Wednesday, 22, Sep, 10:27 AM

 

(மீள்பதிப்பு)

கலாநிதி ஏ.சி.எல். அமீர் அலி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்/காத்தான்குடி 5ஆம் குறிச்சிப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்/ வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் கற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புக் கலைமானிப் பட்டத்தையும் B.A(Hons) பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் வரலாற்றுத்துறையில் தத்துவ இளமானி M.Phil (London) பட்டத்தையும் மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதிப் பட்டத்தையும் Ph.D. (W Aust) பூர்த்திசெய்துள்ளார். ஆரம்பத்தில், பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அவுஸ்திரேலிய மெரிடொக் (Murdoch) பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை வருகை தரும் விரிவுரையாளராகவும், 1986 ஆம் ஆண்டு புலனாய் தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் (8 வருடம்) 1994 ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் (University of West Aus) சிரேஷ்ட விரிவுரையாளராகவும் (12 வருடம்) இணைந்து பணியாற்றியுள்ள இவர், மீண்டும் 2002ஆம் ஆண்டு் மெரிடொக் (Murdoch) பல்கலைக்கழகத்தில் இணைந்து தற்போது முதுநிலை விரைவுரையாளராக பணியாற்றி வருகிறார். சமூக பொருளாதார விவகாரங்களில் மிகுந்த ஈடுபாடுடைய கலாநிதி அமீர் அலி, அவுஸ்திரேலிய ஜோன் ஹவார்ட் அரசாங்கத்தின் ஆலோசகராகவும், அவுஸ்திரேலிய பெடெரேஷன் இஸ்லாமிக் கவுன்ஸிலின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். முஸ்லிம் சமூக விவகாரங்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வடித்துள்ள இவர், சர்வதேச பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் சமகாலத்தின் முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மையில் இலங்கை வந்திருந்த கலாநிதி அமீர் அலி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய ​பேட்டி. 

கேள்வி: இலங்கை முஸ்லிம்கள் பற்றிய உங்களது அவதானங்களை சற்று குறிப்பிட முடியுமா?

பதில்: நாங்கள் தனித்துவம் என்ற பெயரில் தனிமைப்பட்டு விட்டோம். அதாவது, தனித்துவம் அகத்தினூடாக வர வேண்டும். அது புறத்தினூடாக வரக்கூடாது. நாங்கள் புறத்தோற்ற விடயங்களை கைக்கொண்டு அங்கு தான் தனித்துவம் இருக்கின்றதென்று பார்க்கின்றோம். நாங்கள் தனித்துவத்தை அகத்தில் காட்ட வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் எம்மை மதிப்பார்கள். இது பல்லின மக்கள் வாழும் நாடு. இந்நாட்டில் நாம் எம்முடைய மதத்தை ஏனையவர்களுக்கு வெளிக்காட்ட வேண்டும். எமது பள்ளிவாயல்களை திறந்து வைக்க வேண்டும். எல்லோரும் வந்து பள்ளிவாயல்களை பார்வையிடக்கூடிய முறையில் காணப்பட வேண்டும். பிற மதத்தவர்களுக்கு எமது மதம் பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை உரிய முறையில் சொல்லிக்கொடுக்காமையினாலேயே சந்தேகப்படுகின்றனர். இதுவே எமது அடிப்படை பிரச்சினை.

கேள்வி: வரலாற்றில் கண்ணியமாக நடத்தப்பட்ட சமூகம் ஏன் இன்று சந்தேகத்துடன் நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது?

பதில்: சிறுபான்மை முஸ்லிம்களை கண்ணியமாக நடத்தும் நாடு உலகில் இலங்கையை தவிர வேறு எதுவுமில்லை. உலக வரலாற்றிலேயே இல்லை. இலங்கையில் முஸ்லிம்கள் காலூன்றிய காலத்திலிருந்து 1970, 80 காலப்பகுதி முடிகின்ற வரையில் பெளத்தர்கள் முஸ்லிம்களை கண்ணியமாக நடத்தினார்கள். இந்த வரலாற்றை நாம் அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். 1980களுக்குப் பின்னர் இது ஏன் மாறியது? 1980களுக்கு பின்னர் வெளியில் இருந்து வந்த சில சக்திகள் முஸ்லிம்களையும், முஸ்லிம்களது நடவடிக்கைகளையும் மாற்றி, இது தான் இஸ்லாம் என்று கூறி அவர்களை திசைதிருப்பி விட்டுள்ளார்கள். இவ்விடயம் மற்றவர்களின் பார்வையில் ஐயத்தை உண்டாக்கியிருக்கின்றது. அதாவது இங்கு அடிப்படைவாதம் நுழைந்தமையினாலேயே நாம் எமது மார்க்க விடயங்களை புறத்தோற்றத்தில் காண்பித்துக்கொண்டுள்ளோம். தனித்துவம் வெளிக்காட்டப்பட வேண்டியது ஆடையிலும் அலங்காரத்திலும் அல்ல. அது உள்ளத்தில் வர வேண்டும். ஆயிரம் ஆண்டுகாலமாக பிறசமூகத்தவர்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் கடந்த 20, 30 ஆண்டுகளுக்குள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்? இது எங்களது பிழையல்ல. சில விஷமிகள் இதற்கு பின்னால் திட்டமிட்டு செயற்படுகின்றார்கள்.

கேள்வி: இதற்குப் பின்னாலுள்ள சக்திகள் யார் என்பதை குறிப்பிட முடியுமா?

பதில்: இரண்டு மூன்று சக்திகள் உள்ளன. ஒன்று எண்ணெய் வளமுள்ள நாடுகள். குறிப்பாக சவுதி அரேபியா. வஹாபியக் கொள்கையே சவுதி அரேபியாவினுடைய இஸ்லாமிய வழிமுறை. அதனது ஊடுருவலினால் இன்று உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் அச்சப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மாத்திரமல்ல, எல்லா நாடுகளிலும் வஹாபித்துவக் கொள்கை பரவியமையினால் மற்ற இனங்கள் எங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் நாங்கள் உண்மையான இஸ்லாம் எதுவென்பதை அல்குர்ஆனில் இருந்து அறிய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் நாங்கள் குர்ஆனை ஓதினோமே ஒழிய அதை படிக்கவில்லை. அல்குர்ஆனை படிக்க வேண்டும். நான் 40 வருட காலமாக குர்ஆனை படித்தேன். இன்று இஸ்லாத்தின் போர்வையில் சமூக வலைதளங்களில் எல்லோருமே இமாம்களாக (போதகர்களாக) மாறியுள்ளனர்.

கேள்வி: இன்று உலகளவில் இடம்பெற்று வருகின்ற இஸ்லாமோ போபியா (இஸ்லாம் குறித்த பீதி) குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: இன்று முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஈராக் தலைநகர் பக்தாத் அறிஞர்களுக்கு காந்தசக்தியாக காணப்பட்டது. அப்போது முஹ்தஸிலாக்கள் என்றொரு கூட்டம் இருந்தது. அவர்களே முதன்முதலாக மதவாத்தை (Sacialism) உருவாக்கினார்கள்.

அல்குர்ஆனில் அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக இல்ம் என்ற சொல் அதிகமாக இடம்பெறுகிறது. இல்ம் என்பது அறிவு. அறிவுள்ளவன் ஆலிம். ஆலிம்களை உலமாக்கள் என்கின்றோம். அல்குர்ஆனுக்கு தப்ஸீர் (விளக்கமளிப்பவர்கள்) உலமாக்கள். அல்குர்ஆன் கூறும் வியாக்கியானம் வேறு, உலமாக்கள் சொல்லும் வியாக்கியானம் வேறு. அல்குர்ஆன் வசனமொன்று பெளதீகம், வானசாஸ்திரம், கணிதம் ஆகிய கலைகளையெல்லாம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்து இப்படிப்பட்ட உலமாக்கள் என்றும் கூறுகிறது. யார் உலமா? யார் ஆலிம்? முன்பிருந்த உலமாக்கள் இப்படியான அறிவு படைத்தவர்களாகவே காணப்பட்டார்கள். அபூஹனீபா, இமாம் ஷாபி போன்றவர்கள் பல கலை கற்றவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் கற்று குர்ஆனை நோக்கினார்கள். அதிலிருந்து வடிக்கப்பட்டவையே இந்தப் பிக்ஹூ சட்டங்கள்.

ஆனால் எந்தவொரு இமாமும் தான் கூறிய சட்டம் தான் சரியானது என கூறியது கிடையாது. உதாரணத்திற்கு அபூ ஹனீபா எகிப்தில் ஆமோதித்த விடயமொன்றை பாக்தாதில் எதிர்க்கிறார். காரணம் சூழல் வேறுபாடு. அவர் கூறுகிறார், “நான் இப்போது சொன்னால் எனது கருத்து தான் சரியென தெரிகிறது. ஆனால் நான் மற்றவர்களின் கருத்தை பிழையென்று கூற மாட்டேன்” இப்படியான பரந்த மனப்பான்மையுள்ள இமாம்கள் வாழ்ந்த காலப்பகுதியே அது. அதனாலேயே இஸ்லாம் வளர்ந்தது. முதஸிலாக்களுக்கு எதிரான எழுச்சியின் விளைவே இமாம் ஹன்பலி போன்றவர்கள். இமாம் ஹன்பலியின் சட்டம் கடினமானது. முஃதஸிலாக்களின் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஹன்பலி கூறியதற்கு அவரைச் சிறையில் அடைத்து துன்புறுத்தினார்கள். அவர் விட்டுக்கொடுக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்து மிக காரசாரமான முறையில் பிகஃ சட்டங்களை எழுதினார். இச்சட்டங்கள் மிகவும் காரசாரமாக இருந்தன. அதன் வழி வந்தவர்களுள் ஒருவரே இப்னு தைமியா. இவரது வழித்தோன்றலில் உருவானவர்களே அப்துல் வஹ்ஹாப். அப்துல் வஹ்ஹாப்பிடமிருந்து வந்ததே தற்போதைய வஹபிஸக் கொள்கை. இதுவே வஹபிஸக் கொள்கையின் வரலாறு. ஆனால் மற்றய இமாம்களை பற்றி எங்குமே சொல்லப்படவில்லை.

அபூஹனீபா ஒரு மிகப்பெரும் தாராண்மைவாதியாக இருந்தார். இவர்களில் யாராவது தாங்கள் சொன்ன சட்டம் தான் சரியானது என எங்குமே சொல்லவில்லை. அவையெல்லாம் தர்க்கரீதியாக சொல்லப்பட்டு வந்தவை. இஸ்லாமிய சட்டங்கள் எல்லாம் தர்க்க ரீதியாக வளர்ந்து வந்தவையாகும். அதுவே இஜ்திஹாத். இஜ்திஹாத் வழிமுறையின் வாயில்களை இமாம் கஸ்ஸாலி மூடினார். ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் எனக் கூறி இஜ்திஹாதிற்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்று கூறினார். அதன் பின்னர் இஜ்திஹாத் பின்தள்ளப்பட்டு ‘தக்லீத்” (பின்பற்றுதல்) வந்தது. எல்லோரும் சொன்ன விடயங்களை நாம் பின்பற்றுகிறோம் என்ற நிலை வந்தது. இன்று நாம் எல்லோரும் பின்பற்றுபவர்களாகவே உள்ளோம். நாம் மீண்டும் அல்குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும். குர்ஆன் கூறும் இல்ம் (அறிவூ) குர்ஆனுக்குள் மாத்திரம் காணப்படுவதில்லை. அது வெளியிலும் இருக்கிறது. வெளியிலுள்ள கலைகளை படிக்காவிட்டால் குர்ஆனை விளங்க முடியாது. சீனா சென்றாயினும் சீர் கல்வியைத் தேடு என நபிகளார் கூறிய வாக்கு வெறும் கல்வியை மட்டும் குறிப்பதாக கருதக்கூடாது. அவர்களது தொழில்நுட்பத்தையும் கற்று வருதல் என்பதே அதன் மறைபொருளாகும். அரேபியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று எப்படி கடதாசி, வெடிமருந்துகளை செய்வது என்பதை கற்றார்கள். அதுபோன்று இன்று நாம் இஸ்லாத்தை பற்றிய எமது நோக்கத்தை பரவலாக்க வேண்டும். குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்களுக்கு நாம் செல்ல வேண்டும். எல்லா ஹதீஸ்களையும் சரியென்று கூறவும் மாட்டேன், பிழையென்றும் கூற மாட்டேன். ஒவ்வொரு ஹதீஸையும் எடுத்து தர்க்க ரீதியாக ஆராய வேண்டும். அன்றைய இமாம்கள் இதனை செய்தார்கள். ஆனால் இன்றைய அறிவு வளர்ச்சி முற்றிலும் மாறியுள்ளது.

கேள்வி: இன்று இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பதில்: எங்களது சில ஸ்தாபனங்களை மாற்றியமைக்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஜம்மிய்யதுல் உலமா சபை இன்று வெளி சக்திகளின் கைப்பாவையாக இயங்குகின்றது. இந்த நாட்டினுடைய அங்கமாக அது மாற வேண்டும். இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகள் என்ன? உதாரணமாக, முஸ்லிம் தனியார் சட்டம். இது இழுபறி நிலையிலேயே உள்ளது. இன்று உலகம் மாறிக்கொண்டுள்ளது. உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

 

கேள்வி: முஸ்லிம் தலைமைகள் ஏன் மாற்றத்திற்கு தயங்குகிறார்கள்? இவர்களுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் தடைப்பட்டு விடும் என்றா அச்சப்படுகின்றார்கள்?


 பதில்: வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரசங்கத்தில் ஷீஆக்களை கண்டித்துப் பேசினால் அவருக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதாக நான் அண்மையில் கேள்விப்பட்டேன். இது உண்மையா? பொய்யா? என்று எனக்குத் தெரியாது. இப்படியான சம்பவங்களே எம்மை கெடுக்கின்றன. ஷீஆ சுன்னி வாக்குவாதம் ஏன் உருவானது? எத்தனையோ ஆண்டுகாலமாக அன்னியோன்யமாக வாழுகின்றோம். சவூதி அரேபியாவினுடைய புவி அரசியல் நோக்கத்தின் விளைவே இது. சவூதி அரேபியா இந்தப்பிரச்சினையை சமயக் குழுவாதப் பிரச்சினையாக மாற்றிவிட்டுள்ளது. அமெரிக்காவின் எடுபிடிக்குள் சவுதி அரேபியா சிக்கிக்கொண்டு அது தனது வஹாபித்துவம் மூலமாக இந்தப் பிரச்சினையை உண்டாக்கிக் கொண்டுள்ளது.

உண்மையில் வஹாபித்துவம் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் அமெரிக்காவாகும். கொமெய்னியுடைய ஆட்சியின் முடிவின் போது அவர், எங்களது புரட்சிகளை நாங்கள் மத்தியகிழக்கிற்கு ஏற்றுமதி செய்யப்போகிறோம் என்று கூறினார். இதற்கு பயப்பட்ட அமெரிக்கா இதை எப்படி தடுப்பது என்று சிந்தித்து விட்டு கொமெய்னிஸத்திற்கு எதிராக வஹாபிஸத்தை பரப்பும் திட்டத்தை முன்னெடுத்தது. எனவே சவூதி அரேபியாவின் பணபலத்தில் வஹாபிஸம் இன்று கனகச்சிதமாக பரப்பப்பட்டு வருகின்றது. எனவே நாம் இந்த வஹாபித்துவத்திற்கு எதிராக போராட வேண்டும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிடும் வஹாபிஸம் இலங்கையில் எந்தெந்த அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகின்றன?

பதில்: முஸ்லிம் பெண்களுடைய ஆடையில் எப்போது மாற்றம் ஏற்படத்தொடங்கியது? இது தான் உண்மையான இஸ்லாம் என்று சொன்னால் அவர்களுடைய தாய் தந்தையர்கள் எதை அணிந்தார்கள்? இது எப்படி வந்தது? இதை விளங்க முடியாமல் உள்ளது. பெண்கள் அணியும் கறுப்பு நிற அபாயாக்கள் எப்படி வந்தது? பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கறுப்பு அங்கியை அணிந்துகொண்டு ஒரே இடத்தில் கூடும் போது அது ஏனைய சமய மக்களின் கண்களை உறுத்துகின்றது. அவ்வாறே ஆண்களுடைய பெரிய தாடியும் ஜூப்பாவும் பெரும்பான்மையினரின் உள்ளத்தில் பாதிப்பை அல்லது பொறாமையை ஏற்படுத்துகின்றன. அரபு நாடுகளல்லாத ஏனைய நாடுகளில் அந்தந்த நாட்டு கலாசார சூழ்நிலைகளுக்கேற்பவே உடைகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். உலகிலேயே அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் வாழும் மக்கள் அந்த நாட்டு பாரம்பரிய ஆடைகளையே அணிகின்றார்கள். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லலை.

ஒரு புறத்தில் நாம் எம்மை தனித்துவப்படுத்தியிருக்கிறோம். அது மற்றவர்களுக்கு ஒரு எதிரியாக விளங்குகிறது. நான் ஒரு முறை எனது வைத்தியரை சந்திக்க வைத்தியசாலைக்கு சென்றேன். அங்கு ஒரு முஸ்லிம் பெண் கருப்பு நிற நிகாபை அணிந்து கொண்டு, அதை தனது பிள்ளைக்கும் அணிவித்து அழைத்து வந்திருந்தார். இதைப் பார்த்து அவுஸ்திரேலிய சிறுமியொருத்தி வீறிட்டு அழத்தொடங்கி விட்டார். இப்படிப்பட்ட சம்பங்களே எம்மை இன்று மற்றவர் மத்தியில் தீவிரவாதிகளாக மாற்றிவிட்டுள்ளன.

கேள்வி: இவ்வாறான விடயங்களை நாம் எப்படிக் கட்டுப்படுத்த முடிகிறது?

பதில்: இவற்றை தடைசெய்வது எப்படி? புத்திஜீவிகள் ஓரியக்கமாக ஒன்றுபட்டு மக்களுக்கு உண்மையான இஸ்லாத்தை பரப்ப வேண்டும். அல்குர்ஆனை முன்னிலைப்படுத்திய இஸ்லாத்தையே போதிக்க வேண்டும். இவற்றை மக்களுக்கு முறையாக எடுத்துக் கூறாவிட்டால் இன்னும் 25 வருடங்களில் எம்முடைய நிலைமை இந்நாட்டில் தற்போதுள்ளதை விட மோசமாக இருக்கும்.

கேள்வி: அண்மையில் காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற இன முறுகலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இலங்கையில் மாத்திரமல்லாமல் இன்று முழு உலகிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவருமே உண்மையான பிரச்சினைகளை பற்றி ஆராயத் தயாரில்லை. மக்களின் உண்மையான பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி இந்நாட்டின் ஆளும்கட்சியோ, கூட்டு எதிரணியோ கதைப்பதில்லை. அதற்கு பதிலாக மக்களை ஆவேசப்படுத்தும் பிரச்சினைகளை மூட்டி உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்துக்கொண்டுள்ளனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற வல்லரசுகளின் ஆதரவு அமைப்புக்கள் துணையாக நிற்கின்றன. இந்த சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதே மேற்படி சர்வதேச அமைப்புக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

இன்று உலக நாடுகளின் இளம்தலைமுறையினர் இவையெல்லாவற்றையும் எதிர்த்து போராடத் தயாராக உள்ளது. முறையான வருமானமில்லை, வேலையில்லாப் பிரச்சினை போன்றவற்றுக்கு எதிராக இளைஞர்கள் கிளர்ந்தெழும்புகிறார்கள். அரபு வசந்தம் இதற்கு சிறந்த தொரு உதாரணம். ஆனால் மீண்டும் மேற்கத்தேய நாடுகள் அங்கு பழைய முறையை ஏற்படுத்திவிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட புரட்சியொன்று இந்நாட்டிலும் ஏற்பட வேண்டியுள்ளது. அதை யார் செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? என்பதை என்னால் சொல்ல முடியாது.

கேள்வி: இலங்கையின் சிறுபான்மை மக்களது அரசியல் நடவடிக்கைகளை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில்: 1957ஆம் ஆண்டு முதல் இந்த இனவாத அரசியலை புகுத்தி அதைக்கொண்டு எல்லா அரசியல்வாதிகளும் குளிர்காய்கிறார்களே தவிர உண்மையான பிரச்சினைகளை யாரும் எடுத்துச்சொல்வதில்லை. எல்லா இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும் அவ்வாறே உள்ளன. இனவாதக் கட்சிகளாகவே சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் உள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாகவே அதுவொரு இனவாதக் கட்சி. இதை நான் வெளிப்படையாகவே கூறுகின்றேன். முஸ்லிம்களுக்கு இந்தக் கட்சி தேவையா? எங்களுடைய உரிமைகளை நாங்கள் போராடி வெல்வோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கின்றது. என்ன உரிமைகள் என நான் அவர்களிடம் கேள்வியெழுப்புகிறேன்? ஒரு ஜனநாயக நாட்டில் அப்புஹாமிக்கும், அம்பலவாணருக்கும் இல்லாத உரிமை அப்துல் மஜீதுக்கு வேண்டுமா?

இதுவரை காலமும் போராடி நீங்கள் எதை வென்றீர்கள் என நான் கேட்கிறேன். வீணாக கோஷங்களை எழுப்பி பதவிகளுக்காக தங்களை வளர்த்திருக்கிறார்கள். சமூகத்தின் முதுகில் ஏறிக்கொண்டு தங்களை வளர்க்கின்றார்கள். தமிழ் கட்சிகளும் அப்படித்தான். தமிழ் மொழி, தமிழ் ஈழம் என்பவற்றை அடிப்படையாக கொண்டே தங்களது போராட்டத்தை நடாத்துகிறார்கள். தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. வேலையில்லாப் பிரச்சினை, கல்வி, சாதிப் பிரச்சினை இவை பற்றி யாரும் பேசுவதில்லை.

இந்த வரலாற்றை யார் மாற்றுவது? எப்போது மாற்றுவது? வடக்கு கிழக்கு இணைய வேண்டும் எனக் கூறுகிறார்கள். இது அர்த்தமில்லாத பிரச்சினை. முதலில் உள்ளங்கள் இணைய வேண்டும். எத்தனை முஸ்லிம்கள் சென்ற வருடம் ஈத் திருநாளைக்கு பக்கத்திலுள்ள தமிழ் குடும்பத்தை அழைத்து ஒன்றாக இருந்து சாப்பிட்டுள்ளன? அதே போன்று எத்தனை இந்துக் குடும்பங்கள் தங்களது புது வருடத்திற்கு அருகிலுள்ள முஸ்லிம் குடும்பங்களை அழைத்த உணவு பரிமாரியிருக்கிறார்கள்? இப்படிப்பட்டதொரு அன்னியோன்யம் அங்கில்லை. உள்ளங்கள் இணையாமல் இலக்குகள் இணைவதில் அர்த்தமில்லை.

கேள்வி: சுமார் 35 வருடங்களுக்கும் அதிக காலம் பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறீர்கள். உங்களது அனுபவத்தின்படி எதிர்கால புவி அரசியல் நிலைமைகள் உலகளவில் எவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்தும்?

பதில்: 2076 ஆம் ஆண்டு ஒரு முக்கியமானதொரு ஆண்டாக வரப்போகிறது. அந்த ஆண்டில் அமெரிக்க சுதந்திரப் போரின் 3ஆவது நூற்றாண்டு ஆரம்பமாகவுள்ளது. அதே ஆண்டில் சந்தைப் பொருளாதாரத்தை தழுவி ஒரு நூற்றாண்டை கடக்கவுள்ளது சீனா. இஸ்லாமிய நாடுகள் தங்களது 1500ஆவது ஹிஜ்ரி ஆண்டை தொடங்கப்போகிறது. இந்த மூன்று சக்திகளும் ஒன்றை ஒன்று எவ்வாறு நோக்கப்போகின்றன? சமாதானமாகவா? பலாத்காரமாகவா? 

 

 

 

மீள்பதிப்பு: 
3 December, 2017 தினகரன்

நேர்காணல்: எம்.ஏ.எம்.நிலாம், ஹெட்டி ரம்ஸி

Comment

 

Like us on Facebook (2)

 

Our Branding Partners