கிண்ணியாவின் முதல் பெண் பட்டதாரி திருமதி நாதிரா சஹீத் அமீன் பாரி அவர்களாவர். இவர் ஓய்வுநிலை அதிபர் முகம்மது சஹீத் - அமீஸா உம்மா தம்பதிகளின் புதல்வியாவார். 1963.12.11 இல் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை குட்டிக்கரச்சை முஸ்லிம் வித்தியாலயத்தில் (தற்போது இஹ்ஸானியா வித்தியாலயம்) கற்றார்.
பின்னர் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் (தற்போது கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி) உயர்தரம் வரை கற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக் கழக கலைப் பீடத்திற்கு தெரிவாகி 1986 இல் கலைப்பட்டதாரியாக வெளியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் பெண் பட்டதாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
பெண்கள் கூடுதலாகக் கற்கக் கூடாது என்ற ஒரு கருத்து நிலவிய காலப் பகுதியில் பல்கலைக் கழகம் வரை சென்று கற்று பட்டதாரியாக வெளிவருவதற்கு இவரது பெற்றோரினதும், இவரினதும் அர்ப்பணிப்பும், துணிச்சலுமே காரணமாகும். இவரது பல்கலைக்கழகப் பிரவேசத்தைத் தொடர்ந்தே கிண்ணியாவில் பெண்கள் உயர்கல்வி கற்ற ஆரம்பித்தனர். இதன் மூலம் பெண்களது உயர்கல்வி கல்விக்கு வழிகாட்டியாக இவர் அமைந்துள்ளார்.
1984 இல் மலையகத்தில் இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. கும்புக்கந்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். 1988 இல் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு இவருக்கு இடமாற்றம் கிடைத்தது.
க.பொ.த (உ.த) மாணவர்களுக்கு புவியியல் பாடத்தைக் கற்பித்த இவர் கிண்ணியா மத்திய கல்லூரியிலும் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து 2009 இல் இலங்கை அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டார். இதன் மூலம் கிண்ணியாவில் இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
2009 இல் கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையேற்றுப் பணியாற்றினார். 2012 இல், தான் கல்வி கற்ற கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபராக இடமாற்றம் பெற்று தற்போது வரை அங்கு அதிபராகப் பணியாற்றி வருகின்றார்.
இப்பாடசாலை 2019இல் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களது முயற்சியால் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. இதற்குத் தேவையான சகல ஆவனங்களையும் ஒழுங்கு படுத்தி முழு ஒத்துழைப்பும் இவர் வழங்கினார்.
இப்பாடசாலை கிண்ணியா கல்வி வலயப் பிரிவு அடைவு மட்டங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இதற்குத் தேவையான வழிகாட்டல்களை இவர் வழங்கி வருகின்றார்.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எப்.அமீன்பாரி இவரது வாழ்க்கைத் துணைவர். அர்ஸாத்பாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்), உள்பத்பாரி (QS), ஹம்னா பாரி (ஆசிரியை) ஆகியோர் இவரது பிள்ளைகள்.
இன்னும் சில வருடங்களுக்கு இவரது கல்விச் சேவையை எதிர்பார்க்கலாம்
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment