கற்பித்தல் கடந்தும் பல்வேறு துறைகளில் ஆர்வத்தோடு இயங்கிய நல்லாசான்கள் வரிசையிலே அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஸலாம் ஆசிரியர் அவர்கள் முக்கியமான ஒருவர்.
மர்ஹும்களான முன்னாள் இணக்கசபைத் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில், ஹாஜியானி சுலைஹா உம்மா ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு நான்கு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருக்கிறார்கள்.
அல்அக்ஸா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், தி/கிண் கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் கற்று,எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தியடைந்து 16.06.1958 இல் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
15.01.1960 தொடக்கம் 31.12.1960 வரை அட்டாளச்சேனை ஆசிரியர் கலாசாலையில் பொதுப் பயிற்சியைப் பெற்றார்.
பின்னர் மீண்டும் பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் வித்தியாலயத்திற்கு நியமிக்கப் பட்டார்.
25.04.1965 இல்
முஹம்மது ஹசன் சத்தாரா வீவீ ஐத் திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு முஹம்மது அரூஸ் (முன்னாள் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கிண்ணியா கல்வி வலயம்.) 1967 இல் பிறந்தார்.
1967 இல் சம்மாந்துறை விவசாயப் பண்ணையில் ஒரு வருட டிப்ளமோ பட்டம் பெற்றார். பின்னர் 1971 இல் பலாலி ஆசிரியர் கலாசாலை சென்று மரவேலை, கேத்திர கணிதப் பொறிமுறை வரைதல் ,சித்திரம் ஆகிய பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்று தி/கிண்ணியா மத்திய கல்லூரிக்கு ஆசிரியராக நியமனம் பெற்றுவந்தார்.
அந்தக் காலக் கட்டத்தில் கிண்ணியாப் பிரதேசப் பாடசாலைகளில் கேத்திரகணிதப் பொறிமுறை வரைதல் ,சித்திரம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆள் தட்டுபாடாகக் காணப்பட்டதால் கிண்ணியா மத்திய கல்லூரி, பெண்கள் கல்லூரி ஆகிய இரண்டிற்கும் வாரத்தில் 03 நாள்,02 நாள் என்ற விகிதப்படி சென்று கல்வி கற்பித்தார்.
பின்னர் தி/காக்காமுனை அறுவு வித்தியாலயம்,தி/கிண்/ அல் ஹிறா வித்தியாலயம்,தி/கிண்/அல்அக்ஸா வித்தியாலயம் ஆகியவற்றில் 1992 ஆண்டு வரை ஆசிரியராக கடமையாற்றினார்.
20.04.1992 இல் தி/கிண்/ அல்அதான் வித்தியாலயத்தை ஒரு ஓலைக் குடிசையில் 115 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்து 8 ஆம் ஆண்டு வரை 810 மாணவர்களை உருவாக்கினார்.
பின்னர் மர்ஹும் M.H.M. அஷ்ரப் அவர்களின் உதவியால் 100 அடி நீளமான நிரந்தர கட்டிடத்தை அமைத்ததோடு அப் பாடசாலையின் வளர்ச்சிக்கும் அரும் பாடுபட்டார். பல கலைகலாசார நிகழ்ச்சிகளில் கிண்ணியா பாடசாலை வட்டாரத்தில் இப்பாடசாலை மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றது மகிழ்ச்சியான விடயமாகும்.இதற்கு குறித்த பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் மிகுந்த அர்ப்பணிப்போடு உழைத்தனர் என்பதையும் மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்.
கிண்ணியா மத்திய கல்லூரி, பெண்கள் கல்லூரி, அக்ஸா ,அல் ஹிரா, அதான் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளினதும் மற்றும் கிண்ணியா மாணவர் பேரவையினதும் இலச்சினைகளை இவரே வடிவமைத்துக் கொடுத்தார்.
1961 ஆம் ஆண்டு அட்டாளச்சேனையில் நடைபெற்ற கலை விழாவில் இலங்கையின் பிரதமர்களின் உருவப்படங்களை வரைந்து முதல் பரிசை பெற்றார். அக்காலத்தில் சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றார்.
"ஹிஜ்ரி 1400" ஆண்டுவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அரபு எழுத்தணிப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார்.
கிண்ணியா மத்திய கல்லூரியில் அப்துல் மஜீத் மண்டபத்தில் சுவரின் இருபுறமும் வரையப்பட்ட எழுத்தாணி இவரின் அனுசரணையோடு வரையப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மர்ஹம் A.L அப்துல் மஜீத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸலாம் ஆசிரியரால்தான் அன்றைய புஹாரிப் பள்ளிக்கான படம் வரையப்பட்டது. அந்தப் படம் சிறிதாக்கப்பட்டு புகாரிக்கந்தூரி நேரங்களில் பொதுமக்களிடம் கொடுத்து பள்ளிவாசல் அபிவிருத்திக்கான நிதி வசூலிக்கபட்டது.
முன்னாள் அமைச்சர் M.E.H மஹ்ரூப் அவர்களின் காலத்தில் மகாமாற்றில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டம் திறக்கப்படும்போது அங்குள்ள சனசமூக நிலையத்தில் 50 வீடுகளும் இவரது கரங்களாலேயே வரையப்பட்டது. அப்போது இவ்வீட்டுத்தொகுதியைத் திறப்பதுக்கு வந்த அன்றைய ஜனாதிபதி கௌரவ ரணசிங்க பிரேமதாசா அவர்களினால் இது பெரிதும் புகழப்பட்டது .
தி/கிண்ணியா பெண்கள் கல்லூரியில் அன்றைய காலப் பகுதியில் நடாத்தப்பட்ட பொருட்காட்சியில் அப்பொழுதிருந்த கல்வி அமைச்சர் திரு லயனல் ஜயதிலக இவர் வடிவமைத்த சித்திரக்கலைக் கூடத்தைப் பார்த்து புகழ்ந்து பாராட்டியதும் இவரின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.
கிண்ணியாப் பாடசாலைகளில் எங்கெல்லாம் பொருட்காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இவர் ஒத்துழைப்பு செய்து வந்தார்.
கிண்ணியாவில் மீலாத்விழா மேடைகள், அரசியல் மேடைகள் இவரைக் கொண்டே வடிவமைப்பார்கள்.
பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இவர் வடிவமைக்கும் இல்லம்தான் பெரும்பாலும் முதல் பரிசு பெற்றது.
தமது எஸ்.எஸ்.சி. பரீட்சை முடிந்த பிறகு இவர் கையெழுத்துப் பிரதியாக 'கலை விழி" என்னும் மாத சஞ்சிகையை அப்போது ,எழுதுவதில் ஆர்வங்கொண்டு இயங்கிவந்த இளைஞர்களின் ஆக்கங்களைக் கொண்டு வடிவமைத்து அச்சுபிரதிப் போல மாதம் ஒரு முறை வெளியிட்டார். இச்சஞ்சிகை கவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள், துப்பறியும் தொடர் நாவல் மற்றும் செய்தித்துணுக்குகள் போன்றவற்றைத் தாங்கி வெளிவந்திருக்கிறது.
கவிஞர் அண்ணல், அவரின் சகோதரர்,இப்ராஹிம் ஆசிரியர்,மற்றும் சாகுல் ஹமீது ஆசிரியர் (எனது தாயாரின் மூத்த சகோதரர்.)போன்றோர் மிகுந்த ஆர்வத்துடன் இச் சஞ்சிகையில் எழுதி வந்திருக்கிறார்கள்.
(எனது மாமனார் மர்ஹும் சாகுல்ஹமீது ஆசிரியரும் ஒரு எழுத்தாளர் என்பதையும், "துண்டு" எனும் புனைபெயரில் துப்பறியும் தொடர் நாவல் கூட எழுதி இருக்கிறார் என்றும் ஸலாம் ஆசிரியரோடு உரையாடும் போது அறிந்து கொண்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.)
இதில் இப்படியாக 05 பிரதிகள் மாதிரிமே வெளியிடப்பட்டது . அவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்த வுடன் இந்த சஞ்சிகை வெளியீடுகள் விடு பட்டது சோகமே.
1989 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான "ஆக்கத் தொழிற்பாடு' எனும் நூலை வெளியிட்டார். இது கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களினால் பெரிதும் புகழப்பட்டது.
திருகோணமலைப் பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுவர்களுக்கான புத்தாக்க தயாரிப்பாக, தி/கிண்/அல்அதான் வித்தியாலயத்தில் இருந்து எழுத்தப்பட்ட "சிறுவர் இலக்கியப் பூங்கா" என்ற இலக்கியத்தொகுப்பைத் தயாரிக்க வழிகாட்டி முதற்பரிசைத் தட்டிக்கொண்டார்.
16.06.1958 தொடக்கம் 1999 வரை 41 வருடங்கள் காலப்பகுதியில் கல்விப்பணியில் பல மறக்க முடியாத நிகழ்ச்சிகள் செய்துள்ளார்.
2000 ஆண்டில் தமதன்புத் துணைவியாரோடு இணைந்து புனித ஹஜ் கடமையையும் நிறைவு செய்து கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அதன் பின் சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக மார்க்கப் பணிகளில் (தப்லீக்) தம்மை ஈடுபடுத்தி அதில் மனநிறைவு கண்டார்.
நற்குணங்கள் நிறைந்த அவரின் ஒரே மகனாரின் அன்புச் செல்வங்களும் கல்வி, மார்க்கக்கல்வி இரண்டிலும் நல்ல முன்னேற்றத்தில் இருப்பதற்கும் அவரின் நேர்த்தியான வழிகாட்டல்களே முக்கிய காரணமாகும்.
இன்று ஸலாம் ஆசிரியர் அவர்கள் சிறிது நோய்வாய்ப்பட்ட நிலையில் அன்பான மகன், மருமகள், பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
மதிப்பிற்குரிய ஒரு நல்லாசான், கலைஇலக்கிய ஆர்வலர், ஓவியக்கலைஞர்,மார்க்க வழிகாட்டி என்ற பல நற்பண்புகள் வாய்க்கப் பெற்ற இப்பெரியாரையும் உங்களின் துஆக்களில்...பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
தேடல்
எஸ். ஃபாயிஸா அலி.
Comment