
கிண்ணியாவின் முதல் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகர் ஜனாப் எம்.ஐ.அபூசாலிகு அவர்களாவர். இவர் மர்ஹூம்களான முகம்மது இஸ்மாயில் - செய்னம்பு தம்பதிகளின் புதல்வராக 1945.08.12 இல் கஹட்டகஸ்திகிலியாவில் பிறந்தார்.
கஹட்டகஸ்திகிலிய வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1968.11.01 இல் ஹொரவப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தின் முஸ்லிம் பிரிவில் மாணவ ஆசிரியராக நியமனம் பெற்றார்.
1970 – 71 கல்வியாண்டில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சியின் பின் 1972இல் அநுராதபுரம் மாவட்ட துருக்கிராகம முஸ்லிம் வித்தியாலயத்தில் நியமனம் பெற்றார். 1976 இல் கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றார்.
1976இல் குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றதோடு 1977 இல் கிண்ணியாவில் திருமணம் முடித்து தனது நிரந்தர வசிப்பிடத்தை கிண்ணியாவுக்கு மாற்றிக் கொண்டார்.
1978 இல் கிண்ணியா அல் அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்ற இவர் சுமார் 13 வருடங்கள் இப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் மர்ஹூம் ஏ.எம்.எம்.முஸ்தபா அதிபர் அவர்களால் அல் அக்ஸாவில் ஏற்படுத்தப்பட்ட கல்விப் புரட்சியில் இணைந்து இவரும் பெரும் பங்களிப்புச் செய்தார்.
1991 இல் கிண்ணியா கோட்டக் கல்வி அலுவலக தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார். எனினும் சிலரது நலனுக்காக கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவுக்கான இவரது நியமனம் தடைப்பட்டது.
இதனால் 1991.08.01 முதல் மூதூர் கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவின் கிளிவெட்டி, தோப்பூர், சேருவில பகுதிகளுக்கான தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்றார். அப்போதிருந்த முறைப்படி வாரத்தில் 3 தினங்கள் இப்பிரிவுகளுக்கான ஆசிரிய ஆலோசகராகவும், 2 தினங்கள் அல் அக்ஸாவின் அசிரியராகவும் பணியாற்றினார்.
அப்போது நிலவிய பயங்கரவாத சூழ்நிலையினால் கிண்ணியாவிலிருந்து மூதூருக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களை இவர் எதிர்நோக்கினார். இதனால் தான் கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவு தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகர் பதவி வெற்றிடத்துக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்ததாலும், கிண்ணியாவில் வெற்றிடம் இருப்பதாலும் தன்னை கிண்ணியா ஆசிரிய ஆலோசகராக நியமிக்குமாறும் திருகோணமலை பிராந்தியக் கல்விப் பணிப்பாளருக்கு மேன்முறையீடு செய்தார்.
இவரது மேன்முறையீட்டை ஏற்றுக் கொண்ட திருகோணமலை பிராந்தியக் கல்வி அலுவலகம் 1994.02.24 முதல் கிண்ணியா கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவு தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகராக இவருக்கு நியமனம் வழங்கியது. இந்த வகையில் கிண்ணியாவின் முதல் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகர் என்ற பெருமையை இவர் பெருகின்றார்.
1994 இல் முழுமையாக கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்கு விடுவிக்கப்பட்ட இவர் 2005.08.11 இல் ஓய்வு பெறும் வரை கிண்ணியாவின் தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றினார்.
மிகுந்த தேடல் உள்ள இவர் தமிழ் மொழி கற்பித்தலில் பல்வேறு நுட்பங்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தினார். எப்போதும் ஆசிரியர்களின் மனநிலை அறிந்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
1997 -2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் கற்பித்து வந்தேன். இவரது மேற்பார்வையின் கீழ் இப்பாடசாலையில் 'தமிழ் மொழியில் 100 வீத சித்தி' திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம்;. எம்.இசட்.பாத்திமா பர்ஸானா ஆசிரியையும் என்னோடு இணைந்து பணியாற்றினார். இதில் நாங்கள் முழுமையான வெற்றியைப் பெற்றோம்.
மூதூத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கர் அவர்களின் புதல்வி சப்ரா உம்மா இவரது வாழ்க்கைத் துணைவியாவார். சல்மதுல் ஜெஸீலா (ஆசிரியை), பாத்திமா பர்ஸானா (ஆசிரியை), சிராஜூல் முனீர், சிராஜூல் ஹஸன், நூர் ஸாமிலா (ஆசிரியை) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
எடுத்த பொறுப்புகளை மிகவும் நிதானமாக நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்த இவர் பல்வேறு சமுகப் பணிகளிலும் ஈடுபட்டு பட்டு வந்துள்ளார். தற்போதும் இவரை நாடுவோருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment