
கிண்ணியாவின் முதல் விஞ்ஞான ஆசிரியர் மர்ஹூம் ஏ.ஆர்.இல்யாஸ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான அப்துல் றசீது – தானியும்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1936.04.15 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.
சின்னக் கிண்ணியா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதைய அல் அக்ஸாக் கல்லூரி) ஆரம்பக் கல்வியைக் கற்றார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும், சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும் கற்று க.பொ.த (சா.தரப்) பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றார்.
தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் திருகோணமலை இந்துக் கல்லூரியில் இணைந்து உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றார். எனினும், மேற்கொண்டு படிக்க பொருளாதாரம் இடங்கொடுக்காமையினால் படிப்பை இடை நிறுத்தி ஆசிரியர் சேவையைத் தேர்ந்தெடுத்தார்.
1956 இல் குட்டிக்கரச்சை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போது இஹ்சானியா மகளிர் வித்தியாலயம்) விஞ்ஞான ஆசிரியராகக் கடமையேற்றார். அந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது விஞ்ஞான ஆசிரியர் என்ற அந்தஸ்தை இவர் பெறுகின்றார்.
1959 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலைக்குத் தெரிவானார். ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய இரு துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும் விஞ்ஞானத் துறையையே தெரிவு செய்து பயிற்சி பெற்றார்.
1961 இல் மூதூர் மத்திய கல்லூரியில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகக் கடமையேற்றார். இங்கு விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தார். இதன் பின் திருகோணமலை இந்துக் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, கலாவௌ முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹம்பாந்தோட்டை தர்மகபீர் மகா வித்தியாலய ஆகியவற்றில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார்.
1973 ஆம் ஆண்டு இவர் முதலாந்தர அதிபரானார். திருகோணமலை ஜமாலியா மகா வித்தியாலயம், ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றிய இவர் குறிஞ்சாக்கேணி கொத்தணி அதிபராகக் கடமையாற்றியுள்ளார். 1993 ஆம் ஆண்டு முதல் கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிரியராக, அதிபராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்வி அதிகாரியாக என சுமார் 40 வருட அரச சேவையின் பின் 1996 இல் இவர் ஓய்வு பெற்றார்.
ஆரவாரமில்லாத அமைதியான போக்குள்ள இவர் தனது கற்பித்தல் பணியையும், நிர்வாகப் பணியையும் மிகவும் நிதானமாக முன்னெடுத்து வந்தார். மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை அவ்வப்போது செய்துள்ளார்.
கிண்ணியாவின் முதல் துணைப் பேராசிரியர் மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன் கல்வியில் பிரகாசிக்க சிறப்பான அடித்தளம் இட்டவர் இவராவார்.
இலக்கிய ஆற்றல் நிரம்பப் பெற்றிருந்த இவர் பாடசாலை மாணவர்களை பேச்சு, பாடல், போன்ற போட்டிகளுக்கு பயிற்றுவித்துள்ளார். போட்டி நிகழ்ச்சிகளுக்காக நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த இவர் ஆங்கிலக் கவிதைகளும் எழுதியுள்ளார்.
பொது இலக்கியத் துறையில் இவர் பெரிதாக கால்பதிக்கவில்லை. எனினும். இவரது மகள் மர்ஹூமா மும்தஹினா இல்யாஸ் இலக்கிய அந்த ஆற்றலைப் பயன் படுத்தினார்.
மர்ஹூமா செய்னம்பிள்ளை இவரது வாழ்க்கைத்துணைவியாவார்;. மும்தாஜ், மர்ஹூமா மும்தஹினா (ஆசிரியை), முஸம்மில் (அதிபர்), முசௌபிர் (IT இணைப்பாளர்), சட்டத்தரணி முபாரிஸ், மும்தஸ்ரின் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் இவரது பிள்ளைகள்.
இவர் 2014.04. 22 இல் காலமானார். இவரது ஜனாஸா மாஞ்சோலைச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேடல்:

ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment