அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றமை தொடர்பில் கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கூடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹாரிஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையிலேயே நசீர் அஹமட் அமைச்சராக பதவியேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைக்கு மாறாக மீண்டும் செயற்பட்டுள்ள நசீர் அஹமட் தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தாருஸ்ஸலாமில் கூடவுள்ள கட்சியின் உயர்பீடம் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் அன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் அவர் சுட்டிக்காட்டினார்.
Comment