்றது என்று கூட தெரியாமல் எதிராக வாக்களித்து வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கும் செயல்பாடு ஒரு போதும் மக்கள் மீது நலன் கொண்டதாக இருக்க முடியாது.
பின்னர் எதற்காக இந்த வரவு செலவு திட்ட தோற்கடிப்பு.?
சட்டப்படி ஆதாரபூர்வமாக தவிசாளர் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாமல் முறைப்பாடும் செய்ய முடியாத சூழ்நிலையில் குறித்த தவிசாளர் பதவி மீது மோகம் கொண்ட ஒரு சில உறுப்பினர்களின் வழிகாட்டலின் கீழ் ஏனையோரும் சேர்ந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பது என்பது தவிசாளர் பதவியின் மீது ஆசை கொண்டு நேர்மையாக தவிசாளர் மீது குற்றச்சாடு முன்வைக்க முடியாத சூழலில் குறுக்கு வழியில் தவிசாளரை நீக்கி விட்டு கதிரையை பங்குபோட்டு கொள்ளும் அரசியல் தந்திரமே எமது இரு சபைகளிலும் நடந்துள்ள வரவு செலவு திட்ட தோற்கடிப்பு என்பதை நடுநிலையாக சிந்திக்கும் அறிவுள்ள மக்கள் புரிந்து கொள்ளவார்கள்.
பொதுமக்களாகிய நீங்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உங்களது வட்டார உறுப்பினர்களிடம் இந்த வினாக்களை கேளுங்கள்..
- நீங்கள் சமர்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு பாதகமான எந்த விடயங்களை மாற்றுமாறு தவிசாளரை கேட்டீர்கள் – அந்த விடயங்களை மாற்ற அவர் மறுத்தாரா?
- குறித்த வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன்கருதி எந்த விடயங்களை புதிதாக சேர்க்குமாறு கூறினீர்கள் - அதை தவிசாளர் மறுத்தாரா..?
- இவற்றுள் எதனால் நீங்கள் வரவு செலவு திட்டத்தை நிராகரித்தீர்கள்...?
எனும் கேள்விகளை கேளுங்கள்.. அவர்களால் ஒரு போது பதில் தரமுடியாது. ஏனெனில் வரவுசெலவு திட்டத்தில் என்ன இருந்தது என்பது கூட பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு தெரியாது. அவர்கள் தேவையெல்லாம், பொது நலனல்ல, தவிசாளர் அமர்ந்திருக்கும் அந்த கதிரையே..!!
உண்மையிலே தவிசாளர் பக்கம் பிழைகள் இருந்தால் அதனை நகர சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 184 கீழான முறையான விசாரணையின் பிரகாரமே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. வரவு செலவு திட்டத்தில் குறை இருந்தால் அதனை திருத்துமாறு கோரலாம், அவ்வாறு திருத்தம் மேற்கொள்ள தவிசாளர் மறுக்கும் போதுதான் வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கலாம், அதை விடுத்து தவிசாளர் மீது சட்டரீதியாக குற்றச்சாடு முன்வைக்க முடியாத சூழலில் குறுக்கு வழியில் தவிசாளரை நீக்கி விட்டு கதிரையை அடைந்து கொள்ளும் அரசியல் தந்திரமே எமது சபைகளில் நடந்துள்ள வரவு செலவு திட்ட தோற்கடிப்பு என்பதை மீண்டும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏ.எஸ்.எம். நளீஜ் LL.B (R)
கிண்ணியா
Comment