Thursday, 28, Sep, 1:16 PM

 

கிண்ணியாவின் முதல் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஜே.எம்.உவைஸ் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான எம்.ரீ.அப்துல் ஜப்பார் - ஸம்சுன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1964.07.10 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்ற இவர் இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரி, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த இவர் 1992 இல் மருத்துவக் கலாநிதியானார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் வைத்தியக் கலாநிதி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
இவர் 1994 இல் கிண்ணியா வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியானார். அதேபோல 2000 ஆம் ஆண்டு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமை புரிந்தார். இந்த வகையில் கிண்ணியாவின் முதல் DMO, முதல் MOH ஆகிய பெருமைகளையும் இவர் பெறுகின்றார்.  
கொழும்பு பட்டப்பின் மருத்துவ நிறுவகத்தில் சமுக மருத்துவத்தில் (Community Medicine) முதுமானி பட்டம் பெற்றுள்ளார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து மருத்துவத்துறையில் முதுமானி பட்டம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார். 
கொழும்பு குடும்ப சுகாதாரப் பணியக மருத்துவ அதிகாரியாகவும்,  கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மருத்துவ அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். தற்போது லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார்.
ஆரவாரமில்லாத அமைதியான போக்குடைய இவர் மக்களோடு நிதானமாகக் கதைக்கும் பண்புள்ளவர். நோயாளிகளையும் நிதானமாக அணுகக் கூடியவர். 
இவரது தந்தை மர்ஹூம் எம்.ரீ.அப்துல் ஜப்பார் கலை ஆற்றல் மிக்க முன்னை நாள் அதிபர். அவரைப் போல இவரிடமும் கலையாற்றல் மிகுந்திருந்தது. 
1980 களில் கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற நாடகப் போட்டியில் மர்ஹூம் எஸ்.எச்.எம்.சரீப் (முன்னைநாள் அதிபர்) அவர்களால் தயாரிக்கப்பட்ட 'ஒரே நீதி' என்ற நாடகம் மேடையேற்றப்பட்டு முதலிடம் பெற்றிருந்தது. பலரது பாராட்டையும் பெற்றிருந்த இந்த நாடகத்தில் இவர் நீதிபதியாக நடித்திருந்தமை நினைவு கூரத்தக்கது.
இவரது வாழ்க்கைத் துணைவி டாக்டர் மர்சுக்கா ஷரீப். பாத்திமா சும்ரா, பாத்திமா புஸ்ரா, உமைர் முஷர்ரப், பாத்திமா மப்ராஹ் ஆகியோர் இவரது பிள்ளைகள். தனது கடமையின் நிமித்தம் இவர் தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார்.

தேடல்:


ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners