கிண்ணியாவின் முதல் தபாலதிபர் ஜனாப். ஏ.டபில்யூ.முகம்மது சரீப்தீன் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான அப்துல் வஹாப் - சுபைதா உம்மா தம்பதிகளின் தலைமகனாக 1948.02.04 ஆம் திகதி (சுதந்திர தினத்தன்று) கிண்ணியா, பெரியாற்றுமுனையில் பிறந்தார்.
ஆரம்பம் முதல் க.பொ.த (சா.த) வரை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்ற இவர் க.பொ.த (உ.த) உயர்தரக் கல்வியை கம்பளை சாஹிராக் கல்லூரியில் கற்றார்.
1980.03.05 இல் திருகோணமலை தபாலகத்தில் 2 ஆம் தர தபாலதிபராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது தபாலதிபர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
1983 இல் கிண்ணியா அஞ்சல் அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த இவர் 1988 காலப்பகுதியில் கொழும்பு, வெள்ளவத்தை தபால் பயிற்சிக் கல்லூரியில் ஒரு வருட பயிற்சி பெற்றார்.
1989 இல் மீண்டும் கிண்ணியா அஞ்சல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இவர் 1990 இல் கிண்ணியா தபாலதிபராக கடமையைப் பொறுப்பேற்றார். 2008 இல் ஓய்வு பெறும் வரை சுமார் 18 வருட காலம் கிண்ணியா தபாலதிபராக இவர் பணியாற்றியுள்ளார்.
கிண்ணியா அஞ்சல் அலுவலகம் 2004 ஆம் ஆண்டு வரை நீண்ட காலம் புஹாரிச் சந்திக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. பிரதேச செயலகத்திற்கு அருகில் தற்போது இருக்கும் நிரந்தர இடத்திற்கு 2004 இல் மாறியது.
புஹாரியடியில் இயங்கிய அஞ்சல் அலுவலகத்தின் கடைசி தபாலதிபர் என்றும், தற்போதைய அலுவலகத்தின் முதல் தபாலதிபர் என்றும் தபாலக வரலாற்றில் இவர் இடம் பிடித்துள்ளார்.
கிண்ணியா பாலம் நிர்மானிக்கப்படும் வரை தபால்கள் அனைத்தும் பஸ்ஸின் மூலம் வெள்ளைமணல் பகுதியை வந்து சேரும். இங்குள்ள தபால்காரர் ஒருவர் காலையில் மிதவைப் பாதையில் சென்று அந்த தபால் பைகளை சைக்கிளில் எடுத்து வருவார்.
அதேபோல மாலை 2.30 மணியளவில் இங்குள்ள தபால் பைகள் பாதையில் அக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பஸ்ஸில் ஒப்படைக்கும் பணி முன்னெடுக்கப்படும்.
மிதவைப் பாதை பழுதாகும் சந்தர்ப்பங்களிலும், அதிக தபால்கள் மற்றும் பார்சல்கள் வரும் சந்தர்ப்பங்களில் இந்த தபால்காரர்கள் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வருவர்.
தபால்காரர்களது சிரமங்களை உணர்ந்து அவர்களை அனுசரித்து பொதுமக்களுக்கு சிறந்த தபால் சேவை கிடைக்கும் வகையில் இவர் பணியாற்றினார்.
எனது தந்தையின் றஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்ஸ் மூலம் அக்காலத்தில் நாட்டின் பல பாகங்களுக்கும் வீ.பி.பி. யில் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்கள் அனுப்பப் பட்டன. இதனால் அஞ்சல் அலுவலகத்தோடு எமக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.
கிண்ணியா அஞ்சல் அலுவலகத்தில் ஆளணி பற்றாக்குறை இருந்த போதிலும் அவற்றை முகாமை செய்து அதிக பொறுப்புகளை எடுத்து இவர் பணியாற்றியமை எனக்கு நன்கு தெரியும்.
இவர் மிகவும் மென்மையான போக்குடையவர். தனக்கு கீழ் பணி புரிந்தோருடனும், பொதுமக்களுடனும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.
வஜூர்தீன் கிஸ்மத் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். சிபாயா, ஜெஸீனா, சுஹைனா, றிபாஸ் (விவசாயப் போதனாசிரியர்) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
தற்போது பெரியாற்றுமுனைப் பகுதியில் இவர் வசித்து வருகின்றார்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment